நூல்: திருக்குர்ஆனின் கருத்தாக்கங்கள் (பகுதி -4)


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

உள்ளடக்கம்

இது உச்சக்கட்டக் கவலை! அஸஃப - திருமறைச் சொல் ஆய்வு

அஸவ் - திருமறைச் சொல் ஆய்வு

நிராசை எண்ணம்: யஃஸ - யஊஸ் - திருமறை சொல் ஆய்வு


**

இது உச்சக்கட்டக் கவலை! அஸஃப - திருமறைச் சொல் ஆய்வு 

அஸஃப் (asaf) - இது உச்சக்கட்ட கவலையைக் குறிக்கும்!

இதன் அகராதிப் பொருள்:

Asifa – to regret; feel sorry; be sad;

Asaf - grief; sorrow; chagrin; regret; distressed;

இச்சொல் ஐந்து தடவை திருமறையில் இடம்பெற்றுள்ளது.

20:86       43:55        18:6       7:150       12:84

**

20: 86
--------

ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் (ghalbaana asifa) தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து: “என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?” (என்றார்).

மேலும் பார்க்க: 7:150. இவ்வசனத்திலும் மூஸா (அலை) அவர்கள் குறித்து இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது!


18:6
------

(நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு (asafan), நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்!

12:84
--------

பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” (yaa asafaa!) என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.

43:55
-------

பின்னர், அவர்கள் நம்மை கோபப்படுத்தியபோது (aasafoonaa), நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; அன்றியும், அவர்கள் யாவரையும் மூழ்கடித்தோம்.

***

படிப்பினைகள்:

1 அஸfப் - இது உச்ச கட்ட கவலையைக் குறிக்கும்! இந்த நிலையை அடைவதற்கு முன் வரை ஒருவர் பொறுமையைக் கடைபிடிக்க இயலும். ஆனால் கவலை உச்ச கட்டத்தை அடைந்து விட்டால் அவ்வளவு தான்! தாங்க இயலாது! அந்தக் கட்டத்தை அடைந்து  விட்டால், சிலர் உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது ஒன்றைச் செய்து விடத் துணிந்து விடுவார்கள். வேறு சிலரோ - சில கடுமையான நடவடிக்கைகளில் இறங்கி விடுவர்! அது அவரவரின் பக்குவத்தைப் பொறுத்தது!

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1 மூஸா (அலை) அவர்களுக்கு, "இப்படிச் செய்து விட்டார்களே!" என்ற கவலை உச்ச கட்டத்தை அடைந்திட, கடுமையான கோபம் வந்து விடுகிறது அவர்களுக்கு!

2 நமது நபியவர்களுக்கோ, தம் மக்கள் இந்த சத்திய வேதத்தை ஏற்க மறுக்கிறார்களே என்ற தம் கவலை உச்ச கட்டத்தை அடைந்திட, அல்லாஹ்வே - குறுக்கிட்டு அறிவுரை கூறுவதை கவனியுங்கள்:

(நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு (asafan), நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்! (18:6)

3 தம் மகனை இழ்ந்து தவிக்கின்ற யாகூப் நபியின் உச்ச கட்ட கவலை அவரை என்ன பாடு படுத்துகிறது என்று கவனியுங்கள்:

“யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” (yaa asafaa!) என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார். (12:84)

4 அல்லாஹ் எவ்வளவு பொறுமை உள்ளவன்! அவனது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு தானே! அந்தக் கட்டத்தை அல்லாஹ் அடைந்து விட்டால், பிர்அவ்னின் நிலை என்னவாகும்?

பின்னர், அவர்கள் நம்மை கோபப்படுத்தியபோது (aasafoonaa), நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; அன்றியும், அவர்கள் யாவரையும் மூழ்கடித்தோம். (43:55)

ஏன் அல்லாஹ்வுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது தெரியுமா?

படித்துப்பாருங்கள் 7: 133 - 136 வரையுள்ள வசனங்களை!

மூஸா அழைத்தார் பிர்அவ்னை! இரண்டு அத்தாட்சிகளை அவனிடம் காட்டினார்! மறுத்தான் அவன்!

