நூல்: திருக்குர்ஆனின் உலகப்பார்வை (பகுதி - 7)


ஏற்க வைப்பது எப்படி?
The Art of Persuasion

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இஸ்லாத்தின் கருத்துகளை நாம் மனதார நம்புகிறோம்.  ஏற்றுக் கொள்கிறோம்.  கட்டுப்படுகிறோம்.  செயல் படுகின்றோம். அவற்றில் நமக்கு எந்த சந்தேகமும் கிடையாது. ஏனெனில் - அந்தக் கருத்துகள் குறித்து நாம் ஏற்கனவே நமது அறிவைக் கொண்டு ஆய்ந்து, நமது உள்ளுணர்வு ஒத்துக் கொண்ட பின் தான் அவற்றை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் - அதே கருத்துகளை - நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நாம் சொல்கிறோம். சொல்ல வேண்டிய கடமை ஒன்று நமக்கிருக்கிறது. அவர்கள் ஒத்துக் கொள்ளும் விதமாக அவர்களிடம் நாம் பேசிட வேண்டியிருக்கிறது. அவர்களும் இஸ்லாத்தின் உண்மையான கருத்துகளை, நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஆனால் -  நாம் நமது கருத்துகளை  எடுத்து வைத்த உடனேயே - அவர்கள் அவற்றையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

அப்படியானால் - இஸ்லாத்தின் கருத்துகளை - அவர்களை ஏற்க வைப்பது எப்படி?

ஆங்கிலத்தில் இந்தக் கலையை - The Art of Persuasion - என்கிறார்கள்.

Persuaion - என்றால் என்ன?

Persuasion is something meant to get you to do or believe something.

நீங்கள் நம்பும் விஷயத்தை இன்னொருவரை ஒத்துக் கொண்டு செயல்பட வைத்தல் என்று சொல்லலாம். இந்தக் கலையை நாம் வளர்த்துக் கொள்ள திருமறை நமக்கு வழிகாட்டுகிறது.

**
இஸ்லாமிய அறிஞர் ஒருவர் கூறுகிறார்:

“In communicating with the early recipients of the message, the Qur’an adopted a rigorous, patient approach, amassing all possible evidence and using all methods of persuasion to make them see the truth!

திருக்குர்ஆன் முதலில் எந்த மக்களுக்கு முன் எடுத்து வைக்கப்பட்டதோ - அவர்களுக்கு - சாத்தியமான அனைத்து விதமான சான்றுகளையும், அனைத்து விதமான "ஒத்துக் கொள்ள வைக்கின்ற"  வழிமுறைகளையும் பொறுமையாகவும், தொடர்படியாகவும் கையாண்டது, அவர்கள் உண்மையை உணர்கின்ற வரையில்!

தம் கருத்துகளை ஒத்துக் கொள்ள வைப்பதற்கு - இதற்கு முன்னால் அனுப்பப்பட்டுள்ள இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது போல - பல  "அற்புதங்களை" நாடிடவில்லை திருக்குர்ஆன்! ஏனெனில் - மனித அறிவுக்குச் சவால் விடும் திருக்குர்ஆனே - ஓர் அற்புதமாகும் என்பதனால் தான்!

**

இதற்கெனத் திருமறை என்னென்ன வழிமுறைகளையெல்லாம் கையாண்டன?

வரலாற்றை எடுத்துச் சொல்வது, முன்னர் இறக்கியருளப்பட்ட (தவ்ராத், இஞ்சீல் ஆகிய) வேதங்களுடன் ஒப்பிட்டுக் காட்டுவது (comparison), திரும்பவும் திரும்பவும் சொல்லிக் காட்டும் வழி முறை (repetition), உவமானங்கள் வழியே புரிய வைத்தல் (metaphors), மனித அறிவுக்கும் உணர்வுக்கும் சவால் விட்டு சிந்திக்கச் செய்தல், கலந்துரையாடல்கள் வழியே (dialogue),  நற்கூலி அல்லது தண்டனை - ஆகிய விளைவுகளை எடுத்துச் சொல்லும் முகமாக - என்று பல கோணங்களிலிருந்தும் அம்மக்களின் கவனத்தை ஈர்த்தது!

