மிகப் பெரிய அநியாயங்கள் என்னென்ன?


அநீதி இழைத்தல், அநியாயம் செய்தல், உரிமைகளைப் பறித்தல், ஒடுக்குதல் - இவை எல்லாவற்றுக்குமே பல படித்தரங்கள் உள்ளன.
நற்செயல்களுக்கான படித்தரங்களை – தரஜாத் - என்று குறிப்பிடுவது போல, தீய செயல்களை, பாவங்களைக் குறித்திட-  தரகாத் - என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் Bad, Worse, Worst - என்று இருப்பது போல் தான் இதுவும்.

“ளுல்ம்” - எனப்படும் அநியாயத்தின் படித்தரங்களை சுருக்கமாக நாம் இங்கே பார்ப்போம். அநியாயங்களிலேயே மிக மோசமான அநியாயங்கள் (worst type of oppression and injustice) என்னென்ன?

1 இறைவனுக்கு இணை வைத்தல் (ஷிர்க்) தான்  அநியாயங்களிலேயே, மிக மோசமான அநியாயம் ஆகும்!

“இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).” – (31:13)

2 இதனைத் தொடர்ந்து மனிதர்களுக்கு செய்யப்படும் அநியாயங்களில், மிக மிக மோசமான அநியாயம், பெற்றோருக்கு செய்யப்படும் அநியாயம் ஆகும். ஏனெனில், நாம் அவர்களுக்குத்தான் முதன் முதலில் கடமைப்பட்டவர்கள். அதாவது நாம் யாருக்குக் கடமைப் பட்டிருக்கின்றோமோ, அவர்களுக்கே அநியாயம் செய்வது தான் மிக மோசமானதாகும்! 

3 நமக்கு உதவி ஒத்தாசை செய்பவர்களுக்கே அநியாயம் ஒன்றைச் செய்து விடுவதும், மோசமான அநியாயங்களுள் அடங்கும்!

இமாம் ஹசன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: “இவரைப் பார்த்து” நான் வியக்கின்றேன்! இவர் என்ன செய்கின்றார்? அவரது சகோதரரின் உணவை சாப்பிடுகின்றார்; அவரது சகோதரரின் பணத்திலிருந்து செலவு செய்து கொள்கின்றார்; அவரது சகோதரருடன் சேர்ந்து தோழமையுடன் அமர்ந்து கொள்ளவும் செய்கின்றார்;  ஆனால், அவர் அருகில் இல்லாதபோது, அவரைச் சபிக்கின்றார்; அவரைப் பற்றிப் புறம் பேசவும் செய்கின்றார்!”

இவரை என்னவென்று சொல்வது?

Imam Hasan Al-Basri said, “I am amazed at a person who eats from his
brother’s food, who takes from his brother’s money, who enjoys his
brother’s company, but in his absence reverts to nothing but cursing and
backbiting him.”

நமக்கு நன்மை செய்கின்ற ஒருவருக்கே, நாம் அநீதி இழைப்பது, இறைவனிடத்திலே மிக மோசமான அநீதியாகும்!

4 இறைவன் யார் மீது அன்பு செலுத்துகின்றானோ, அவர்களுக்கு அநீதி இழைப்பதும் மோசமான அநீதியாகும்!

இறைவன் ஹதீஸ் குத்ஸி ஒன்றில் சொல்கின்றான்: “நான் யாரை நேசிக்கின்றோனோ, அவரிடம் பகைமை பாராட்டுபவருடன், நான் போர் தொடுப்பேன்!”

இதில் நமக்கு ஒரு வினோதம் இருக்கின்றது! அது என்ன? மக்களில் யார் மீது இறைவன் நேசம் வைத்திருக்கின்றான் என்பது நமக்கு எப்படி தெரியும்? அதனால், எவர் ஒருவருக்கும் அநியாயம் இழைப்பதைத் தவிர்த்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை! 

ஒரு இஸ்லாமிய அறிஞர் சொன்னாராம்: “நாம் ஒருவரை சபித்துக் கொண்டிருப்போம்; ஆனால் அவர் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலுக்கு சொந்தக்காரராய் வீற்றிருப்பார்!”

வலை தளங்களில் பிறரை சகட்டுமேனிக்கு விமர்சிப்போருக்கு, இதில் மிகுந்த எச்சரிக்கை இருக்கிறது என்கிறார் ஷெய்க் உமர் சுலைமான் அவர்கள்!

5 இறைவனைத் தவிர வேறு உறவினர்களோ அல்லது பாதுகாவலர்களோ, இல்லாத மக்களுக்கு அநீதி இழைப்பது தான் அநியாயங்களிலேயே மிக மிக மோசமான அநீதியாகும்!  இவர்களில் ஏழைகள், அநாதைகள், பலவீனமானவர்கள் ஆகியோர் அடங்குவர். இத்தகையவர்களுக்கு நாம் புரியும் அநியாயம் அவர்களை மேலும் பலவீனர்களாக ஆக்கி விடும் என்பதால், மிகுந்த எச்சரிக்கை தேவை!

அண்ணலார், இப்படிப்பட்ட பலவீனமான மக்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள்?

இன்ஷா அல்லாஹ் அடுத்துப் பார்ப்போம்.

Comments