திருக்குர்ஆனின் கருத்தாக்கங்கள் (பகுதி - 5)


உள்ளடக்கம்

திருமறைச் சொல் ஆய்வு: ரஹ்மத்

திருமறைச் சொல் ஆய்வு: ரஃபத்

முஜ்ரிமூன் - திருமறை சொல் ஆய்வு


***

திருமறைச் சொல் ஆய்வு: ரஹ்மத் 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ரஃபத் எனும் ஒரு திருமறைச்சொல்! இச்சொல் ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டியதொரு சொல் ஆகும்!

 رافة

திருமறைச் சொற்களை - அதாவது - கருத்தாக்கங்களை (Concepts) - ஆழமாகப் புரிந்து கொள்ள மூன்று விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.

ஒன்று: குறிப்பிட்ட ஒரு சொல்லின் அகராதிப் பொருள் (meaning).

இரண்டு: அச்சொல் - திருமறையில் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் (usage). ஒரு சொல்லின் பயன்பாட்டைப் புரிந்து கொள்ள அந்தச் சொல் திருமறையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து இறை வசனங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்தல்.

மூன்று: அந்தச் சொல் - அதாவது - திருமறையின் அந்தக் கருத்தாக்கம் - வேறு எந்தெந்த கருத்தாகச் சொற்களுடன் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளன என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்தல்.

**

ரஃபத் என்பதன் ஆங்கில அகராதிப் பொருள்

Ra-a-fa: to show mercy; have pity; be kind; gracious; merciful

Ra-fatan: mercy; compassion; pity; kindliness; graciousness

Ra'oof - merciful; compassionate; kind; benevolent; gracious

பொதுவாக இச்சொல்லுக்கான பொருளை தமிழ் மொழிபெயர்ப்புகளில் - இரக்கம், கருணை,  அளவற்ற அன்பு - என்றே மொழிபெயர்த்துள்ளார்கள்.

ரஹ்மத் எனும் சொல்லை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம். அதன் பொருளும் - அன்பு, இரக்கம், கருணை என்பது தான்!

அப்படியானால் - இந்த இரண்டு சொற்களுக்கும், அதாவது இந்த இரண்டு கருத்தாக்கங்களுக்கும் என்ன வித்தியாசம் என்றொரு கேள்வி எழுகின்றதல்லவா? வித்தியாசம் நிச்சயம் உண்டு! அது என்னவென்று அறிந்திட ஆவலா? சற்று பொறுங்கள்! பார்ப்போம்!

**

ரஃபத் எனும் சொல் பயன்படுத்தப் பட்டுள்ள விதம் (Usage of this word)
திருமறையில் இச்சொல் இரண்டு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரஃபத் (Ra’fat) என்ற வடிவத்தில் இரண்டு தடவையும், ரவூஃப் என்ற வடிவத்தில் 11 தடவையும்,  மொத்தம் 13 தடவைகள் இச்சொல் திருமறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரஃபத்
--------
24:2
57:27

ரவூஃப்
--------

2:143 /  2:207 /  3:30 /   9:117 /  9:128 /  16:7

16:47 / 22:65 /  24:20 /  57:9 / 59:10

ஆய்வு செய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இது ஒரு வீட்டுப் பாடம் (home work) போலத்தான்! மேலே குறிப்பிடப்பட்டுள்ள திருமறை வசனங்கள் அனைத்தையும் அரபி மூலத்துடனும், மொழிபெயர்ப்புடனும் ஒரு முறை படித்து விட்டு வாருங்கள்!

இப்போது வசனங்களுக்குச் செல்வோம்.

இங்கே இரண்டு திருமறை வசனங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

16:7
-----

மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை (கால் நடைகள்) உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன - நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்.

இந்த வசனத்தின் இறுதியில் இறைவனின் இரண்டு பண்புகளைக் குறிக்கும் சொற்கள் இடம் பெற்றுள்ளன: அவை: ரவூஃப் மற்றும் ரஹீம்.

எதற்காக இந்த இரண்டு பண்புகளையும் இங்கே எடுத்தாள்கிறான் இறைவன் என்பதை சற்று கூர்ந்து கவனியுங்கள்!

"மிக்க கஷ்டத்துடனன்றி" - நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன! இங்கே இறைவன் குறிப்பிட்டுக் காட்டுவது கால் நடைகளை!

