ஆன்மிக ஆளுமை - பகுதி 2



செல் எனும் அற்புதம்!


சகோதரர்களே! இதற்கு முன் பெரு வெடிப்புக் கோட்பாட்டை முன் வைத்து - இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு அமைப்பு தற்செயலாகத் தோன்றி பல கோடி ஆண்டுகளாக - எந்த ஒரு தடங்களும் இன்றி இயங்கிக்கொண்டிருத்தல் சாத்தியமில்லை - இல்லாமையிலிருந்து இப்பேரண்டத்தைப் படைத்தவன் ஒருவன் இருந்தாக வேண்டும் என்பதை நாம் விளக்கியிருந்தோம்.


இறைவனின் உள்ளமைக்கு இன்னுமொரு சான்றாக - அடுத்து நாம் பார்க்க இருப்பது மிக மிக நுண்ணிய ஒரு அமைப்பைப் பற்றி!


உயிரினங்கள் எதுவாக இருப்பினும் - அவை அனைத்துக்கும் ஆதாரமான அதனுடைய மிக மிகச் சிறிய அறை போன்றதொரு அமைப்புக்குப் பெயர் தான் செல் (cell) எனப்படுவது. செல் என்றால் கிரேக்க மொழியில் ஒரு மிகச் சிறிய அறை (compartment) என்று தான் பொருள்.


உயிரினத்துக்கு உயிரினம் செல்களின் அமைப்பும் அளவும் வேறு பட்டாலும், பெரும்பாலான செல்கள் சாதாரணக் கண்களால் பார்க்க இயலாத அளவுக்கு மிகவும் சிறியவை. செல்களை அளப்பதற்கு ' மைக்ரான் ' எனும் அளவீடு பயன்படுத்தப் படுகிறது. ஒரு மைக்ரான் என்பது ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்காகும்.


அறிவியல் உலகம் நுண்ணோக்காடிகளைக் (microscope) கண்டுபிடித்த பின்னரே உயிர் செல்களைக் குறித்த விரிவான ஆய்வுகளை விஞ்ஞானிகளால் மேற்கொள்ள முடிந்தது.


உருவத்தில் மிக மிகச் சிறியதாக இருப்பினும் - ஒரு செல்லின் கட்டமைப்பும் (structure) அதன் பலவிதமான செயல்பாடுகளும் மிக மிக நுணுக்கமானவை. ஒரு உயிர் செல்லை ஒரு பெரும் நகரத்துடன் (city) ஒப்பிடலாம் என்கிறார் ஒரு அறிஞர். ஏனெனில் ஒரு பெரும் நகரத்தின் அமைப்புக்கும் செயல்பாடுகளுக்கும் எந்த விதத்திலும் குறைந்ததல்ல - செல் ஒன்றின் அமைப்பும் அதன் பல்வேறு இயக்கங்களும். அவை அவ்வளவு நுட்பமானவை!


ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு வெளிப்புறச் சுவர். இந்தச் செல் சுவர் அல்லது சவ்வு எப்படிப்பட்டது தெரியுமா? செல்லுக்குத் தேவையான பொருட்களை மட்டும் உள்ளே ஊடுருவிச் செல்ல அனுமதிக்கும். அது எவ்வளவு சிக்கலான கடினமான பொருளாக இருந்தாலும் சரி! செல்லுக்குத் தேவையற்ற பொருட்களை செல் சுவர் ஒரு போதும் அனுமதிப்பதில்லை. அது எவ்வளவு எளிமையான மென்மையான பொருளாக இருந்தாலும் சரியே!


இந்த செல் சுவருக்குள் தான் 'சைட்டோ-பிளாசம்' என்று அழைக்கப்படும் செல் சாறு நிரம்பியுள்ளது. இப்பகுதியில் தான் பல உப அமைப்புகள் பதித்து வைக்கப்பட்டுள்ளன. செல்லுக்குத் தேவையான ஆற்றலை வழங்கிடும் ஆற்றல் நிலையங்கள் (power houses) இங்கே உள்ளன. அதாவது கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரொட்டீன்களை எரித்து செல்லுக்குத் தேவையான சக்தியை - ஆற்றலை வழங்குகின்றன.


செல் உயிர் வாழ்வதற்குத் தேவையான என்சைம் மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்து தந்திடும் தொழிற்சாலைகளும் இங்கே உண்டு.