இறைவன் சோதித்தான் பிர்அவ்னையும் அவன் மக்களையும்!

முதலில் கன மழையைக் கொண்டு சோதித்தான்! மூஸா அவர்களிடம், "உம் இறைவனிடம்" பிரார்த்திக்கச் சொல்லி வேண்டினான்!  சோதனை நீங்கியதும் ஆணவம் காட்டினான்!

அடுத்து வெட்டுக்கிளிச் சோதனை! அதே முறையீடு! அதே பிரார்த்தனை! சோதனை நீக்கம்! மீண்டும் அடக்குமுறை!

அடுத்து பேன்.....மீண்டும்  அதே கதை...

அடுத்து  தவளை வழிச் சோதனை! அதே கதை தான் அப்போதும்!

கடைசியாக இரத்தம்! ம்ஹூம்! இறுதிவரை அவன் திருந்தவே இல்லை!

அல்லாஹ்வுக்கே கோபம் வந்தது இப்படித்தான்!

நமக்குப் படிப்பினை என்ன?

பொறுமைக்கும் எல்லை உண்டு!

அந்த உரிமை நமக்கு மட்டுமல்ல!

நம்மால் பாதிப்புள்ளானவர்களுக்கும் உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது!!!

உளவியல் ஆலோசர்களுக்காக:

குடும்ப வன்முறைச் சம்பவங்களை (DOMESTIC VIOLENCE) ஆய்ந்து பார்த்தோம் எனில் - இப்படிப்பட்ட உச்சக் கட்ட கவலை கூட அவற்றுக்கு ஒரு பின்னணியாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.  ஆய்ந்தறிந்து கவுன்ஸலிங் வழங்கிட வேண்டும். இல்லறத்தில் உணர்ச்சி வெள்ளம் (EMOTIONAL FLOODING) குறித்தும் கொஞ்சம் அறிந்து வைத்துக் கொள்வது நல்லது.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

@@@


அஸவ் - திருமறைச் சொல் ஆய்வு

அஸவ் - தஃஸவ் / Asau - Ta'sau

அஸவ் என்பதும் கவலையைக் குறித்திடும்  இன்னொரு அரபிச் சொல் தான்!

இச்சொல்லின் அகராதிப் பொருள்:

Asau - To nurse. Treat (a wound), to make peace, to be sad, grieved, distressed, to share, charitable,
to console,

இச்சொல் இடம் பெற்றிருக்கும் இறை வசனங்கள் நான்கு:

5:26       5:68       57:23       7:93

**

5:26
------

(அதற்கு அல்லாஹ்) “அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை (ta'sa) கொள்ள வேண்டாம்” என்று கூறினான்.

5 : 68
-------

“வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து  உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை” என்று கூறும்; மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது; ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட  வேண்டாம் (fa laa ta'sa).

57:23
-------‏

உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் (ta'sau) இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

7: 93
------

இதனால் (ஷுஐபு) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், “என் சமூகத்தவர்களே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி வந்தேன், உங்களுக்கு நற்போதனையும் செய்தேன் - ஆனால் நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன் (kaifa aasaa)” என்று அவர் கூறினார்.

**
படிப்பினைகள்:

பொதுவாக நாம் நமது பொருள்களில் இழப்பை சந்தித்தால், நமக்குக் கவலை வந்து விடுவது இயல்பே!  ஆனால் அது குறித்து கவலை வேண்டாம் என்கிறான் இறைவன்! ஏனெனில் - அது விதியின்பாற்பட்டது என்று நினைவூட்டுகிறான் இறைவன். பார்க்க (57:22)

பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். (57:22)

இறைவன் நம்மிடம் உள்ள "பொருள்களுள் சிலவற்றை" நம்மிடம் இருந்து எடுத்து விடுவதில் - "நமக்கு ஏதோ நன்மை இருக்கிறது!" - என்று தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது அந்தப் பொருள் நம்மிடம் இருப்பதால், நமக்கு அதில் "எந்தப் பயனும் இல்லை!" என்பது தான் இறைவனின் விதி! எனவே அதற்காக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்பதையே அஸவ் என்ற கவலை - சுட்டிக்காட்டுகிறது.

