இப்படியும் விவாதிக்கலாம்!



நபி (ஸல்) அவர்கள் பல தாரங்களை மணந்து கொண்டது (POLYGAMY) குறித்து முஸ்லிமல்லாத சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நபி (ஸல்)  அவர்கள் மறைந்த பின்பு நபியவர்களின் மனைவியரை மற்ற எவரும் மறுமணம் செய்து கொள்வது கூடாது என்ற தடை குறித்தும் கேள்வி தொடுக்கின்றனர்.

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்திட முற்படும் அறிஞர்களில் சிலர் நபி (ஸல்) அவர்கள், பல தாரங்களை மணம் புரிந்து கொண்டதற்கு - அன்றைய சமூக மற்றும் அரசியல் சூழ்நிலைகள் தாம் காரணம் என்று சொல்கின்றார்கள்.

சான்றாக - அபூ சுஃப்யான் அவர்களின் மகள் உம்மு ஹபீபா அவர்களை நபியவர்கள் மணந்து கொள்வதன் மூலம் எதிரியாக விளங்கிய அபூ சுஃப்யானின் எதிர்ப்பு குறைந்து விடும் என்பதற்காகவே இத்திருமணம் நடைபெற்றது என்று பதில் அளிக்கப்படுகிறது.

அது போலவே யூதர்களுடன் நடைபெற்ற போரில் - கைதியாக்கப்பட்ட சஃபிய்யா என்ற பெண்மணியைத் தாமே மணந்து கொண்டதன் மூலம் யூதர்களைக் கவர்ந்தார்கள் நபியவர்கள் என்றும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

அபூபக்ர் அவர்களுடனும், உமர் அவர்களுடனும் தமக்கிருந்த நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ளவே, ஆயிஷா அவர்களையும் ஹஃப்ஸா அவர்களையும் நபியவர்கள் மணந்து கொண்டார்கள் என்றும் பதில் தரப்படுகிறது.

மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக நபியவர்கள் பல மணங்கள்  செய்திருக்க "வாய்ப்பிருக்கிறது" என்று உறுதியற்ற சொற்களைக் கொண்டு வேண்டுமானால் பதில் அளிக்கலாமே தவிர - இவற்றுக்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்து கொண்டார்கள் என்ற பதில் சரியானதாகத் தோன்றவில்லை!

அப்படியானால் - இது போன்ற சமூக அரசியல் காரணங்கள் இல்லாது போயிருக்குமானால், நபியவர்கள் பல திருமணங்களைச் செய்து கொள்ள வேண்டிய அவசியமே  இருந்திருக்காது என்று சொல்வது போல் ஆகி விடும். அது சரியாகுமா?

இதே போன்ற சூழ்நிலை நபியல்லாத ஒருவருக்கு - உதாரணமாக - ஒரு இஸ்லாமிய ஆட்சியாளருக்கு - ஏற்படின், அவரும் நான்கு மனைவியருக்கு மேல் மணந்து கொள்ள மார்க்கம் அனுமதிக்குமா என்ற கேள்வியும் சேர்ந்தே எழுமே!

இஸ்லாமிய அறிஞர்கள் அளிக்கின்ற இப்படிப்பட்ட "பலவீனமான" பதில்களைக் கேட்கின்ற சாதாரண முஸ்லிம் இளைஞன் - அமைதி அடைவதில்லை. நாம் அளிக்கும் பதில்கள் திருப்தி அளித்திறாத நிலையில், ஒரு முஸ்லிம், இதற்கு சரியான பதில்களே இல்லையோ என்ற தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகின்றான்!

இந்த பதில்கள் - எந்த ஒரு முஸ்லிமல்லாதவரையும் திருப்திப் படுத்திட இயலாதவை!

கேள்விகள் தொடுக்கும் முஸ்லிமல்லாதாரை நாம் இரண்டு விதமாகப் பிரித்துப் பார்க்கலாம்.

