நூல்: திருக்குர்ஆனின் கருத்தாக்கங்கள் (பகுதி -2)


உள்ளடக்கம்

கவலையைக் குறித்திட பதினெட்டு சொற்கள் குர்ஆனிலே! 

ஹஸ்ன் - எனும் சொல் - ஓர் ஆய்வு 

ஹஸரத் - எனும் சொல் - ஓர் ஆய்வு 

ஹம்ம் எனும் சொல் ஆய்வு 


கவலையைக் குறித்திட பதினெட்டு சொற்கள் குர்ஆனிலே! 


திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள பல சொற்கள் - அவை வெறும் சொற்கள் அல்ல என்றும், அவைகளை திருக்குர்ஆனின் கருத்தாக்கங்கள் (Quranic Concepts) என்று நாம் அழைக்கலாம் என்றும் ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம்.

அதே வேளையில், ஒரே ஒரு கருத்தைக் குறித்திட, பல சொற்கள் (Different Terms) பயன்படுத்தப் பட்டிருப்பதையும் நாம் திருமறையில் காணலாம். இதனையே அறிஞர் ஜாஸிர் அவ்தா அவர்கள் கருத்தாக்கத் தொகுப்பு என்று குறிப்பிடுகிறார்கள். ஆங்கிலத்தில் Conceptual Field - என்றும் அரபியில் - Haqlun Mafaheem - என்றும் குறிப்பிடுகிறார்கள் அவர்கள்.

அவர் எடுத்துக்காட்டும் சான்றுகளுள் ஒன்று தான் கவலை (concept of sadness) என்ற கருத்தாக்கம் பற்றியது! திருமறை குர்ஆனில் - மனிதனின் கவலை எனும் உணர்வைக் குறித்திட பதினெட்டு வெவ்வேறு சொற்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

வெவ்வேறு சொற்களைக் கொண்டு, கவலை எனும் உணர்வு குறித்து திருமறை விளக்குவதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார் அவர். அப்படியானால், கவலை என்பது பலவகைப்படும் என்பதையும், வெவ்வேறு சூழ்நிலைகளில் மனிதர்கள் படுகின்ற கவலை எனும் உணர்வை வெவ்வேறு சொற்களைக் கொண்டு விளக்கிட முடியும் என்பதையும் திருமறையின் மூலம் நாம் புரிந்து கொள்கிறோம்!

ஒவ்வொரு சொல்லாக நாம் ஆய்வுக்கு எடுத்து விளக்குவோம் இன்ஷா அல்லாஹ்!

@@


ஹஸ்ன் - எனும் சொல் - ஓர் ஆய்வு 

மனிதனின் கவலை எனும் உணர்வு குறித்து திருமறை பயன்படுத்தும் சொற்களுள் ஒன்று தான் ஹஸ்ன் (Hazn) என்பதாகும்.

ஹஸ்ன் எனும் சொல்லின் பொருளை சற்று ஆழமாக திருமறையின் ஒளியிலிருந்து ஆய்வு செய்வோம். ஹஸ்ன் எனும் சொல், அதன் பல கிளைச் சொற்களுடன் மொத்தன் 42 தடவை திருக்குர்ஆனிலே இடம் பெற்றுள்ளன! ஒரு சில இறை வசனங்களை மட்டும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.


**

3: 153 
--------

(நினைவு கூறுங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள்; ஆகவே - பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான்; ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் கவலையும் அடையாது என்பதற்காகத்தான்; இன்னும் , அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

எனவே - ஹஸ்ன் - என்பது நாம் விரும்பிய ஒன்று நம்மை விட்டுச் சென்று விட்டது என்பதற்காகவோ, நாம் விரும்பாத (சோதனை) ஒன்று நம்மை வந்தடைத்து விட்டது என்பதற்காகவோ கவலைப்படுவதைத் தான் குறிக்கின்றது என்பதை இந்த இறை வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

**

ஆனால், திருமறையின் இன்ன பிற இறை வசனங்களில், "எதிர்காலத்தில் நம் நிலை என்னவாகும்?" என்பதைக் குறிப்பதற்கே மிகுதமாக இச்சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் பார்க்க முடியும்!