மூலப் பொருட்களையும் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடம் கொண்;டு சேர்த்திட போக்குவரத்து வசதிகளும் குழாய்களும் இதனுள் உண்டு. இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருட்களை தனக்குத் தோதுவான பல பொருட்களாக மாற்றித் தந்திடும் அதி நவீன ஆய்வுக் கூடங்களும் (laboratories) இங்கே அடக்கம்.


சரி, இந்த செல்லின் செயல்பாடுகளையெல்லாம் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது எது தெரியமா? அது தான் செல்லின் கரு (nucleus) ஆகும். இது செல்லின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. செல்லின் கருவுக்கும் ஒரு சுவர் உண்டு. கருவுக்குள்ளும் ஒரு சாறு உண்டு. கருவின் மத்தியிலே பல உட்கருக்களும் உண்டு.


நியுக்ளியோ-ப்ளாசம் என்றழைக்கப்படும் கருவின் சாற்றில் க்ரோமாட்டின் எனப்படும் இழை போன்றதொரு பொருள் காணப்படுகிறது. இதுவே பின்னர் சற்றே கடினமான க்ரோமோசோம் எனும் பொருளாக மாறி விடுகிறது. ஒரு செல் கருவில் உள்ள க்ரோமோசோம்களின் எண்ணிக்கை உயிரினத்துக்கு உயிரினம் மாறுபடும்.


சான்றாக, மனித உடலில் உள்ள ஒவ்வொரு உயிர் செல்லின் கருவிலும் 46 க்ரோமோசோம்கள் காணப்படுகின்றன. இந்த க்ரோமோசோம் என்பது DNA மற்றும் RNA என்றழைக்கப்படும் இரண்டு அமிலங்களாலும் சில புரொட்டீன்களாலும் ஆன ஒரு பொருள். க்ரோமோசோம்களுக்ளுள் காணப்படும் DNA அமிலம் ஒன்றின் ஒரே ஒரு குறிப்பிட்ட பகுதியே gene எனப்படும் மரபணுவாகத் திகழ்கிறது.


இந்த மரபணுக்களில் தான் மனித உடலின் கட்டமைப்புத் திட்டம் (construction plan) அமைந்துள்ளது. அதாவது நமது பரம்பரை குணங்களுக்கான தகவல்கள் அனைத்தும் இங்கே தான் பொதிந்துள்ளன. நமது தோற்றம், உயரம், நிறம், கண்களின் அமைப்பு, மூக்கின் வடிவம் மற்றும் நமது உள்ளுறுப்புகளின் அமைப்பு எல்லாமே - இந்த மரபணுக்களில் உள்ள செய்திகளைக் கொண்டே வடிவமைக்கப் படுகின்றன. ஒரே ஒரு மரபணுவில் மட்டும் எத்தனை ' எழுத்துகள்' பொதிந்திருக்கின்றன தெரியுமா? சுமார் 350 கோடி எழுத்துகளாம்!


இவை அனைத்தும் - செல்லைப் பற்றிய ஒரு சில தகவல்கள் தாம். இன்னும் விரிவாகப் பார்த்திட வேண்டுமென்றால் பள்ளிக்கூட மாணவர்களின் உயிரியல் பாட நூல்களிலிருந்து பல அரிய செய்திகளைப் பெற்றுக்கொள்ளலாம். நாம் இங்கே எடுத்துக் கொண்டிருக்கும் விஷயம் - மாணவர்களுக்கு சொல்லித் தராத, ஆனால் அவர்களுக்கு சொல்லித் தரப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.


அது என்ன?


முதல் உயிர் செல் எவ்வாறு தோன்றியது?


ஓரு சின்னஞ்சிறிய செல். அதற்கு ஒரு சுவர். சுவருக்கள் ஒரு திரவம். அதற்கு நடுவில் ஒரு கரு. கருவுக்குள்ளே புரொட்டோபிளாசம். அதற்குள்ளே ஜீன். அந்த ஜீனுக்குள் பரம்பரை குணங்கள். இவ்வளவு அற்புதமானதொரு அமைப்பையும் செயல்திட்டத்தையும் தன்னகத்தே கொண்ட அந்த சின்னஞ்சிறிய முதல் உயிர் செல் உலகில் எவ்வாறு தோன்றியது?