***

அவற்றில் சிலவற்றை நாம் வகைப்படுத்துவோம் இங்கே:

1) திருமறை சொல்ல வருகின்ற கருத்துகளை சிந்தித்துப் பார்த்திட அழைப்பு விடுத்தல் / ஆழ்ந்த சிந்தனைக்கு அழைப்பு விடுத்தல் (Reflection)

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். (38:29)

2 விண் வெளியை, அதில் இருக்கின்ற அழகை, அதன் கட்டுக் கோப்பை, அதில் நடக்கின்ற அற்புதச் செயல்பாடுகளை - நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா என்று அழைப்பு விடுக்கிறது குர்ஆன்!

நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன. (2:164)

**

3) மனிதனிடம் இயல்பாய் அமைந்திருக்கின்ற அறிவாற்றலை அங்கீகரித்து - அதனை ஏன் பயன்படுத்திடக் கூடாது என்று தூண்டும் முகமாக!

"நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?" - என்று திரும்பவும் திரும்பவும் கேட்கப்படுகிறது திருமறையிலே! திருமறையில் 13 தடவைகள் இச்சொற்றொடர் இடம் பெற்றிருக்கின்றன!

இஸ்லாம் ஒருபோதும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுப்பதில்லை!

**

4 மனிதர்களிடம் இயல்பிலேயே விதைக்கப்பட்டிருக்கும் "நற்குணங்களை"  நேரடிச் சாட்சியாக அழைத்துப் பேசுதல் (Appeal to values!)

இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்;  (24:22)

**

5 கல்வியறிவு ஊட்டப்படுவதன் மூலம் (Through Literacy)

காரண காரியங்களை நம் அறிவைக் கொண்டு அலசிப்பார்ப்பதற்கு -  எண்ணறிவு, எழுத்தறிவு, அறிவியல் அறிவு - இவை அனைத்தின் அவசியத்தை உணர்த்தும் முகமாகத் தான் - திருமறையின் முதல் வெளிப்பாடாக - வஹியாக - "படிப்பீராக!" - என்று தொடங்கி இறை வசனங்களை இறக்கி வைத்தது திருக்குர் ஆன்.

96: 1- 5
----------
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

**

6 கலந்துரையாடல்கள் மூலமாக! (Through dialogue!)

மனித வரலாற்றில் நபியவர்களுக்கு முன்னால் அனுப்பி வைக்கப்பட்ட இறைத்தூதர்கள் - தாம் பெற்றிருந்த இறைச் செய்தியை தம் மக்களுக்கு மத்தியில் எடுத்து வைப்பதற்கு அவர்கள் கையாண்ட கலந்துரையாடல்களை - திருமறை நினைவூட்டுவதன் மூலம் - உண்மையை உணர்த்திட முயற்சி செய்கிறது திருக்குர்ஆன்!

**

7 தான் சொல்வது சந்தேகமற்ற சத்தியமே என்பதை நிறுவுவதற்காக - அம்மக்களை சவாலுக்கு அழைப்பதன் மூலமாக:

இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். (2: 23)

**

8 நோக்கத்தைச் சொல்லிப் புரிய வைத்தல்

பின்பற்றிட வேண்டிய சட்டங்களைச் சொல்லும்போது கூட - அது ஏன் என்பதற்கான நோக்கத்தைத் தெளிவுபடுத்திடவும் தவறுவதில்லை திருக்குர்ஆன்!

65:1
-----

நபியே! நீங்கள் பெண்களைத் “தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது; இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்; (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.(65:1)

**

பேச்சுக் கலை குறித்த திருமறையின் வழிகாட்டுதல்கள் சில:

1. அழகாகப் பேசுங்கள்:

மக்களிடம் மிக அழகாகப் பேசுங்கள் (2:83)

**

2. மென்மையாகப் பேசுங்கள்:

“நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான். “நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.” (20:43- 44)

3. நேர்மையாகவும் நேரிடையாகவும் பேசுங்கள்:

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (33:70)

சுற்றி வளைத்துப் பேசக்கூடாது என்பது இதன் விளக்கம்!

