கவலை - ஓர் ஆய்வு - பகுதி 5


"கர்ப்" எனும் அரபி மொழிச் சொல்லும் கவலையைக் குறிக்கும் ஒரு சொல் தான்! ஆனால் திருமறை வசனங்களை ஆய்வு செய்திடும்போது, இது சமூகத்துக்கு ஏற்படுகின்ற மாபெரும் துன்பங்களினால் ஏற்படுகின்ற கவலை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இச்சொல்லின் அகராதிப் பொருள் இது தான்:

Karaba - To oppress; distress; grieve; worry; trouble; fill with concern; to overburden;

Karb – worry; sorrow; care; grief; apprehension; concern; anxiety; fear; distress; trouble; pain; torment; torture; agony

இச்சொல் நான்கு தடவை மட்டுமே திருமறையில் இடம் பெற்றுள்ளது.

6:64     21:76       37:76       37: 115

**

வசனங்களை சற்று ஆய்வு செய்வோம்.

6: 64

قُلِ اللَّهُ يُنَجِّيكُمْ مِنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ ثُمَّ أَنْتُمْ تُشْرِكُونَ

“இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் (மின் குல்லி கர்பின் - min kulli karbin) உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே; பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே” என்று கூறுவீராக.

21: 76

 وَنُوحًا إِذْ نَادَىٰ مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهُ فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ

இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு பதில் கூறினோம்; அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் (karbin aleem) நாம் ஈடேற்றினோம்.

37: 76

وَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ

ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம்.

37: 115

 وَنَجَّيْنَاهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِيمِ

(மூஸா மற்றும் ஹாரூன் ஆகிய) அவ்விருவரையும், அவ்விருவருடைய சமூகத்தாரையும் மிகப்பெரும் துன்பத்திலிருந்து இரட்சித்தோம்.

**

கர்ப் எனும் சொல் இரண்டு விதமான சூழலில் பயன்படுத்தப்பட்டுள்ளதை கவனியுங்கள்.

ஒன்று: "இயற்கைச் சீற்றத்தினால்" ஏற்படும் துன்பங்கள். வசனம் 6:64 ல் குறிப்பிடப்பட்டுள்ள துன்பம் என்பது இயற்கைச் சீற்றத்தினால் தான்!

வசனம் 6:53 -ஐப் பார்க்க!

(நபியே!) நீர் கூறும்: நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சமயத்தில்) “எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?” (6:53)

மற்றொன்று: மனிதர்களின் அடக்குமுறையால் வரும் துன்பங்கள். பனீ இஸ்ரவேலர்களுக்கு ஏற்பட்ட துன்பம் (37:115) பிர்அவ்னின் அடக்குமுறையால்!

வசனம் 6:65 ல் - கர்ப் எனும் துன்பத்தின் இரண்டு விதமான வடிவங்களையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறான் இறைவன்!

(நபியே!) நீர் கூறும்: “உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.” அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (6:65)

**

ஏன் கர்ப் எனப்படும் இந்தச்  சமூகத் துன்பங்கள் (social calamities)?

இது இறைவனால் வைக்கப்படுகின்ற சோதனை என்றே படுகிறது!

சமூகங்களுக்கு ஏற்படுகின்ற அனைத்து விதமான துன்பங்களிலிருந்தும் மக்களைக் காப்பவன் இறைவனே என்று பறை சாற்றுகிறது திருமறை!

“இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும்  உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே! (6:64)

இறைத்தூதர்களை ஏற்றுக் கொண்ட சமூகத்தை - அவர்களின் துன்பங்களிலிருந்து (karb) பாதுகாக்கிறான் இறைவன் என்பதையும் கவனியுங்கள்!

திருமறையில் இடம்பெற்றிருக்கும் நான்கு இறை வசனங்களும் - இறைவனின் தூதர்களின் அந்தந்த  சமூகங்களுக்கு நேர்ந்த துன்பங்களையே பட்டியலிட்டுக் காட்டுகிறது என்பதைக் கவனிக்க!

சமூகத் துன்பங்களை நீக்கி வைத்து விடுகின்ற இறைவன் - மக்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

இணை வைப்பிலிருந்து  முற்றிலும் விலகி, ஏக இறைவன் ஒருவனுக்கே அடிபணிகின்ற நிலைக்கு மக்கள் வந்து விட வேண்டும் என்பது தான் இறைவனின் ஒரே எதிர்பார்ப்பு! இதற்காகவே - கர்ப் எனப்படும் சமூகத் துன்பங்கள்!

“இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே; பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே” என்று கூறுவீராக.(6:64)

@@@

Comments