விஞ்ஞானிகளில் சிலர் என்ன சொல்கிறார்கள்? சுமார் இருநூறு அல்லது முன்னூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் - நீராவி, மீத்தேன், அம்மோனியா மற்றும் ஹைட்ரஜன் ஆகிய நான்கு வாயுக்களும் காற்றில் கலந்திருந்தனவாம். சாதகமானதொரு இயற்கைச் சூழலினால் தற்செயலாக அவை ஒன்று சேர்ந்து அமினோ அமிலங்கள் உருவானதாம். நூற்றுக்கணக்கான அமினோ அமிலங்களின் மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்து தற்செயலாக புரொட்டீன் உருவானதாம். பிறகு பல்லாயிரக்கணக்கான புரொட்டீன் மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்ததால் தற்செயலாக நுட்பமான பல அமைப்புகளைக் கொண்ட முதல் உயிர் செல் தோன்றியதாம்.


சாதகமானதொரு இயற்கைச் சூழல் என்று அவர்கள் சொல்வது இடியுடன் கூடிய மின்னலைத் தான். அவர்களுடைய இந்தக் கோட்பாட்டைத் தான் உயிர் மலர்ச்சிக் கோட்பாடு (Theory of Evolution)  என்று அழைக்கிறார்கள்.


எதிர்ப்பெதுவும் இல்லாமல் எல்லா விஞ்ஞானிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதொரு கோட்பாடா இது என்றால் அது தான் இல்லை.


இருநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் - உண்மையிலேயே அந்த நான்கு வாயுக்களும் காற்றில் கலந்திருந்தன என்பது வெறும் யூகமாக இருக்கலாமே ஒழிய - அவை உண்மையிலேயே அப்படித்தான் இருந்தன என்று அறுதியிட்டுச் சொல்ல இயலாது என்று அடித்துச் சொல்கிற விஞ்ஞானிகள் ஒரு புறம்.


உயிரற்ற பொருட்களிலிருந்;து வேறு உயிரற்ற பொருட்களைத் தான் உருவாக்கிட முடியுமே தவிர உயிரற்ற பொருட்களிலிருந்து உயிருள்ள பொருட்களை உருவாக்கிடல் முடியாது என்று உரத்துக் குரல் கொடுக்கும் விஞ்ஞானிகள் ஒரு புறம்.


இன்றைய இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் அதி நவீன ஆய்வுக்கூடங்களில் வைத்துக் கூட உயிருள்ள ஒரு செல்லை உருவாக்கிட இயலவில்லையே என்று வியந்து நிற்கின்ற விஞ்ஞானிகள் ஒரு புறம்.


தற்செயலாக ஒரு செல் உருவாவது என்பது இருக்கட்டும். ஒரே ஒரு செல்லின் ஒரே ஒரு சிறு பகுதியாக விளங்குகின்ற ஒரு புரொட்டீன் மூலக்கூறு மட்டும் கூட தற்செயலாக உருவாதல் சாத்தியமே இல்லை என்று கணக்குப் போட்டுச் சொல்கின்ற விஞ்ஞானிகள் இன்னொரு புறம்.


இவை எல்லாவற்றையும் மீறித்தான் உயிர் மலர்ச்சிக் கோட்பாடு நிரூபிக்கப்பட்ட ஒரு விஞ்ஞான உண்மை போல் போதிக்கப் படுகிறது. இது வேதனையளிக்கப்கூடியது.


விஞ்ஞான உலகத்துக்குள்ளேயே பல எதிர்ப்புகளைச் சந்திக்க இயலாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது இந்த ' எல்லாமே தற்செயல்' கோட்பாடு. ஏனினும் அதனை இன்றும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உள்நோக்கம் ஒன்று இருந்திட நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது. நமது கவலை எல்லாம் விஞ்ஞானம் என்ற போர்வைக்குள்ளே ஒளிந்து கொண்டு வலம் வருகின்ற இக்கோட்பாட்டை கண்களை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்கின்ற நம்மவர்களைப் பற்றித்தான்.


தற்செயலாக புரோட்டீன் உருவாகுமா?


எல்லா உயிரினங்களிலும் காணப்படுகின்ற, மிகவும் சிக்கலானதொரு அமைப்பைக் கொண்டதொரு மூலக்கூறு தான் புரொட்டீன். பல்வேறு வகையான அமினோ அமிலங்களை ஒரு நூலில் மணி கோர்ப்பது போல் கோர்க்கப்பட்ட ஒரு சங்கிலி போன்ற அமைப்பைக் கொண்டது தான் புரொட்டீன் மூலக்கூறுகள். புரொட்டீன் மூலக்கூறுகளில் சிறியவையும் உண்டு. பெரியவையும் உண்டு.


