மர்யம் அலைஹிஸ்ஸலாம்!


அவர்கள் வரலாறே ஓர் அற்புதம் தான்!

ஆனாலும், அவர்கள் வாழ்விலிருந்து நாம் படித்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம் ஒன்றை, எந்த ஒரு அற்புதமும் இன்றி நிகழ்த்திக் காட்டி, அதனை நமக்குப் பாடமாகப் படித்துக் கொடுக்கின்றான் வல்லோன் அல்லாஹ்!

இதோ, உங்கள் சிந்தனைக்கு!  

மர்யம் (அலை) அவர்களை எந்த ஆண் மகனும் தொட்டதில்லை. அவர் அப்படிப்பட்ட பெண்மணியும் அல்ல! இறைவனின் அற்புதத்தால், அவர்கள் ஈஸா (அலை) அவர்களைக் கருக் கொள்கிறார்கள்.

பிரசவ வேளை நெருங்கி விட்டது. துணைக்கென்று யாரும் இல்லை. தன்னந்தனியே இருந்து கொண்டு தான் பிள்ளையைப் பெற்றெடுக்கிறார்கள்.

பிரசவ வலி. துணைக்கு யாரும் இல்லை. அது ஒரு திறந்த வெளியும் கூட. தனது கைகளுக்கு ஆதரவாக எதையாவது ஒன்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ள சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள்.


அவர்கள் கண்ணில் பட்டதென்னவோ - ஒரு பேரிச்சை மரம் தான்! அந்த வேதனையுடனேயே அவர்கள் அந்த மரத்தை நெருங்குகிறார்கள்.

பின்பு (அவர்களுக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது! (19:23)

மர்யம் அவர்கள் அந்த மரத்தை நெருங்கியது, பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒரு ஆதரவுக்குத் தான்!

ஆனால், அல்லாஹ் அவருக்குரிய "உணவையும்" "நீரையும்" அங்கே தான் வைத்திருந்தான்!

(அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார். (19:24)

“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.” (19:25)

சிந்தித்து விளங்கக் கூடிய மக்களுக்கு இதில் மிக முக்கியமான படிப்பினைகள் இருக்கின்றன!

பாடம் 1: நீங்கள் எவ்வளவு "பலவீனமாக" இருந்தாலும், நீங்கள் செய்திட வேண்டிய "முயற்சி"யிலிருந்து ஒரு போதும் விடுபட்டு விட முடியாது! பிரசவத்துக்குப் பின்னாலான "பச்சை" உடம்பை வைத்துக் கொண்டு, மரத்தை பிடித்து உலுக்கச் சொல்கிறான் இறைவன்! பழங்களைத் தாமாக விழ வைக்கவில்லை இறைவன்!

பாடம் 2: நீங்கள் கவலைப்பட வேண்டியதே இல்லை. உங்கள் "உணவு" இருக்கும் இடத்துக்கு உங்களை அவன் கொண்டு வந்து சேர்ப்பான்!

பாடம் 3: "எனது முயற்சியால் தான் நான் "வெற்றி" பெற்றேன்  என்று ஒருவரும் சொல்ல முடியாது. ஒரு சோதனை.  பேரிச்சம் பழ மரம் ஒன்றுக்குச் சென்று அதன் கிளையைப் பிடித்து உலுக்குங்கள். பழங்கள் விழுகிறதா என்று பாருங்கள். என்ன உடல் பலத்தைக்கொண்டு மர்யம் (அலை) அவர்கள் அந்த மரக்கிளையை உலுக்கி இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

மரத்தை உலுக்க வேண்டியது நாம். பழங்களை விழச் செய்வது இறைவன்.

பாடம் 4: சிலர் சொல்கிறார்களே, "அல்லாஹ்வுடைய "வேலையை" நாம் பார்த்தால், நம்முடைய வேலையை அவன் பார்த்துக் கொள்வான் என்று! அது தவறான நம்பிக்கை! தவறான தவக்குல்!

Comments