தலைமைத்துவ வெற்றிடம்!


இன்று நம்மிடையே, "தலைமைத்துவ வெற்றிடம்" ஒன்று காணப்படுகிறது. நல்லதொரு தலைவர் நமக்குக் கிடைக்க மாட்டாரா? - என்ற ஏக்கம் இங்கு எல்லாருக்கும் உண்டு. தலைவர்களை அல்லாஹ் நமக்கு வானத்திலிருந்து தொப்பென்று போட்டு விடுவதில்லை!

Leaders are born! - என்ற கருத்தை நாம் ஏற்பதற்கில்லை! மாறாக - Leaders are made! - என்ற கருத்தையே இங்கே நாம் முன் வைக்கிறோம். தலைவர்களை எப்படி நாம் உருவாக்கிட முடியும் என்று நாம் கேட்கலாம். அதனை - அண்ணல் நபியவர்களின் வாழ்க்கையிலிருந்தே - நாம் கற்றுக் கொள்ள முடியும்.

நபியவர்களின் நாற்பதாவது வயதில் தான் அவர்களுக்கு இறைத்தூதர் எனும் பொறுப்பு வழங்கப்படுகிறது. இறைத்தூதர் எனும் அந்தப் பொறுப்பின் பல்வேறு பரிமாணங்கள் என்னென்ன?

அவர் ஒரு தலைவர்! அவர் ஒரு வழிகாட்டி! அவர் - சமூகத்தைச் சீர்திருத்திட வந்த ஓர் உத்தமர்! அவர்- நல்லொழுக்கங்களை முழுமைப் படுத்த வந்தவர்! அவர் - அழகியதொரு முன்மாதிரி!

அவர் ஒரு ஆசிரியர்! இறைவன் அவருக்குக் கற்றுத் தந்த வசனங்களை மக்களுக்கு ஓதிக்காட்டி, அவர்களைத் தூய்மைப்படுத்தி, வேத அறிவையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்க வந்தவர்!

மக்களை பல்வேறு அடிமைத்தனங்களிலிருந்தும் விடுவிக்க வந்தவர்! குறுகிய உலக வாழ்வின் சுகபோகங்களிலிருந்து மக்களைத் திருப்பி, பரந்து விரிந்த மறு உலக வாழ்க்கைக்கு அவர்களைத் தயார்படுத்திடும் பொறுப்பைச் சுமந்தவர்!

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இப்படிப்பட்ட - சுமக்க முடியாத மிகப் பெரும் சுமை ஒன்று அவர்களது நாற்பதாவது வயதில் திடீரென்று அவர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறது!

அப்படியானால், நபித்துவப் பொறுப்பேற்பதற்கு முன்னர் அவர்கள் வாழ்ந்த அந்த நாற்பது ஆண்டு கால வாழ்க்கை எப்படி இருந்தது? நபித்துவப் பொறுப்பை சுமக்க இருக்கும் அண்ணலவர்களுக்கு, எப்படிப்பட்ட வாழ்க்கையை வழங்கியிருந்தான் இறைவன்? எப்படிப்பட்ட அனுபவங்களின் ஊடே அவர்களை வளர்ந்திடச் செய்தான் என்பதை நாம் ஆய்ந்து பார்த்தால், தலைமையைத் தேடும் நம்மவர்களுக்கு, அதில் பல பாடங்கள் கிடைக்கலாம் அல்லவா?

சான்றுக்கு இங்கே ஒரே ஒரு கண்ணோட்டத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

நபியவர்களுக்கு மக்காவில் இறக்கியருளப்ப்ட்ட அத்தியாயம் ஒன்றில் அல்லாஹ் இவ்வாறு விவரிக்கின்றான் நபியவர்களைப் பற்றி:

(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா? (93:6)

மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.(93:8)

நபியவர்களின் வாழ்வின் துவக்கத்தை சற்று கவனித்துப் பார்ப்போம். நபியவர்கள் பிறப்பதற்கு முன்னரேயே, தந்தை அப்துல்லாஹ் அவர்கள் இறந்து விடுகிறார்கள். நபியவர்களின் தாய் ஆமினா அவர்களும், நபியவர்களின் ஆறாவது வயதிலேயே, இறந்து விடுகிறார்கள்! அண்ணலவர்கள் அப்போது ஓர்அனாதை!

நாற்பதாவது வயதில், இறைத்தூதர் பொறுப்பை வழங்கிய இறைவன், நபியவர்களுக்கு ஓர் அனாதையின் அனுபவத்தை ஏன் வழங்கினான் என்பதை நாம் சிந்தித்துப் பார்த்திட வேண்டும்!