**

4. விவேகத்துடம் பேசுங்கள்:

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (16: 125)

நேரம் பார்த்து, சூழல் பார்த்து, கேட்பவரின் நிலை பார்த்துப் பேசுவது தான் விவேகம்!

*
5. இதயத்தைத் தொடும் உபதேசம்

இதயத்தைத் தட்டிப்பார்க்காத, வரட்டுத் தனமான உபதேசங்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. இதயத்தைத் தொடும் உபதேசத்தையே - "மவ்-இளத்" எனும் சொல்லைக் கொண்டு குறிப்பிடுகிறது திருமறை! (பார்க்க 16: 125)

6. நாம் எடுத்து வைக்கும் கருத்துகளை மக்கள் ஏற்றுக் கொள்கின்ற விஷயத்தில் பொறுமை அவசியம் என்று சுட்டிக்காட்டுகிறது திருமறை. அம்மக்கள் அதற்கு எத்தனை காலம் எடுத்துக் கொண்டாலும் சரியே!

உரையாடல்களில் உணர்ச்சி வசப்பட்டு விடக்கூடாது என்பதும் பொருமையில் அடங்கும்!

***

இப்போது ஒரு கேள்வி என்னவெனில் - தம் கருத்துகளை ஒத்துக் கொள்ள வைப்பதற்கு ஏன் இத்தனை சிரத்தை எடுத்துக் கொள்கிறது திருக்குர்ஆன்?

அப்போது தான் - தம் இலக்கை நோக்கி அம்மக்களையும் தம் கூடவே நாம் அழைத்துச் சென்றிட இயலும் என்பதால் தான். இன்னொரு காரணம் - இஸ்லாத்தின் தலைமை என்பது சர்வாதிகார மிக்க தலைமை கிடையாது!  தலைமை சொல்வதை மக்கள் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதை இறைவன் விரும்புவதே இல்லை!

தனதுஅறிவைக் கொண்டு ஒருவர் ஒரு விஷயத்தை மனமுவந்து ஏற்றிட வேண்டும் என்று இறைவன் எதிர்பார்ப்பது எதற்காக? அவரைப் "பொறுப்புள்ளவராக" ஆக்குவதற்காகத்தான்!

சிக்கல் என்று ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அது பொது மக்கள் உள்ளிட்ட அனைவரையும் தான் பாதிக்கும். இன்று - கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக - ஊரடங்கு உத்தரவு இடப்படும் விஷயத்தையே எடுத்துக் கொள்வோம்.

பொது மக்களில் பலர் இதற்கு ஏன் ஒத்துழைப்பு தருவதில்லை என்று நமக்குக் கோபம் கூட வருகிறது. ஆனால் இதற்கான காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்? பொது மக்கள் பலரிடத்தில் பொறுப்புணர்ச்சி இல்லை என்பது தான் காரணமே! ஏன் அவர்களிடத்தில் பொறுப்புணர்ச்சி இல்லை? அவர்கள் பொறுப்பற்றவர்களாக நடந்து கொள்வதற்கு யார் காரணம்?

அவர்களுக்கு அறிவூட்டுவதற்கு பதிலாக - அவர்களை நாம் - "கண்ணை மூடிப்பின்பற்றுவர்களாகவே"  வைத்துக் கொண்டிருக்கும் நாம் தான் அதற்குக்காரணம்!

குறள் 948:
-----------------

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

**

இன்று உலகில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற அனைத்து அவலங்களுக்கும் பின்னணியில் இருப்பது - நமது பொறுப்பற்ற தன்மையே!