எதனால், இவ்வாறு சொல்கிறோம் என்பதற்கான விளக்கம் பின் வரும் இறை இறை வசனங்களில்  இருக்கிறது!  பார்க்க: (5:26, 5:68, 7:93)

நன்றி கெட்டவர்கள் பனீ இஸ்ரவேலர்கள்! தட்டலைந்து திரியட்டும் ஒரு நாற்பது ஆண்டுகள் என்பது அல்லாஹ்வின் தீர்ப்பு! அவர்களுக்காக "அலட்டிக் கொள்ளத் தேவையில்லை!" என்கிறது முதல் வசனம்!  அப்படி என்றால் என்ன? அத்தகையவர்களால் "உங்களுக்கு எந்த விதப் பயனும் இல்லை! என்பது தான் பொருள்!

(அதற்கு அல்லாஹ்) “அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை (ta'sa) கொள்ள வேண்டாம்” என்று கூறினான். (5:26)

அடுத்து நபியவர்கள் காலத்து யூதர்கள்! அவர்களின் நிலையும் அதே நிலை தான்! "நபியவர்களே! இவர்கள் குறித்து நீங்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை!" என்பது தான் இங்கேயும் அறிவுரை!

“வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை” என்று கூறும்; மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது; ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம் (fa laa ta'sa). (5:68)

அடுத்து - வசனம் 7:93 ல் நபி ஷுஐப் (அலை) அவர்கள் ஒரு படி மேலே போய் "நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன்? (kaifa aasaa)” என்று கூறுகிறார்கள்!

இதனால் (ஷுஐபு) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், “என் சமூகத்தவர்களே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி வந்தேன், உங்களுக்கு நற்போதனையும் செய்தேன் - ஆனால் நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன் (kaifa aasaa)” என்று அவர் கூறினார். (7:93)

சுருக்கமாகச் சொல்வது என்றால் - நம்மை விட்டுப் போய் விட்ட -ஒன்றுக்கும் பயனில்லாத செல்வம் குறித்தும் கவலைப்பட வேண்டாம்! நம்மை விட்டுப் போய் விட்ட, ஒன்றுக்கும் உதவாத நிராகரிக்கும் மக்களுக்காகவும் கவலைப்படத் தேவையில்லை! அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களாக, நமக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தாலும் சரியே!

இதையே, இன்நொரு விதத்தில் சொல்வதென்றால், பயனற்ற செல்வத்தை விட்டும், பயனில்லாத மக்களை விட்டும் நம்மைப் பாதுகாத்ததற்காக, நாம் தான் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கின்றோம் என்றால் அது மிகையில்லை!

செல்வத்தைக் குறித்து இவ்வளவு வலியுறுத்தி இறைவன் சொல்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

நமது பொருள் "பயனுள்ளதாக" எப்போது மாறும்? இறைவனின் வழியில் செலவு செய்யப்படும்போது மட்டும் தானே! உற்று நோக்கினால் 57 - வது அத்தியாயமான சூரத்துல் ஹதீதின் மையக் கருத்தே - இறைவழியில் செலவு செய்வது குறித்துத் தான்!

அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே!
(57:10 - part)

இதில் இன்னொரு பாடமும் இருக்கிறது! இதற்கு நாம் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டிய வசனங்கள் இரண்டு!

அவை 57:23, 3:153 - ஆகிய இரண்டும் தான்!

கவலையைக் குறித்திட 57:23 ல் - பயன்படுத்தப்பட்ட சொல் அஸவ்! (li kay laa ta’sau)

கவலையைக் குறித்திட 3: 153 ல் - பயன்படுத்தப்பட்ட சொல் ஹுஸ்ன்! (li kay laa tahzanoo)

ஏன் இந்த வேறுபாடு?

செல்வம் நம்மை விட்டுப் போவதனாலோ, அல்லது நமக்கு நெருக்கமானவர்களின் ஆதரவு நம்மை விட்டுப் போய் விடுவதனாலோ ஏற்படும் கவலைக் குறிக்க அஸவ் என்ற சொல்லைத் தேர்வு செய்திடக் காரணம் - அது "மென்மையான கவலை" என்பதனால் தான்!