நடுத்தரமான புரொட்டீன் மூலக்கூறு ஒன்றில் 288 அமினோ அமிலங்கள் இடம் பெற்றுள்ளன. அமினோ அமிலங்களில் சுமார் இருபது வகைகள் உண்டு. இந்த இருபது வகைகளில் இருந்தும் - அந்த சங்கிலித் தொடரின் ஒவ்வொரு 'மணிக்கும்' ஏதாவது ஒரு அமினோ அமிலம் வீதம் மொத்தம் 288 மூலக்கூறுகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.


இவ்வாறு 288 அமினோ அமிலங்கள் கொண்ட வௌ;வேறு புரொட்டீன் சங்கிலித் தொடர்களை கோடிக்கணக்கான விதங்களில் அமைத்திட இயலும் என்றாலும் (கணக்குப் போட்டுச் சொல்வதென்றால் எண் 1-க்குப் பக்கத்தில் 300 சைபர்களைப் போட்டுக் கொள்ளுங்கள்) - அவற்றுள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அமைகின்ற ஒரே ஒரு இணைப்பு மட்டுமெ - ஒரு செல்லுக்குத் தேவையான புரொட்டீனாக உருவாகிட உதவும். மற்ற அனைத்துச் சங்கிலித் தொடர்களும் எதற்கும் பயனற்றவை. உயிரினத்திற்கே ஆபத்தானவை! தற்செயலாக அப்படிப்பட்ட ஒரே ஒரு இணைப்பு உருவாதல் சாத்தியம் தானா?


இதில் இன்னொரு வேடிக்கை இருக்கிறது. நாம் மேலே சொன்ன அமினோ அமிலம் ஒவ்வொன்றும் இரண்டிரண்டு வடிவங்களி;ல் கிடைக்கின்றன. நமக்கு வலக்கரமும் இடக்கரமும் அமைந்திருப்பது போலவே அமினோ அமிலங்களிலும் வலக்கரம் உடையதும் உண்டு. இடக்கரம் உடையதும் உண்டு. இரண்டு வடிவங்களும் இயற்கையில் சம அளவில் கிடைக்கவும் செய்கின்றன. இரண்டு வடிவங்களும் ஒன்றுடன் ஒன்று இணைவதிலும் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனாலும் நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்றிடும் செய்தி என்ன தெரியுமா?


உயிரினங்களில் காணப்படுகின்ற எல்லா புரொட்டீன்களுமே இடக்கரம் கொண்ட அமினோ அமிலங்களை வைத்து மட்டுமே உருவாக்கப் படுகின்றன. மருந்துக்கென்று ஒரே ஒரு வலக்கரம் கொண்ட அமினோ அமிலம் கூட அங்கே காணப்படுவதில்லை! அப்படி இருந்து விட்டால் அந்தப் புரொட்டீனால் எந்தப் பயனும்இல்லை! ஐயா, இது தற்செயலாக நடைபெற இயலுமா?


மற்றொரு வேடிக்கை என்ன தெரியுமா? இரண்டு அமினோ அமிலங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் படும்போது அவை இரண்டு விதங்களில் இணைய முடியும் என்றாலும் சிறப்பானதொரு இணைப்பு முறை ஒன்று இருக்கிறது. அதற்கு பெப்டைடு இணைப்பு (peptide bond) என்று பெயர். புரொட்டீன் மூலக்கூறுகள் முழுவதிலும் இந்த சிறப்பான பெப்டைடு இணைப்பு மட்டுமே நடைபெறுகிறது. இதுவும் தற்செயல் தானா?


ஓரே ஒரு புரொட்டீனின் கதை தான் இவ்வளவும். மனித உடலில் உள்ள ஒரே ஒரு செல்லில் மட்டும் சுமார் பத்து லட்சம் புரொட்டீன் மூலக்கூறுகள் உள்ளன. இப்போது சொல்லுங்கள் - தற்செயலாக ஒரு செல் உருவாதல் சாத்தியம் தானா?


