எதில் இருக்கிறது சூட்சுமம்?

வல்லோன் அல்லாஹு தஆலா வகுத்தளித்த நமது மார்க்கத்தின் அடிப்படை அம்சங்களுள் ஒன்று: மற்றவர்களுக்கு வழங்கி வாழ்தல் என்பதாகும். மற்றவர்களுக்கு வழங்கி வாழுங்கள் என்பது - வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே இடப்பட்ட கட்டளை அன்று! எல்லாருக்கும் தான்.

வழங்குவதற்கென்று ஒரு மனம் வேண்டும். ஆனால் அது (மற்றவர்களுக்கு மனம் உவந்து வழங்குகின்ற தன்மையைப் பெற்றுக் கொள்தல்) சுலபம் அல்ல! இந்தத்தன்மையை நாம் வளர்த்துக் கொண்டாக வேண்டும். எப்படி?


அடுத்து – கோபத்தைக் கட்டுப்படுத்திட நாம் விரும்பத்தான் செய்கின்றோம். ஆனாலும் பெரும்பாலான கட்டங்களில் நமக்கு அது இயல்வதில்லை! கோபத்தைக் கட்டுப்படுத்துதல் சுலபம் அல்ல! அதனை நாம் கற்றுக் கொண்டாகத் தான் வேண்டும். எப்படி?

அது போலவே – நமக்கு ஏதாவது ஒரு தீங்கு இழைத்தவரை மன்னிப்பது என்பதும் அப்படித்தான். அதுவும் சுலபம் அல்ல! மற்றவர்களை மன்னிக்கும் தன்மையை நாம் வளர்த்துக் கொள்தல் அவசியம். எப்படி?

பின் வரும் வசனத்தைப் படியுங்கள்:

அவர்கள் எத்தகையோர் என்றால், அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.(3:134)

நாம் மேலே குறிப்பிட்ட மூன்று தன்மைகளையும் பெற்றுக் கொண்டவர்களை “முஹ்ஸினீன்” என்று குறிப்பிடுகின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா.

முஹ்ஸினீன் என்பதை நன்மை செய்வோர் என்று பொதுவாக பொருள் கொள்தல் போதாது. ஈமானின் மிக உயர்ந்த நிலை தான் இஹ்ஸான். இந்த இஹ்ஸானின் நிலையை அடைந்தவர்களைத்தான் அல்லாஹ் முஹ்ஸினீன் என்று குறிப்பிடுகின்றான்.

இந்த இஹ்ஸான் எனும் உயர்ந்த நிலையைப் பெற்றுக் கொள்வது எப்படி?

இந்த நபிமொழியைப் படியுங்கள்:

இஹ்ஸான் என்றால் என்ன ? என்று நபியவர்களிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்கும் போது, ”(தொழுகையில்) அல்லாஹ்வை நீ பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கிறான் என்று (எண்ணி) நீ அவனை பார்ப்பது போன்று வணங்குவதாகும்” என்றுபதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி

நமது தொழுகையில் இந்தத்தன்மை நமக்கு வந்து விட்டால் அந்த மூன்று பண்புகளும் நமக்குள் தாமாகவே ஊற்றெடுக்கத் தொடங்கி விடும்.

ஆனால் நமது தொழுகையின் நிலை என்ன?

பின் வரும் நபிமொழியைப் படியுங்கள்:

“ஒரு அடியான் தொழுகிறான் எனில் – அதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே அல்லது ஒன்பதில் ஒரு பங்கு மட்டுமே அல்லது எட்டில் ஒரு பங்கு மட்டுமே அல்லது ஏழில் ஒரு பங்கு மட்டுமே அல்லது ஆறில் ஒரு பங்கு மட்டுமே அல்லது ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே அல்லது நான்கில் ஒரு பங்கு மட்டுமே அல்லது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அல்லது இரண்டில் ஒரு பங்கு மட்டுமே அவருக்காக எழுதப் படுகின்றது.” (சுனன் அபூதாவுத் மற்றும் அந்-நஸாஈ)

இதில் நாம் எங்கே இருக்கின்றோம் என்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்வோம்.

அட! நமது நிலை “பத்தில் ஒரு பங்கு” என்று நபியவர்கள் குறிப்பிட்ட நிலை என்றே வைத்துக் கொள்வோம். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறலாம் தானே? அப்படி முன்னேறும் போது – பிறருக்கு வழங்குதல் என்பது நமது இயல்பாகவே மாறி விடும். கோபத்தை விழுங்குதலும் நமக்கு கை கூடி விடும். மன்னிக்கும் மனப்பான்மையும் நமக்குள் ஊற்றெடுக்கத் தொடங்கி விடும். சரி தானே?

சூட்சுமம் நமது தொழுகையில் இருக்கிறது!

Comments