நூல்: திருக்குர்ஆனின் கருத்தாக்கங்கள் (பகுதி -1)


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


உள்ளடக்கம் 

முன்னுரை

திருக்குர்ஆனின் கருத்தாக்கங்கள்!

தக்வா எனும் கருத்தாக்கம் - ஒரு எளிய ஆய்வு

ஹவா - மனோ இச்சை

***


திருக்குர்ஆனின் கருத்தாக்கங்கள்!

Concepts of the Quran or Quranic Concepts

திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள பல சொற்கள் - அவை வெறும் சொற்கள் அல்ல! அவைகளை திருக்குர்ஆனின் கருத்தாக்கங்கள் என்று நாம் அழைக்கலாம். ஆங்கிலத்தில் "concept" எனுல் சொல்லையே நாம் இங்கே கருத்தாக்கம் என்று மொழிபெயர்த்துள்ளோம்.

திருக்குர்ஆனிலே முன்னூறுக்கும் சற்று மேலான - முதன்மையான கருத்தாக்கங்கள் - இருக்கின்றன என்கிறார் அறிஞர் ஜாஸிர் அவ்தா அவர்கள்!

"There are more than 300 primary concepts (mafaahim) in the Quran"

கருத்தாக்கம் என்று நாம் மொழிபெயர்த்திருக்கும் தமிழ்ச் சொல்லை அரபியில் - mafhoom - என்றும், அதன் பன்மையை - mafaahim - என்றும் குறிப்பிடுகின்றார்கள் அவர்கள். 

திருமறையில் இடம் பெற்றுள்ள கருத்தாக்கங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிடுவோம்.

தக்வா, இபாதத், தீன், துன்யா, இன்ஸான், ஜின், ஜன்னத், நார், ஷுக்ர், இஹ்ஸான், பலாஹ், ..... இவை ஒவ்வொன்றும் சாதாரணச் சொற்கள் கிடையாது.

இவை ஒவ்வொன்றையும் - 'இவை சாதாரணச் சொற்கள் தானே' - என்று கடந்து சென்று விட முடியாது. இச்சொற்களை ஒற்றை வரியில் வரைவிலக்கணப்படுத்தி விட முடியாத அளவுக்கு அவை ஒவ்வொன்றும் ஆழமான பொருள் கொண்டவை.

தக்வா என்பதை இறையச்சம் என்றோ, இபாதத் என்பதை வணக்கம் என்றோ, தீன் என்பதை மார்க்கம் என்றோ, இன்ஸான் என்பதை மனிதன் என்றோ, ஷுக்ர் என்பதை நன்றி என்றோ, இஹ்ஸான் - என்பதை நன்மை என்றோ மட்டும் மொழிபெயர்த்து அவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டு விட முடியாது. இது மார்க்க விஷயங்களில் நுனிப்புல் மேய்வதற்குச் சமம்!

இங்கே - மூன்று விஷயங்களை - நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!

ஒன்று: குர்ஆனில் இடம் பெற்றிருக்கக் கூடிய கருத்தாக்கங்களைப் (Concepts) பொருத்தவரை - அதன் பொருளைப் புரிந்து கொள்ள அகராதி ஒன்று மட்டுமே போதாது! அதாவது அகராதியில் காணப்படும் பொருளை (meaning) வைத்துக் கொண்டு, ஒரு சொல்லின் முழுமையான பொருளை நாம் அறிந்து கொண்டு விட முடியாது! அதற்கு இன்னொரு வழியும் உண்டு! அதாவது - ஒரு குறிப்பிட்ட சொல் திருமறையில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது (usage) என்பதையும் சேர்த்து நாம் கவனிக்க வேண்டும்.

இரண்டு: திருக்குர்ஆனின் கருத்தாக்கங்கள் (Concepts) என்று நாம் குறிப்பிட்டுக் காட்டுகின்ற சொற்கள் ஒவ்வொன்றும், திருக்குர்ஆனில் பல தடவைகள் பற்பல இறை வசனங்களில் இடம் பெற்றிருக்கும். திரும்பவும் திரும்பவும் அவை கையாளப்பட்டிருக்கும். ஆய்வு என்று வந்து விட்டால் - அந்தச் சொல் திருமறையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து இறை வசனங்களையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு விட வேண்டும்!

மூன்று: திருக்குர் ஆனின் கருத்தாக்கங்கள் ஒவ்வொன்றும், ஒன்றோடொன்று பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கும். அதாவது ஒவ்வொரு கருத்தாக்கமும், திருக்குர்ஆனின் இன்ன பிற கருத்தாக்கங்களுடன் இணைத்துச் சொல்லியிருப்பான் வல்லோன் இறைவன்!