ஒரு பிரிவினர் இஸ்லாத்தைப் பற்றிய அறிவோ அறிமுகமோ இல்லாத சாதாரண மக்கள். நபியவர்கள் பல மணம் புரிந்து கொண்டார்கள் என்று கேள்விப்படும்போது, இதற்கு முஸ்லிம்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று அறிந்திடும் ஆர்வம் உள்ளவர்கள்.

மற்றொரு பிரிவினர் - இஸ்லாத்தை "அறிந்து” கொண்டவர்கள். ஆனால் அவர்கள் இஸ்லாத்தை முஸ்லிம்களிடமிருந்து அறிந்து கொண்டவர்கள் அல்ல! மாறாக, இவர்கள் மேற்கத்தியவாதிகள் மற்றும்  இஸ்லாத்தை எதிர்க்கின்ற ஏனையோரால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள்.

நபியவர்களின் பல தார மணம் குறித்த கேள்விகளுக்கு நாம் அளித்திடும் பதில்கள்

1 ஒரு முஸ்லிமைத் தலை நிமிரச் செய்திட வேண்டும்.
2 ஒரு முஸ்லிமல்லாதவரைத் திருப்தியடையச் செய்திட வேண்டும்.
3 மூளைச் சலவை செய்யப்பட்டவர்களை வாயடைக்கச் செய்திட வேண்டும்.

அப்படிப்பட்ட பதில்களை இஸ்லாம் நம்மால் தர இயலாதா? அப்படியானால் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு மிகப் பொருத்தமான பதில் அளிப்பது எப்படி?

**
முதல் ஸ்டெப்:

முதலில் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இஸ்லாத்தில் இறைத்தூது (RISALAT) எனும் கோட்பாடு குறித்து கொஞ்சமாவது விளக்கி விட்டுத்தான் - பதில்களுக்குச் செல்ல வேண்டும்.

அதற்கு இது இடம் அல்ல. எனினும் கொஞ்சமேனும் அதற்குத் தேவை இருக்கிறது.

இறைத்தூது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்றாகும். இது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதை அவர்களுக்கு நாம் முதலில் உணர்த்திட வேண்டும்.

இறைத்தூதர் என்பார் - இறைவனால் தேர்வு செய்யப்பட்ட மனிதர்கள் என்றும், அவர்கள் மனிதப் புனிதர்கள் என்றும்,  அவர்கள் அனைத்துப் பாவங்களில் இருந்தும் பாதுகாக்கப்பட்டவர்கள் என்றும்,  அவர்கள் அனைவரும் உண்மையாளர்கள் என்றும்,  அவர்களில் எவரும் தம் மனோ இச்சையைப் பின்பற்றுபவர்கள் அல்லர் என்றும், அவர்களுக்கு இறைவனின் கட்டளைகள் அனுப்பப்படுகின்றன என்றும், அந்தக் கட்டளைகளுக்கொப்பவே அவர்கள் செயல்படுவார்கள் என்றும் - முஸ்லிம்கள் முழுமையாக நம்புகிறார்கள் என்பதை நாம் புரிய வைத்திட வேண்டும்.

**
அடுத்த ஸ்டெப் :

இறைத்தூதர்கள் அனைவருமே மனிதர்கள் தாம் என்றாலும்,  நமக்கும்  இறைத்தூதைத் தாங்கி நிற்கும்  நபிமார்களுக்கும் - மிகுந்த வேறுபாடுகள் உண்டு!

நமக்கும், ஒரு நபிக்கும் உள்ள மிகப்பெரும் வேறுபாடே நபி ஒருவருக்கு "வஹி"எனப்படும் வேத வெளிப்பாடு (இறைவனின் செய்தி) இறங்குவது தான்!

வஹி இறங்குவது என்றால் என்ன?

இறைவனின் புறத்திலிருந்து ஒரு "செய்தி" இறைவனால் படைக்கப்பட்ட இன்னொரு படைப்பான வானவர்களில் ஒருவர் மூலமாக, குறிப்பிட்ட ஒரு இறைத்தூதரை வந்தடைதலுக்குப் பெயர் தான் வஹி இறங்குதல் என்று பெயர்.

