நூல்: திருக்குர்ஆனின் கருத்தாக்கங்கள் (பகுதி -3)


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்



உள்ளடக்கம்

GHAMMA -  ஃகம்ம: திருமறைச் சொல் ஆய்வு

சமூகக் கவலை: கர்ப் எனும் சொல் ஆய்வு

தப்த-இஸ் என்றொரு குர்ஆனிய சொல்!

**

GHAMMA -  ஃகம்ம: திருமறைச் சொல் ஆய்வு

GHAMMA (ஃகம்ம) - என்ற சொல்லும் கவலையைக் குறிக்கும் இன்னொரு அரபிச் சொல் ஆகும்!

இச்சொல்லை துக்கம் என்றும், கவலை என்றும்  மொழிபெயர்க்கிறார்கள்.

ஆங்கில அகராதியில் இதன் பொருள்கள் வருமாறு:

Ghamma:  To cover, veil, conceal, to fill someone with sadness, pain or grief, to pain, grieve, distress,

Ghumma: To obscure, incomprehensible, to be overcast (sky) to fill with sadness, be worried, be sad, grieve, pine, worry

Ghamm – affliction, sorrow, distress, anxiety,

Ghummat – Affliction,

Ghamaam - Clouds,

Aghamm – covered with dense hair, shaggy, thick, dense (clouds)

அகராதிப் பொருள்களை சற்றே கவனித்தால் - இச்சொல்லுக்கு இரண்டு பொருள்கள் இருப்பதைக் காணலாம்.  ஒன்று: கவலை மற்றொன்று: மேகம்

கவலைக்கும் மேகத்துக்கும் என்ன சம்பந்தம்?

Ghamm - எனும்  இச்சொல் குறிக்கின்ற "கவலை" என்பது எப்படிப்பட்டதென்றால் - மேகத்தால் சூழப்பட்டு இருள் ஒன்று கவ்விக் கொள்வதைப் போல, பிரச்னை ஒன்றில் சிக்கிக் கொண்டு விட்டு, அதிலிருந்து வெளியே வர வழி இல்லாத நிலையில் ஏற்படுகின்ற கவலை ஆகும்!

திருமறையில்  - Ghamaam - அதாவது மேகம் எனும் பொருளில் பின் வரும் வசனங்களில் இடம்பெற்றிருப்பதை நாம் காணலாம். (2:57, 2:210,  7:160, 25:25)

**
திருமறையில் மொத்தம் பத்து தடவைகள் இச்சொல் வெவ்வேறு வடிவங்களில் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு:

3:153       3:154       20:40       21:88       22:22 

10:71      2:57         2:210       7:160       25:25


**
ஒரு சில வசனங்களை மட்டும் பார்ப்போம்:

3: 153

(நினைவு கூறுங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள்; ஆகவே - பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை (Ghammam bi Ghammin) உங்களுக்குக் கொடுத்தான்.....


20: 40

..... பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர்; அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து (Ghammi) விடுவித்தோம்; மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிருந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர்.


21: 87 - 88

இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார். எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் (Ghammi) விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்.


10:71

மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை (ghummat) முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்.

**

இங்கே கொஞ்சம் நாம் சிந்திப்போம்.

1 Ghamm - எனும் சொல்லின் பொருளை மிக அற்புதமாக விளக்கும் உதாரணம் - ஹள்ரத் யூனுஸ் (அலை) அவர்களின் வரலாற்றுச் சம்பவம்! Ghamm எனும் கவலையால் சூழப்பட்டவன் - ஒரு மீனின் வயிற்றில் சிக்கிக் கொண்ட யூனுஸ் நபியின் நிலைக்கு ஒப்பாவான்! பிரச்னையிலிருந்து வெளியேற எந்த வழியும் இல்லாத நிலையில் ஏற்படும் கவலை தான் அது! மீனின் வயிற்றிலிருக்கும் ஒருவர் அதிலிருந்து எப்படி வெளியேற முடியும்? வழியே இல்லை - ஒன்றே ஒன்றைத் தவிர! அது என்ன? இறைவனை அழைத்துப் பிரார்த்தித்தல் மட்டுமே! அதனைத் தான் - நபி யூனுஸ் அவர்கள் செய்தார்கள்! வெளியே வந்து விட்டார்கள்! ஆனால் அதன் தொடர்ச்சியாக என்ன சொல்கிறான் என்பதைப் பாருங்கள்! "இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்."