இவ்வசனத்திலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து என்னவெனில் - நாம் சிரமப்படுவதை இறைவன் விரும்புவதில்லை என்பதைத் தான்! அதனைக் குறித்திடவே அவன் தனது இரண்டு பண்புகளை இங்கே குறிப்பிட்டுக் காட்டுகிறான் இறைவன்!

"ஏனென்றால் - "நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்"

(இதற்கு முன்னர் உள்ள இரண்டு இறை வசனங்களையும் (16 : 5-6) சேர்த்து ஒரு முறை படித்து விடுங்கள்!)

**
ரவூஃப் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். அது மிக இரக்கமுடையவன் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் - இவ்வசனம் "நாம் சிரமப்படுவதை" இறைவன் விரும்புவதில்லை என்ற கருத்தை முன் வைக்கிறது!

எனவே - ரவூஃப் என்பதன் முழுமையான பொருள் - "பிறர் கஷ்டப்படுவதை விரும்பாத இரக்க சிந்தனை உடையவன்" என்று நாம் சொல்லலாம்! அது போலவே - ரஃபத் என்பதன் பொருள் - பிறர் துன்பப்படுவதை விரும்பாத இயல்பைக் குறிக்கும் ஒரு சொல்லாக நாம் புரிந்து கொள்ள முடியும்!

இன்னொரு வசனத்தையும் எடுத்துக் கொள்வோம்:

9:128

(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.

இவ்வசனத்தில், அண்ணலார் நமது அருமை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில், இந்த அருமைப் பண்பு இருப்பதாகக் குறிப்பிடுகிறான் இறைவன்! இவ்வசனத்தில், "நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது" - என்ற கருத்து - ரஃபத் எனும் சொல்லின் பொருளை நமக்கு மிகச்சரியாக புரிய வைத்து விடுகிறது!

இவ்வாறு நாம் பார்த்திடும்போது, ரஃபத் எனும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் Pity - என்ற சொல் மட்டுமே கொஞ்சம் நெருக்கமான பொருளாக நமக்குப் படுகிறது!

ரஃபத் எனும் சொல் - அதாவது திருமறையின் கருத்தாக்கம் (concept) - குறித்து இறுதியாக நாம் பின் வரும் இறை வசனத்தை எடுத்துக் கொள்வோம்:

57:27
------

பின்னர் அவர்களுடைய சுவடுகளின் மீது நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவைத் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி; ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை - அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.(57:27)

இந்த இறை வசனத்தில் ஹள்ரத் ஈஸா (அலை) அவர்களைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம் என்று குறிப்பிடுகின்றான் இறைவன்!

அரபியில் "ரஃபதன் வ ரஹ்மதன்" - என்று இருக்கிறது. அதாவது ரஃபத் என்ற சொல்லுக்கு இரக்கம் என்றும் ரஹ்மத் என்ற சொல்லுக்கு கிருபை என்றும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது!

ரஃபத் என்பதன் பொருள் - "பிறர் துன்பப்படுவதை விரும்பாத இயல்பைக் குறிக்கும் ஒரு சொல்" - என்று பார்த்தோம்.

அதாவது ஹள்ரத் ஈஸா (அலை) அவர்களைப் பின்பற்றி வாழ்ந்தவர்களுக்கு ரஃபத் மற்றும் ரஹ்மத் எனும் இரண்டு நற்குணங்களும் இருந்திருக்கின்றன என்று இறைவனே சான்று வழங்கியிருக்கின்றான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது - பிறர் துன்பம் கண்டால் அதனை நீக்கி வைக்கின்ற இரக்க குணம் அவர்களுக்கு இருந்திருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ளலாம்! அவர்களின் வரலாறும் இந்த நற்குணங்களுக்கு சான்றாக அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று சான்று பகர்ந்திருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது!

இறைவன் மிக அறிந்தவன்!

இங்கே நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவெனில் - முஹம்மது நபியவர்களைப் பின்பற்றி வாழ்கின்ற நம் சமூகத்துக்கு இந்த அரும்பெரும் இரண்டு நற்குணங்களையும் எடுத்து நடந்திட வேண்டிய கடப்பாடு இருக்கிறதா இல்லையா?
கட்டாயம் உண்டு!