உலகெங்கும் ஏன் இவ்வளவு அநியாயங்கள்? ஏன் நாடுகளுக்கிடையே இத்தனைப் போர்கள்?  உலகம் வெப்ப மயமானது எதனால்? கால நிலைகள் (climate change) மாறிப்போனது ஏன்? உயிரியல் பன்மைத்துவம் (bio diversity) காணாமல் அடிக்கப்படுவது ஏன்? இன்று உலகையே உலுக்கி எடுக்கின்ற வைரஸ் தொற்று நோய்களின் விளைவுகளுக்கு எது காரணம்?

ஒரே காரணம் - மக்களுக்கு அறிவும் பொறுப்பும் ஊட்டப்பட்டு - அவர்கள் தாமாகவே அவைகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டு - அதன் வழி செயல்படுகின்ற கலையை இன்னும் நாம் கற்றுக்கொள்ளவில்லை என்பது தான்!

**

இந்தக் கலை என்பது இஸ்லாமிய அழைப்புப்பணிக்கு மட்டுமே என்று எடுத்துக் கொண்டு விடக்கூடாது!

முஸ்லிம்களுக்கு மத்தியில் இருக்கின்ற கருத்து வேறுபாடுகள் குறித்துப் பேசுவதற்கும் - இந்தக் கலை அவசியம்!

நாளை - நாம் - பல பொதுப் பிரச்னைகள் குறித்து களப்பணியாளர்களுக்கு மத்தியிலும்,  பொதுக் கொள்கை வகுக்கின்ற ஆய்வாளர்களுக்கு மத்தியிலும் கூடப் பேசிட வேண்டியிருக்கும். குறிப்பாக - ஷூரா - எனப்படும் கலந்தாலோசனை (Collective Decision Making Process) நடைபெறும் சமயங்களில் இக்கலை அவசியம் கை கொடுக்கும்.

குறிப்பாக மகாஸித் அணுகுமுறையாளர்களுக்கு இந்தக் கலை மிக மிக அவசியம்!
@@@@

இதில் நமக்கும் பொறுப்பு இருக்கிறது!

மகாஸித் அல் ஷரீஆ என்பது இஸ்லாமியக் கல்வித் துறையில் - ஓர் ஆழ்கடல் போன்றதொரு துறை ஆகும்.

இத்துறையின் வேர்களை, நாம்  - நபியவர்கள் வாழ்ந்த கால கட்டத்திலேயே போய்க் காண முடியும்! பின்னர் அது - நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் மற்றும் நபித்தோழர்கள் காலம் தொடர்ந்து - பின்னர் பல இஸ்லாமிய அறிஞர்களால் ஆய்ந்தளிக்கப் பட்டு - அது ஒரு தன்னிகரற்ற துறையாகப் பரிணாமம் பெற்றிருப்பதற்கு ஒரு வரலாறே உண்டு!

இன்றளவும், அதாவது  இந்த 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில் - அறிவு நுட்பம் மிக்க அறிஞர்களின் பங்களிப்புகளால் மெருகேற்றப் பட்டுக் கொண்டிருக்கின்ற துறை தான் மகாஸித் துறையாகும்.

மகாஸித் என்பது மிக உயர்ந்த இலக்குகளை அடிப்படையாக கொண்டிருப்பதால் - இத்துறைக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல! பிரச்னைகளாலும் சிக்கல்களாலும் சூழப்பட்டிருக்கும் இன்றைய உலகத்தில் - மகாஸித் என்பது ஒரு தவிர்க்க இயலாததொரு துறையாக எழுச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை!

**

மகாஸித் துறை என்பது எவற்றுக்கெல்லாம் பயன்படும் என்றால் மனித வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் பயன்படும் என்று துல்லியமாகச் சொல்லி விடலாம்!

தனி மனித முன்னேற்றம் தொடங்கி, கல்வி, மனித சமூகத்தின் அடிப்படை அங்கமாகிய குடும்ப அமைப்பு, அதனைத் தொடர்ந்து - சமூகப் பிரச்னைகள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் அரசு நிர்வாகம் (governance) வரை - மகாஸித் தொட்டுப்பார்க்காத துறை என்று ஒன்றுமில்லை என்று சொல்லி விடலாம்.

