தக்வா எனும் கருத்தாக்கம் - ஒரு எளிய ஆய்வு



திருக்குர் ஆனின் கருத்தாக்கங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு ஆழமானவை என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு இதோ!

தக்வா என்பது திருக்குர்ஆனின் மிக முக்கியமான கருத்தாக்கங்களுள் (concepts of the Quran) ஒன்று! நாம் முன்னரே குறிப்பிட்டது போல, தக்வா எனும் இந்தக் கருத்தாக்கமும் - திருமறையில் திரும்பவும் திரும்பவும் இடம் பெற்றிருப்பதை நாம் அறிந்தே இருக்கின்றோம்.

அது போலவே - தக்வா எனும் கருத்து, திருமறையின் மிக முக்கியமான இன்ன பிற கருத்துகளுடனும் பிணைக்கப்பட்டுள்ளன! அவற்றுள்- சான்றுக்காக ஒன்றை மட்டும் இங்கே எடுத்து ஆய்வு செய்வோம்.

தக்வா ஒரு கருத்தாக்கம்! இபாதத் இன்னொரு கருத்தாக்கம்! இவ்விரண்டையும் இணைத்துச் சொல்கின்றான் இறைவன் பின் வரும் இறை வசனத்தில்.

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம். (2:21)

இதில் நாம் புரிந்து கொள்கின்ற பாடங்கள் என்னென்ன?

இபாதத் எனும் வணக்க வழிபாடுகளின் நோக்கம் - இறை அச்சத்தைப் பெற்றுக் கொள்வதற்காகத் தான்!

இறையச்சம் மிக்கவர் - வணக்கசாலியாகத் தான் இருந்திட வேண்டும்!

ஒருவர் - வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறார். ஆனால் அவரிடம் இறையச்சம் இல்லை எனில் - அவர் தம் வணக்க வழிபாடுகளை  மீள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும். 

அதே வேளையில், ஒருவர் தான் இறையச்சம் மிக்கவர் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால், அவர் வணக்கங்களில் ஈடுபடுவதில்லை என்றாலும், அவர் இறையச்சம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாதவராகவே கருதப்படுவார். 

இப்போது ஒரு கேள்வி: ஒருவர் வணக்கசாலியாகவும் இருக்கிறார். அது போலவே எந்த ஒரு பாவச்செயலிலும் அவர் ஈடுபடுவதில்லை எனில் - அவர் இறையச்சம் என்பதை முழுமையாகக் கடைபிடிப்பவர் என்று சொல்லி விடலாமா என்பதே அந்தக் கேள்வி!!

இப்போது இன்னொரு அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு இறைவசனங்களை எடுத்துக்  கொள்வோம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணித்து விடாதீர்கள்.

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (3:102-103)

குறிப்பிடப்பட்டுள்ள இந்த இரண்டு இறை வசனங்களிலும் - இறையச்சம் என்பதன் வெளிப்பாடுகளாக இறைவன் நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறான் என்பதை சற்றே கூர்ந்து கவனியுங்கள்.

இறையச்சம் - குர்ஆனோடு பின்னிப் பிணைந்துள்ளது!
அதே நேரத்தில் - இறையச்சம், சமூக ஒற்றுமையோடு (jamee'an) இணைக்கப்பட்டுள்ளது! (பிரிந்து விடாதீர்கள் என்ற எச்சரிக்கைச் சொற்களோடு!)
அடுத்து - இறை நம்பிக்கையாளர்களுக்கு இடையே இருக்க வேண்டிய "உள்ளன்போடு" ('allafa baina quloobikum) இறையச்சம் இணைக்கப்பட்டுள்ளது!
மேலும், இறையச்சம், "சகோதரத்துவம்" (ikhwaaniyat) எனும் திருமறையின் இன்னொரு மகத்தான கருத்தாக்கத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. 

இப்போது எல்லாவற்றையும் சேர்த்துப் பாருங்கள். என்ன கற்றுக் கொள்ளலாம்?

இறையச்சம் பாவச்செயல்களில் இருந்து ஒருவரைத் தடுத்தால் மட்டும் போதாது! அவர் வணக்கசாலியாகவும் விளங்கிட வேண்டும். மேலும் அவர் சமூக அக்கரை உடையவராகவும், ஒற்றுமையை பேணக்கூடியவராகவும், எவ்விதத்திலும் சமூகம் பிளவுண்டு விடுவதற்குக் காரணமாகி விடாதவராகவும், முஸ்லிம்கள் மீது அளப்பரிய அன்பு செலுத்துபவராகவும், சகோதர வாஞ்சையுடையவராகவும் - விளங்கிட வேண்டும்!

இப்போது புரிகிறதா, தக்வா எனும் கருத்தாக்கம் நம்மிடம் என்னென்னவற்றையெல்லாம் எதிர்பார்க்கிறது என்பதை?

இப்போது நம் சூழலுக்கு வருவோம். "ஒத்த கருத்தை உடையவர்கள்" ஒன்று சேர வேண்டும் என்பார்கள் சிலர். அவர்களின் சிந்தனைக்கு: உள்ளங்கள் ஒன்று படாமல், சகோதரத்துவ வாஞ்சை இல்லாமல், ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும்? இயக்கங்கள் இரண்டாக, நான்காகப் பிர்ந்து போவதை நாம் வேடிக்கை தான் பார்க்க முடியும்! சரிதானே?

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், இப்படி ஒன்று சேர்ந்தவர்கள் எல்லாம் மார்க்க அறிவில்லாத சாதாரண முஸ்லிம்கள் அல்ல என்பதை நாம் மறந்து விடக்கூடாது! அது போலவே - தங்களைக் "கொள்கை சொந்தங்கள்" என்று அழைத்துக் கொள்பவர்களுக்கும் இந்தப்பாடம் பொருந்தும்!

இந்த நிலை ஏன் ஏற்படுகிறது எனில்  - கொள்கை என்பதும், கருத்து என்பதும் - "அறிவு" (intellectual) மட்டுமே சார்ந்த அம்சம். ஆனால் இறையச்சம் (spiritual) என்பது நம் இதயத்தோடு (psychological) சம்பந்தப்பட்டது!

தக்வல் குலூப் என்கிறது திருமறை! (22:32)
The God-consciousness in the [believers'] hearts.

அத்தக்வா ஹாஹுனா (தக்வா என்பது இங்கே தான்!) என்று இதயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்!

இதயத்தில் தக்வா இருந்தால் தான் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிற "அல்லஃப பைன குலூபிகும்" (உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து) என்பது நடந்தேறும்!

மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (8:63)

உள்ளங்களை அன்பினால் ஒன்றிணைக்க, மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் ஆகிய  அல்லாஹு தஆலா தேர்ந்தெடுத்த மகத்தான "கருவி" தான் தக்வா எனும் இறையச்சம்!

நாம் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது - தக்வாவைப் பற்றிய ஒரு முழுமையான கண்ணோட்டாமே அன்று! திருமறையின் இரண்டே இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ள மூன்று இறை வசனங்களை மட்டும் வைத்துத் தான் இந்த ஒரு சின்னஞ்சிறிய ஆய்வு!

அல்லாஹ் மிக அறிந்தவன். 

Comments