2 மூஸா (அலை) அவர்கள் பிர்அவனின் அரண்மனை வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்கள்! தற்செயலாக ஒருவனை அடிக்கப் போய் அவன் இறந்து விட - பிர்அவ்னின் ஆட்கள் மூஸா (அலை) அவர்களைத் தேடத் தொடங்கி விட்ட  செய்தி அறிந்து எகிப்து நாட்டை விட்டே வெளியேறி விடுகிறார்கள்.  மூஸா அலை அவர்களின் அந்த நேரத்துக் கவலையைக் குறிக்க ghamm எனும் சொல்லையே  பயன்படுத்துகிறான்! அந்தச் சூழலிலும், மூஸா அவர்களின் துஆ மட்டுமே அவர்களை அப்பிரச்னையிலிருந்து வெளியே கொண்டு வந்தது. மதியனில் அவருக்குப் பாதுகாப்பான சூழல் ஒன்றை இறைவன் அமைத்துத் தந்ததன் மூலம்.

3 நூஹ் (அலை) அவர்கள் விஷயத்திலோ, அவர்கள் தம்மை நிராகரித்து விட்ட எதிரிகளுக்கே "சவால்" விடுகின்றார்கள்! எப்படி தெரியுமா? "எனக்கெதிராக நீங்கள் என்ன திட்டமிடுகிறீர்கள் எனில் - நீங்கள் உருவாக்குகின்ற அந்த சிக்கலிலிருந்து நான் வெளியே வர இயலாத அளவுக்கு  ஒன்றைத் திட்டமிட்டுத் தான் பாருங்களேன்!" இந்தச் சவால் எப்படி இருக்கின்றது?

4 இறுதியாக - நபியவர்கள் வாழ்வில் நடந்த உஹத் யுத்தத்தின் சமயத்திலும், நபித்தோழர்களுக்கு, இப்படிப்பட்ட கவலை ஒன்றை இறைவன் தந்தான்! நபித்தோழர்களில் ஒரு சிலர் தவறு செய்கிறார்கள். நபியவர்களின் கட்டளை ஒன்றை மீறுகின்றார்கள். "உலக ஆசையால்" உந்தப்பட்டு, போர்க்களக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு விடுகிறார்கள். எதிரிகளால் - முன்னும் பின்னும் "சூழப்பட்டு" தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு விடுகின்றார்கள். இந்த நிலையைப் படம் பிடித்துக் காட்டும்போதும் இதே சொல்லைப் பயன்படுத்துகின்றான் இறைவன்.

5 நரக வேதனையில், பாவிகள் தள்ளப்பட்ட நிலையைக் குறித்திடவும் இதே சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது! அதாவது நரக வேதனையிலிர்ந்து பாவிகள் ஒருபோதும் வெளியேறி வரவே இயலாத சூழல் அது என்று எச்சரிக்கின்றான் இறைவன்!

6 இதில் இஸ்லாமிய உளவியல் ஆலோசகர்களுக்கு அருமையான வழிகாட்டுதல் இருக்கிறது. பிரச்னைகளால் சூழப்பட்டு, அதிலிருந்து வெளிவரும் வழி அறியாது தங்களிடம்  வரக்கூடியவர்களுக்கு, இவ்வசனங்களின் அடிப்படையில் ஆலோசனை வழங்கலாம். குறிப்பாக (3:153 / 21:87-88).  என்ன ஆலோசனை என்று கேட்கிறீர்களா? உஹத் களத்தில் - நபித்தோழர்கள் செய்த தவறு; ஹள்ரத் யூனுஸ் (அலை) அவர்கள், இறை உத்தரவு வருவதற்கு முன்னர் சற்றே அவசரப்பட்டு விட்டது;  - இதனால் தான் GHAMM எனும் சோதனை!  தீர்வு: இறைவன் பக்கம் திரும்பி விடுதல் (தவ்பா). மீண்டும் அதே தவறை செய்யாதிருக்க முடிவு செய்து கொள்தல். தொடர்ச்சியான துஆ! இந்த மூன்றும் தான்!


அல்லாஹ் மிக அறிந்தவன்!