ஏனெனில்

1) இறைவனின் தன்மைகளில் (siffat) இரண்டாக, இவற்றை திருமறை குறித்துக் காட்டுவதால் - ரஹ்மத் மற்றும் ரஃபத் ஆகிய இவ்விரண்டு நற்பண்புகளையும் நாமும் எடுத்து நடந்திடத் தான் வேண்டும்! இதனைப் புரிந்து கொள்வது ஒன்றும் கடினம் இல்லை!

2) இவ்விரண்டு நற்பண்புகளுக்கும் அழகிய முன்மாதிரியாக, அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள் என்று திருமறை நற்சான்றிதழ் வழங்கி யிருக்கிறது என்பதை நாம் முன்னரே பார்த்தோம். (9:128)

முத்தாய்ப்பாக நாம் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் - ஒவ்வொரு முஸ்லிமும் - பிறர் படும் துன்பங்களைக் கண்டும் காணாமல் சென்று விடாமல் - பிறர் துன்பம் நீக்குவதை - ஒரு கடமையாக எடுத்து நடக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம் என்பது தான்!.

சென்னை வெள்ளச் சமயத்திலும், கஜா புயல் சமயத்திலும், இந்த அரும்பண்பு நம்மிடத்தில் வெளிப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

இங்கே நாம் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால் - பிறர் துன்பம் நீக்கும் அறப்பணி - நமது முழு நேரப்பணியாக விளங்கிட வேண்டும் என்பது தான்! அதாவது நமது சமூகத்தின் "இயல்பாகவே" அது ஆகிட வேண்டும் என்பது தான்!

ரஃபத் எனும் சொல் இடம் பெற்றிருக்கின்ற மற்ற வசனங்களை நீங்களே பாருங்கள்! சிந்தியுங்கள்! மேலும் உங்களுக்குப் புரியும் - இன்ஷா அல்லாஹ்!

***

திருமறைச் சொல் ஆய்வு: ரஹ்மத் 


ரஹ்மத் / ரஹ்மா என்பது - பரந்து விரிந்ததொரு திருக்குர்ஆனின் கருத்தாக்கமாகும்.

நமது எல்லாவிதமான செயல்பாடுகளுக்கும் பின்னணியில் இருந்திட வேண்டிய அறக் கோட்பாடு தான் ரஹ்மா.

ரஹ்மா என்றால் கருணை, இரக்கப் பண்பு - என்று பொருள். அதே வேளையில் - ரஹ்மத் என்பதன் மூலச் சொல் - ரஹ்ம் - என்பது தாயின் கருவறையைக் குறிக்கும் சொல்லாகும்!

திருமறை திருக்குர்ஆனிலே - இச்சொல் இதன் கிளைச் சொற்களுடன் சேர்த்து மொத்தம் 339 தடவை திரும்பவும் திரும்பவும் இடம் பெற்றிருக்கும் சொல்லாகும்.

படைத்த இறைவனின் - அழகிய திரு நாமங்களில் - ரஹ்மான் மற்றும் ரஹீம் - ஆகிய இரண்டு பெயர்களும் இதே ரஹ்மத்தை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்!

திருமறையின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் - இந்த இரண்டு அழகிய திரு நாமங்களையும் தன்னகத்தே கொண்ட -  பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் - என்ற சொற்றொடருடன் தான் தொடங்கும் - ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர!

ரஹ்மான் என்பது உச்ச கட்ட கருணையைக் குறிக்கும் இலக்கண வடிவாகும் ( Merciful to the Superlative Degree). ரஹீம் என்பது - கருணையை இடை விடாது - தொடர்ந்து வழங்கும் தன்மையைக் குறிக்கும் இலக்கண (Continuously Merciful) வடிவாகும்!

**

இறைவனின் கருணை எப்படிப்பட்டது?