3: 139 
--------

எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.

இங்கே - நீங்கள் கவலைப்படாதீர்கள் என்பது உண்மையிலேயே - நம்பிக்கையாளர்களின் எதிர்காலத்தைக் குறித்துத் தான் என்பதை எளிமையாக இங்கே நாம் புரிந்து கொள்ளலாம்.


**

28:7 
-------

நாம் மூஸாவின் தாயாருக்கு: “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று வஹீ அறிவித்தோம்.

ஆற்றில் குழந்தையை "அனுப்பி" வைத்து விட்டால், குழந்தையின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து பயமோ, கவலையோ தேவையில்லை என்று தான் இறைவன் ஹள்ரத் மூஸா (அலை) அவர்களின் தாயாருக்கு ஆறுதல் அளிக்கிறான்.


**

9:40 
------

(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.

மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு முன்னால், தவ்ர் குகையில், அண்ணல் நபியவர்களும், அபூ பக்ர் சித்தீக் அவர்களும் ஒளிந்து கொண்டிருந்த சமயம் அது. எதிரிகளோ, ஒரு சில அடிகளுக்கு மட்டுமே தமக்கு முன்னால்! கரங்களில் ஆயுதங்களுடன்! இவர்களை அவர்கள் பார்த்து விட்டால் அவ்வளவு தான். கதை முடிந்தது என்பது போலத்தான்!

அபூ பக்ர் அவர்கள் தங்கள் பயத்தையும் கவலையையும் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், அண்ணல் நபியவர்களோ, சற்றும் பதற்றமடையாதவர்களாக, "கவலை வேண்டாம்! அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான்!" என்று பதிலளிக்கிறார்கள்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அபூபக்ர் அவர்களின் கவலை எதனைப்பற்றியது? அண்ணலார் அவர்கள் எதனைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார்கள்?

நமது நிலை என்னாகும் என்று அவர்கள் கவலைப்படவில்லை! மாறாக இஸ்லாத்தின் "எதிர்காலம்" என்னவாகும் என்றே அவர்கள் கவலைப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது!

@@@


ஹஸரத் - எனும் சொல் - ஓர் ஆய்வு 

ஹஸரத் - எனும் அரபிச் சொல் - கவலையைக் குறிக்கும் இன்னொரு சொல்லாகும்.

இதன் பொருள் வருமாறு:

Dictionary meaning of the root of the above term:

Hasara – to pull away or off; remove something from (a cover, a veil, ) to uncover; lay bare; unveil; to become dim (sight); to regret; be greived; be pained; to sigh; to become tired; fatigued; weaken, sap; sadden;



Hasaratan – sorrow; pain; distress; affliction; unfortunately; what a pity; too bad;

தமிழில் - ஏக்கம், கைசேதம், சோர்வு - என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்.


**

இச்சொல் திருமறையில் அதன் வெவ்வேறு மொழி வடிவங்களில் 12 தடவைகள் இடம்பெற்றுள்ளன.

அவை:


8:36 3:156 21:19 19:39 36:30 69:50


2:167 35:8 39:56 6:31 67:4 17:29


இவற்றுள் ஒரு சில இறை வசனங்களைக் கொண்டு ஆய்வு செய்வோம்:



19: 39 
--------

மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! எனினும் அவர்கள் அதைப்பற்றிக் கலலைப்படாதவர்களாகவும், நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.

And warn them of the Day of Regret, when the matter will be concluded. Yet they are heedless, and they do not believe.

இங்கே "regret" என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்!

36:30 
-------

அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை.

3: 156 
--------

முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்; பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்: “அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்” என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான்; மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.


***

ஏற்பட்டு விட்ட நஷ்டம் ஒன்றுக்காகக் கைசேதப்படுவதையே ஹஸரத் என்ற சொல்லாடல் குறிக்கிறது எனலாம்.

