நமது செயல்கள் நம்மைக் காப்பாற்றாது!

அபூ ஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: இறை தூதர் (ஸல்) கூறினார்கள்:

‘‘உங்களில் யாரையும் அவரது செயல் காப்பாற்றாது.”

அப்போது நபித்தோழர்கள் கேட்டார்கள்: “அல்லாஹ்வின் தூதரே உங்களையுமா?”

அப்போது இறை தூதர் (ஸல்) கூறினார்கள்: “என்னையும்தான். அல்லாஹ் தனது

கருணையை எம்மீது சொரிந்தாலன்றி!”

இறை தூதர் (ஸல்) தொடர்ந்து கூறினார்கள்…….

மிகச் சரியாக செய்ய முயற்சியுங்கள்.
அண்மித்துவாருங்கள்.
காலையில் புறப்படுங்கள்.
மாலையிலும் பிரயாணம் செய்யுங்கள்.
இரவில் கொஞ்ச நேரம் பிரயாணியுங்கள்.
நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்.
நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்.
போய் அடைந்துவிடுவீர்கள்.” (ஸஹீஹ் அல்-புகாரி)


இந்த நபிமொழி புரிந்து கொள்வதற்கு சற்று கடினமானது. ஆழமாக சிந்தித்துப் பார்த்தாலே

புரிந்து கொள்ள முடியும்.

முயற்சி செய்வோம்.

முதலில் நபிமொழியின் முதல் வரியை எடுத்துக் கொள்வோம்,

‘‘உங்களில் யாரையும் அவரது செயல் காப்பாற்றாது.”

நபியவர்கள் தம் தோழர்களிடத்தில் தன் அறிவுரையை ஏன் இவ்வாறு துவக்கினார்கள்?

ஒருவர் செய்கின்ற நல்ல "அமல்கள்" தானே ஒருவரைக் காப்பாற்றும். ஒருவருடைய

அமல்கள் அவரைக் காப்பாற்றாது என்றால் என்ன பொருள்?

புரியவில்லை நபித்தோழர்களுக்கு.

நாமாக இருந்தால் என்ன கேட்டிருப்போம்?

ஏன், யா ரசூலுல்லாஹ், அப்படிச் சொல்கிறீர்கள்?

ஆனால், இங்கே நபித்தோழர்களைப் பாருங்கள்.  

நபித்தோழர்கள் கேட்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதரே உங்களையுமா?”

இக்கேள்விக்கு நபியவர்கள் தந்த பதில் என்ன?

 “என்னையும்தான். அல்லாஹ் தனது கருணையை எம்மீது சொரிந்தாலன்றி!”

இப்படி ஒரு பதில் வந்தால், அடுத்து நபித்தோழர்கள் என்ன செய்வார்கள்?

நபியவர்கள் ஏதோ சொல்ல வருகின்றார்கள் என்று மட்டும் புரிகிறது அவர்களுக்கு. மவுனம்

காக்கின்றார்கள்.

நபியவர்கள் சொல்ல வருகின்ற விஷயம் மிக மிக முக்கியமானதாகத் தான் இருந்திட

வேண்டும். எனவே - நம் கவனத்தைக் கூர்மையாகத் திருப்பிடத் தான் தங்களின்

அறிவுரையை "இவ்வாறு" துவக்கியிருக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்க

வேண்டும். தொடர்கிறார்கள் நபியவர்கள்.

இறை தூதர் (ஸல்) தொடர்ந்து கூறினார்கள்…….

மிகச் சரியாக செய்ய முயற்சியுங்கள்.
அண்மித்துவாருங்கள்.

இந்த இடத்திலே நபியவர்கள் பயன்படுத்தியிருக்கும் இரண்டு அரபிச் சொற்களை நாம்

கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒன்று: சத்திதூ (sath-thi-thoo)

இரண்டு: காரிபூ (qaariboo)

சதீத் எனும் சொல் திருமறையிலே இடம் பெற்றிருக்கும் சொல் தான்.

கூலூ கவ்லன் சதீதா (33:70),

இதன் பொருள் என்ன?

சுற்றி வளைத்துப் பேசாமல், நேரடியாக எதனைச் சொல்ல வேண்டுமோ அதனை மிகத்

தெளிவாக சொல்லி விட வேண்டும் என்பது தான் இறைபோதனை.

எனவே சத்திதூ என்றால் நாம் செய்கின்ற எந்த செயலாக இருந்தாலும், கவனம் சிதறாமல்,

முழுமையான  ஈடுபாட்டுடன், மிகச் சரியாக, மிக அழகாக செய்து முடித்திடல் வேண்டும்

என்பது தான்!

காரிபூ என்பதன் பொருள் குர்பத் எனும் சொல்லிலிருந்து பெறப்படுகிறது. குர்பத் என்றால்

நெருக்கம் என்று பொருள்.