ஆனால் வசனம் 3:153 அப்படிப்பட்ட "சாதாரண" சூழல் குறித்துப் பேசிடவில்லை!  மாறாக, அந்தச் சூழல் மிகக் கடுமையானது. பொருள் கிடைக்காமல் போவ்து ஒரு பக்கம் இருக்கட்டும்! தங்களின் ஒட்டு மொத்த இருப்புக்கே ஆபத்து வந்து விட்ட சூழலைக் குறித்திட  ஹூஸ்ன் எனும் ஆழ்ந்த கவலையைக் குறிக்கும் சொல்லைத் தேர்வு செய்கிறான் இறைவன்!

இறைவன் மிக அறிந்தவன்!

@@@


நிராசை எண்ணம்: யஃஸ - யஊஸ் - திருமறை சொல் ஆய்வு

Ya'sa - Ya'oos

يا س

يَئُوسًا

**

அகராதிப் பொருள்:

Dictionary meaning of the term – Ya'sa
(Ya- alif- seen)

Verb: ya-i-sa: To renounce; forgo; to give up all hope;

Ya’s – renunciation; resignation; hopelessness; desperation;

தமிழில்: நம்பிக்கை இழத்தல், நிராசை அடைதல்

**

திருமறை வசனங்கள்:

5:3 / 60:13 (2 times) / 65:4 / 29:23 / 12:87 (2 times)

13:31 / 12:110 / 12:80 / 11:9 / 41:49 / 17:83

Total: 13 times
**

சிந்தனைக்கு சில வசனங்கள் இதோ:

12:87

“என் மக்களே! நீங்கள் செல்லுங்கள்! யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் தேடி விசாரியுங்கள்; அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்” என்றும் கூறினார்.

The tern "rauh" is translated as "soothing Mercy" by Yusuf Ali.

**
12:110

(நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது; நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர். நமது தண்டனை குற்றம் புரிந்த கூட்டத்தாரைவிட்டும் நீக்கப்படாது.

**

29:23

இன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ, அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள்; மேலும், இ(த்தகைய)வர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.

**

11:9

நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து; பின்பு அதனை அவனை விட்டும் நாம் நீக்கி விட்டால், நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்.

**

41:49

மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான்.

**

17:83
நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான்.


**
நுட்பமான பாடங்கள்:

எல்லாவிதமான நம்பிக்கைகளையும் இழந்து விட்டீர்களா? நிராசை எண்ணம் மேலோங்கி நிற்கிறதா?

இங்கே நமக்கு என்ன ஆறுதல்?

1) அல்லாஹவின் உதவி மிக நெருக்கத்தில் என்பதற்கான அடையாளம் இது!  (12:110)

2) ஆனால் நமது முயற்சிகளைக் கை விட்டு விட வேண்டிய அவசியம் இல்லை! அது மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.  ஹள்ரத் யாகூப் (அலை) தம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தியது போல! சோர்ந்து போய் அமர்ந்து விடக் கூடாது! (12:87)

3) நிராசை என்பது நன்றி உணர்ச்சிக்கு எதிர்ப்பதமாக இறை மறை கொண்டு வருகிறது.  (11:9)

4) நம்பிக்கை இழக்கிறீர்களா? திருமறையை எடுத்து ஓதுங்கள். நாம் இறைவனை சந்திக்க இருப்பதை அழுத்தமாக நினைவுக்குக் கொண்டு வாருங்கள்! நிராசை பறந்து விடும்! (29:23)

5) நீங்கள் மன நல ஆலோசகரா? உங்களிடம் உதவி தேடி வருபவர்களுக்கு இப்பாடங்களை நினைவூட்டுங்கள்.  நிராசை எண்ணத்துக்கு அருமருந்து நன்றி உணர்வே! அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அல்லாஹ்வின் இதர அருட்கொடைகளை  அவர்களுக்கு நினைவூட்டுங்கள்.  (உதாரணத்துக்கு: கணவன் மூலம் பிரச்னையா? குழந்தைகள் மூலமாக அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கலாம்!)

அல்லாஹ் மிக அறிந்தவன்!

@@@

Comments