நாம் முன்னரே - ஹுஸ்ன் எனும் சொல் குறித்து சற்றே ஆய்வு செய்துள்ளோம். அதாவது "கவலை" என்பது, அதுவும் குறிப்பாக - கடந்த காலத்தில் நடந்து விட்ட ஒன்றை வைத்து, எதிர்காலத்தில் ஏற்படவிருக்கின்ற நஷ்டம் குறித்து கவலைப்படுவதைத் தான் ஹுஸ்ன் எனும் சொல் குறிக்கிறது என்று பார்த்தோம்.

அப்படியானால் - ஹுஸ்ன் எநும் சொல்லுக்கும் ஹஸரத் எனும் சொல்லுக்கும் என்ன வேறுபாடு என்று நாம் கேட்கலாம்!

இங்கே தான் நாம் கூர்ந்து கவனித்திட வேண்டும்!

கைசேதப் படுவது என்பது - ஒன்றை நாம் தேர்வு செய்யாமல் போய் விட்டதனாலேயோ, அல்லது ஒன்றை நாம் செய்யாமல் விட்டு விட்டதனாலேயோ - ஏற்பட்டு விடுகின்ற நஷ்டத்தை எண்ணி "அடடா! இப்படி ஆகி விட்டதே! இப்படி ஆகும் எனத் தெரிந்திருந்தால் நாம் அப்படி செயல் பட்டிருப்பேனே" - என்று ஏங்கித் தவிக்கின்ற கவலை ஆகும் எனச் சொல்லலாம்!

ஆனால் - ஹுஸ்ன் என்பது அப்படிப்பட்டது அல்ல! அது - நாம் ஒரு விஷயத்தைக் குறித்து "முயற்சிகளை" மேற்கொள்ளத்தான் செய்கிறோம். ஆனாலும் அந்த ஒன்று நமக்குக் கைகூடாமல் போய் விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஏற்படுகின்ற கவலை தான் ஹுஸ்ன் எனப்படுவது. அந்தத் தருணங்களில் - "அந்த ஒன்று" நமக்குக் கிடைக்காமல் போய் விட்டதற்காகக் கவலைப்பட வேண்டாம் என்கிறான் இறைவன் என்பதைத் தான் நாம் முன்னரே பார்த்தோம்!

பின் வரும் வசனங்களைக் கூர்ந்து கவனித்துப் படியுங்கள். தெள்ளெனப் புரியும் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு!

**

69: 48- 50 
------------

ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும். ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.

அன்றியும், நிச்சயமாக அது நிராகரிப்பவர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.


2: 167 
--------

(அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: “நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்.” இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெருந்துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான்; அன்றியும், அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகிறவர்களும் அல்லர்.


39:56 
--------

“அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே”! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;


17: 29
--------

உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்

**

@@@@

ஹம்ம் எனும் சொல் ஆய்வு 

ஹம்ம் (Hamm) - அரபி மொழியில் இச்சொல் - புரிந்து கொள்வதற்கு சற்று கடினமான சொல்லாகும்.

உணர்ச்சிவசப்பட்ட பதற்றமான சூழல் ஒன்றில் - ஏதேனும் ஒன்றை அவசரப்பட்டு செய்து விட எத்தனிக்கும் மன நிலையை இச்சொல் குறிக்கிறது!

ஒரு செயலை செய்து விட உறுதியாக முடிவெடுத்து விட்டு அதனைச் செயல்படுத்த உடனடியாக எத்தனிக்கின்ற மன நிலை என்றும் இதனை வர்ணிக்கலாம். ஆங்கிலத்தில் இதனை Resolved to put into action / motivated to do something என்றும் மொழிபெயர்க்கிறார்கள்.

ஆங்கிலத்தில் இதனை - Anxiety - என்று சொல்கிறார்கள். பதற்றம் என்று தமிழில் மொழிபெயர்க்கலாம்.