உதாரணமாக ஒரு இடத்தில், இறையச்சத்தையும் ஈமானையும் இணைத்துச் சொல்லியிருப்பான் இறைவன்! இன்னொரு இடத்தில் இறையச்சத்தையும் இபாதத்தையும் இணைத்துக் காட்டியிருப்பான் இறைவன். பிரிதொரு இடத்தில், இறையச்சத்தையும் நன்றியுணர்வையும் இணைத்துச் சொல்லியிருப்பான் அவன். மேலும் ஒரு இடத்தில், இறையச்சத்துடன் வெற்றி எனும் வெற்றி எனும் கருத்தாக்கம் இணைக்கப்பட்டிருக்கும். இப்படி இணைத்துச் சொல்லப்பட்டிருப்பது ஏன் என்பதையும் நாம் ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும். 

ஆக இவ்வாறு - திருமறையின் பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில் இணைக்கப்பட்டிருக்கும் கருத்தாக்கம் ஒவ்வொன்றையும், நாம் ஆழமாகப் புரிந்து கொண்டால் தான், திருமறையின் அந்தக் கருத்துக்கு நம் வாழ்வில் முழு வடிவம் தந்து அதனைப் பின்பற்றுபவர்களாக நாம் மாறிட முடியும்.

அவ்வாறு ஆழமாக நாம் புரிந்து கொள்ளத் தவறினால், அந்தக் கருத்தோட்டத்தைப் பற்றி நாம் அரைகுறையாக அறிந்தவர்களாகத் தான் விளங்குவோம். திருமறையைப் பின்பற்றி நடப்பதிலும், நமக்கிடையே பல குழப்பங்கள் தோன்றுவதற்கும் அதுவே காரணமாகி விடும்!

**

எவ்வாறு திருமறையின் ஒவ்வொரு கருத்தாக்கத்தையும் ஆழமாக நாம் புரிந்து கொள்வது? முழுமையாக ஒவ்வொன்றையும் புரிந்து கொள்வது எப்படி?

உதாரணம் ஒன்றுடன் விளக்குவோம் - இன்ஷா அல்லாஹ்!

@@@@

தக்வா எனும் கருத்தாக்கம் - ஒரு எளிய ஆய்வு

திருக்குர் ஆனின் கருத்தாக்கங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு ஆழமானவை என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு இதோ!

தக்வா என்பது திருக்குர்ஆனின் மிக முக்கியமான கருத்தாக்கங்களுள் (concepts of the Quran) ஒன்று! நாம் முன்னரே குறிப்பிட்டது போல, தக்வா எனும் இந்தக் கருத்தாக்கமும் - திருமறையில் திரும்பவும் திரும்பவும் இடம் பெற்றிருப்பதை நாம் அறிந்தே இருக்கின்றோம்.

அது போலவே - தக்வா எனும் கருத்து, திருமறையின் மிக முக்கியமான இன்ன பிற கருத்துகளுடனும் பிணைக்கப்பட்டுள்ளன! அவற்றுள்- சான்றுக்காக ஒன்றை மட்டும் இங்கே எடுத்து ஆய்வு செய்வோம்.

தக்வா ஒரு கருத்தாக்கம்! இபாதத் இன்னொரு கருத்தாக்கம்! இவ்விரண்டையும் இணைத்துச் சொல்கின்றான் இறைவன் பின் வரும் இறை வசனத்தில்.

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம். (2:21)

இதில் நாம் புரிந்து கொள்கின்ற பாடங்கள் என்னென்ன?

இபாதத் எனும் வணக்க வழிபாடுகளின் நோக்கம் - இறை அச்சத்தைப் பெற்றுக் கொள்வதற்காகத் தான்!

இறையச்சம் மிக்கவர் - வணக்கசாலியாகத் தான் இருந்திட வேண்டும்!

ஒருவர் - வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறார். ஆனால் அவரிடம் இறையச்சம் இல்லை எனில் - அவர் தம் வணக்க வழிபாடுகளை  மீள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.

அதே வேளையில், ஒருவர் தான் இறையச்சம் மிக்கவர் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால், அவர் வணக்கங்களில் ஈடுபடுவதில்லை என்றாலும், அவர் இறையச்சம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாதவராகவே கருதப்படுவார்.

இப்போது ஒரு கேள்வி: ஒருவர் வணக்கசாலியாகவும் இருக்கிறார். அது போலவே எந்த ஒரு பாவச்செயலிலும் அவர் ஈடுபடுவதில்லை எனில் - அவர் இறையச்சம் என்பதை முழுமையாகக் கடைபிடிப்பவர் என்று சொல்லி விடலாமா என்பதே அந்தக் கேள்வி!!

