கவலை ஓர் ஆய்வு - பகுதி 6


தப்த-இஸ் என்றொரு குர் ஆனிய சொல்! இதனைத் தமிழில் "விசாரப்படுதல்" என்று மொழிபெயர்க்கிறார்கள்! Grieve, sadden  என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்கள்!

இச்சொல் இரண்டு தடவைகள் மட்டுமே திருமறையில் இடம் பெற்றுள்ளது.

11:36        12:69

**

11: 36

 وَأُوحِيَ إِلَىٰ نُوحٍ أَنَّهُ لَنْ يُؤْمِنَ مِنْ قَوْمِكَ إِلَّا مَنْ قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ

மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்.

12:69

وَلَمَّا دَخَلُوا عَلَىٰ يُوسُفَ آوَىٰ إِلَيْهِ أَخَاهُ ۖ قَالَ إِنِّي أَنَا أَخُوكَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَعْمَلُونَ

(பின்னர்) அவர்கள் யாவரும் யூஸுஃபின் பால் பிரவேசித்த போது அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னைத் தம்முடன் அமரச் செய்து “நிச்சயமாக நாம் உம்முடைய சகோதரன் (யுஸுஃப்); அவர்கள் (நமக்குச்) செய்தவை பற்றி(யெல்லாம்) விசாரப்படாதீர்” என்று (இரகசியமாகக்) கூறினார்.

**

இந்த இரண்டு வசனங்களையும் சற்று உற்று நோக்கினால் இந்த தப்த-இஸ் எனும் சொல்லின் ஆழம் நமக்குப் புலப்படும்!

இந்தக் கவலை மற்ற கவலைகளிலிருந்து எப்படி வேறு படுகிறது எனில் - இந்தக் கவலை - நமக்கு எதிராக செயல் படுகின்ற பிறருடைய "செயல்களால்" ஏற்படும் கவலை என்பது புரியும்!

முதல் வசனத்தில் (11:36) நூஹ் நபியை நோக்கி அவரது மக்கள் அவருக்கு எதிராக செயல்படுகின்ற செயல்கள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்கிறான் இறைவன்!

அடுத்த வசனத்தில் (12:69) யூசுப் நபியின் சகோதரர்கள் தமக்கெதிராக செயல்பட்ட செயல்கள் குறித்து, தனது சகோதரர் புன்யாமின் கவலைப்படத் தேவையில்லை  என்று தைரியம் சொல்கிறார்கள் யூசுப் நபியவர்கள்!

இவற்றில் நமக்கென்ன பாடம்?

நமக்கு எதிராக நம் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ, அல்லது நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ செயல்படுகிறார்கள் என்ற கவலை உங்களுக்கு ஏற்பட்டால்,  நாம் கவலைப்படத் தேவையில்லை என்ற பாடத்தைத் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்!

ஏன் தெரியுமா?

கவலைப்பட வேண்டாம் என்று நூஹ் நபிக்கு அறிவுறுத்திய இறைவன் அடுத்த வசனத்திலேயே (பார்க்க இறை வசனம் 11:37), கட்டுங்கள் கப்பல் ஒன்றை! அதுவும் என் பார்வையின் முன்பே! - என்று சொல்வது எதற்காக? நான் உங்களை அவர்களின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப் போகிறேன் என்பதற்காக! அதாவது நூஹ் நபியை அல்லாஹ் அப்படியே விட்டு விடவில்லை! இதோ அல்லாஹ்வின் பாதுகாப்பு வளையத்துக்குள் அவர்கள் வந்து விடப் போகிறார்கள்! அவ்வளவு தான்!

அது போலத்தான் யூசுப் நபியவர்களின் விஷயத்திலும். அவரது சகோதரர்கள் என்ன தான் அவருக்குத் தீங்கிழைத்தாலும், அவர் - இப்போதும் கூட அல்லாஹ்வின் பாதுகாப்பு வளையத்துக்குள் தான் இருக்கிறார். விரைவில் அதனை அவரது சகோதரர்களே புரிந்து கொள்ளத்தான் போகின்றார்கள்! எனவே கவலை வேண்டாம் என்பது தான் புன்யாமீனுக்கு யூசுப் நபியவர்கள் சொன்ன ஆறுதல் வார்த்தைகள்!

எனவே கவலைப்பட வேண்டாம் (லா தப்த-இஸ்) என்ற செய்தி நூஹ் நபிக்கும், யூசுப் நபிக்கும் மட்டுமல்ல! 

நமக்கும் தான்!

இது தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய "இப்ரத்"!

@@@

Comments