ஒன்று பட மாட்டீர்களா?

மனதை என்னவோ பிசைகிறது; பிசைந்து கொண்டே இருக்கிறது; அமைதி ஏற்பட மறுக்கிறது. இப்படிப்பட்ட ஓர் அழகிய மார்க்கத்தை ஏன் இப்படி குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியவே இல்லை. குர் ஆனைத் திறந்து ஓதுகிறேன், நபிமொழிகளைப் படிக்கிறேன். சிந்திக்கிறேன். அறிஞர்களின் கருத்துக்களை கருத்தூன்றிப் படிக்கத்தான் செய்கிறேன்.

ஆனால் என்ன சொல்வது? எதனைச் சொல்வது? யாரிடம் சொல்வது? எப்படிச் சொல்வது? எங்கிருந்து துவங்குவது? ஒன்றுமே புரியவில்லை!


இன்று காலை அறிஞர் தாரிக் ரமளான் அவர்களின் முகநூல் பக்கத்துக்குச் சென்றேன். அவர் அதில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதன் தலைப்பு:

United We Stand

பார்த்தேன். மனம் அழுதது. என்ன செய்யலாம் என்று சிந்தித்தேன்.

ஒன்று தோன்றியது.

சில நாட்களாகவே அவ்வப்போது ஒரு இறை வசனம் (8:46) என் சிந்தனையை ஆட்கொள்கிறது. இவ்வசனத்தில் வருகின்ற ஒரே ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு அதனை சற்றே ஆய்ந்து பார்த்தால் என்ன என்று தோன்றியது.

முதலில் குர்ஆனின் மொழிபெயர்ப்பு நூல்களுக்குச் சென்று பார்வையிட்டேன். திருப்தி வரவில்லை. பின்பு அரபி ஆங்கில அகராதியைப் புரட்டினேன். குறிப்புகள் எடுத்துக் கொண்டேன். பின்னர் குர்ஆனின் சொல் அகராதியைப் புரட்டினேன்.  குறிப்புகள் எடுத்துக் கொண்டேன். சில விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். சற்றே “போர்” அடிக்கலாம். மன்னியுங்கள் என்னை. யாராவது ஒரே  ஒருவர் நான் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டாலும் போதும்.

“யா அல்லாஹ்! இதனைத் தவிர வேறு ஒன்றும் என்னால் செய்திட முடியவில்லை; என்னை மன்னிப்பாயாக!” – என்ற துஆவுடன் தொடங்குகிறேன். இது ஒன்றும் தேவையற்ற முன்னுரை (பீடிகை)அல்ல! விஷயத்துக்கு வருவோம்.

** **

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (8:46)

**

இவ்வசனத்தின்  ஒரே ஒரு பகுதியை எடுத்துக் கொள்வோம் முதலில்.

“நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்!”

என்னது? கருத்து வேறுபாடு கொள்ளாதீர்களா? புரியவில்லையே? இது தமிழில் குர்ஆன் மொழிபெயர்ப்பு.

சரி. ஆ கா அப்துல் ஹமீது மொழிபெயர்ப்புக்கு செல்வோமா?

“உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள்!”

அப்படியானால் விவாதமே (arguments) வேண்டாம் என்கிறானா இறைவன்?

ஆங்கில மொழிபெயர்ப்புகள் என்ன சொல்கின்றன?

"Dispute not with one another" – Marmaduke Pickthall

“And fall into no disputes” – Yusuf Ali

“And do not [allow yourselves to] be at variance with one another” – Muhammad Asad

அதாவது – உங்களுக்குள் - கருத்து வேறுபாடு – வேண்டாம் என்கிறான் இறைவன்!
நமக்கு சந்தேகங்கள் வருகின்றன!

நபித்தோழர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களே! ஆனால் அவர்கள் இறைவனின் கட்டளைகளை மீறக் கூடியவர்கள் இல்லையே!

இமாம்கள் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களே! அப்படியானால் அவர்கள் இந்த இறைக் கட்டளையை செயல் படுத்தாமல் விட்டு விட்டார்களா?

இல்லை! அப்படியானால் இந்தக் கேள்விக்கு விடை எங்கே இருக்கிறது?

விடை – na-za-‘a எனும் சொல்லின் ஆழமான பொருளுக்குள் இருக்கிறது!

**

wa–laa–ta-naa-za-‘uu என்ற இறைக்கட்டளையின் ஆழமான பொருளை நாம் புரிந்து கொண்டால் – இக்கட்டளையின் பொருள்கள் எப்படியெல்லாம் விரிகின்றன என்று பார்ப்போமா?

ஒருவருக்கொருவர் கருத்து “முரண்பட்டுக் கொண்டு” நிற்காதீர்கள்!