இப்போது இன்னொரு அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு இறைவசனங்களை எடுத்துக்  கொள்வோம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணித்து விடாதீர்கள்.

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (3:102-103)

குறிப்பிடப்பட்டுள்ள இந்த இரண்டு இறை வசனங்களிலும் - இறையச்சம் என்பதன் வெளிப்பாடுகளாக இறைவன் நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறான் என்பதை சற்றே கூர்ந்து கவனியுங்கள்.

இறையச்சம் - குர்ஆனோடு பின்னிப் பிணைந்துள்ளது!

அதே நேரத்தில் - இறையச்சம், சமூக ஒற்றுமையோடு (jamee'an) இணைக்கப்பட்டுள்ளது! (பிரிந்து விடாதீர்கள் என்ற எச்சரிக்கைச் சொற்களோடு!)

அடுத்து - இறை நம்பிக்கையாளர்களுக்கு இடையே இருக்க வேண்டிய "உள்ளன்போடு" ('allafa baina quloobikum) இறையச்சம் இணைக்கப்பட்டுள்ளது!

மேலும், இறையச்சம், "சகோதரத்துவம்" (ikhwaaniyat) எனும் திருமறையின் இன்னொரு மகத்தான கருத்தாக்கத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.

இப்போது எல்லாவற்றையும் சேர்த்துப் பாருங்கள். என்ன கற்றுக் கொள்ளலாம்?

இறையச்சம் பாவச்செயல்களில் இருந்து ஒருவரைத் தடுத்தால் மட்டும் போதாது! அவர் வணக்கசாலியாகவும் விளங்கிட வேண்டும். மேலும் அவர் சமூக அக்கரை உடையவராகவும், ஒற்றுமையை பேணக்கூடியவராகவும், எவ்விதத்திலும் சமூகம் பிளவுண்டு விடுவதற்குக் காரணமாகி விடாதவராகவும், முஸ்லிம்கள் மீது அளப்பரிய அன்பு செலுத்துபவராகவும், சகோதர வாஞ்சையுடையவராகவும் - விளங்கிட வேண்டும்!

இப்போது புரிகிறதா, தக்வா எனும் கருத்தாக்கம் நம்மிடம் என்னென்னவற்றையெல்லாம் எதிர்பார்க்கிறது என்பதை?

***

தக்வல் குலூப் என்கிறது திருமறை! (22:32)

The God-consciousness in the [believers'] hearts.

அத்தக்வா ஹாஹுனா (தக்வா என்பது இங்கே தான்!) என்று இதயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்!

இதயத்தில் தக்வா இருந்தால் தான் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிற "அல்லஃப பைன குலூபிகும்" (உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து) என்பது நடந்தேறும்!

மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (8:63)

உள்ளங்களை அன்பினால் ஒன்றிணைக்க, மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் ஆகிய  அல்லாஹு தஆலா தேர்ந்தெடுத்த மகத்தான "கருவி" தான் தக்வா எனும் இறையச்சம்!

நாம் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது - தக்வாவைப் பற்றிய ஒரு முழுமையான கண்ணோட்டாமே அன்று! திருமறையின் இரண்டே இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ள மூன்று இறை வசனங்களை மட்டும் வைத்துத் தான் இந்த ஒரு சின்னஞ்சிறிய ஆய்வு!

அல்லாஹ் மிக அறிந்தவன்.

@@@

ஹவா - மனோ இச்சை 

(ஹவா - எனும் திருமறையின் கருத்தாக்கம்) 

ஹவா என்ற சொல்லின் அகராதிப் பொருட்கள்:

Hawaa – To drop; fall; tumble; fall down; sink; to topple; to swoop down; to pounce; to blow wind; to embrace; to degrade someone; to love; become fond; to air; to ventilate; expose to the wind; to fan the air; complaisant; to flatter; to lean; to reach; grab; grasp; to strive; aspire; to seduce; to be thrust down; to attract; tempt; to lure; fascinate; enrapture; carry away; affection; passion;

**

இந்தச் சொல் மொத்தம் திருமறையில் அதன் கிளைச் சொற்களுடன் சேர்த்து 38 தடவைகள் இடம் பெற்றுள்ளன. சற்று ஆழமாக இச்சொல்லைப் புரிந்து கொள்வோம்:

ஹவா எனும் மனோ இச்சை ஒரு மனிதனைக் "கீழே" (to drop; to fall down; to be thrust down; ) தள்ளி விட்டு விடும். காற்றடித்துச் சென்று ஒரு பொருளை மிக தொலைவில் கொண்டு போய் போட்டு விட்டு விடுவது போல (expose to the wind; to fan the air; carry away), அவன் மனிதத் தன்மையிலிருந்து தூரப்படுத்தப்பட்டு விடுகிறான்.

