கவலை - ஓர் ஆய்வு - பகுதி 7


அஸfப் - இது உச்ச கட்ட கவலையைக் குறிக்கும்!

**
இதன் அகராதிப் பொருள்:

Asifa – to regret; feel sorry; be sad;

Asaf - grief; sorrow; chagrin; regret; distressed;

இச்சொல் ஐந்து தடவை திருமறையில் இடம்பெற்றுள்ளது.

20:86       43:55        18:6       7:150       12:84

**
20: 86

فَرَجَعَ مُوسَىٰ إِلَىٰ قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا ۚ قَالَ يَا قَوْمِ أَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا ۚ أَفَطَالَ عَلَيْكُمُ الْعَهْدُ أَمْ أَرَدْتُمْ أَنْ يَحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِنْ رَبِّكُمْ فَأَخْلَفْتُمْ مَوْعِدِي

ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் (ghalbaana asifa) தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து: “என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?” (என்றார்).

மேலும் பார்க்க: 7:150. இவ்வசனத்திலும் மூஸா (அலை) அவர்கள் குறித்து இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது! 


18:6

فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَىٰ آثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَٰذَا الْحَدِيثِ أَسَفًا

(நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு (asafan), நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்!

12:84

 وَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَا أَسَفَىٰ عَلَىٰ يُوسُفَ وَابْيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيمٌ

பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” (yaa asafaa!) என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.

43:55

لَمَّا آسَفُونَا انْتَقَمْنَا مِنْهُمْ فَأَغْرَقْنَاهُمْ أَجْمَعِينَ

பின்னர், அவர்கள் நம்மை கோபப்படுத்தியபோது (aasafoonaa), நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; அன்றியும், அவர்கள் யாவரையும் மூழ்கடித்தோம்.

***

படிப்பினைகள்:

1 அஸfப் - இது உச்ச கட்ட கவலையைக் குறிக்கும்! இந்த நிலையை அடைவதற்கு முன் வரை ஒருவர் பொறுமையைக் கடைபிடிக்க இயலும். ஆனால் கவலை உச்ச கட்டத்தை அடைந்து விட்டால் அவ்வளவு தான்! தாங்க இயலாது! அந்தக் கட்டத்தை அடைந்து  விட்டால், சிலர் உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது ஒன்றைச் செய்து விடத் துணிந்து விடுவார்கள். வேறு சிலரோ - சில கடுமையான நடவடிக்கைகளில் இறங்கி விடுவர்! அது அவரவரின் பக்குவத்தைப் பொறுத்தது!

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1 மூஸா (அலை) அவர்களுக்கு, "இப்படிச் செய்து விட்டார்களே!" என்ற கவலை உச்ச கட்டத்தை அடைந்திட, கடுமையான கோபம் வந்து விடுகிறது அவர்களுக்கு!

2 நமது நபியவர்களுக்கோ, தம் மக்கள் இந்த சத்திய வேதத்தை ஏற்க மறுக்கிறார்களே என்ற தம் கவலை உச்ச கட்டத்தை அடைந்திட, அல்லாஹ்வே - குறுக்கிட்டு அறிவுரை கூறுவதை கவனியுங்கள்:

(நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு (asafan), நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்! (18:6)

3 தம் மகனை இழ்ந்து தவிக்கின்ற யாகூப் நபியின் உச்ச கட்ட கவலை அவரை என்ன பாடு படுத்துகிறது என்று கவனியுங்கள்:

“யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” (yaa asafaa!) என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார். (12:84)

4 அல்லாஹ் எவ்வளவு பொறுமை உள்ளவன்! அவனது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு தானே! அந்தக் கட்டத்தை அல்லாஹ் அடைந்து விட்டால், பிர் அவ்னின் நிலை என்னவாகும்?

பின்னர், அவர்கள் நம்மை கோபப்படுத்தியபோது (aasafoonaa), நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; அன்றியும், அவர்கள் யாவரையும் மூழ்கடித்தோம். (43:55)

ஏன் அல்லாஹ்வுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது தெரியுமா?

படித்துப்பாருங்கள் 7: 133 - 136 வரையுள்ள வசனங்களை!

மூஸா அழைத்தார் பிர்அவ்னை! இரண்டு அத்தாட்சிகளை அவனிடம் காட்டினார்! மறுத்தான் அவன்!

இறைவன் சோதித்தான் பிர்அவ்னையும் அவன் மக்களையும்!

முதலில் கன மழையைக் கொண்டு சோதித்தான்! மூஸா அவர்களிடம், "உம் இறைவனிடம்" பிரார்த்திக்கச் சொல்லி வேண்டினான்!  சோதனை நீங்கியதும் ஆணவம் காட்டினான்!

அடுத்து வெட்டுக்கிளிச் சோதனை! அதே முறையீடு! அதே பிரார்த்தனை! சோதனை நீக்கம்! மீண்டும் அடக்குமுறை! 

அடுத்து பேன்.....மீண்டும்  அதே கதை...

அடுத்து  தவளை வழிச் சோதனை! அதே கதை தான் அப்போதும்!

கடைசியாக இரத்தம்! ம்ஹூம்! இறுதிவரை அவன் திருந்தவே இல்லை!

அல்லாஹ்வுக்கே கோபம் வந்தது இப்படித்தான்!

நமக்குப் படிப்பினை என்ன?

பொறுமைக்கும் எல்லை உண்டு!

அந்த உரிமை நமக்கு மட்டுமல்ல!

நம்மால் பாதிப்புள்ளானவர்களுக்கும் உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது!!!

@@@

Comments