ஒருவர் மற்றவரை சமூகத்தின் அங்கத்திலிருந்து “நீக்கி” விடச் செய்யாதீர்கள்!

ஒரு சாரார் இன்னொரு சாராரை சமூக அமைப்பிலிருந்து “கழற்றி” விட்டு விடாதீர்கள்!

வேறு ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறார் என்பதற்காக, ஒருவரை சமூகத்தின் அங்கத்திலிலிருந்து அப்படியே “பிடுங்கி” எறிந்து விடாதீர்கள்!

ஒரு சாரார் இன்னொரு சாராருடைய மானத்தைக் “களைந்து” விடாதீர்கள்!

ஒரு சாரார் இன்னொரு சாராருடைய கண்ணியத்தைப் “பறித்து” விடாதீர்கள்!

ஒரு சாரார் சமூகத்தின் பொது அமைப்பிலிருந்து தம்மை விலக்கிக் கொண்டு “வெளியேறிச்” என்று விடாதீர்கள்!

இத்தனை பொருட்களும் இதற்கு உண்டு!

சற்று ஆழமாகப் பார்ப்போமா?

Na-za-‘a (Nun – Za – ‘Ayn) என்ற அரபி மூலச்சொல்லும் அதன் கிளைச்சொற்களும் சேர்த்து மொத்தம் இருபது தடவைகள் அவை திருமறையில்  பயன்படுத்தப்பட்டுள்ளன.

அவை வருமாறு:
Na-za-‘a // na-za-‘naa // tan-zi’u // tan-zi-‘anna // yan-za’u // yu-naa’zi’’unna // ta-naa-za’-tum // ta-naa-za-‘uu // ya-ta-naa-za’uuna // naa-zi-‘aat // nazzaa-‘atan //

திருமறை வசனங்களுக்குச் செல்லு முன் ஆங்கில அகராதி தருகின்ற பொருட்களை இப்போது எடுத்துக் கொள்வோம்.

// Na-za-‘a (verbal form) // To pull out; extract; to remove; take; take away; strike; cross off; to take off; shed (a garment); to strip; divest; deprive; rob; to wrest; take away from someone’s possession, reputation or right; to remove from a position; depose; dismiss; demote; reduce in rank; to emigrate; deport; to contest; to challenge; to rival; contest each other’s right; strife; fight; to make a controversy;

சற்றே உற்று நோக்கினால் – ஒன்றை நீக்குதல் என்ற பொருளும், ஒருவருடைய உடமையைப் பறித்தல் என்ற பொருளும், கருத்து முரண்படுதல் என்ற பொருளும் இதில் பொதிந்திருப்பதைக் கண்டு கொள்ள முடியும்.    

சற்றே பொறுமையாக இறை வசனங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அ) ஒன்றை வெளியாக்குதல் (to pull out), அல்லது வெளிப்படுத்துதல் எனும் பொருளில்:

மேலும் அவர் (மூஸா - அலை) தம் கையை // வெளியில் எடுத்தார் //  na-za-‘a //- உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.(7:108)

மேலும் பார்க்க (26:33)

இன்னும், நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை // வெளிப்படுத்தி // na-za-‘naa //   “உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்” என்று கூறுவோம்; அப்பொழுது அவர்கள் சத்தியமென்பது அல்லாஹ்வுக்கே சொந்த மென்றும், அவர்கள் இட்டுக்கட்டியவை யெல்லாம் அவர்களை விட்டும் மறைந்துவிடும் என்றும் அறிந்து கொள்வார்கள்.(28:75)

ஆ) ஒன்று நீக்கப்படுதல் எனும் பொருளில்:

மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் //நீக்கி விடுவோம்;// na-za-‘naa // (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள். (15:47)

மேலும் பார்க்க: (7:43)

நாம் நம்மிடமிருந்து கருணையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து; பின்பு அதனை அவனை விட்டும் நாம் //நீக்கி விட்டால்// na-za-‘naa-haa //, நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்.(11:9)

**

இ) களைதல் எனும் பொருளில்:

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய //ஆடையை அவர்களை விட்டும், களைந்து// yan-zi-‘u //, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; (7:27)

**

ஈ) பிரித்து விடுதல் எனும் பொருளில்:

பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக  // பிரித்து விடுவோம்.// la-nan-zi-‘anna // (19:69)

**

உ) அகற்றப்படுதல் எனும் பொருளில்:

(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து //அகற்றியும் விடுகிறாய்// // tan-zi-’u //; ”(3:26)

**

ஊ) கழற்றப்படுதல் எனும் பொருளில்:

அது தோல்களை (எரித்து) கழற்றி விடும் // nazzaa-‘atan //. (70:16)

**

எ) பிடுங்கி எறிதல் எனும் பொருளில்:

நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்தூறைப் போல் (அக்காற்று) மனிதர்களை // பிடுங்கி எறிந்து விட்டது. // tan-zi-‘u // (54:20)

**

ஏ) பறித்து விடுதல் எனும் பொருளில்:

(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்கள் // // naa-zi-‘aat // மீது சத்தியமாக (79:1)
(அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர் // ya-ta-naa-za-’uu-na//; ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை. (52:23)

**

ஐ) பிணக்கு, கருத்து முரண்பாடு எனும் பொருளில்:

(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் // பிணங்க வேண்டாம்;// yu-naa-zi-’unna-ka // (22:67)

இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்தரவு பற்றித் //தர்க்கிக்கத் துவங்கினீர்கள்;// ta-naa-za’-tum // (3:152)

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் //பிணக்கு ஏற்படுமானால்// ta-naa-za-‘tum //- மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.(4:59)

(நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் //  பிணங்கித் தர்க்கம் செய்து // ta-naa-za-‘tum // கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.(8:43)

சூனியக்காரர்கள் தமக்குள்ளே தங்கள் காரியத்தைக் குறித்து(த் தங்களிடையே) // விவாதித்து// ta-naa-za-‘uu //, (அவ்விவாதத்தை) இரகசிய ஆலோசனையாகவும் வைத்துக் கொண்டனர்.(20:62)

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் // கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்// laa-ta-naa-za-‘uu; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (8:46)

இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) “இவர்கள் யார் என்பதை பற்றி // தர்க்கித்துக் கொண்டதை // ya-ta-naa-za-‘uu-na // (நபியே! நினைவு கூறும்) “இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை இறைவனே நன்கறிவான் என்றனர்; இதில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்.(18:21)

இப்போது பாடங்களுக்கு வருவோம்:

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் – na-za-‘a – என்பது திருமறையில் என்னென்ன பொருள்களில் வந்துள்ளன என்று.

ஒன்றை வெளிப்படுத்துதல்; ஒன்று நீக்கப்படுதல்; ஒன்று பிடுங்கப்படுதல்; ஒன்றைக் களைதல்; ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரித்து விடுதல்; ஒன்று அகற்றப்படுதல்; ஒன்றைப் பறித்து விடுதல்; ஒன்று கழற்றப்படுதல்; மற்றும்  கருத்து முரண்படுதல் ஆகிய ஒன்பது விதமான பொருள்கள் இச்சொல்லுக்கு கொடுக்கப்பட்டுள்ளன

இதில் கவனித்திட வேண்டியது என்னவெனில் – ஒன்றிலிருந்து ஒன்று பிரித்தெடுக்கப்படுவதற்கும், இரு சாரார் தங்களுக்குள் கருத்து முரண்பட்டுக் கொள்வதற்கும் ஒரே சொல்லைத் தான் திருமறை பயன்படுத்துகிறது!

**

பாடங்களுக்குச் செல்லுமுன் கருத்து வேறுபாட்டுக்கும், கருத்து முரண்படுதலுக்கும் ஒரு வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்தல் அவசியம்.

மார்க்கம் அனுமதித்திருக்கும் வரையறைக்குள் நின்று கொண்டு, ஒருவர் ஒரு கருத்தை முன் வைக்கிறார். அதற்கென அவர் ஆதாரங்களையும் தருகிறார். ஆனால் அது மற்ற ஒருவருடைய கருத்துடன் ஒத்துப் போகவில்லை. இப்போது தோன்றுவது கருத்து வேறுபாடு. இந்நிலையில், ஒருவர் என்ன செய்கிறார் எனில் - தனது கருத்தில் அவர் உறுதியாக நின்று கொண்டு, அதே நேரத்தில் மற்றவர் கருத்தை ஏற்காவிடினும் அதனை மதித்துக் கொண்டு, சகோதரத்துவத்தையும் பேணிக்கொண்டு – சமூகத்தை விட்டும் பிரிந்து விடாமல் அதே நேரத்தில் மற்றவர்களை அரவணைத்தும் கொள்கிறார். இறைவனே மிக அறிந்தவன் என்று பணிவொன்றை மேற்கொள்கிறார்.  இதில் ஒற்றுமை காக்கப்படுகிறது.