7:156
-------

"என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது..." (7:156 - வசனத்தின் ஒரு பகுதி )

நபி மொழி ஒன்று:
----------------------

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்த நாளில் அன்பை நூறு பாகங்களாகப் படைத்தான். அவற்றில் ஒவ்வொரு பாகமும் வானம் பூமிக்கிடையே உள்ள (இடத்)தை அடைத்துக் கொள்ளும் அளவுடையதாகும். அவற்றில் ஒரு பாகத்தையே பூமியில் வைத்தான். அந்த ஒரு பாகத்தினால்தான் தாய் தன் குழந்தைமீது பாசம் கொள்கிறாள். மிருகங்களும் பறவைகளும் ஒன்றன் மீதொன்று அன்பு காட்டுகின்றன. மறுமை நாள் வரும்போது இந்த ஓர் அன்புடன் சேர்த்து அன்பை இறைவன் (நூறாக) முழுமையாக்குவான். இதை சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

**

இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

21: 107
---------

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை! (21:107)

**

திருமறை திருக்குர்ஆனை நமக்கு நேர் வழிகாட்டியாக அனுப்பியதற்குக் காரணமே - இறைவனின் அளப்பரிய கருணைப்பண்பே ஆகும்!

55: 1- 2
----------

அவன் ரஹ்மான் - கருணை மிக்கவன்!  அவன் தான் இக் குர்ஆனைக்  கற்றுக் கொடுத்தான்.

இறைவன் விதிக்கின்ற சட்டங்களுக்குப் பின்னணியில் இருப்பதுவும் இரக்கப் பண்பே ஆகும்!

2:185
-------
அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; (2:185 - வசனத்தின் ஒரு பகுதி)

**

இதே இரக்கப் பண்பைத் தான் இஸ்லாம் அதனைப் பின்பற்றுவோரிடையே ஒரு அடிப்படை விதியாக விதித்திருக்கிறது!

*பெற்றோர்களிடம் இரக்கம் காட்டுவது நீங்காக் கடமை!

17:24
-------

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (17:24)

**

*நாம் பெற்ற குழந்தைகளிடம் காட்டிட வேண்டியதும் இதே இரக்கப் பண்பு தான்!

யார் நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாமலும் சிறியவருக்கு இரக்கம் காட்டாமலும் அறிஞரின் தகுதியை அறிந்து (அதற்குத் தக்கவாறு அவரிடம் நடந்து) கொள்ளாமலும் இருக்கிறார்களோ அவர்கள் எனது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) - நூல்: அஹ்மத் 21693

**

*கணவன் மனைவியரிடையே இறைவன் விதித்திருப்பதும் அன்பும் கருணையும் தான்!

30:21
-------
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய  மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.

**

* கருணையை உள்ளடக்கிய "உலுல் அர்ஹாம்" - என்ற சொல்லைக் கொண்டே திருமறை இரத்த பந்த உறவைக் குறிக்கின்றது!

**

* ஆசிரியரின் அடிப்படை அறமே - கருணையாக இருந்திட வேண்டும் என்று இலக்கணம் வகுக்கிறது மார்க்கம்!

18:65
-------
அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து இரக்கப் பண்பை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.

நான் ஆசிரியனாக அனுப்பப்பட்டுள்ளேன் என்ற அண்ணலாரின் நபிமொழியும் இதனையே உணர்த்துகிறது!

**

*நம்பிக்கையாளர்களின் நல்லுறவுக்கான அடிப்படையும் இரக்க உணர்வு தான்!

"தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்!" (48:29)

**

*உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது தான் நம்பிக்கையாளர்களின் இரக்கப் பண்பு!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பூமியில் உள்ளோர் மீது இரக்கம் காட்டுங்கள். வானிலுள்ளவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.'' (முஃஜமுத் தப்ரானி)

அபூ மூஸப் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்: "நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் "கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்'' என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)

**

*நமது - இரக்கப் பண்பின் வட்டத்துக்குள் - விலங்கினங்களும் பறவைகளும்  உள்ளடக்கமே!

நபி (ஸல்) அவர்கள் ஒர் இடத்தில் தங்கியபோது ஒரு பறவை நபி (ஸல்) அவர்களின் தலையின்மேல் பறந்து கொண்டிருந்தது.  ஒருவர் தனது முட்டையை எடுத்து அநீதமிழைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டது போன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் "உங்களில் இந்தப் பறவையின் முட்டையை எடுத்தவர் யார்?'' என்று கேட்டார்கள்.  அப்போது ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த முட்டையை எடுத்தேன்'' என்றார்.  நபி (ஸல்) அவர்கள் "அதன் மீது கருணைகூர்ந்து அதை திருப்பிக் கொடுத்துவிடு'' என்றார்கள். (முஃஜமுத் தப்ரானி)

**

*மக்களை நிர்வகிக்கும் ஆட்சியாளர்களுக்கு அவசியத் தேவை இந்த இரக்கப் பண்பாகும்!