மாணவன் ஒருவன் பள்ளியிலிருந்து திரும்புகிறான். வீட்டில் நுழைந்ததும் நுழையாததுமாக நூல்களை பையிலிருந்து அப்படியே எடுத்து அலமாரியில் அடுக்குகிறான். தினமும் இது தான் கதை. ஆனால் என்ன வியப்பு? அவனுடைய நூல்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வரிசையில்தான் எப்போதுமே அமைகின்றன - என்றால் ஏற்பீர்களா? இது நாம் சொல்லும் உதாரணம். சில விஞ்ஞானிகள் தருகின்ற எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போமா?


இரும்புத் தாதுப்பொருளும், கரியும் தற்செயலாக ஒன்று சேர்ந்து, வெப்பம் சேர்த்துக் கொண்டு எஃகு இரும்பாக மாறி விட்டதாம். மாறி விட்ட அந்த எஃகு இரும்பு தாமாகவே ஒன்று சேர்ந்து இறுதியில் - பாரிஸ் நகரத்தில் உள்ள ஈஃபில் டவரை உருவாக்கிக் கொண்டதாம். ஏற்பீர்களா இதனை? - கேட்பவர் புகழ் பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானி மாரிஸ் புகைல்.


'அச்சகம் ஒன்றிலிருந்த எல்லா எழுத்துகளும் கன்னா பின்னாவென்று ஒன்று கோர்த்து வைக்கப்பட்டன. அதனை அச்சு இயந்திரம் ஒன்று அச்சடித்துத் தந்த போது நாமறிந்த இனிய பாடலொன்று அழகாக அச்சாகி இருந்ததாம். நம்புவீர்களா இதனை?' - கேட்பவர் ஒப்பாரின் (Oparine) என்ற விஞ்ஞானி.


'குரங்கு ஒன்று தட்டச்சு இயந்திரம் ஒன்றின் முன்பு அமர்ந்து கொண்டது. அது தனது விருப்பம் போல ஒவ்வொரு எழுத்தாக அடித்துக் கொண்டே வந்ததாம். இறுதியில் பார்த்தால் 'மனித இனத்தின் வரலாறு' ஒன்றை அழகாக வடித்துத் தந்திருந்ததாம் அந்தக் குரங்கு. ஏற்றுக் கொள்வோமா இதனை?' கேட்பவர் டாக்டர் அலி டெமிர்ஸாய் என்ற விஞ்ஞானி!


ஏன் சில விஞ்ஞானிகள் மட்டும் இறைவனை ஏற்க மறுக்கிறார்கள்?


இரண்டாயிரம் கோடி ஒளி ஆண்டு தூரங்களைக் கடந்து விரிவடைந்து கொண்டிருக்கும் பென்னம் பெரிய நமது பேரண்டமாக இருந்தாலும் சரி ஒரு சில மைக்ரான் அளவுக்குள்ளேயே பொதித்து வைக்கப் பட்டுள்ள சின்னஞ்சிறிய உயிர் செல்லாக இருந்தாலும் சரி - இவை அனைத்தும் - தற்செயலாக உருவாகி நிலைபெற்று இயங்கிக் கொண்டிருத்தல் சாத்தியமே இல்லை எனும்போது - இறைவன் ஒருவன் தான் திட்டமிட்டு இவற்றை உருவாகியிருக்க வேண்டும் என்று நாம் சொல்லலாம். அப்படியானால் அறிவியல் அறிஞர்கள் அனைவருமே இக்கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே? ஏன் சில விஞ்ஞானிகள் மட்டும் இறைவனை ஏற்க மறுக்கிறார்கள்?


நாம் முன்னர் குறிப்பிட்ட டாக்டர் அலி டெமிர்சாய் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். அது என்ன என்று பார்ப்போம்.


இவர் தனது நூல் ஒன்றில் எழுதுகிறார்: ''சைட்டோகுரோம்-சி'' என்றொரு என்ஸைம். இது தற்செயலாக உருவாவதற்கான சாத்தியக் கூறு கிட்டத்தட்ட பூஜ்யமே. எனவே நமது கற்பனைக்கெட்டாத ஒரு ஆற்றல் அல்லது சக்தி (Meta Physical Power) ஒன்றே இதனை உருவாக்குவதில் தமது பங்கை ஆற்றி இருக்க வேண்டும். எனினும் அப்படிப்பட்ட நமது கற்பனைக்கெட்டாத ஒரு சக்தியை ஏற்றுக் கொள்வது என்பது விஞ்ஞானத்தின் நோக்கங்களுக்குப் பொருந்தக் கூடியதல்ல என்பதாலேயே நாம் 'தற்செயல்' கோட்பாட்டின் பக்கம் திரும்பிட வேண்டியுள்ளது. எனினும் அந்தக் குறிப்பிட்ட என்ஸைம் தற்செயலாக உருவாவதற்கு எந்த அளவுக்கு சாத்தியக்கூறு உள்ளதெனில் குரங்கு மனித வரலாற்றை வடித்துத் தருகின்ற அதே அளவுக்குத் தான்.''


