ஹள்ரத் அலீ (ரலி) அவர்களின் நிதானம்!

அண்ணலார் உருவாக்கிய முதல் தலைமுறை. அது நபித்தோழர்களின் தலைமுறை. வல்லோன் அல்லாஹுத ஆலா அவர்களை எப்படி வார்த்து எடுத்தான் தெரியுமா?

அவர்கள் வாழ்நாள் முழுவதுமே - ஒன்று மாற்றி மற்றொன்று என்று சோதனைகளுக்கு மத்தியில் தான் வாழ்ந்தார்கள். அவர்களின் இலட்சியப் பாதையில் அன்றாடம் அவர்கள் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

ஒன்று - உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவார்கள். பிலால், அம்மார், கப்பாப் போன்ற நபித்தோழர்களின் நிலையை நாம் அறிந்தே இருக்கின்றோம்.

அல்லது -


குடும்ப ரீதியான துன்புறுத்தல் - கணவன் மனைவியைப் பிரிந்திட வேண்டிய நிலை; தாய் குழந்தையைப் பிரிந்திட வேண்டிய நிலை. குடும்பமே சேர்ந்து ஒருவரை ஒதுக்கித் தள்ளும் நிலை;

அல்லது - தொடர்ந்து போர்களை சந்திக்க வேண்டிய நிலை. போர் தொடுக்கப்படுமோ; என்னேரத்திலும் தாக்குதல் தொடுக்கப்படுமோ என்ற அச்சமான சூழல்.

எப்படிப்பட்ட சூழலையும் எதிர்கொள்ளும் திறன் மிக்கவர்களாக ஆக்கிட அல்லாஹ் இவர்களை இப்படித்தான் சோதித்து புடம் போட்ட தங்கங்களாக மாற்றினான்,

ஆனால் - சூழல் எப்படிப்பட்டதாக இருப்பினும் அந்த நபித்தோழர்கள் - ஒருபோதும் பதற்றம் அடைந்ததே இல்லை. நிதானமாகவே எல்லாச்சூழல்களையும் எதிர்கொண்டார்கள்.

இந்தத் திறனையே - ஆங்கிலத்தில் coping skill - என்று சொல்கிறார்கள். அதாவது - நிலைமை எதுவாயினும் பதற்றம் அடைந்து விடாமல் நிதானமாக வாழ்க்கையின் யதார்த்தங்களை எதிர்கொண்டு செய்வன திருந்தவே செய்து விட்டு, அமைதி காத்திடும் திறன் இது!

நான்காவது கலீபாவாக பொறுப்பேற்றுக் கொண்ட ஹள்ரத் அலீ ரலி அவர்கள் வாழ்க்கையை சற்றே புரட்டிப்பார்ப்போம்:

அவர்கள் பதவி ஏற்ற சூழலே ஒரு பதற்றமான சூழல் தான்.

மூன்றாவது கலீபா ஹள்ரத் உத்மான் ரலி அவர்கள் கொலை செய்யப் பட்டிருந்தார்கள்.

கிலாபத்தைப் பற்றி கவலைப்படாமல் ஹள்ரத் உத்மான் ரலி அவர்களின் கொலைக்கு உடனடியாகப் பழி தீர்க்க வேண்டும் என்று உமைய்யாகள் ஒரு புறம் போர்க்கொடி தூக்கிக் கொண்டு நிற்கிறார்கள்.

இதையே சாக்காக வைத்துக் கொண்டு - ஹள்ரத் அலீயின் கிலாபத்தை ஏற்க மறுத்து போருக்குத் தயாராகும் ஹள்ரத் முஆவியா ரலி அவர்கள்.
காரிஜியாக்கள் என்று புதிதாக ஒரு பிரிவினர் தோன்றி முஸ்லிம்களின் ஒற்றுமை கேள்விக்குறியாகி நிற்கும் நிலை.

