அறிஞர்களை அறிமுகப்படுத்துவது எப்படி?


அறிஞர்களைப் பொறுத்தவரை, அவர்களின் அறிவாற்றலால், கூர்மையான சிந்திக்கும் திறனால், மிகச் சிக்கலான விஷயங்களையும் பகுத்தாய்ந்து தீர்வு சொல்லும் திறமையால், கவரப் படுவது ஒரு பக்கம்.

அதே நேரத்தில், அதே ஆளுமைகளின் அழகிய பண்புகளால், அவர்களின் எளிமையால், பணிவால், நேர்மையால், தூய்மையான உள்ளத்தால், கவரப்படுவது இன்னொரு பக்கம்.

நவீன கால இஸ்லாமிய அறிஞர்களை அறிமுகப்படுத்தும்போது, பெரும்பாலும், அவர்களுடைய அறிவாற்றலைக் கொண்டே அறிமுகப் படுத்தப் படுவதனால், அவர்களுடைய பண்பு நலன்களைப் பற்றி பொது மக்கள் அவ்வளவாக தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களைப் பற்றி சொல்லப்படும்போது - அவர்களிடம் கல்வி கற்றுக்கொள்ள தன் மகனை அனுப்பி வைக்கும் தாய் ஒருவர் - தன் மகனிடம், "முதலில் இமாம் அவர்களிடம் அதப் எனும் நல்லொழுக்கத்தைக் கற்றுக்கொள், பிறகு அவரிடம் கல்வியைக் கற்றுக் கொள்ளலாம்!" என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாக சொல்லபடுகிறது.

இமாம் அவர்களின் பண்பு நலன்களால், சாதாரண மக்கள் கூட இமாம் அவர்கள் மீது ஒரு கண்ணியத்தையும், மதிப்பையும், மரியாதையையும் வைத்திருந்தார்கள் என்று அறிய முடிகிறது.

இதையே இன்னொரு கோணத்தில் சொல்வதாக இருந்தால், மத்ஹபுடைய இமாம்களின் அறிவாற்றலைப்பற்றி சாதாரண மக்களிடம் கேட்டால், அவர்களால் அவ்வளவாக சொல்லி விட முடியாது. ஆனால் அதே இமாம்களின் பண்பு நலன்களைப் பற்றிக் கேளுங்கள். கதை கதையாகச் சொல்வார்கள். இது தான் யதார்த்தம்.

சொல்ல வருவது என்னவென்றால் - நவீன கால இஸ்லாமிய சிந்தனையாளர்களை - குறிப்பாக - முஹம்மத் அல் கஸ்ஸாலி, யூசுப் அல் கர்ளாவி - போன்றவர்களை அறிமுகப்படுத்துவதற்கு மிகச் சிறந்த இன்னொரு வழியாக அவர்களின் பண்பு நலன்கள் குறித்து விரிவாக எழுதினால், சாதாரண மக்கள், நவீன கால சிந்தனையின் பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதைத் தான்!

- எஸ் ஏ மன்சூர் அலி

Comments