@@@


சமூகக் கவலை: கர்ப் எனும் சொல் ஆய்வு

"கர்ப்" எனும் அரபி மொழிச் சொல்லும் கவலையைக் குறிக்கும் ஒரு சொல் தான்! ஆனால் திருமறை வசனங்களை ஆய்வு செய்திடும்போது, இது சமூகத்துக்கு ஏற்படுகின்ற மாபெரும் துன்பங்களினால் ஏற்படுகின்ற கவலை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இச்சொல்லின் அகராதிப் பொருள் இது தான்:

Karaba - To oppress; distress; grieve; worry; trouble; fill with concern; to overburden;

Karb – worry; sorrow; care; grief; apprehension; concern; anxiety; fear; distress; trouble; pain; torment; torture; agony

இச்சொல் நான்கு தடவை மட்டுமே திருமறையில் இடம் பெற்றுள்ளது.

6:64     21:76       37:76       37: 115

**

வசனங்களை சற்று ஆய்வு செய்வோம்.

6 : 63 - 64 - 65
------------------

(நபியே!) நீர் கூறும்: நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சமயத்தில்) “எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?”

“இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் (மின் குல்லி கர்பின் - min kulli karbin) உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே; பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே” என்று கூறுவீராக.

(நபியே!) நீர் கூறும்: “உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.” அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.

கர்ப் எனும் சொல் இரண்டு விதமான சூழலில் பயன்படுத்தப்பட்டுள்ளதை கவனியுங்கள்.

ஒன்று: "இயற்கைச் சீற்றத்தினால்" ஏற்படும் துன்பங்கள்.

மற்றொன்று: மனிதர்களின் அடக்குமுறையால் வரும் துன்பங்கள்.

வசனம் 6:65 ல் - கர்ப் எனும் துன்பத்தின் இரண்டு விதமான வடிவங்களையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறான் இறைவன்! மீண்டும் படித்துப் பாருங்கள்!

**

மற்ற மூன்று இடங்களிலும் - கர்ப் எனும் சொல் அளீம் என்ற சொல்லுடன் இணைத்தே சொல்லப்பட்டுள்ளது.  அதாவது மிகப்பெரும் துன்பம் என்று பொருள்.

21: 76
--------

இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு பதில் கூறினோம்; அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் (karbin aleem) நாம் ஈடேற்றினோம்.

37: 76
-------
ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து (karbin aleem) பாதுகாத்தோம்.

37: 115
----------

(மூஸா மற்றும் ஹாரூன் ஆகிய) அவ்விருவரையும், அவ்விருவருடைய சமூகத்தாரையும் மிகப்பெரும் துன்பத்திலிருந்து (karbin aleem) இரட்சித்தோம்.

இன்னொன்றையும் கவனியுங்கள். அதாவது மூன்று இறை வசனங்களிலும் - அப்படிப்பட்ட பெரும் துன்பங்களிலிருந்து "நாமே அவர்களைப் பாதுகாத்தோம்" (நஜ்ஜைனா) என்கிறான் இறைவன்!

கர்ப் எனப்படும் சமூகத்துக்கு ஏற்படுகின்ற அனைத்து விதமான துன்பங்களிலிருந்தும், அவர்களைப் பாதுகாப்பவன் (யுன்ஜீகும்) இறைவனே  என்றும் இயம்புகிறான் இறைவன்! (6:64)

**

பாடங்கள்:

1) சமூகத் துன்பங்களை நீக்கி வைத்து விடுகின்ற இறைவன் - மக்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

இணை வைப்பிலிருந்து  முற்றிலும் விலகி, ஏக இறைவன் ஒருவனுக்கே அடிபணிகின்ற நிலைக்கு மக்கள் வந்து விட வேண்டும் என்பது தான் இறைவனின் ஒரே எதிர்பார்ப்பு! இதற்காகவே - கர்ப் எனப்படும் சமூகத் துன்பங்கள்!

“இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே; பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே” என்று கூறுவீராக.(6:64)

2) இப்படிப்பட்ட துன்பமான சூழ்நிலைகளில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நபி நூஹ் (அலை, நபி மூஸா (அலை) மற்றும் நபி முஹம்மத் (ஸல்) - இந்த மூன்று இறைத்தூதர்களின் வாழ்விலிருந்து தான் நாம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும்.

இறைவன் மிக அறிந்தவன்!

@@@


தப்த-இஸ் என்றொரு குர்ஆனிய சொல்!

இதனைத் தமிழில் "விசாரப்படுதல்" என்று மொழிபெயர்க்கிறார்கள்!

Grieve, sadden  என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்கள்!