உமர் (ரளி)அவர்கள் ஒரு மனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர்  "குழந்தைகளை நான் முத்தமிடமாட்டேன்' என்று சொல்வதைக் கேட்டார்கள். அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: "உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்ட வில்லையானால் எப்படி நீர் மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்க மாட்டேன்'' என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள்.

**

'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். (ஸஹிஹ் புகாரி)


**

பரந்து விரிந்து திருமறை முழுவதும் எடுத்தாளப்பட்டிருக்கின்ற - ரஹ்மத் எனும் கருணைப் பண்பைத் தான் - மகாஸித் அறிஞர்கள் - மிக மிக முக்கியமான அறமாகக் (Morality and Ethics) கருதுகின்றார்கள்.

எனவே தான், ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சமயத்தில் - சமூகச் சிக்கல் என்று ஏதாவது வந்து விட்டால் - இரக்க உணர்வைக் கையில் எடுத்துக் கொண்டு - சட்டத்தைத் தள்ளி வைத்து விடச் சொல்கிறது மகாஸித் அணுகுமுறை. நேர்வழி பெற்ற கலீபாக்களின் காலத்திலிருந்தெ இதனை நாம் காணலாம்!

திருடுபவர்களின் கரங்களை வெட்டுங்கள் என்றொரு சட்டம் திருமறையிலே உண்டு. ஆனால் ஒரு சமயம்  மதீனா நகர்  கடுமையான பஞ்சத்துக்கு உள்ளான போது - அந்த இறைச் சட்டத்தைச் செயல் படுத்துவதை தற்காலிகமாக் நிறுத்து வைத்தார்கள் இரண்டாம் கலீபா ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள்!

இதனைத் தான் மகாஸித் அணுகுமுறை என்கிறார்கள் அறிஞர்கள்!

**

இங்கே கவனியுங்கள்!

ஹள்ரத் ஈஸா (அலை) அவர்களைப் பின்பற்றியவர்கள் இரக்கம் மிக்கவர்களாக விளங்கியவர்கள் என்று இறைவனே சான்று பகர்வதை!

57:27
-------

பின்னர் அவர்களுடைய சுவடுகளின் மீது நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவைத் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்! (57:27)

ஆனால் நாம்.....

ரஹ்மத் எனும் இந்த அடிப்படைப் பண்பிலிருந்து நாம் எவ்வளவு தூரம் விலகிப் போய் விட்டிருக்கிறோம் என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

முஹம்மத் (ஸல்) அவர்களைப் பின்பற்றி வாழ்கின்ற நாம் அதே ரஹ்மா எனும் இரக்கப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை அல்லவா?

**

இன்றைய உலகம் ஏங்கித் தவிக்கின்ற, மக்களிடையே அரிதினும் அரிதாகப் போய் விட்ட  அறப்பண்பு தான் இரக்க உணர்வு! அது இன்றைய உலகின் அவசரத் தேவை!

எனவே தான் சொல்கிறோம் - மகாஸித் அணுகு முறைக்கே மிகச் சிறந்த எதிர்காலம் ஒன்று இருக்கிறது என்று!

எதிர்காலத் தலைமுறை ஒன்று அதற்கெனப் பாடுபடும் - இன்ஷா அல்லாஹ்!

@@@


முஜ்ரிமூன் - திருமறை சொல் ஆய்வு 

ஜரம - முஜ்ரிமூன் எனும் திருமறைச் சொற்களை சற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம் இங்கே.

