கவலை - ஓர் ஆய்வு - பகுதி 1


மனிதனின் கவலை எனும் உணர்வு குறித்து திருமறை பயன்படுத்தும் சொற்களுள் ஒன்று தான் ஹஸ்ன் (Hazn) என்பதாகும்.

ஹஸ்ன் எனும் சொல்லின் பொருளை சற்று ஆழமாக திருமறையின் ஒளியிலிருந்து ஆய்வு செய்வோம்.  ஹஸ்ன் எனும் சொல், அதன் பல கிளைச் சொற்களுடன் மொத்தன் 42 தடவை திருக்குர்ஆனிலே இடம் பெற்றுள்ளன! ஒரு சில இறை வசனங்களை மட்டும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

**

3: 153


اِذْ تُصْعِدُوْنَ وَلَا تَلْوٗنَ عَلٰٓى اَحَدٍ وَّالرَّسُوْلُ يَدْعُوْكُمْ فِىْۤ اُخْرٰٮكُمْ فَاَثَابَكُمْ غَمًّا ۢ بِغَمٍّ لِّـكَيْلَا تَحْزَنُوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا مَاۤ اَصَابَكُمْ‌ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏


(நினைவு கூறுங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள்; ஆகவே - பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான்; ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் கவலையும் அடையாது என்பதற்காகத்தான்; இன்னும் , அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

எனவே - ஹஸ்ன் - என்பது நாம் விரும்பிய ஒன்று நம்மை விட்டுச் சென்று விட்டது என்பதற்காகவோ, நாம் விரும்பாத (சோதனை) ஒன்று நம்மை வந்தடைத்து விட்டது என்பதற்காகவோ கவலைப்படுவதைத் தான் குறிக்கின்றது என்பதை இந்த இறை வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

**


ஆனால், திருமறையின் இன்ன பிற இறை வசனங்களில், "எதிர்காலத்தில் நம் நிலை என்னவாகும்?" என்பதைக் குறிப்பதற்கே மிகுதமாக  இச்சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் பார்க்க முடியும்!

3: 139

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.

இங்கே - நீங்கள் கவலைப்படாதீர்கள் என்பது உண்மையிலேயே - நம்பிக்கையாளர்களின் எதிர்காலத்தைக் குறித்துத் தான் என்பதை எளிமையாக இங்கே நாம் புரிந்து கொள்ளலாம்.

**

28:7

وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اُمِّ مُوْسٰٓى اَنْ اَرْضِعِيْهِ‌ۚ فَاِذَا خِفْتِ عَلَيْهِ فَاَ لْقِيْهِ فِى الْيَمِّ وَلَا تَخَافِىْ وَلَا تَحْزَنِىْۚ اِنَّا رَآدُّوْهُ اِلَيْكِ وَجٰعِلُوْهُ مِنَ الْمُرْسَلِيْنَ‏

நாம் மூஸாவின் தாயாருக்கு: “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று வஹீ அறிவித்தோம்.

ஆற்றில் குழந்தையை "அனுப்பி" வைத்து விட்டால், குழந்தையின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து பயமோ, கவலையோ தேவையில்லை என்று தான் இறைவன் ஹள்ரத் மூஸா (அலை) அவர்களின் தாயாருக்கு ஆறுதல் அளிக்கிறான்.

**
9:40

إِلَّا تَنْصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ۖ فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَىٰ ۗ وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ


(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால்,  நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.

மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு முன்னால், தவ்ர் குகையில், அண்ணல் நபியவர்களும், அபூ பக்ர் சித்தீக் அவர்களும் ஒளிந்து கொண்டிருந்த சமயம் அது.  எதிரிகளோ, ஒரு சில அடிகளுக்கு மட்டுமே தமக்கு முன்னால்! கரங்களில் ஆயுதங்களுடன்! இவர்களை அவர்கள் பார்த்து விட்டால் அவ்வளவு தான். கதை முடிந்தது என்பது போலத்தான்!

அபூ பக்ர் அவர்கள் தங்கள் பயத்தையும் கவலையையும் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், அண்ணல் நபியவர்களோ, சற்றும் பதற்றமடையாதவர்களாக, "கவலை வேண்டாம்! அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான்!" என்று பதிலளிக்கிறார்கள்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அபூபக்ர் அவர்களின் கவலை எதனைப்பற்றியது? அண்ணலார் அவர்கள் எதனைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார்கள்?
நமது நிலை என்னாகும் என்று அவர்கள் கவலைப்படவில்லை! மாறாக இஸ்லாத்தின் "எதிர்காலம்" என்னவாகும் என்றே அவர்கள் கவலைப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது! 

Comments