திருமறைச் சொல் ஆய்வு: ரஃபத்


ரஃபத்   - ரவூஃப்
-----------------------
Ra’fat  / Al-Ra’oof


அரபிச் சொற்களைப் பொருத்தவரை - அதன் பொருளைப் புரிந்து கொள்ள அகராதி ஒன்று மட்டுமே போதாது! அதாவது அகராதியில் காணப்படும் பொருளை (meaning) வைத்துக் கொண்டு, ஒரு சொல்லின் முழுமையான பொருளை நாம் அறிந்து கொண்டு விட முடியாது! அதற்கு இன்னொரு வழியும் உண்டு! அதாவது - ஒரு குறிப்பிட்ட சொல் திருமறையில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது (usage) என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். 

1 ரஃபத் என்பதன் ஆங்கில அகராதிப் பொருள்
------------------------------------------
Ra-a-fa: to show mercy; have pity; be kind; gracious; merciful

Ra-fatan: mercy; compassion; pity; kindliness; graciousness

Ra'oof - merciful; compassionate; kind; benevolent; gracious


2 அடுத்து - இந்த ரஃபத் எனும் அரபிச் சொல் திருமறையில் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் பார்த்திடவேண்டும்.

இச்சொல் இரண்டு வடிவங்களில் திருமறையில் இடம் பெற்றுள்ளது.

ரஃபத் என்ற வடிவத்தில் இரண்டு தடவையயும், ரவூஃப் என்ற வடிவத்தில் 11 தடவையும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

ரஃபத்
--------
24:2
57:27


ரவூஃப்
--------

2:143 2:207 3:30 9:117 9:128 16:7

16:47 22:65 24:20 57:9 59:10

**

இப்போது வசனங்களுக்குச் செல்வோம்.

16:7

மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன - நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்.

இந்த வசனத்தின் இறுதியில் இறைவனின் இரண்டு பண்புகளைக் குறிக்கும் சொற்கள் இடம் பெற்றுள்ளன: அவை: ரவூஃப் மற்றும் ரஹீம்.

எதற்காக இந்த இரண்டு பண்புகளையும் இங்கே எடுத்தாள்கிறான் இறைவன் என்பதை சற்று கூர்ந்து கவனியுங்கள்!

"மிக்க கஷ்டத்துடனன்றி" - நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன! இங்கே இறைவன் குறிப்பிட்டுக் காட்டுவது கால் நடைகளை!

இவ்வசனத்திலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து என்னவெனில் - நாம் சிரமப்படுவதை இறைவன் விரும்புவதில்லை என்பதைத் தான்! அதனைக் குறித்திடவே அவன் தனது இரண்டு பண்புகளை இங்கே குறிப்பிட்டுக் காட்டுகிறான் இறைவன்! 

"ஏனென்றால் - "நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்"

ரவூஃப் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். அது மிக இரக்கமுடையவன் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் - இவ்வசனம் "நாம் சிரமப்படுவதை" இறைவன் விரும்புவதில்லை என்ற கருத்தை முன் வைக்கிறது!

எனவே - ரவூஃப் என்பதன் முழுமையான பொருள் - "பிறர் கஷ்டப்படுவதை விரும்பாத இரக்க சிந்தனை உடையவன்" என்று நாம் சொல்லலாம்! அது போலவே - ரஃபத் என்பதன் பொருள் - பிறர் துன்பப்படுவதை விரும்பாத இயல்பைக் குறிக்கும் ஒரு சொல்லாக நாம் புரிந்து கொள்ள முடியும்!

இன்னொரு வசனத்தையும் எடுத்துக் கொள்வோம்:

9:128

 لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ


(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.

இவ்வசனத்தில், அண்ணலார் நமது அருமை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில், இந்த அருமைப் பண்பு இருப்பதாகக் குறிப்பிடுகிறான் இறைவன்! இவ்வசனத்தில், "நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது" - என்ற கருத்து - ரஃபத் எனும் சொல்லின் பொருளை நமக்கு மிகச்சரியாக புரிய வைத்து விடுகிறது!

இவ்வாறு நாம் பார்த்திடும்போது, ரஃபத் எனும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் Pity - என்ற சொல் மட்டுமே கொஞ்சம் நெருக்கமான பொருளாக நமக்குப் படுகிறது!

மற்ற வசனங்களை நீங்களே பாருங்கள்! சிந்தியுங்கள்! மேலும் உங்களுக்குப் புரியும் - இன்ஷா அல்லாஹ்!
*

Comments