வேத வெளிப்பாடு எனும் வஹி என்பது சாதாரண ஒரு நிகழ்வு அல்ல! அது மிக மிக வலிமையானதொரு நிகழ்வு. அதனைத் தாங்கிக் கொள்வதற்கான "வலிமையை" இறைவன் அந்த இறைத்தூதர்களுக்கு வழங்கியிருக்கிறான்.

வஹியைப் பெற்றுக் கொள்வதற்கு,  அதனைத் தாங்கிக் கொள்வதற்கு, நபியவர்களே மிகவும் சிரமப்படுவார்கள் என்று நாம் அறிகிறோம்.

ஒரு தடவை, முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்திருந்த நிலையில், அவர்களுக்கு வஹி அருளப்பட்டது!  வஹியின் "பளுவை" நபி (ஸல்) அவர்கள் தாங்கிக் கொண்டார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களைச் சுமந்து கொண்டிருந்த ஒட்டகமோ, நிலையாக நிற்க முடியாமல் தடுமாறியது!

இன்னொரு சமயம், நபி (ஸல்) அவர்கள் - தம் மனைவி ஆயிஷா (ரளி) அவர்களின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த நிலையில் "வஹி" இறங்கத் தொடங்கி விட்டது!  அன்னிலையிலும் வஹியைத் தாங்கிக் கொண்டார்கள் நபி (ஸல்) அவர்கள். ஆனால் ஆயிஷா அவர்களுக்கோ - எலும்புகளே முறிந்து போய் விடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு நபி (ஸல்) அவர்களின் பளு இருந்தது!

இப்படிப்பட்ட வஹி இறங்குதலைத் தாங்குகின்ற சக்தியும் ஆற்றலும், நம்மைப் போன்ற "சாதாரண" மனிதர்களுக்குக் கிடையாது!

ஏன், இந்தக் குர்ஆனை மலை ஒன்றின் மீது இறக்கி வைத்திருந்தால் கூட, அது அல்லாஹ்வின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, சுக்கு நூறாகச் சிதைந்து போயிருக்கும் என்று அறிவிக்கிறான் அல்லாஹ்!

இங்கே தான் நாம் கவனிக்க வேண்டும். ஒரு மலையால் தாங்கிக் கொள்ள இயலாத ஒன்றை, நபி (ஸல்) அவர்கள் தாங்கிக் கொண்டார்களே அது எப்படி?

நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் - நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படாத விஷேச ஆற்றலும், மன பலமும் - நபியவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன என்பதைத் தான்!
இதனை வேறு சில சான்றுகள் மூலமாகவும் நாம் அறிந்து கொள்ளலாம்.

*நூறு பேர் சேர்ந்து சண்டைக்கு வந்தாலும் தோற்கடிக்க இயலாத ஒரு மல்யுத்த வீரனை, கரம் பிடித்ததும் ஒரு நொடியில் தோற்கடித்துக் காட்டுகிறார்கள் நபியவர்கள்! அது எப்படி சாத்தியமாயிற்று?

* நோன்பு வைக்கும் விஷயத்திலும், உணவு உண்ணும் விஷயத்திலும் நபி (ஸல்) அவர்களை அப்படியே அடியொற்றி நடந்திட விழைகின்றார் நபித் தோழர் ஒருவர். அவ்வாறு தம்மைப் பின்பற்றிட வேண்டாம் என்றும், தமக்கு இறைவன் புறத்திலிருந்து உணவு வழங்கப்படுகின்றது என்றும் கூறி அவரைத் தடுத்து விடுகிறார்கள் நபியவர்கள்!

* நபியவர்களின் இரவுத் தொழுகையை (தஹஜ்ஜுத்) எடுத்துக் கொள்வோம். நபியவர்களைப் பொறுத்தவரை இரவுத் தொழுகையை அவர்களுக்குக் கடமை ஆக்கி வைத்திருந்தான் இறைவன்.. நமக்கு அது உபரித் தொழுகை தானே தவிர அது கடமை அன்று!

