பாட நூல்: சிறுவர் சிறுமியர்க்கு இஸ்லாம் (5 - வது வகுப்பு)


பாட நூல்: சிறுவர் சிறுமியர்க்கு இஸ்லாம் (5 - வது வகுப்பு)பாடம் : 1 இஸ்லாம்
-----------------------------

இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்.

இஸ்லாம் என்பதற்குக் கட்டுப்படுதல் என்றும் ஒரு பொருள் உண்டு.

இஸ்லாம் என்பது நம்மைப் படைத்த இறைவன், நமக்காக அங்கீகரித்த தீன் ஆகும்.

தீன் என்றால் மார்க்கம் அல்லது வாழ்க்கை நெறி என்று பொருள்.

எனவே, இஸ்லாம் எனும் மார்க்கம் ஒரு முழுமையான வாழ்க்கை நெறியாகும்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுபவனே முஸ்லிம்.

நாம் அனைவரும், இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற முஸ்லிம்கள் தானே!

**


பாடம் : 2 தவ்ஹீத் - ஏகத்துவம்
__________________________________

இறைவன் ஒருவனே!

இதனையே தவ்ஹீத் என்றும் ஏகத்துவம் என்றும் அழைக்கிறோம்.

அரபி மொழியில் ஒரே இறைவனைக் குறிக்கும் சொல் தான் அல்லாஹ்!

அல்லாஹ் என்பவன் முஸ்லிம்களின் கடவுள் அல்ல! எல்லோருக்கும் அவனே இறைவன் ஆவான்!

அந்த இறைவன் எப்படிப்பட்டவன்?

அவன் தனித்தவன்.

அவனுக்குத் தாயும் கிடையாது. தந்தையும் கிடையாது.

இறைவனுக்கு மனைவியும் கிடையாது .

அவனுக்குக் குழந்தைகளும் கிடையாது.

இறைவன் மகத்தானவன்.

குறைகள் எதுவும் அற்றவன் அவன்!

இறைவனே அனைத்தையும் படைக்கிறான்.

இறைவனே அனைத்தையும் கண்காணித்து வளர்க்கிறான்.

அவனுக்கு எதுவுமே தேவைப்படுவதில்லை.

அவனுக்கென்று அழகிய பண்புகள் உண்டு.

இறைவன் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்.

அவன் மிகப்பெரியவன். அதனைத்தான் அல்லாஹு அக்பர் என்று கூறுகிறோம்.

***

பாடம் : 3 இஸ்லாத்தின் அடிப்படைகள்
-----------------------------------------------------------------

1 இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறி உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது

2 இந்த வாழ்க்கை நெறிக்கு இரண்டு ஆதாரங்கள் உள்ளன.

3 ஒன்று - அல் குர் ஆன்; மற்றொன்று - சுன்னத் ஆகும்.

4 அல் குர் ஆன் என்பது இறைவன் வழங்கிய வேதம் ஆகும்.

5 சுன்னத் என்பது, முஹம்மத் நபி (சல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறை ஆகும்.

6 முஹம்மத் (சல்) அவர்களைப் பற்றிய ஒவ்வொரு செய்தியும் ஹதீஸ் எனப்படும்.

7 முஹம்மத் நபி (சல்) அவகளின் சுன்னத்தான வழிமுறைகளை ஹதீஸ் நூல்களின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.

8 உலகம் அழியும் வரை, அல் குர் ஆனையும், சுன்னத்தான வழ்முறைகளையும் இறைவன் பாதுகாத்துத் தருவான்.

9 எனவே, இஸ்லாமிய மார்க்க நெறி முறைகளை அல் குர் ஆன் மூலமாகவும், முஹம்மத் நபி (சல்) அவர்களின் சுன்னத் மூலமாகவும் மட்டுமே, பெற்றுக் கொள்ள முடியும்.

***

 பாடம் 4: இறை நம்பிக்கையின் விளைவுகள்
------------------------------------------------------------------------------

ஈமான் என்றால் இறை நம்பிக்கை என்று பொருள்.

ஒருவன் ஈமான் கொண்டதும், அவன் நற்பண்புகள் உடையவனாக மாறிவிட வேண்டும்.

ஈமான் கொண்ட ஒருவன், நற்செயல்களையே செய்திட வேண்டும்.

ஈமான் கொண்டவனிடத்தில், தீய செயல்களைக் காண முடியாது.

தான் விரும்பும் ஒன்றைத் தன் சகோதரனுக்கும் விரும்பாதவர், ஈமான் கொண்டவராக ஆக முடியாது.

அடுத்த வீட்டுக்காரன் பசியோடு இருக்க தான் மட்டும் வயிறார உண்பவன் உண்மையான இறை நம்பிக்கையாளன் இல்லை.

அடுத்தவர் பொருளைத் திருடுபவன் இறை நம்பிக்கையாளன் இல்லை.

போதைப் பொருட்களைக் குடிப்பவன் இறை நம்பிக்கையாளன் இல்லை.

ஒருவன் ஏமாற்றிக் கொண்டிருக்கும்போது, அவன் இறை நம்பிக்கையாளன் இல்லை.

ஈமான் கொண்ட ஒருவர், நல்லதையே பேச வேண்டும். அல்லது மவுனமாக இருந்திட வேண்டும்.

ஆமாம்! மாணவச் செல்வங்களே! இறை நம்பிக்கையும், நல்ல பண்புகளும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள்! இதனை மறந்து விட வேண்டாம்!

*** 

Comments