போரைத் தவிர்த்திட வழி சொன்னால் - அதை மறுத்து போருக்குத் தயாராவதும், போரில் தோற்றுப் போய் விடுவோம் என்ற நிலை வந்த போது போலி சமாதானம் பேசிட முன் வருவதும், வெட்கித் தலை குனிய வைத்திடும் அளவுக்கு கீழ்த்தரமான தந்திரங்களைக் கையாள்வதும் - என்று எதிரணியினர் முன்னுக்குப் பின் முரணான நிலைகளை எடுத்து - ஹள்ரத் அலீ அவர்களுக்கு சொல்லொணாத் தொல்லைகளைக் கொடுத்து வந்த கால கட்டம் அது.

ஒவ்வொரு பிரச்னையையும் தனித்தனியே கையாள்கிறார்கள் ஹள்ரத் அலீ அவர்கள். தெளிவாக தன் வாதங்களை முன் வைக்கிறார்கள். போர் தவிர்க்க இயலாத போது - போருக்கு மிக அருமையாக ஆயத்தம் செய்கிறார்கள். தீர்க்கமான முடிவுகளை ஒவ்வொரு சமயத்திலும் எடுக்கிறார்கள்.

இஸ்லாத்தின் கொள்கைகளிலிருந்து ஒரு போதும் அணுவளவேனும் விலகிச் சென்றதாக சொல்லிட முடியாத அளவுக்கு உறுதி படைத்த தலைவராக விளங்குகிறார்கள். அவர்களுடைய கிலாபத்தின் ஐந்து ஆண்டு காலமும் இப்படித்தான்.

ஆனால் நாம் இங்கே சொல்ல வருவது - அவர்களுடைய நிதானத்தைப் பற்றித்தான்! பின் வரும் நபிமொழியைப் பாருங்கள். புரியும்.

அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவிக்கிறார்கள்: (என் துணைவியார்) ஃபாத்திமா அவர்கள் (மாவு அரைக்கும்) திரிகை சுற்றியதால் தம் கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (என்னிடம்) முறையிட்டார். இது தொடர்பாக நபியவர்களிடம் தெரிவிக்கும் படி கூறினேன். எனவே, ஒரு பணியாளரை (தமக்குத் தரும்படி) கேட்க நபி(ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் அப்போது வீட்டில் இல்லாததால் ஆயிஷா(ரலி) அவர்களிடம் அது பற்றிக் கூறி(விட்டுத் திரும்பலா)னார்கள். நபி(ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் ஆயிஷா(ரலி) அவர்கள் விஷயத்தை தெரிவித்தார்கள்.

உடனே நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்திருக்க முற்பட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள், '(எழுந்திருக்க வேண்டாம்) அந்த இடத்திலேயே இருங்கள்' என்று கூறிவிட்டு எங்களுக்கு நடுவில் வந்து அமர்ந்தார்கள். அப்போது (என்னைத் தொட்டுக் கொண்டிருந்த) அவர்களின் பாதங்களின் குளிர்ச்சியை என்னுடைய நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள்.)

'பணியாளரைவிட உங்களிருவருக்கும் (பயனளிக்கும்) சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் 'படுக்கைக்குச் சென்றதும்' அல்லது 'விரிப்புக்குச் சென்றதும்' அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று முறையும், அல்ஹம்து லில்லாஹ் (புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். இது பணியாளைவிட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும். என்றார்கள். (இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் 'சுப்ஹானல்லாஹ் என முப்பத்து நான்கு முறை கூற வேண்டும்' என்று அறிவித்தார்கள்.)

ஹள்ரத் அலீ அவர்கள் அவ்வாறே தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து ஓதி வருவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். அவர்கள் சொன்னார்கள்: நபியவர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்ததன் பின்னர் ஒரு நாள் கூட அதனை ஓதாமல் விட்டதில்லை". அலீயின் தோழர் ஒருவர் கேட்டாராம்: "சிப்பீன் போரின் இரவிலுமா?" அலீ அவர்கள்: சிப்பீன் போரின் இரவிலும் தான்!

ஹள்ரத் அலீ ரலி அவர்களின் வாழ்விலிருந்து பாடம் படித்துக் கொள்வோமா?

Comments