* நபியவர்களை ஒரே இரவில், ஏழு வானங்களையும் கடந்து அழைத்துச் சென்று, பல அத்தாட்சிகளைக் காட்டுகிறான் இறைவன். அது மிஃராஜ் என்று அழைக்கப்படும். இயல்பிலேயே நபியவர்களுக்கு அசாதரணமான வலிமை ஒன்று வழங்கப்படாமல் இது சாத்தியமாகி இருக்காது!

**

மூன்றாவது ஸ்டெப்:

இப்போது, நாம் எடுத்துக் கொண்ட தலைப்புக்குள் வருவோம்.

ஒரு முஸ்லிம் ஆண், அதிக பட்சமாக நான்கு பெண்களை மணம் முடித்துக் கொள்ளலாம். (ஆனால், இது ஒன்றும் கட்டாயம் அல்ல!)

ஆனால், நபியவர்களுக்கு, இந்த "உச்ச வரம்பு" கிடையாது! அவர்கள் நான்குக்கு மேற்பட்ட பெண்களை மணம் முடித்திருந்தார்கள்.

நபியவர்கள் ஒரு இறைத்தூதர் என்ற பின்னணியில் இருந்து சிந்தித்துப் பார்த்தால், நபியவர்களின் பலதார மணம் குறித்து எந்த ஒரு கேள்வியும் எழவே எழாது!

நாம், எடுத்துக் காட்டிய  சான்றுகளிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு சில விஷேசமான தனிப்பட்ட ஆற்றல்களையும், மன வலிமையையும், உடல் பலத்தையும் வழங்கியிருந்ததோடு, வலிமையான பல கடமைகளையும், பொறுப்புகளையும் விதியாக்கியிருந்தான் இறைவன் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 

இதே அடிப்படையைக் கொண்டு நாம் சிந்தித்தோமானால், நபி (ஸல்)   அவர்களுக்கு பல திருமணங்களைச் செய்திட இறைவன் அனுமதி அளித்திட்டது ஒரு முரண்பாடாகத் தோன்றுவதற்கு வாய்ப்பே இருக்காது!

முஸ்லிமல்லாதாரிடம் இவைகளை விளக்கிடுவதில் நமக்கு எந்த சிரமமும் இருக்கப் போவதில்லை!

**
நான்காவது ஸ்டெப்:

அடுத்து இன்னொரு விஷயத்தை மற்றவர்க்குப் புரிய வைப்பதில், நாம் கவனம் செலுத்திட வேண்டும்.
நபியவர்கள் இத்தனை திருமணங்களையும் செய்து கொள்வதற்கு, அவர்களுக்கு இறைவனின் அனுமதி இருந்ததா? இல்லை, தங்கள் மனோ இச்சையின் அடிப்படையிலேயே இத்தனை திருமணங்களையும் செய்து கொண்டார்களா?

இறைவனின் அனுமதி இருந்தது என்பது தான் ஆணித்தரமான உண்மை! ஒரு கட்டத்தில், இறைவன் முற்றுப் புள்ளி வைக்கிறான் நபியவர்களுக்கு. இனி நீங்கள் யாரையும் திருமணம் செய்திடக் கூடாது என்று. அப்படியானால், அதற்கு முன் செய்து கொண்ட திருமணங்களை, இறைவன் அங்கீகரித்திருக்கிறான் என்பது தானே பொருள்?
**
ஐந்தாவது ஸ்டெப்:

நபியவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டிருந்ததற்கு என்ன காரணங்கள்? நிச்சயமாக நாம் இதனை ஊகித்து அறிந்திட இயலாது. இறைவன் அதனை வெளிப்படுத்தியிருந்தாலே அன்றி! அப்படி, குர்ஆனிலோ அல்லது நபிமொழிகளிலோ – “இதற்காகத்தான் இந்தத் திருமணங்கள்” என்று காரணம் சொல்லப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை!