முரண்பாட்டைக் கவனித்தீர்களா?


உண்மையை உணர்த்துவது தான் விஞ்ஞானத்தின் நோக்கம் என்று நாம் இது வரை நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இறைவனை மறுப்பது தான் விஞ்ஞானத்தின் நோக்கம் என்று அலி டெமிர்சாய் போன்றவர்கள் நமக்குச் சொல்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?


விஞ்ஞானிகளில் ஒரு பிரிவினர் இறைவனை மறுப்பது என்பது காலாகாலமாக இருந்து வந்துள்ளது என்று எண்ணிட வேண்டாம். இந்த நிலை எல்லாம் கடந்த இரு நூறு ஆண்டுகளாக மட்டும் தான். அதற்கு முன்னரோ விஞ்ஞானம் மனிதனை - இறை நம்பிக்கையை நோக்கி இட்டுச் சென்றிடும் சாதனமாகவே திகழ்ந்து வந்துள்ளது.


இப்பரபஞ்சம் என்பது படைப்பாளன் ஒருவனால் படைக்கப் பட்டதே என்று ஒத்துக் கொள்கின்ற விஞ்ஞானிகள் பலர்:


- நவீன வேதியியலின் தந்தை எனப் போற்றப்படும் ராபர்ட் பாயில்


- உலகின் மிகச் சிறந்த இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் ஃபாரடே


- மரபணு விஞ்ஞானத்தின் தந்தை என்று போற்றப்படும் கிரிகோரி மெண்டல். இவர் டார்வினின் உயிர் மலர்ச்சிக் கோட்பாட்டை மதிப்பிழக்கச் செய்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.


- மிகச் சிறந்த நுண்ணுயிர் விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர். டார்வினின் கொள்கைக்கெதிராகப் போர்ப் பிரகடனம் செய்தவர்.


- அணுக் கொள்கை விஞ்ஞானத்தின் தந்தை என்று புகழப்படும் ஜான் டால்ட்டன்.


பட்டியல் நீள்கிறது.


இன்று பல முனைகளிலும் தன்னைத் தற்காத்துக் கொள்ள இயலாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது உயிர் மலர்ச்சிக் கோட்பாடு. அதனை சற்று ஓரம் கட்டி வைத்து விட்டு நேர்மை உள்ளம் கொண்ட விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா?


நுண்-உயிரியல் (Micro Biology) துறையில் பிரபலமான விஞ்ஞானிகள் பலர் ஒரு மில்லி மீட்டரை விட மிகச் சிறிய அறை ஒன்றிலா இவ்வளவு அமைப்புகளும் இவ்வளவு இயக்கங்களும் என்று வியந்து போய் அற்புதமான இந்த செல்கள் உருவாவதன் பின்னணியில் நிச்சயமாக படைப்பாளன் ஒருவனின் அறிவுப் பூர்வமான திட்டம் ஒன்று இருந்தேயாக வேண்டும் என்று ஓங்கி ஒலிக்கிறார்கள்.


அவர்களுள் மைக்கேல் ஜே. பீஹே என்ற விஞ்ஞானி சிறப்பிற்குரியவர். அவர் சொல்கிறார்: 'ஒரு செல்லுக்குள் இருப்பது என்ன நடப்பது என்ன என்பது குறித்து எடுக்கப் பட்ட எல்லா ஆய்வுகளின் முடிவுகளுமே உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் பேருண்மை தான் ''அறிவுப் பூர்வமான திட்டம்'' (Intelligent Design) என்பது. குழப்பமோ சந்தேகமோ அற்ற இண்மை இது. விஞ்ஞான உலகின் வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த முடிவுகள் மிக மிக முக்கிமானவை. இந்த சாதனையை அறிவியல் உலகம் உரத்துக் கொண்டாடியிருந்திருக்க வேண்டும்.