திருமறை வசனங்களுக்குச் செல்வோம். ஹவா எனும் கருத்தாக்கம், திருமறையின் - வேறு என்னென்ன கருத்துகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் பார்ப்போம். 

ஹவா எனும் கருத்தை - ஈமானுக்கு எதிராக, ஹிதாயத் எனும் நேர்வழிக்கெதிராக, ஷரீஅத்துக்கு எதிராக, அறிவுக்கு எதிராக, நீதிக்கு எதிராகக் கொண்டு வந்து நிறுத்துகிறது திருமறை!

**

1) ஹவா என்பது அடிப்படையிலேயே - ஷிர்க் எனும்  இணை வைத்தலுக்கு வித்திட்டு விடுகிறது!

தன் மனோ இச்சையைப் பின்பற்றி நடப்பவனுக்கு, அவனது மனோ இச்சையே "தெய்வமாக" ஆகி விடுகிறது என்று எச்சரிக்கிறான் இறைவன்.

25:43
-------
தன் இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை நீர் பார்த்தீரா? அவனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா? (25:43)

**

2) மனோ இச்சையைப் பின்பற்றுபவன் நேர்வழியைத் தவற விட்டு விடுகிறான்!

45:23
--------

எவன் தன்னுடைய இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? (45:23)

இதயத்துக்கு முத்திரை வைத்து விட்டால் - அறிவைக் கொண்டு சிந்தித்தல் சாத்தியமே இல்லை

28:50
-------
உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில், நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட, மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான். (28:50)


**

3) மனோ இச்சையையும் ஷைத்தானையும் இணைத்துச் சொல்கிறது இன்னொரு வசனம்:

6:71
-----
"ஷைத்தான் அவனை வழிதவறச் செய்தால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று ஆகிவிடுவோம்.” (6:71 - ஒரு பகுதி மட்டும்)

இவ்வசனத்தில் இடம் பெறும் "இஸ்தஹ்வதுஹுஷ் - ஷயாதீனு" - என்ற சொற்றொடரை சற்றே கவனிக்க. முஹம்மத் அஸத் இவ்வாறு இதனை மொழிபெயர்க்கிறார்:

"Satans have enticed into blundering after earthly lusts"

4) மனோ இச்சை என்பது ஷரீஅத்துக்கு எதிரானது!

45:18
-------
 இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.
(45:18)

**

5) மனோ இச்சை என்பது நீதி நியாயத்துக்கு எதிரானது!

4:135
-------
"எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்!" (4:135 - ஒரு பகுதி மட்டும்)

38:26
-------

"ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்!" (38:26 - ஒரு பகுதி மட்டும்)

**

6) மனோ இச்சையும் ஆணவமும் இணைக்கப்பட்டுள்ளதைக் கவனியுங்கள்:

2:87
-----
மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள். (2:87)

**

7) மறுமை நம்பிக்கை இல்லையேல் - மனோ இச்சையில் வீழ்ந்து விடுவோம்!

20: 15-16
------------
“ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன். “ஆகவே, அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்.

**

8) மனோ இச்சையைப் பின்பற்றுபவனிடம் நிலையான மன உறுதி இருக்காது!

42:15
-------
எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக; மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; (42:15 - ஒரு பகுதி மட்டும்)

9) ஹவாவும் நாயும்!

7:176
-------
நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக. (7:176)

**

10)  மனோ இச்சை உடையவனுக்குத் தீமையெல்லாம் அழகு தான்!

47:14
-------
எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஓப்பாவாரா?

பாடங்கள்:
-------------

மனோ இச்சையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகள்:

ஈமான் எனும் இறை நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்ளல்

உள்ளச்சத்துடன் தொழுதல்

குர்ஆனைத் தொடர்ந்து ஓதுதல்

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு சப்ர் எனும் பொறுமையைக் கடைபிடித்தல்

நல்ல மனிதர்களுடன் சேர்ந்திருத்தல் / தீய மனிதர்களிடமிருந்து விலகி இருத்தல்

தீமை நடக்கும் இடங்களைத் தவிர்த்துக் கொள்தல்

வலை தளங்களில் எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்தல்

கண் பார்வையைத் தாழ்த்திக் கொள்தல்

பள்ளிவாசல் தொடர்பை அதிகரித்துக் கொள்தல்

மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுதல் 

வாழ்வில் உயர்ந்த இலட்சியம் ஒன்றை வகுத்துக் கொண்டு அதிலேயே முழு கவனமும் செலுத்துதல்

@@@

Comments