மனித குலத்தை மீட்க முடியாத சிக்கலில் ஆழ்த்தியிருக்கின்ற உளவியல் பிரச்னைகள், சுற்றுப் புறச் சூழல் பிரச்னைகள் - எல்லாவற்றுக்கும் மகாஸித் துறை வழியே மிகச் சிறந்த தீர்வுகளை நாம் முன் வைத்திட முடியும்!

நவீன அறிவியலைத் தவறாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்டிருக்கும் ஆபத்துகளிலிருந்து மனித குலத்தை மீட்டெடுக்கும்  வழிமுறைகளைத் தன்னகத்தே கொண்ட துறை தான் மகாஸித் துறையாகும்.

***

கேள்வி ஒன்றைக் கேட்கலாம்.

"இவையெல்லாம் - மார்க்க அறிஞர்களை வைத்து செய்திட வேண்டிய பணிகள் தானே; இவற்றில் எங்களுக்கு என்ன வேலை; நாங்கள் ஒன்றும் அறிஞர்கள் இல்லையே!" - என்ற கேள்வி ஒன்றை யாரும் முன் வைக்கலாம்!

கடந்த காலங்களில் பொது மக்களாகிய நாம் அனைவரும் சேர்ந்து செய்த வரலாற்றுப் பிழை ஒன்று இருக்கிறது!

அது என்னவென்றால் - "அது அறிஞர்களின் பணி, இது இமாம்களின் வேலை, இதனை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்; நாம் அவர்கள் சொல்வதை அட்டியின்றி கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றினால் - நமது பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து விடும்!" -  என்று ஒதுங்கி, சிந்தனைச்  சோம்பேறிகளாக நூற்றாண்டுகளாக வாழத் தலைப்பட்டதன் விளைவுகளைத் தான் இன்று நாம் உலகம் முழுவதும் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம் என்கிறார் ஓர் இஸ்லாமிய அறிஞர். அவர் ஒருபெண்மணி என்பது ஒரு கூடுதல் சிறப்பு அவருக்கு!

அறிஞர்கள் அல்லாத நமது சோம்பேறித் தனத்தால் ஏற்பட்ட இரண்டு முக்கியமான விளைவுகள் என்ன தெரியுமா?

1) பிரச்னைகளைத் தீர்த்து வைக்க வேண்டிய அதிகார பீடத்தில் சுய நலமிகள் வந்து உட்கார்ந்து கொண்டார்கள்! இஸ்லாத்தின் உயர்ந்த இலக்குகள் கண்டு கொள்ளப்படவே இல்லை!

2) எந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகளை - அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்று விட்டு விட்டோமோ - அந்தப் பிரச்னைகளால் ஏற்பட்ட விளைவுகளை - பொது மக்களாகிய நாம் தான் சுமக்க வேண்டி வந்து விட்டது!

**

ஆனால் மகாஸித் துறை அப்படிப்பட்டதல்ல! அதில் உங்களுக்கும் எமக்கும் மிகுந்த பொறுப்பு இருக்கிறது! எனவே தான் சொல்கிறோம். கொஞ்சம் சிரமப்பட்டேனும் இத்துறையைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்!

இங்கே சுய நலத்துக்கு வேலை கிடையாது. தம் அதிகாரத்தைக் கொண்டு ஆட்டிப்படைக்கும் தலைமைத்துவம் இங்கே கிடையாது!
சுருக்கமாகச் சொல்வதென்றால் - மகாஸித் துறையின் ஒற்றை இலக்கே -

" நான் நற்குணங்களை முழுமைப் படுத்துவதற்காகவே அனுப்பப் பட்டுள்ளேன்!" - என்ற நபிமொழியின் இலக்கு மட்டும் தான்!

எனவே இதில் நமக்கும் பொறுப்பு இருக்கிறது!

@@@

Comments