ஆனால் கருத்து முரண்படுதல் (na-za-‘u) என்பது முற்றிலும் வேறானது. இங்கே ஒருவர் - தனது கருத்தே சரி என்று வாதிடுவதுடன், மற்றவர் கருத்தை அவர் நிராகரிக்கிறார். அத்துடன் நின்று விடாமல் – முதலில் அவர் தம்மைத் தனியே பிரிந்து நின்று “அடையாளப் படுத்திக்கொள்கிறார்.”  அடுத்து அவர் மற்றவர்களைப் பிரித்துப் பட்டம் கட்டி அவர்களை “நீக்கி விடுகிறார்”. இதில் ஒற்றுமை குலைகிறது. வலிமை குன்றுகிறது. பார்க்க 8:46

இதோ பாடங்கள்:

பாடம் 1: கருத்து முரண்படுதல் ஓரணியில் இருக்கும் சமூகத்தை இரு சாராராகப் பிரித்து விடுகிறது! ஒரு சாரார் “கழற்றி விடப்படுகிறார்கள்.” அல்லது “பிடுங்கி எறியப்படுகிறார்கள்”. அல்லது “நீக்கப்பட்டு விடுகிறார்கள்”.  ஒரு சாராருடைய மானம் “களையப் படுகிறது”. ஒரு சாராருடைய உரிமை “பறிக்கப்படுகிறது”. ஒரு சாரார் தம்மை விலக்கிக் கொண்டு வெளியேறி விடவும் செய்கிறார்கள்!

பாடம் 2: பத்ர் யுத்த சமயத்தின்போது இறக்கியருளப்பட்ட அத்தியாயம் சூரா: அன்ஃபால்.
இந்த அத்தியாயத்தில் கருத்து முரண்பட வேண்டாம் என நம்பிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அப்போது முஸ்லிம்களிடம் ஒற்றுமை இருந்தது. கட்டுப்பாடு இருந்தது.  அன்ஸார்களும் முஹாஜிரீன்களும் ஓரணியில் திரண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்காகவே தங்களை அர்ர்பணித்து நின்றிருந்தார்கள்.

அதே நேரத்தில் கருத்து முரண்படும் சூழல் ஒன்று அங்கே இருந்தது என்றும்,  அதனை அல்லாஹ்வே தடுத்து விட்டிருந்தான் எனவும் திருமறை எடுத்துச் சொல்லியது.

(நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் //  பிணங்கித் தர்க்கம் செய்து // கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.(8:43)

வெற்றி முஸ்லிம்களுக்குக் கிட்டியது!

பாடம் 3: உஹத் யுத்த சமயத்தின்போது இறக்கியருளப்பட்ட இறைவசனங்கள் முழுவதும் சூரா: ஆலு இம்ரானில் இடம் பெற்றிருக்கின்றன. சூரா அன்ஃபாலிலே கருத்து முரண்பட வேண்டாம் என நம்பிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி இருந்த அல்லாஹ், இங்கே கருத்து முரண்பட்டு நின்றதனால் ஏற்பட்ட விளைவைப் பற்றி விமர்சித்துக் காட்டுகிறான்.

இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்தரவு பற்றித் //தர்க்கிக்கத் துவங்கினீர்கள்;// நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்; பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்; நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான்; மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.(3:152)

பத்ரிலும் உஹதிலும் சேர்த்து நாம் படித்துக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் - சமூகம் ஒரு பாரிய பிரிச்னையில் “சிக்கிக்” கொண்டிருக்கும்போது – வேண்டாம் பிணக்கு என்பதே பாடம்.
நுணுக்கமாக கவனித்தால், கருத்து முரண்பட்டு நிற்பவர்கள் “உலகை விரும்புபவர்களாகவே” இருப்பார்கள் என்று இந்த வசனம் நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது.

பாடம் 4: கருத்து முரண்பாடு, பிணக்கு என்பதெல்லாம் எதிரிகளுக்கும் உண்டு. ஆனால், அவர்கள் பிணக்குகளை தங்களுக்குள் ரகசியமாகக் கையாள்கிறார்கள்! (20:62)

நமக்குக் கொஞ்சம் ரோஷம் வர வேண்டும். அவ்வளவு தான்.

பாடம் 5: தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் கருத்து வேறுபடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது. அது அவருடைய உரிமையாகும்! அந்த உரிமையில் “கை வைத்திட”, அவர் கண்ணியத்தை “பறித்திட”, அவரை “வெளியேற்றிட” யாருக்கும் அனுமதி இல்லை என்பதைத் தான் “va – laa – ta-naa-za-‘uu” என்ற சொல்லின் ஆழமான பொருள் நமக்கு  உணர்த்துகிறது. இக்கட்டளையை மீறுபவர் இன்னொருவர் உரிமையில் கை வைக்கிறார் என்பது மட்டுமல்ல. அவர் இந்த சமூகத்தை பலவீனப்படுத்துகிறார் என்பது மட்டுமல்ல. எதிரிகளின் நோக்கத்தை நிறைவேற்றித் தந்து கொண்டிருக்கிறார் என்பதுவும் ஆகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்!

(பின் குறிப்பு: நமது முகநூல் சொந்தங்கள், ஒரு சில பதிவுகளுக்கு எழுதுகின்ற பின்னூட்டங்க்ளும் நான் இதனை எழுதிட இன்னுமொரு காரணமாகும்)

Comments