மஸ்ஜித் அல் அக்ஸா முதல் பாபர் மஸ்ஜித் வரை…

(இது சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் - பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்னர் எழுதப்பட்ட கட்டுரை)

வரலாற்றுச் சிறப்பு மிக்க பாபர் மஸ்ஜித் கொடியவர்களால் தகர்க்கப் பட்டு விட்டது. இதனைத் தாங்கிக்கொள்ளும் இதயம் நமக்கு இல்லை. நடப்பவை அனைத்தையும் ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கத்தான் முடிந்ததே தவிர நம்மால் வெறொன்றும் செய்திட இயலவில்லை.


இந்நிலை நமக்கு ஏன் என அங்கலாய்க்கிறது மனம். இந்த இழிநிலையைத் துடைத்திட என்ன வழி என்று அறிந்திட ஒவ்வொரு முஸ்லிமும் துடிக்கத்தான் செய்கிறான். இது சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய தருணம்.

இறையில்லங்கள் இடிக்கப்படுவது என்பது இஸ்லாமிய வரலாற்றில் புதுமையான ஒன்று அல்ல! சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு நபி சுலைமான் (அலை) அவர்கள் பாலஸ்தீன நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவியிருந்தார்கள். அவர்கள் காலத்தில் கட்டப்பட்டது தான் மஸ்ஜித் அல் அக்ஸா எனும் இறையில்லம் ஆகும். இது ஜெரூசலத்தில் உள்ளது.

இப்பள்ளியைக் கட்டி 350 ஆண்டுகளுக்குப் பிறகு, நெபுசட்நெஸ்ஸார் (Nebuchatnezzar) எனும் பாபிலோனிய மன்ன்னால் இது தரைமட்டமாக்கப் படுகிறது. 65 ஆண்டுகளுக்குப் பிறகே இறையில்லம் மீண்டும் கட்டப் பட்டது.

அதன் பின்பு 600 ஆண்டுகள் கழித்து(கி.பி. 70 – ல்) இதே இறையில்லம் மீண்டும் டைட்டஸ் (Titus) எனும் ரோமானிய மன்னனால் தரைமட்டமாக்கப் படுகிறது. மேற்கண்ட இரண்டு சம்பவங்களையும் திருக்குர்ஆன் பதிவு செய்துள்ளது.

காலச் சக்கரம் சுழல்கிறது. இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கி.பி 7 – ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நபித்துவப் பணியாற்றி அரேபியப் பெருவெளியில் இஸ்லாமிய ஆட்சியை நிலை நிறுத்துகிறார்கள்.

பிறகு கலீபா ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஜெருசலம் கைப்பற்றப்பட்டு இஸ்லாமிய ஆட்சி அங்கே மலர்கிறது.

ஆனால், சுமார், 500 ஆண்டுகளுக்குப் பிறகு கிருத்துவர்கள் (Crusaders) ஐரோப்பாவில் இருந்து படையெடுத்து, இஸ்லாமிய உலகிலே போர்க்கொடி உயர்த்துகிறார்கள். ஜெருசலம் அவர்களால் கைப்பற்றப் பட்டு விடுகிறது. அங்கிருந்த அதே மஸ்ஜித் அல் அக்ஸாவில் சிலுவையை ஏற்றி விடுகிறார்கள்.

90 ஆண்டுகளுக்குப் பின்பே, சுல்தான் சலாஹுத்தீன் ஐயூபி அவர்களால் அந்தச் சிலுவை அகற்றப்பட்டு அங்கே மீண்டும் தொழுகை நடத்தப்பட்டது.

வரலாறு சுழல்கிறது.

எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாக ஸ்பெயினில்(அந்தலூஸ்) முஸ்லிம்கள் ஆட்சி செய்த போது கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் இன்று அங்கு இல்லை!

சென்ற நூற்றாண்டில் இதே இந்தியத் துணைக்கண்டத்தில், ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்கள் ராஜா ரஞ்சித் சிங் ஆட்சிக்காலத்தில் கைப்பற்றப் படுகின்றன. சில பள்ளிவாசல்கள் இராணுவ வீர்ர்களின் குடியிருப்பு வீடுகளாகவும் சில ஆயுதக் கிடங்குகளாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. ஒரு பள்ளிவாசலுக்கு கன் பவுடர் பள்ளிவாசல் (Gun powder mosque) என்று கூட பெயர் சூட்டப்பட்டிருகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யாவில் கம்யூனிஸப் புரட்சி ஏற்பட்டபோது கூட நமது பள்ளிவாசல்கள் பறிக்கப் பட்டிருக்கின்றன.

ஏன்? சுல்தான் சலாஹுத்தீன் ஐயூபி அவர்கள் காலம் முதல் 500 ஆண்டுகாலமாக நம்மிடம் இருந்து வந்த மஸ்ஜித் அல் அக்ஸா – இன்று யூதர்களின் பிடியில் தான் உள்ளது.

சோர்ந்து விட வேண்டாம்! இவ்வாறு வரலாறு நெடுகிலும் இறைவனின் இல்லங்களை, மனிதர்களில் சிலர் ஏன் இடித்துத் தள்ளுகிறார்கள்? இறைவன் ஏன் இதனை அனுமதித்துக் கொண்டிருக்கின்றான்? – என்று சிந்தித்துப் பாருங்கள்.

திருக்குர் ஆனிலே இதற்கு விடை இருக்கிறது!

திருமறையின் 17 – வது அத்தியாயத்தின் வசனங்கள் 4 – ல் இருந்து 8 – வரை படித்துப்பாருங்கள்.

இறுதி நபியாகிய அண்ணல் நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் வருகைக்கு முன்னர் – வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தான் – பனீ இஸ்ரவேலர்கள். அந்த சமூகத்துக்கு ஒருவர் பின் ஒருவராக இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். தவ்ராத், ஸபூர், இஞ்சீல் ஆகிய வேதங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

ஆனால் – அம்மக்கள் – இறை கட்டளைகளைப் புறக்கணித்தார்கள். பல மூடப் பழக்க வழக்கங்களில் அவர்கள் ஈடுபட்டார்கள். ஒழுக்கக்கேடுகளில் மூழ்கினர். விபச்சாரம் பெருகியது. குழப்பங்களையும், அக்கிரமங்களையும் கட்டவிழ்த்து விட்டார்கள். அவர்களது கொடுமையின் உச்சக்கட்டம் தான் நபி ஈசா(அலை) அவர்களைச் சிலுவையில் அறைந்து கொன்று விட முற்பட்டது ஆகும்!

Comments