நம் சமூகத்தின் நம்பிக்கை பற்றி....

நம் சமூகத்தின் நம்பிக்கை பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டியுள்ளது.

Faith - என்றாலும் நம்பிக்கை என்று மொழிபெயர்க்கிறோம்.

Confidence - என்றாலும் நம்பிக்கை என்று மொழிபெயர்க்கிறோம்.

நாம் இங்கே எழுதவிருப்பது Confidence - பற்றி!

Self confidence - என்பதை தன்னம்பிக்கை என்று மொழிபெயர்க்கிறோம்.

Self Doubt என்பதன் எதிர்ப்பதம் தான் Self confidence என்கிறார் டேனியல் கோல்மன்.

"இதனை" என்னால் செய்திட முடியுமா? - என்கின்ற சந்தேகம் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு அவரது "திறமையில்" நம்பிக்கை இல்லை என்று பொருள். அதாவது அவர் தன் திறமையை வளர்த்துக் கொள்ளவில்லை. இருக்கின்ற திறமையைச் "சோதித்துப் பார்க்கவும்" இல்லை என்று பொருள்.

தனக்கிருக்கின்ற திறமையை சோதித்துப் பார்த்த பிறகு - இனி இது என்னால் இது முடியும் என்ற உறுதியான மனநிலைக்கு வருவது தான் தன்னம்பிக்கை!

சோதித்துப் பார்க்காமலேயே இது என்னால் முடியும் என்று சொல்வது "குருட்டு நம்பிக்கை" ஆகும்!

**

நாம் இங்கே பேச வருவது - தனிப்பட்ட ஒருவரின் தன்னம்பிக்கை (self confidence) குறித்து அல்ல! நாம் இங்கே பேச வருவது ஒரு சமூகத்தின் - அதாவது இஸ்லாமிய சமூகத்தின் "நம்பிக்கை" (confidence) குறித்து.

இஸ்லாமிய சமூகம் கவனம் செலுத்திட வேண்டிய ஏழு விஷயங்களை 7 C - என்று பெயரிட்டு, பேராசிரியர் தாரிக் ரமளான் பேசுகின்ற விஷயங்களில் முதலாவது - C - தான் - Confidence!

Confidence எனும் இந்த நம்பிக்கையை நம் சமூகம் வளர்த்துக் கொள்வது எப்படி?

**

"(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை." (21:107)

இந்த இறை வசனம் நபியவர்களை அகிலத்தார்க்கெல்லாம் ஒரு கருணையாக, ஓர்அருட் கொடையாக, அனைவர் மீதும் அன்பு செலுத்துபவராக அனுப்பப் பட்டவர் என்று குறிப்பிடுகிறது!

அப்படியானால் நாம் யார்?

நபியவர்களுக்குப் பின் - அகிலத்தார்க்கெல்லாம் ஓர் அருட்கொடையான சமூகமாக விளங்க வேண்டியவர்கள் தானே நாம்?

அப்படியானால் நாம் இந்த உலகத்துக்கு - அவ்வளவு வேண்டாமே - நாம் பிறந்த இந்த இந்திய மண்ணுக்கு - நமது இந்திய மக்களுக்கு - ஓர் கருணையாக - அன்பாக - அருளாக - கருணையாக நாம் விளங்கிட வேண்டாமா?

விளங்கிடத் தான் வேண்டும் என்பதை ஒத்துக் கொண்டால் - இங்கே நம்மால் ஒரு அருட்கொடைச் சமூகமாக விளங்கிட முடியும் என்ற நம்பிக்கை நம் சமூகத்துக்கு இருக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோமா?

"நாமெல்லாம் சிறுபான்மையினர்! ஏற்கனவே நம்மை இங்கே வெறுத்து ஒதுக்குகிறார்கள்! நம்மால் இங்கே ஒன்றும் செய்திட முடியாது!" - என்று நாம் சொல்லும்போது, அது நமது நம்பிக்கையற்ற நிலையை வெளிப்படுத்திக் காட்டுகிறதா, இல்லையா? இந்த நம்பிக்கையற்ற நிலையைத் தான் "நிராசை" (feeling hopeless) என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த நம்பிக்கையற்ற நிலையை வெளிப்படுத்துபவர்கள் தான் நாம் சூழ்நிலைக் கைதிகள் மன நிலை உடையவர்கள் (victim mentality) என்று குறிப்பிடுகின்றோம். இந்த நிலைக்கு நம்மைத் தள்ளி விடுவதையே, நம் எதிரிகளும் விரும்புகிறார்கள். இந்த நிலையிலிருந்து நாம் வெளிவர வேண்டாமா?

வெளி வந்து தான் ஆக வேண்டும் என்பதை ஒத்துக் கொண்டால், நம்பிக்கையற்ற விரக்தி நிலையிலிருந்து மாறி, நமது நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி?

மேலே குறிப்பிட்ட இறை மறை வசனத்திலிருந்து துவங்கிட வேண்டியது தான்!

அதாவது இங்கே நம்மைச் சுற்றி வாழ்கின்ற மக்களுக்கு - முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல - ஹிந்துக்களுக்கு, கிருத்தவர்களுக்கு, பிற சமய மக்களுக்கு, எந்த சமயமும் சாரா மக்களுக்கு, ஏழைகளுக்கு, பாதிக்கப் பட்டவர்களுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு, பலவீனர்களுக்கு, நமது அண்டை வீட்டார்களுக்கு, நம்முடன் பணி புரிபவர்களுக்கு, சமூக அளவில் நம்மோடு பழகுபவர்களுக்கு - இப்படி எல்லோருக்குமாக ஓர் அருட்கொடையாக விளங்கிட முயற்சி செய்யுங்கள்.

சிறிய சிறிய அளவில் துவங்குங்கள். ஒவ்வொரு தடவையும் நீங்கள் காட்டுகின்ற கருணை - நம்மால் நமது பங்களிப்பை நம் சமூகத்துக்குச் செய்திட முடியும் என்ற நம்பிக்கையை நமக்குள்கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்திடும்.

அந்த நம்பிக்கை இன்னும் அதை விடப் பெரிதாக மற்றவர்களுக்குச் செய்திட ஊக்கம் தரும். இந்த ஊக்கம் உங்கள் நம்பிக்கையை மேலும் மேலும் வளர்த்திடும். இதுவே - நமது சமூகத்தின் நம்பிக்கையை மேன்மேலும் வளர்த்துக் கொள்ளும் ஒரே வழி.

இதற்கு முதலில், நமக்கு நாமே போட்டுக் கொண்ட வளையத்திலிருந்து வெளியே வர வேண்டும். அவ்வளவு தான்!

# Let us all come out of our self imposed "Ghettos."!

இது ஒரு துவக்கம் மட்டும் தான்! நாம் நமது இந்தியாவுக்கு வழங்கிட வேண்டிய இன்னும் எவ்வளவோ பண்பாட்டுச் சுரங்கங்கள் நம்மிடம் உள்ளன! அனைத்தையும் வழங்குவோம். வாருங்கள்!

Comments