திருக்குர்ஆனின் கருத்தாக்கங்கள்!



திருக்குர்ஆனின் கருத்தாக்கங்கள்!
--------------------------------------------------------------

Concepts of the Quran or Quranic Concepts

திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள பல சொற்கள் - அவை வெறும் சொற்கள் அல்ல! அவைகளை திருக்குர்ஆனின் கருத்தாக்கங்கள் என்று நாம் அழைக்கலாம். ஆங்கிலத்தில் "concept" எனுல் சொல்லையே நாம் இங்கே கருத்தாக்கம் என்று மொழிபெயர்த்துள்ளோம்.

திருக்குர்ஆனிலே முன்னூறுக்கும் சற்று மேலான - முதன்மையான கருத்தாக்கங்கள் - இருக்கின்றன என்கிறார் அறிஞர் ஜாஸிர் அவ்தா அவர்கள்!

"There are more than 300 primary concepts (mafaahim) in the Quran"

கருத்தாக்கம் என்று நாம் மொழிபெயர்த்திருக்கும் தமிழ்ச் சொல்லை அரபியில் - mafhoom - என்றும், அதன் பன்மையை - mafaahim - என்றும் குறிப்பிடுகின்றார்கள் அவர்கள்.

திருமறையில் இடம் பெற்றுள்ள கருத்தாக்கங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிடுவோம்.

தக்வா, இபாதத், தீன், துன்யா, இன்ஸான், ஜின், ஜன்னத், நார், ஷுக்ர், இஹ்ஸான், பலாஹ், ..... இவை ஒவ்வொன்றும் சாதாரணச் சொற்கள் கிடையாது. இவை ஒவ்வொன்றையும் - 'இவை சாதாரணச் சொற்கள் தானே' - என்று கடந்து சென்று விட முடியாது. இச்சொற்களை ஒற்றை வரியில் வரைவிலக்கணப்படுத்தி விட முடியாத அளவுக்கு அவை ஒவ்வொன்றும் ஆழமான பொருள் கொண்டவை.

தக்வா என்பதை இறையச்சம் என்றோ, இபாதத் என்பதை வணக்கம் என்றோ, தீன் என்பதை மார்க்கம் என்றோ, இன்ஸான் என்பதை மனிதன் என்றோ, ஷுக்ர் என்பதை நன்றி என்றோ, இஹ்ஸான் - என்பதை நன்மை என்றோ மட்டும் மொழிபெயர்த்து அவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டு விட முடியாது. இது மார்க்க விஷயங்களில் நுனிப்புல் மேய்வதற்குச் சமம்!

இங்கே - மூன்று விஷயங்களை - நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!

ஒன்று: குர்ஆனில் இடம் பெற்றிருக்கக் கூடிய கருத்தாக்கங்களைப் (Concepts) பொருத்தவரை - அதன் பொருளைப் புரிந்து கொள்ள அகராதி ஒன்று மட்டுமே போதாது! அதாவது அகராதியில் காணப்படும் பொருளை (meaning) வைத்துக் கொண்டு, ஒரு சொல்லின் முழுமையான பொருளை நாம் அறிந்து கொண்டு விட முடியாது! அதற்கு இன்னொரு வழியும் உண்டு! அதாவது - ஒரு குறிப்பிட்ட சொல் திருமறையில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது (usage) என்பதையும் சேர்த்து நாம் கவனிக்க வேண்டும்.

இரண்டு: திருக்குர்ஆனின் கருத்தாக்கங்கள் (Concepts) என்று நாம் குறிப்பிட்டுக் காட்டுகின்ற சொற்கள் ஒவ்வொன்றும், திருக்குர்ஆனில் பல தடவைகள் பற்பல இறை வசனங்களில் இடம் பெற்றிருக்கும். திரும்பவும் திரும்பவும் அவை கையாளப்பட்டிருக்கும். ஆய்வு என்று வந்து விட்டால் - அந்தச் சொல் திருமறையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து இறை வசனங்களையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு விட வேண்டும்!

மூன்று: திருக்குர் ஆனின் கருத்தாக்கங்கள் ஒவ்வொன்றும், ஒன்றோடொன்று பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கும். அதாவது ஒவ்வொரு கருத்தாக்கமும், திருக்குர்ஆனின் இன்ன பிற கருத்தாக்கங்களுடன் இணைத்துச் சொல்லியிருப்பான் வல்லோன் இறைவன்!

உதாரணமாக ஒரு இடத்தில், இறையச்சத்தையும் ஈமானையும் இணைத்துச் சொல்லியிருப்பான் இறைவன்! இன்னொரு இடத்தில் இறையச்சத்தையும் இபாதத்தையும் இணைத்துக் காட்டியிருப்பான் இறைவன். பிரிதொரு இடத்தில், இறையச்சத்தையும் நன்றியுணர்வையும் இணைத்துச் சொல்லியிருப்பான் அவன். மேலும் ஒரு இடத்தில், இறையச்சத்துடன் வெற்றி எனும்  கருத்தாக்கம் இணைக்கப்பட்டிருக்கும். இப்படி இணைத்துச் சொல்லப்பட்டிருப்பது ஏன் என்பதையும் நாம் ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும். 

அவசியமான குறிப்பொன்று:

மேற்கண்ட இந்த மூன்று அம்சங்களையும் திரும்பவும் திரும்பவும் படித்து மனதில் அப்படியே பதிய வைத்துக் கொள்ளுங்கள்! ஆய்வுக்கு உதவும்!

ஆக இவ்வாறு - திருமறையின் பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில் இணைக்கப்பட்டிருக்கும் கருத்தாக்கம் ஒவ்வொன்றையும், நாம் ஆழமாகப் புரிந்து கொண்டால் தான், திருமறையின் அந்தக் கருத்துக்கு நம் வாழ்வில் முழு வடிவம் தந்து அதனைப் பின்பற்றுபவர்களாக நாம் மாறிட முடியும்.

அவ்வாறு ஆழமாக நாம் புரிந்து கொள்ளத் தவறினால், அந்தக் கருத்தோட்டத்தைப் பற்றி நாம் அரைகுறையாக அறிந்தவர்களாகத் தான் விளங்குவோம். திருமறையைப் பின்பற்றி நடப்பதிலும், நமக்கிடையே பல குழப்பங்கள் தோன்றுவதற்கும் அதுவே காரணமாகி விடும்!

**

எவ்வாறு திருமறையின் ஒவ்வொரு கருத்தாக்கத்தையும் ஆழமாக நாம் புரிந்து கொள்வது? முழுமையாக ஒவ்வொன்றையும் புரிந்து கொள்வது எப்படி?

உதாரணம் ஒன்றுடன் விளக்குவோம் - இன்ஷா அல்லாஹ்!

**

Comments