நாம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்!


வாழ்க்கையை எங்கேயோ தொலைத்து விட்டோம் என ஒரு போதும் நீங்கள் எண்ண வேண்டாம்! நீங்கள் இறைவனின் பார்வையில் தான் இன்னமும் இருக்கிறீர்கள்!

பயணத்தில் நீங்கள் தடம் புரண்டு விட்டதாகவும் கைசேதப்பட வேண்டாம்! நீங்கள் இறைவனின் பார்வையில் தான் இன்னமும் இருக்கிறீர்கள்!


**

நபி மூஸா (அலை) தன் குடும்பத்தினருடன் மத்யனிலிருந்து எகிப்தை நோக்கி….
பாலைவனத்தில் வழியைத் தொலைத்து விட்டார்கள்! நாலா பக்கமும் மணல்வெளி தான்!

எங்கே இருக்கிறேன் நான்? எந்தத் திசையில் முன் செல்வது? எங்கே திரும்பிட வேண்டும்? இன்னும் எவ்வளவு தூரம்? குடும்பம் வேறு என்னுடனே  வருகிறதே? என் செய்வேன்?

**

நபி மூஸா அவர்கள், தாம் வழியைத் தொலைத்து விட்டதாகக் கருதிய அந்த இடத்துக்கு அவரையும் அவர் குடும்பத்தையும் கொண்டு வந்து சேர்த்தது யார்?

இறைவன் அல்லவா?

பாலைவனத்தில் அவர் தம் குடும்பத்தைத் தொலைத்து விடவா அவர்களை அங்கே கொண்டு வந்து சேர்த்தான்?

இல்லையே!

மிகச் சரியான இடம் ஒன்றுக்கல்லவா அவர்களை அங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறான்! அதற்குப் பின் என்ன நடந்தது என்பது தான் நமக்குத் தெரியுமே!

நெருப்பு ஒன்றைக் காண்கிறார் அவர்! குடும்பத்தாரிடம் சொல்லி விட்டு நெருப்பை நோக்கி அவர் “பயணம்!” அப்போதும், அவருடைய நோக்கம் ஒன்று: ஒளி! இன்னொன்று: வழி!

நெருப்புக்கு அருகே அவர் வருகிறார்! மூஸாவே என்று அழைக்கிறான் இறைவன்! மூஸா வந்து சேர்ந்த இடம் புனிதமானது என்று அவருக்கு அறிவிக்கிறான் இறைவன்! எனவே தான் அவர் தம் பாத அணிகளைக் கழற்றி விட உத்தரவு!

அடுத்து என்ன சொல்கிறான் இறைவன் தெரியுமா?

“நான் உம்மைத் தேர்ந்தெடுத்தேன்!

**

நமக்கென்ன பாடம்?

வாழ்க்கைப் பயணத்தில் வழியைத் தொலைத்து விட்டதாக, தடம் புரண்டு விட்டதாக ஒரு போதும் எண்ணாதீர்கள்! நீங்கள் இப்போது இருக்கும் இடத்துக்கு உங்களை அழைத்து வந்து சேர்த்தவனே அந்த இறைவன் தான்!

அடுத்து என்ன?

புனிதமான இடம் ஒன்றை நோக்கி உங்களை அவன் அழைத்துச் சென்றிடத் தான் - அந்த இடத்துக்கு உங்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறான் அவன்!

அவனே உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றான்!

அந்தப் புனித இடத்தை நோக்கிச் செல்வதற்கு முன் உங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்ளுங்கள்!
அங்கு சென்றதும் - அவன் உங்களுக்கு வழி காட்டுவான்! ஒரு பெரும் பொறுப்பை உங்கள் மீது சுமத்துவான்! அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்!

ஏனெனில் - "அந்த ஒன்றுக்காகத் தான்" உங்களைத் தேர்வு செய்திருக்கிறான் அவன்!

**
குறிப்பு: இன்று காலையில் சூரா: தாஹாவிலிருந்து கொஞ்சம் ஓதிய போது தோன்றியது தான் இது!

Comments