இவர்களே குழந்தை வளர்ப்பில் கெட்டிக்காரர்கள்!


அது ஒரு ஞாயிறு காலை.

அம்மா – இதோ ஒரு திருமணத்துக்குச் செலவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றார். நான்கு வயது மகளை – கணவனின் சகோதரி வீட்டில் விட்டுச் செல்லலாம் என்பது ஏற்பாடு.

ஆனால் – மகளுக்கோ அது பிடிக்கவில்லை. “அம்மா! நீ போக வேண்டாம்! என்னோடு இருந்து விளையாடு!” நான் மாமி வீட்டுக்குப் போகமாட்டேன்!”

“அதெல்லாம் நடக்காது; நீ மாமி வீட்டுக்குப் போய்த்தான் ஆக வேண்டும்!”

மகள் திடீரென்று தரையில் புரண்டு அழுகிறாள்.

அந்தத் தாயின் நிலையில் நீங்கள். என்ன செய்வீர்கள்?

முதலில் இந்தத் தாய் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் –தன் மகள் தற்போது ஏதோ ஒரு உணர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறாள் என்பதைத் தான்.

அது என்ன உணர்ச்சி என்று எப்படித் தெரிந்து கொள்வது?

“ஏம்மா! மாமி வீட்டுக்குப் போவது என்றால் தான் உனக்குப் பிடிக்குமே! இன்றைக்கு ஏன் போக மாட்டேன் என்கிறாய்?” – என்று கனிவான குரலில் கேட்கிறார் தாய்.

இதோ மகள்:

“அன்னைக்கி மாமி வீட்டுக்கு நான் போயிருந்தேனா? சமீர் வந்து என்னை என்ன சொன்னான் தெரியுமா? ஒரு சாக்குப் பையில் போட்டு தூரப் போட்டு விடுவேன்னு பயம் காட்டினாம்மா!”

மகளுக்கு ஏற்பட்ட உணர்ச்சி எதுவென்று புரிகிறதா?

பயம்!

“சேச்சே! இதுக்குப் போயா பயப்படுவது! அவன் சும்மா பயம் காட்டியிருப்பான். அப்படியெல்லாம் போட மாட்டான்; பேசாம வா என்னோடு!”

இப்படித்தான் பேசக்கூடாது ஒரு தாய்!

ஏனெனில் தனக்கு ஏற்பட்டிருக்கின்ற பயம் என்ற உணர்ச்சியை தன் தாய் ஏன் ஒத்துக் கொள்ளவில்லை என்பது அவளுக்குப் புரிவதில்லை!

“அப்படியானால் நான் பயப்படுவது என்பதே தப்பா? எனக்கு பயம் வருகிறதே! நான் என்ன செய்ய? என்னிடம் ஏதோ ஒரு குறை இருக்கிறதா? அதனால் தான் நான் பயப்படுகிறேனா? “ – குழம்பிப் போகிறாள் மகள்.

பின் எப்படித்தான் பேசிட வேண்டும் அந்தத் தாய்?

மகள் பயந்து போயிருக்கிறாள் என்று தெரிந்தவுடன் – திருமணத்துக்குத் தன்னைத் தயாரித்துக் கொள்வதை சற்றே இடை நிறுத்தி விட்டு – மகளுடன் பேசுவதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

(ரொம்பக் கஷ்டம் இல்லை??)

ஏனெனில் – மகள் இப்போது இருந்து கொண்டிருக்கின்ற சூழல் - தாய்க்கு வல்லோன் அல்லாஹ் தந்திருக்கும் அருமையான ஒரு வாய்ப்பு!

உணர்ச்சிகளை எவ்வாறு கையாள்வது என்பதைத் தன் மகளுக்குக் கற்றுத் தருகின்ற ஒரு வாய்ப்பு இது என்று எடுத்துக் கொண்டு – மகள் அருகே வந்து அமர்ந்து விட வேண்டும்.

“ஓ! அதுவா விஷயம்! பயம் காட்டி விட்டானா சமீர்! சாக்குப்பையிலே போட்டு தூரப்போட்டு விடுவேன்னு சொன்னா யாருக்குத் தான் பயம் வராது! இதே மாதிரி தாம்மா. நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ – எங்கம்மா பயம் காட்டுவாங்க; எப்படி தெரியுமா?

“ஏய்! தெருவில் இறங்கி விளையாடாதே என்று எத்தனை தடவை சொல்றது? இறங்கினேன்னு வச்சிக்கோ; அவ்வளவு தான்; பிள்ளை பிடிக்கிறவன் வந்து பிடிச்சுட்டுப் போயிடுவான்!”

அப்போதிலிருந்து நான் எப்போ தெருவில் இறங்கி விளையாடப் போனாலும் – "எப்ப்படி" பயப்படுவேன் தெரியுமா?

இவ்வாறு கனிவுடன் பேசினாலே போதும். உங்கள் மகள் அமைதியாகி விடுவாள். பொறுமையாக பரீட்சித்துப் பாருங்கள்.

அடுத்து அவள் அடம்பிடித்து அழமாட்டாள். மாறாக தன் தாய் தன்னைப் புரிந்து கொண்டதே போதும் அந்த மகளுக்கு. மனம் அமைதி அடைந்து விடுகிறது. தன்னைத்தானே தேற்றிக் கொள்ளத் துவங்கி விடுவாள்.

இந்தக் கட்டத்திற்குப் பிறகே - தாய் சமாதான முயற்சி ஒன்றில் ஈடுபட வேண்டும்.

"ஏம்மா? நான் வேணுமின்னா வந்து மாமி கிட்ட அல்லது சமீர் கிட்ட பேசவா? இப்படியெல்லாம் பயம் காட்டக் கூடாதுன்னு?"

அடுத்து அவளே சொல்வாள்: சரிம்மா! நான் மாமி வீட்டுக்குப் போறேன்; நீ மாமியிடம் வந்து சமீரை அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லச் சொல். நீ கல்யாணத்துக்குப் போயிட்டு வா!”

***

இது போன்று தம் குழந்தைகள் உணர்ச்சி வசப்படும் (emotional state) சூழ்நிலைகளில் – பொறுமையாக அவர்களுடன் அமர்ந்து – அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு - அதனை அங்கீகரித்து, அதன்பிறகு ஒரு சமாதான முயற்சியை மேற்கொண்டு உணர்வுகளைக் கையாள்வது எப்படி என்று தன் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் தாய்மார்களே - குழந்தை வளர்ப்பில் கெட்டிக்காரர்கள்!

Comments