குர் ஆனிலே - "வஸ்ஜுத் வக்தரிப்" (96:19) என்று வருகிறதல்லவா? அதன் பொருள்

ஸுஜூது செய்து இறைவனை நெருங்குவீராக - என்பது தான்.

எனவே சத்திதூ என்பதைத் தொடர்ந்து வரும் காரிபூ எதனைக் குறிக்கிறது என்றால் -

நம்மால் மிகச் சரியாக மிகச் சிறப்பாக ஒன்றை செய்திட முடியவில்லையென்றால் கூட,

மிகச் சிறப்புக்கு நெருக்கமான விதத்தில் அதனைச் செய்திடுங்கள் என்பதைத் தான்!

அடுத்து வருவது மேலும்  மூன்று அரபிச் சொற்கள்:

இக்ஹ்தூ,   ரூஹூ, துல்ஜா (igthoo, roohoo, dhuljah)

இம்மூன்று சொற்களுமே பயணத்தோடு சம்பந்தப்பட்ட சொற்கள் ஆகும்.

இதன் மொழிபெயர்ப்பு:

காலையில் புறப்படுங்கள்.
மாலையிலும் பிரயாணம் செய்யுங்கள்.
இரவில் கொஞ்ச நேரம் பிரயாணியுங்கள்.

இது நாம் எடுத்துச் செய்கின்ற எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதன் நேர

மேலாண்மையை வகுத்துத் தருகின்ற அருமையான வழிகாட்டுதல் ஆகும்.

அதாவது உங்கள் வேலை எதுவாக இருந்தாலும், முழுமையான கவனத்துடன் காலை

நேரத்தில் ஈடுபடுங்கள். பிறகு சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அதுபோலவே -

மாலையிலும் ஈடுபடுங்கள். சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இரவு நெருங்கி

விட்டால், சிறிது நேரம் மட்டும் மீண்டும் உங்கள் வேலையில் ஈடுபடுங்கள்.

அது போதும் என்பது தான் நபியவர்கள் நமக்குக் கற்றுத்தர விரும்புவது.

அடுத்து வருவது தான் நபிமொழியின் முத்தாய்ப்பு!

அது என்ன?

நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்.
நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்.
போய் அடைந்துவிடுவீர்கள்.”

நபியவர்கள் ஒட்டு மொத்தமாகச் சொல்ல வந்ததே நடு நிலை குறித்துத் தான்!

எனவே தான் அதனை இரண்டு முறை திரும்பவும் சொல்கின்றார்கள்.

அடுத்து போய் அடைந்துவிடுவீர்கள்.என்றால் என்ன பொருள் எனில் உங்கள்

"பயணத்தின்" இலக்கை நீங்கள் அடைந்துவிடுவீர்கள் என்பது தான்!

இப்போது எல்லாவற்றையும் இணைத்துப் பார்ப்போமா?

நடு நிலை தவறிய செயல்கள் நம்மைக் காப்பாற்றாது!

நடு நிலை தவறிய செயல்களுக்கு இறைவனின் கருணை கிட்டாது!

முழு ஈடுபாட்டுடன், மிகச் சிறப்பாக ஒரு செயலைச் செய்திட்டால், நேர மேலாண்மை

இலகுவாகி விடும்.

அரை குறை மனதுடன் ஈடுபட்டால், எவ்வளவு நேரம் தான் நாம் வேலையில்

ஈடுபட்டிருந்தாலும் - இலக்கைப் போய் அடைய முடியாது.

வாழ்க்கை என்பதே பயணம் தான்! பயணம் முழுவதும் நடு நிலை தேவை!

ஒரு அறிவுரையை எதிலிருந்து  ஆரம்பித்து, எப்படி நம் கவனத்தை ஈர்த்து, எவ்வாறு

நமக்குப் புரிய வைக்கிறார்கள், கவனித்தீர்களா?

ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்வோம். ஒரு மாணவன் கவனக் குவிப்பின்றிப்

படிக்கின்றான். காலையிலும், மாலையிலும், இரவு அதிக நேரம் கண் விழித்துப்

படிக்கின்றான் எனில் - அவன் தன் இலக்கை அடைந்து கொள்ள மாட்டான்.

இது மாணவனுக்கு மட்டும் அல்ல. நாம் எடுத்துச் செய்கின்ற எல்லா வேலைகளுக்கும்

பொருந்தும்.  

பின் குறிப்பு: இந்த நபிமொழியை நான் முதன் முதலில் உஸ்தாத் மன்சூர் அலி அவர்களின்

இணைய தளத்திலிருந்து தான் படித்துக் கொண்டேன். அவர்களின் விளக்கத்தைப் படித்த

பின்னர் எனக்குத் தோன்றியவற்றையே இங்கே தொகுத்திருக்கின்றேன்.

Comments