**

The word hamm / himmat in the dictionary

Hamma – to disquiet; make uneasy; fill with anxiety; to preoccupy; interest; intend; be on the point of doing something; to pay attention; to be anxious;

Himmat – endeavor; ambition; intention; design; resolution; determination; zeal; ardor; eagerness; high-mindedness; high-aiming ambition; high-aspiring; have far-reaching aims;

Note: I am not satisfied with the term is being linked to “high-mindedness; high-aiming ambition; high-aspiring!” – because the Quran never links high mindedness with the term Hamm!

**

இப்போது இறை வசனங்களுக்குச் செல்வோம். இச்சொல்லின் கிளைச் சொற்களுடன் மொத்தம் ஒன்பது தடவை இச்சொல் இறைமறையில் இடம் பெற்றுள்ளது.


5:11 12:24 3:122 4:113 12:24

40:5 9:13 9: 74 3:154


**


5:11 
-----

முஃமின்களே! ஒரு கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்(டி உங்களைக் கொன்று வி)டத் தீர்மானித்த போது (ஹம்ம), உங்களை விட்டு அவர்கள் கைகளை தடுத்து அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருளை நினைவு கூறுங்கள் - ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும்.


12:24 
-------

ஆனால் அவளோ அவரைத் திடமாக (ஹம்மத்) விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் (ஹம்ம) கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.

3: 122
--------

(அந்தப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து (ஓடி விடலாமா) என்று (ஹம்மத்) எண்ணியபோது - அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் (உதவி செய்து) காப்போனாக இருந்தான்; ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.

4:113
-------

(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள் (ல ஹம்மத்) .....

9:13
------

தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட (ஹம்மூ) மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான்.


9:74
------

இவர்கள் நிச்சயமாக நிராகரிப்பின் சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர் (ஹம்மூ);.....

**

கற்றுக் கொள்ள வேண்டியவை:

1 ஹம் எனும் பதற்றம் உணர்ச்சி வசப்பட்ட சூழலில் தோன்றுவதாகும். (Emotional)

2 பதற்றம் என்பது சற்று ஆபத்தானது. ஏனெனில் - பதற்றம் என்பது உடனடியான செயல்பாட்டுக்கு நம்மை உட்படுத்தி விடும். அந்த செயல் அறிவுக்குப் பொருத்தமானதாக இருக்காது.

3 அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் பதற்றத்திலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு வேண்டி துஆ செய்துள்ளார்கள் (அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் ஹம்மி....)

4 இறை நிராகரிப்பாளர்கள் - இறை நம்பிக்கையாளர்களுக்குத் தீங்கு இழைக்கத் துணிந்துவிடும்போதெல்லாம் - அதனை ஹம் எனும் சொல்லைப் பயன்படுத்துகிறான் இறைவன்! (5:11 / 9:74) இது எதனை உணர்த்துகிறது என்றால் - இஸ்லாமிய வெறுப்பு (islamo-phobia) என்பது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு மற்றவர்களுக்கு தீங்கிழைக்கத் துடிப்பதை மையமாகக் கொண்டது என்பது தான். ஹம் எனும் சொல் உணர்ச்சி வசப்பட்ட நிலையைத் தான் குறிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 (Islamophobia is sheer emotional! Islamophobia can be kindled only with “hate” emotions! So that people were made to be “anxious” about the presence of Muslims! Hate crimes can be explained only in this way!)

5 ஒரு மனிதன் பாவமான காரியம் ஒன்றில் வீழ்ந்து விடுவதற்கும், ஹம் எனும் உணர்ச்சி வசப்பட்ட நிலையே காரணம் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனத்தூய்மையுடன் (இஃக்லாஸ்) இறை வணக்கம் (இபாதத்) செய்வதன் மூலமே - எந்த பாவங்களிலும் நாம் வீழ்ந்து விடாமல் நம்மைக் காத்துக் கொள்ள முடியும். (பார்க்க 12:24). இபாதத் என்பது நிதானத்தைக் கற்றுத் தரும் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். நிதானம் என்பது பதற்றத்துக்கு நேர் எதிர்!



இறைவன் மிக அறிந்தவன்!

@@@@

Comments