அது போலவே, நபியவர்கள் அன்னை கதீஜா அவர்களை மணம் முடிக்கின்ற வரை, பொருளாதாரத் தேவை உடைய "ஏழையாகத் தான்" அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்! இதுவும் ஏன் என்று நாம் சிந்தித்துப் பார்த்திட வேண்டியுள்ளது.

இதற்கான பதில், இஸ்லாத்தின் அடிப்படை வழிகாட்டுதலில் தான் பொதிந்திருக்கின்றது!

அதனை விரிவாக நாம் இங்கே சொல்ல வேண்டியதில்லை. எனினும் சுருக்கமாகச் சொல்வதென்றால், இம்மார்க்கம், அனாதைகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட மார்க்கம். ஏழைகளின் வறுமையைப் புரிந்து கொண்ட மார்க்கம்!

எனவே, இம்மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய இறைத்தூதருக்கு, இந்த அனுபவங்கள் அவசியம் என்று அவர்களை இவ்வாறு வளர்த்தெடுத்தான் போலும்!

இதிலே நமக்கென்ன படிப்பினை?

தலைவர்களை உருவாக்க விடும்பும் நாம், நம் குழந்தைகளையும், இளைஞர்களையும் - அனாதைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்பவர்களாக வளர்த்திட வேண்டும்! அது போலவே - ஏழ்மை என்றால் அது எப்படி இருக்கும் என்ற அனுபவத்தையும், அவர்களுக்குக் காட்டி வளர்த்திட வேண்டும்!

ஆங்கிலத்தில் Empathy - என்று சொல்வார்கள். அதாவது மற்றவர்களின் உணர்வுகளை, அவர்கள் நிலையில் இருந்து புரிந்து கொள்வதாகும் அது. இஸ்லாம் எப்படிப்பட்ட மார்க்கம் எனில், தாகித்த நாய் ஒன்றுக்கு தண்ணீர் புகட்டும் பெண்மணியை சுவனவாசியாக்கிப் பார்க்கும் மார்க்கம் இது! பேரித்தம் பழத்தின் ஒரு பகுதியையேனும் தர்மமாகக் கொடுத்து, நரக விடுதலை பெறச் சொல்லும் மார்க்கம் இது!

ஆனால், இன்றைய நம் "தலைவர்களின்" நிலை என்ன?

சவூதி மன்னர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் தெரியுமா, ஒரு அனாதையின் உணர்வுகள்? ஏழ்மை என்றால் என்ன என்று அவர்கள் அனுபவித்துப் பார்த்திருப்பார்களா? அந்த அனுபவம் கொஞ்சமாவது இருந்திருந்தால், இன்று - யமனிய மக்களை இன்னிலைக்கு ஆளாக்கியிருப்பார்களா? அனாதைகளின் வலியை அவர்கள் உணர்ந்திருந்தால், இஸ்ரேலை என் சகோதர நாடு என்று பின் சல்மான் சொல்வதற்கு அவருக்கு மனம் வந்திருக்குமா?

இந்த விதியை நாம் மாற்றி அமைக்க வேண்டுமெனில், அடுத்த தலைமுறைக்கு, ஏழ்மையின் அனுபவங்களை அவர்கள் உணர்ந்திடச் செய்ய வேண்டும். அப்போது தான், நாளைய தலைவர்களாக அவர்கள் உருவெடுக்கும்போது, அனாதைகளைப் பராமரிப்பார்கள். ஏழைகளுக்கு வாரி வழங்குவார்கள். அதோடு மட்டுமல்ல, உலகெங்கும் நடக்கும் அநியாயப் போர்களைத் தவிர்ப்பார்கள். அமைதியை நிலை நாட்டுவார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், ஏழைகளாக, அனாதைகளாக, அகதிகளாக அலைந்து திரிகின்ற அவலத்தைத் துடைப்பார்கள்!

அண்ணல் நபியவர்களின் நபித்துவத்துக்கு முன்னுள்ள வாழ்விலிருந்து ஒரே ஒரு கண்ணோட்டத்தை மட்டுமே இங்கே நாம் பார்த்தோம்.

(வாய்ப்பிருப்பின் இன்ஷா அல்லாஹ் பிறகு வேறு கண்ணோட்டங்களையும் எடுத்துக் கொள்வோம்)

S A மன்சூர் அலி

Comments