படைப்பினங்கள் அனைத்துக்கும் மூலம் - ஒரே இறைவனே!



படைப்பினங்கள் அனைத்துக்கும் மூலம் - ஒரே இறைவனே!
--------------------------------------------------------------------------

(Unity of Origin / Unity of Creation)

Universal Laws of the Quran

இறைவனின் வழிமுறைகளைக் குறித்திடும் "இறை நியதிகளுள்" முதன்மையானது - எல்லாப் படைப்பினங்களையும் படைத்தவன் அந்த இறைவன் ஒருவனே என்பது தான்!

சில திருமறை வசனங்களைப் பார்ப்போம்:

"அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்." (குர்ஆன் 6:102)

"...... அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!” (நபியே! நீர்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று.(குர்ஆன்13:16)

மேலும் பார்க்க திருக்குர்ஆன்:  39:62 / 40:62

எல்லாவற்றையும் படைத்தவன் அந்த ஒரே இறைவன் தான் என்பது - நமக்கெல்லாம் உணர்த்துகின்ற பாடம் என்ன தெரியுமா?

படைப்பினங்கள் அனைத்துமே ஒன்றோடொன்று "இணைக்கப்பட்டிருக்கின்றன" என்கின்ற மகத்தான உண்மை தான் அந்தப்பாடம்!

Yes, all the creations of God are connected together!

ஒரு எளிமையான உதாரணம் கொண்டு இதனை நாம் புரிந்து கொள்வோம். ஒரு தாய் பல குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். அந்த ஒரே தாய் பெற்றெடுத்த அனைத்துக் குழந்தைகளுமே - சகோதரன் சகோதரிகளாக ஆகி விடுகிறார்கள் அல்லவா? ஆம்! சகோதரத்துவம் எனும் ஒன்று அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து விடுகிறது தானே?

அது போலத்தான்! இறைவனின் படைப்பினங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்துப் பார்த்திட முடியாத அளவுக்கு அவை அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றன!

மற்ற படைப்பினங்களும் மனித இனத்தைப் போலவே அதனதன் அளவில் சமூகங்கள் தாம் என்கிறது திருமறை.

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும். (குர்ஆன் 6:38)

அது மட்டுமல்ல! எல்லாவற்றின் படைப்பாளன் இறைவன் தான் என்ற முறையில், ஒவ்வொரு படைப்பினமும் இறைவனோடும் இணைந்திருக்கின்றன! எவ்வாறு? 

1 படைப்பினங்கள் அனைத்தும் இறைவனுக்கே சிரம் பணிகின்றன!

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - ஜீவராசிகளும், மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து (சிரம் பணிந்து) வணங்குகின்றன. அவர்கள் பெருமையடிப்பதில்லை. (குர்ஆன் 16:49)

2 படைப்பினங்கள் அனைத்தும் இறைவனைத் துதித்து தஸ்பீஹ் செய்கின்றன!

ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், (குர்ஆன் 17:44)


3 படைப்பினங்கள் அனைத்தின் "மார்க்கம்" இஸ்லாம் தான்!

படைப்பினங்கள் அனைத்தும், இறைவனுக்கே அடிபணிகின்றன எனும் அடிப்படையில், அவை   அனைத்தின் "மார்க்கம்" இஸ்லாம் தான்! அதாவது - படைத்த இறைவனுக்கு அடிபணிந்து விடுகின்ற மார்க்கம் தான் அனைத்துப் படைப்பினங்களின் மார்க்கமாகும்!

அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும். (குர்ஆன் 3: 83)

இன்னொன்றையும் நாம் கவனித்திட வேண்டும். அதாவது - மற்ற படைப்பினங்களுக்கும் நம்மைப் போன்றே "உணர்வுகளும்" ''சுய உணர்வும்'' இருக்கின்றன!

தாவரங்களை இங்கே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். தாவரங்களுக்கும் சுய உணர்வு (Conscience) உண்டு!  தாவரங்களுக்கும், மகிழ்ச்சி, கவலை எல்லாம் இருக்கின்றன!

இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது. (குர்ஆன் 22:5)

அரபி மூலத்தில் "ஸவ்ஜின் பஹீஜ்" (Zawjin Baheej) - என்ற சொற்றொடர் வருகின்றது! இதனை "அழகான ஜோடி" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது! ஆனால், ஆங்கிலத்தில்  Happy couple என்றும் மொழிபெயர்க்கிறார்கள்!

அது போலவே - தாவரங்களின் கவலையைக் குறித்தும் திருமறை எடுத்துச் சொல்கிறது!

(ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம்.(குர்ஆன் 7:58)

இந்த வசனத்தில் - களர் நிலம் ஒன்றிலிருந்து வெளிப்படும் தாவரம் - கவலையை வெளிப்படுத்துகிறது என்பதைக் குறித்திட "நகிதா" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது! நகிதா என்பதனை -  they come out miserably - என்று ஆங்கிலத்தில் குறிக்கின்றார்கள்!

*

இந்தப் பார்வை கொண்டு வரும் மாற்றங்கள்:

திருமறை குர்ஆன் கற்றுத்தரும் - ''படைப்பினங்கள் அனைத்துக்கும் மூலம் - ஒரே இறைவனே!" என்ற இந்த இறை நியதியையும், படைப்பினங்கள் அனைத்துமே ஒன்றோடொன்று "இணைக்கப்பட்டிருக்கின்றன" என்கின்ற இந்த ஒரு பார்வையும்,  - நம்மைச் சுற்றியுள்ள "உலகத்தை" நாம் பார்க்கும் பார்வையை அப்படியே புரட்டிப் போட வல்லது!