Jarama – Mujrimoon

جرم

مجرمون

**

Dictionary Meaning of the word - Jarama

Jarama – to bone; to commit an offence, a crime, an outrage (‘alaa or ilaa against someone); sin; injure; harm; wrong;

Jarm – long, flat-bottomed barge (boat); lighter

Jirm – ajraam- body; mass; bulk; volume (of a body); (may be used for celestial bodies)

Laa jarama – surely, certainly, of course// Yusuf Ali – Without doubt; undoubtedly

Jareem – hulking, bulky, huge, voluminous, of great size

Jareematul kubra – capital offence

Kanoonul jaraaim – penal code



அரபிச் சொற்களைப் பொருத்தவரை - அதன் பொருளைப் புரிந்து கொள்ள அகராதி ஒன்று மட்டுமே போதாது! அதாவது அகராதியில் காணப்படும் பொருளை (meaning) வைத்துக் கொண்டு, ஒரு சொல்லின் முழுமையான பொருளை நாம் அறிந்து கொண்டு விட முடியாது! அதற்கு இன்னொரு வழியும் உண்டு! அதாவது - ஒரு குறிப்பிட்ட சொல் திருமறையில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது (usage) என்பதையும் சேர்த்து நாம் கவனிக்க வேண்டும்.



Quran Aayaat

Yajrimannakum : 5:2 / 5:8 / 11:89

Ajramnaa : 34:25

Ajramoo : 6:124 / 30:47 / 83:29

Tajrimoona : 11:35

Ijraamee : 11:35

Mujrimu : 70:11 (singular)

Mujriman : 20:74 (singular)



Mujrimoona : (15 times)

8:8 / 10:17 / 10:50 / 10:82 / 18:53

26:99 / 28:78 / 30:12 /30:55 / 36:59

44:22 / 55:41 / 55:43 / 77:46 / 32:12



Mujrimeena : (34 times)

6:55 / 6:147 / 7:40 / 7:84 / 7:133

9:66 / 10:13 / 10:75 / 11:52 / 11:116

12:110 / 14:49 / 15:12 / 15:58 / 18:49

19:86 / 20:102 / 25:22 / 25:31 / 26:200

27:69 / 28:17 / 32:22 / 34:32 / 37:34

43:74 / 44:37 / 45: 31 / 46:25 / 51:32

54:47 / 68:35 / 74:41 / 77:18



Mujrimeeha : 6:123

Jarama : 11:22 / 16:23 / 16:62 / 16: 109 / 40:43

Total appearances: 66 Times

**

ஜரம (jarama) என்ற சொல் குற்றம் இழைத்தலைக் குறிக்கும் சொல்லாகும். (to commit an offence, a crime, an outrage)

இச்சொல் முஜ்ரிமூன (mujrimoona) மற்றும் முஜ்ரிமீன (mujrimeena) எனும் (பன்மை) வடிவங்களில் தான் அதிக அளவில் திருமறையில் வருகிறது, இதன் பொருள் குற்றவாளிகள் என்பதாகும். ஒருமையில் இரண்டு தடவைகளும், பன்மையில் குறைந்தது 49 தடவைகளும் திருமறையில் இடம் பெற்றுள்ளன.

இந்த குற்றத்தின் தன்மை என்ன? ஒரே ஒரு சான்று இதோ:

83:29-32

நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே (ajramoo) அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள். (used to laugh)

அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.

இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள். (rejoicing)

மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், “நிச்சயமாக இவர்களே வழி தவறியவர்கள்” என்றும் கூறுவார்கள்.

**

நயவஞ்சகர்களிலும் இத்தகைய குற்றவாளிகள் உண்டு.

9:66

புகல் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள், நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்தபோதிலும், மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம்.

**

பத்ரு போர்க்களத்துக்கு வந்து சேர்ந்த மக்கத்துக் குறைஷியர்கள்  இத்தகைய குற்றவாளிகளே!

8:8

மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே (நாடுகிறான்).

**

68:35

நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?

முஜ்ரிமீன்களுக்கு எதிர்ப்பதமாக முஸ்லிமீன்கள் என்ற சொல்லைக் கொண்டு வருகிறது திருமறை!

அதாவது இறைக் கட்டளைகளுக்குக் கட்டுப்படுபவர்கள் உண்மை முஸ்லிம்கள்! இறைக் கட்டளைகளுக்குக் கட்டுப்பட மறுப்பதுடன், அவ்வாறு கட்டுப்பட்டு நடப்பவர்களைத் துன்புறுத்தும்போது அவர்கள் குற்றவாளிகள் ஆகின்றார்கள்!

**

இஸ்லாமிய வெறுப்பு குறித்து ஆய்வு செய்பவர்கள் கவனம் செலுத்திட வேண்டிய ஒரு கருத்தாக்கம் தான் - ஜரம - முஜ்ரிமூன் என்பதாகும்.

@@@

Comments