பெண்கள் முன்வர வேண்டும்!

மூன்று சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன:

ஒன்று: ஒரு மனைவி, தன் கணவனைப் பிரிந்து எவ்வளவு நாட்கள் பொறுமையாக இருக்க முடியும் என்று உமர் (ரளி) அவர்கள் தன் மகள், ஹஃப்ஸா (ரளி) அவர்களிடம் கேட்க, அதற்கு  அவர்கள், "ஒரு மாதம், இரண்டு மாதம், மூன்று மாதம் கூடிபோனால் நான்கு மாதம் பொறுமை காக்க இயலும் என்று பதில் கூற அதனையே சட்டமாக்கினார்கள் என்ற சம்பவம்.


இரண்டு: கவ்லா பின்த் தஃலபா (ரளி) அவர்களை,   அவருடைய கணவர் லிஹார் செய்தபோது, கவ்லா அவர்கள் நேரடியாக இறைவனிடம் மன்றாட,  இறைவனே நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, அவர்களின் இல்லற  உரிமையைக் காப்பாற்றி வஹீ இறக்கியருளிய சம்பவம்.

மூன்று:   ஒரு முறை உமர் (ரளி) அவர்கள் மஹர் விஷயத்தில் வரம்பு ஒன்றை நிர்ணயித்து உரையாற்றிட, ஒரு பெண்மணி "அல்லாஹ் குர்ஆனில் "பெண்களுக்கு ஒரு பொருட்குவியலையே மஹராகக் கொடுத்த போதும்...." எனக் கூறியிருக்க நீங்கள் எவ்வாறு தடுப்பீர்கள்" என ஆட்சேபிக்க உமர் (ரளி) அவர்களோ அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி தனது கருத்தை மீளப் பெற்றார்கள் - என்ற வரலாற்றுச் சம்பவம்.

படிப்பினைகள்:

ஒன்று: பெண்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட வேண்டும். அவர்களின் கருத்துக்கள்  அட்டியின்றி ஏற்கப்பட வேண்டும். அதற்கு சட்ட வடிவம்  கொடுக்க வேண்டியது என்பது - ஃகுலஃபாவுர் ராஷிதீன்களின் சுன்னத்தான வழிமுறையாகும்.  

இரண்டு: பெண்கள் நேரடியாகவே தங்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தால், இறைவனே நேரடியாக அவர்களின் உதவிக்கு வருகிறான். அது ஒரே ஒரு பெண்ணின் உரிமையாக இருந்தாலும் சரியே!

மூன்று: பெண்ணுரிமையைப் பேணி காத்திட பெண்களே முன் வரவேண்டும். அதற்கு பெண்கள் ஆழமான இஸ்லாமிய அறிவைப் பெற்றிருத்தல் அவசியம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

Comments