தலையை உயர்த்தி வானத்தைப் பார்க்கிறீர்கள். எல்லையில்லாத விண்வெளி நம் இறைவன் படைத்தது. ஆம்! வானமும் நாமும் இணைக்கப் பட்டிருக்கின்றோம்!

சூரியனும் சந்திரனும் விண்மீன்களும் நம் இறைவன் படைத்தவை தான்! ஆம்! நாம் அனைவருமே சூரியனுடனும், சந்திரனுடனும், விண்மீன்களுடனும் பிணைக்கப் பட்டிருக்கின்றோம்.

இவ்வாறே - நாம் பூமியுடனும், காடு, மலைகளுடனும், தாவரங்கள் மற்றும் மிருகங்களுடனும், இன்னும் ஏன் - புழு பூச்சிகளுடனும் கூட நான் இணைக்கப் பட்டிருக்கின்றோம் தான்!

வியப்பாக இல்லை!

எல்லாப் படைப்புகளையும் ஓர் ஒழுங்கமைவுக்குள் இணைத்து வைக்கப்பட்டிருப்பது ஓர் இறை நியதி! இறை நியதிகளுள் எந்த ஒன்றுமே மாறாதது என்பதை நாம் முன்னரே பார்த்தோம்.  எனவே இந்த இணைப்பும் ஓர் இறை நியதி தான்!

அப்படியானால், நமது பொறுப்பு என்ன? படைப்பினங்களுக்குள் இருக்கின்ற இந்த இணைப்பை நாம் உடைத்து விடக்கூடாது என்பது தான் - நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம்! ஏற்றுச் செயல்படுத்த வேண்டிய மகத்தானதொரு பொறுப்பு!

குடும்ப உறவுகளோடு சேர்ந்து வாழுங்கள் என்கிறது நபிமொழி!

கணவன் மனைவியைப் பிரித்து வைப்பது ஷைத்தானுக்கு மிக விருப்பமான செயல் என்கிறது  இன்னொரு நபிமொழி!

மனித உறவுகளைச் சீர்திருத்திக் கொள்வது - தொழுகை, நோன்பு, தர்மம் இவை எல்லாவற்றையும் விட மிகவும் சிறந்தது என்கிறது பிரிதொரு நபிமொழி!

பிரிந்து நின்று கொண்டு - ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு இன அழிவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இனக்குழுக்களை - சகோதரர்களாக ஆக்கிக் காட்டியது இந்த ஒரு இறை நியதி!

**

ஒன்றைத் தேர்வு செய்திடும் சுதந்திரம் கொடுக்கப்பட்ட ஒரே காரணத்தினாலேயே, ஒரு மனிதன் வந்து இந்த இணைப்பை உடைக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்!

இதனைத் தான் "மாபெரும் குழப்பம்" என்கிறான் இறைவன்!

***

மனிதர்கள் ஒரு புறம் இருக்கட்டும். மிக மிக பலவீனமான படைப்பு ஒன்றை எடுத்துக் கொள்வோம். அதனுடன் நாம் எப்படி நடந்து கொள்வோம்?

எறும்பு!

நீங்கள் உங்கள் நண்பர்கள் புடை சூழ, நகரை வலம் வந்து கொண்டிருக்கிறீர்கள். வழியில் - எறும்புகளின் அணிவகுப்பு ஒன்றைப் பார்வை இடுகின்றீர்கள்! உங்களுக்கு என்ன தோன்றும்? நீங்கள் என்ன செய்வீர்கள்!

இதோ இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களைப் பாருங்கள்:

"இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.

அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார். (குர்ஆன் 27: 18-19)

அந்த எறும்புகளுக்கு அவரோ அவரது படை வீரர்களோ எந்த ஒரு தீங்கும் இழைத்திடவில்லை!
இந்தப்பண்பைத் தான் இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கிறான்!

மரம் செடி கொடிகளைப் பார்க்கிறீர்கள். தேவையின்றி ஒரு இலையைப் பறிப்பதற்குக் கூட உங்களுக்கு மனம் வராது!

இந்த ஒரே ஒரு இறை நியதியை நாம் உளமாற ஏற்றுக் கொண்டால், நம்மைப் போன்ற மற்ற மனிதர்களை நாம் எவ்வாறு நோக்குவோம்? இனவெறிச் சிந்தனைக்கு இது ஒன்றே தீர்வு அல்லவா? 

நம்மைச் சுற்றி வளர்கின்ற தாவரங்களை எவ்வாறு நோக்குவோம்? மிருகங்களை எவ்வாறு நோக்குவோம்? நமது சுற்றுப்புறச் சூழலை நாம் எவ்வாறு நோக்குவோம்?

ஆம்! அனைத்துப் படைப்பினங்களையும் இணைத்துப் பார்ப்பது - இஸ்லாத்தின் உயர் இலக்குகளுள் ஒன்று!

இந்த சிந்தனை அளப்பரிய மாற்றங்களை நமக்குள் கொண்டு வர வல்லது!

Comments

  1. அல்லாஹ்வின் உதவிகொண்டு எனது சிந்தனையை தூண்டியதற்கு جزاك الله خيرا كثيرا

    ReplyDelete

Post a Comment