ஆனால் நாம் ஒன்றைச் சொல்லலாம்: சில கூடுதல் பொறுப்புகள் ஒருவருக்குக் கொடுக்கப்படும் போது, சில சலுகைகளும் வழங்கப்படுதல் ஒன்றும் தவறு கிடையாது!  அப்படிப்பட்ட சலுகைகளுள் ஒன்று தான் இந்தத் திருமண அனுமதி! இந்த அனுமதியை வழங்கியவன் அறிவுக்கும் விவேகத்துக்கும் சொந்தக் காரனாகிய அல்லாஹ் தான் என்பதைப் புரிந்து கொண்டால் அது போதும் நமக்கு!
**
ஆறாவது ஸ்டெப்:

புரிய வைப்பதற்காக (மட்டும்) நாம் சில உதாரணங்களைக் கூறுகிறோம்.

* ஒரு நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்படுபவருக்கு எத்தனை சலுகைகள் வழங்கப்படுகின்றன?  எமக்கில்லாத சலுகைகள் அவருக்கு மட்டும் ஏன்? - என்று நம்மைப் போன்ற "சாதாரண" குடிமகன் ஒருவன் கேட்க முடியுமா?

*ஒரு நாட்டின் பிரதமருக்கும், மந்திரிகளுக்கும்  கூட இரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டு, ஒரு நாட்டின் இரகசியங்கள் எல்லாம் அவர்களுக்குக் காட்டப்படுகின்றன! எனக்கும் அந்த இரகசியங்கள் தெரிந்தாக வேண்டும் என்று நம்மில் யாரும் கேட்டு விட முடியாது!

*இம்மண்ணை ஆளும், சாதாரண ஆட்சியாளர்களுக்கே எவ்வளவு சலுகைகள்! நாம் வாயைத் திறப்போமா? மாட்டோம். ஏனெனில், அவர்கள் நாட்டை நிர்வாகம் செய்பவர்கள். அவர்களுக்குக் கொடுக்கப்படுபவைகளை நாமும் கேட்பது நியாயம் இல்லை என்பதை சாதாரண குடிமகனும் ஒத்துக்  கொள்கிறான்.

*ஆனால், இறைத்தூதர் ஒருவரின் விஷயத்தில், - இது இறைவன் அவர்களுக்கு அளித்த விஷேச சலுகைகளுள் ஒன்று என்று ஏன் நம்மால் மற்றவர்க்குப் புரிய வைத்திட இயலவில்லை?  காரணம் நமது பலவீனம் தானே?

இறுதியாக ஒரு ஸ்டெப்:

நபியவர்களின் இல்லற வாழ்க்கையை சற்றே புரட்டிப்பாருங்கள்!

நபியவர்களின் ஒவ்வொரு மனைவியும்,  வெவ்வேறான ஆளுமைப் பண்புகளைக் (PERSONALITY TRAITS) கொண்டவர்கள்!

நபியவர்கள் சொன்னார்கள்: "உங்களில் சிறந்தவர், உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே! நான் என் மனைவியரிடத்தில் மிகச் சிறந்த கணவனாக இருந்திருக்கின்றேன்!”

ஆம்! அத்தனை மனைவியரிடத்திலும், மிகச் சிறந்த கணவனாக அவர்கள் விளங்கினார்கள்! எனவே - நபியவர்களின் திருமண வாழ்க்கையை யாரும் கொச்சைப் படுத்திட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒன்று - நபியவர்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அல்லது - குறைந்த பட்சம் - நபியவர்களைப் பற்றி முஸ்லிம்கள் இவ்வாறு தான் நம்புகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு எங்களுக்கு உரிமையும் இருக்கிறது! காரணங்களும் இருக்கின்றன!

பொறுமையாகப் படித்துப் பார்த்ததற்கு மிக்க நன்றி!

ஆக்கம்:
எஸ் ஏ மன்சூர் அலி
**

Comments