இச்சொல் இரண்டு தடவைகள் மட்டுமே திருமறையில் இடம் பெற்றுள்ளது.

11:36        12:69

**

11: 36

 وَأُوحِيَ إِلَىٰ نُوحٍ أَنَّهُ لَنْ يُؤْمِنَ مِنْ قَوْمِكَ إِلَّا مَنْ قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ

மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்.

12:69

وَلَمَّا دَخَلُوا عَلَىٰ يُوسُفَ آوَىٰ إِلَيْهِ أَخَاهُ ۖ قَالَ إِنِّي أَنَا أَخُوكَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَعْمَلُونَ

(பின்னர்) அவர்கள் யாவரும் யூஸுஃபின் பால் பிரவேசித்த போது அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னைத் தம்முடன் அமரச் செய்து “நிச்சயமாக நாம் உம்முடைய சகோதரன் (யுஸுஃப்); அவர்கள் (நமக்குச்) செய்தவை பற்றி(யெல்லாம்) விசாரப்படாதீர்” என்று (இரகசியமாகக்) கூறினார்.

**

இந்த இரண்டு வசனங்களையும் சற்று உற்று நோக்கினால் இந்த தப்த-இஸ் எனும் சொல்லின் ஆழம் நமக்குப் புலப்படும்!

இந்தக் கவலை மற்ற கவலைகளிலிருந்து எப்படி வேறு படுகிறது எனில் - இந்தக் கவலை - நமக்கு எதிராக செயல் படுகின்ற பிறருடைய "செயல்களால்" ஏற்படும் கவலை என்பது புரியும்!

முதல் வசனத்தில் (11:36) நூஹ் நபியை நோக்கி அவரது மக்கள் அவருக்கு எதிராக செயல்படுகின்ற செயல்கள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்கிறான் இறைவன்!

அடுத்த வசனத்தில் (12:69) யூசுப் நபியின் சகோதரர்கள் தமக்கெதிராக செயல்பட்ட செயல்கள் குறித்து, தனது சகோதரர் புன்யாமின் கவலைப்படத் தேவையில்லை  என்று தைரியம் சொல்கிறார்கள் யூசுப் நபியவர்கள்!

இவற்றில் நமக்கென்ன பாடம்?

நமக்கு எதிராக நம் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ, அல்லது நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ செயல்படுகிறார்கள் என்ற கவலை உங்களுக்கு ஏற்பட்டால்,  நாம் கவலைப்படத் தேவையில்லை என்ற பாடத்தைத் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்!

ஏன் தெரியுமா?

கவலைப்பட வேண்டாம் என்று நூஹ் நபிக்கு அறிவுறுத்திய இறைவன் அடுத்த வசனத்திலேயே (பார்க்க இறை வசனம் 11:37), கட்டுங்கள் கப்பல் ஒன்றை! அதுவும் என் பார்வையின் முன்பே! - என்று சொல்வது எதற்காக? நான் உங்களை அவர்களின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப் போகிறேன் என்பதற்காக! அதாவது நூஹ் நபியை அல்லாஹ் அப்படியே விட்டு விடவில்லை! இதோ அல்லாஹ்வின் பாதுகாப்பு வளையத்துக்குள் அவர்கள் வந்து விடப் போகிறார்கள்! அவ்வளவு தான்!

அது போலத்தான் யூசுப் நபியவர்களின் விஷயத்திலும். அவரது சகோதரர்கள் என்ன தான் அவருக்குத் தீங்கிழைத்தாலும், அவர் - இப்போதும் கூட அல்லாஹ்வின் பாதுகாப்பு வளையத்துக்குள் தான் இருக்கிறார். விரைவில் அதனை அவரது சகோதரர்களே புரிந்து கொள்ளத்தான் போகின்றார்கள்! எனவே கவலை வேண்டாம் என்பது தான் புன்யாமீனுக்கு யூசுப் நபியவர்கள் சொன்ன ஆறுதல் வார்த்தைகள்!

எனவே கவலைப்பட வேண்டாம் (லா தப்த-இஸ்) என்ற செய்தி நூஹ் நபிக்கும், யூசுப் நபிக்கும் மட்டுமல்ல!

நமக்கும் தான்!

இது தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய "இப்ரத்"!

இந்தப் பாடமும் - உளவியல் ஆலோசகர்களுக்கு (ISLAMIC COUNSELORS) மிகவும் பயன்படும்!

அல்லாஹ்வே மிக அறிந்தவன்!

@@@

Comments