பிறருக்கு அநியாயம் இழைப்பது - ஆபத்தானது!



(இஸ்லாத்தில் சமூக நீதி குறித்த கட்டுரை - 1 )

எஸ் ஏ மன்சூர் அலி

(இமாம் உமர் சுலைமான் (USA) அவர்களின் உரையிலிருந்து சில முத்துக்கள்....)

******

திருமறையில் அடிக்கடி இடம் பெற்றிருக்கும் ஒரு மிக முக்கியமான சொல் தான் - லுள்ம் என்பதாகும்.

அரபி-ஆங்கில அகராதியில் இச்சொல்லுக்கு இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது:

Zalama – to do wrong or evil; to wrong; treat unjustly; ill-treat; oppress; beset; harm; suppress; tyrannize; commit outrage; to act the tyrant; act tyrannically;

Zalima- to be or grow dark; dusky; gloomy; murky; tenebrous; darken;

Zulm – wrong; iniquity; injustice; unfairness; oppression; suppression; tyranny;

Zulmat- darkness; duskiness; gloom; murkiness;

தமிழில் சுருக்கமாக இவ்வாறு மொழி பெயர்க்கலாம்:

அநியாயம் செய்தல்; ஒடுக்குதல்; நசுக்குதல்; அநீதி இழைத்தல்;

அநியாயம்;  அநீதி; அடக்குமுறை; இருள்;

அப்படியானால் அநியாயம் அல்லது அநீதி என்பதற்கான இலக்கணம் என்ன?

ஒரு பொருளை அதன் இடத்திலிருந்து மாற்றி வைத்து விடுவது! (Technical definition of Zulm : to misplace something).

இதனை இரண்டு விதமாகச் செய்திடலாம்.

ஒன்று: அதன் "அளவை" விட ஊதிப் பெரிதாகக் காட்டி விடுவது; வரம்பு மீறி விடுவது

இரண்டு: அதன் அளவைக் குறைத்து மதிப்பிட்டு விடுவது; உரிமையை பறிப்பது

(It’s of two types: either going too far ( تعدي ); or withholding too much from someone or something (نقس)

இப்போது நபிமொழி ஒன்றை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள், "எனது அடியார்களே! நான் யாருக்கும் அநியாயம் செய்வதை எனக்கு நானே தடுக்கப்பட்டதாக ஆக்கியுள்ளேன். அது போன்று நீங்களும் யாருக்கும் அநியாயம் செய்வதை தடுக்கப்பட்டதாக ஆக்கியுள்ளேன். ஆகவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாதீர்கள்."

(அறிவிப்பாளர்: அபூதர் கிபாரி (ரளி); நூல்: முஸ்லிம்)

இறைவன், எவருக்கும் அணுவளவு கூட அநீதி இழைப்பவன் அல்ல என்பதைத் திருமறையிலிருந்தும் நாம் புரிந்து கொள்கிறோம். 

وَمَا أَنَا بِظَلَّامٍ لِّلْعَبِیدِ - “

And never will I be unjust to the servants." [Qur’an 50:29]

"நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்” (என்றும் அல்லாஹ் கூறுவான்).


وَمَا اللَّهُ یُرِیدُ ظُلْمًا لِّلْعِبَادِ - “

Allah does not want oppression for His slaves” [Qur’an 40:31]

“அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான்."

**
இப்போது, எடுத்துக் கொண்ட நபிமொழியை சற்று ஆழமாக நோக்குவோம்.

நபிமொழி எவ்வாறு துவங்குகிறது:

என்னுடைய அடியார்களே! - என்றே துவங்குவதை கவனியுங்கள்.

இறைவன், நம்மை, "என் அடியார்களே!" என்று அழைக்கும்போதே, அவனுக்கும் நமக்கும் உள்ள உறவு மிக நெருக்கமானது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். அந்த அழைப்பில் கருணையும் வெளிப்படுகிறது. கொஞ்சம் "கண்டிப்பும்" வெளிப்படுகிறது!

இந்த அழைப்புக்கு நமது உடனடியான மனநிலை என்னவாக இருக்க வேண்டும்?

பணிவு! ஆமாம்! பணிவு தான் நம் மன நிலையாக பரிணமிக்க வேண்டும்!

இறைவனுக்கு முன் பணிந்து விட்ட நிலையில், நாம் இன்னொருவருக்கு எவ்வாறு அநீதி இழைத்திட முடியும்?

எனது அடியார்களே என்று நம்மை அழைப்பதில் இன்னொரு நுட்பம் அடங்கியுள்ளது. நீயே என் அடிமை எனும்போது, நீ எப்படி ஒரு எஜமானனாக (Master) நடந்து கொள்ள முடியும்? நீ எப்படி மற்றவரை அடக்கி ஆள்பவனாக (al-Jabbar) மாறிட முடியும்?  யார் உனக்கு அந்த அதிகாரத்தைத் தந்தது?

மூன்றாவது ஒன்றையும் நாம் கற்றுக் கொள்ளலாம். நாம் யாருக்கு ஒரு அநியாயத்தைச் செய்திட நினைக்கிறோமோ, அவரும் இறைவனின் அடியார்களில் ஒருவர் தானே? இது எப்படி இருக்கிறதென்றால், "எனது அடிமைகளுள் ஒருவருக்கு, நீ எப்படி அநியாயம் செய்திட முடியும்?" - என்று கேள்விக்கணை தொடுப்பது போல் உள்ளது!

நான்காவதாக, இன்னொன்றையும் நாம் புரிந்து கொள்ளலாம். "உனது அறிவு, அதிகாரம், பணபலம், அந்தஸ்து -  இவை எல்லாமே, "நான்" உனக்குக் கொடுத்தவை! (அதாவது  இறைவன் நமக்களித்த அருட்கொடைகள்!)

"எதற்கு இவற்றையெல்லாம் உனக்குக் கொடுத்தேன்? மற்றவர்களுக்கு அநியாயம் இழைக்கவா? அல்லது எனக்கு நன்றி செலுத்துவதற்காக நான் உனக்குக் கொடுத்தேனா?" - என்று இறைவன் நம்மைப் பார்த்துக் கேட்டால் எப்படி இருக்கும்? அதாவது, மற்றவர்களுக்கு நாம் அநியாயம் ஒன்றைச் செய்து விடும்போது, நாம் இறைவனுக்கு நன்றி கெட்டவர்களாக ஆகி விடுகிறோம் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கே நாம் இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அல்லாஹ், இங்கே நம்மை முஸ்லிம்களே என்றோ, ஈமான் கொண்டவர்களே என்றோ அழைத்திடவில்லை! அப்படியானால், என் அடியார்களே என்று இறைவன் அழைக்கும்போது, நம் எல்லோரையும் தான் அழைக்கிறான்.

பொதுவாகவே, இறைவன் எப்போதெல்லாம், மனிதர்கள் அனைவரையும் விளித்துப் பேசுகின்றானோ, அப்போதெல்லாம், அவன் மற்றவர்களின் உரிமைகள் குறித்தே  பேசுவது வழக்கம் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

**

நாம் பிறருக்கு அநியாயம் செய்பவர்களாக இருந்தால், மற்றவர்களின் உரிமைகளைப் பறிப்பவர்களாக நாம் மாறி விட்டால், நாம் அடக்குமுறையாளர்களாக மாறத்தொடங்கினால், அதன் விளைவுகள் என்ன?

இன்ஷா அல்லாஹ் அடுத்துப் பார்ப்போம்.

எஸ் ஏ மன்சூர் அலி

Comments