'ஆனால் எந்தக் கொண்டாட்டத்தையும் காணோம். மாறாக மயான அமைதி ஒன்று நிலவுகிறது. தாங்களே கண்டுபிடித்து விட்ட உண்மைக்கு முன்னால் தாங்களே தலை குனிந்து நிற்கிறார்கள். பொது மேடைகளில் இது குறித்து வெளிப்படையாகப் பேசிடத் தயங்குகிறார்கள். தனித்து உரையாடுகையில் உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள். ஏனிந்த நிலை தெரியுமா? 'அறிவுப் பூர்வமான திட்டம்' என்பதை ஏற்பதன் மறு பக்கம் இறைவனை ஏற்பது தான்.'


இந்த இடத்தில் திருக்குர்ஆனின் கருத்துக்கள் சிலவற்றை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் இறைவனின் பண்புப் பெயர்களில் ஒன்று 'அல்-பாரி' (Al Baari) என்பதாம். இதன் பொருள் - திட்டமிடப்பட்டு தீர்மானிக்கப்பட்ட ஒன்றைத் திட்டமிட்ட படியே படைத்துத் தருபவன் - என்பது ஆகும். இந்தத் திட்டமிடுதலைத் தானே ஐயா விஞ்ஞானிகள் என்று குறிப்பிடுகிறார்கள்!


திருக்குர்ஆனின் இன்னொரு வசனத்தில் இறைவன் இவ்வாறு குறிப்பிடுகிறான்:


'அதி விரைவில் நாம் இவர்களுக்கு நம்முடைய சான்றுகளை அனைத்துத் திசைகளிலும் அவர்களுக்குள்ளேயும் காண்பித்துக் கொடுப்போம் - இந்தக் குர்ஆன் சத்தியமானது எனும் உண்மை இவர்களுக்குத் தெளிவாகி விடும் வரையில்!' (41: 53)


'நம்முடைய சான்றுகளை' - 'அவர்களுக்குள்ளேயும்' - 'காண்பித்துக் கொடுப்போம்' - இந்தச் சொற்றொடர்களை சற்றே ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். இந்த இறை வசனத்திற்கும் விஞ்ஞானிகள் சொல்கின்ற 'அறிவுப் பூர்வமான திட்டத்திற்கும்' உள்ள தொடர்பு புரியும்.


***


எங்கே நிம்மதி? 


நான் பிறந்து விட்டேன்

என் விருப்பப்படி அல்ல!


நான் எப்போது இறப்பேன்?

அதுவும் என் கையில் இல்லை!

ஐம்பது ஆண்டுகளா? அறுபது ஆண்டுகளா?

எனக்குத் தெரியாது!


இந்த வாழ்க்கையை எனக்கு

யார் தந்தது?

இறைவன் தந்தது தான் இந்த வாழ்க்கை

என்கிறார்கள் சிலர் -

கடவுளே இல்லை என்கின்றனரே வேறு சிலர்!

இதில் எது உண்மை? எதுபொய்?


சரி! இறைவன் தான் எனக்கு

வாழ்வைத் தந்தான் என்றால்

யார் அந்த இறைவன்?

அவன் எப்படிப் பட்டவன்?

ஏன் என்னைப் படைத்தான்?

என்னிடம் அவன் எதனை விரும்புகிறான்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம்

எனக்கு யார் பதில் தருவார்கள்?

'நான் சொல்கிறேன் தக்க பதில்களை' -

என்று ஆளுக்கு ஒன்று அல்லவா சொல்கிறார்கள்!

ஏன் அவர்களின் பதில்கள்

ஒரே மாதிரியாக அமைந்திடவில்லை?

கிடைக்கின்ற செய்திகள்

ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றனவே

இவற்றில் எது சரி? எது தவறு?


இறைவன் இல்லை என்றே வைத்துக் கொள்வோம் -

அப்படியானால் இந்த வானமும் பூமியும்

எப்படி வந்தன?

தற்செயலாக நடந்து விட்ட

விண்வெளி விபத்து தான் (Cosmic Accident)

இந்த வானமும் பூமியும்

என்கிறார்கள் சில நவீன கால விஞ்ஞானிகள்!

கணக்கிடப் பட்டது

போன்றதொரு தூரத்தில் கதிரவன்!

அதனால் நமக்குப் போதுமான

ஒளியும் வெப்பமும்! தற்செயலா?

தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது பூமி.

அதனால் நமக்கு இரவும் பகலும்!

தற்செயல் தானா?

சூரிய மண்டலத்தின்

ஒன்பது கோள்களும் அதனதன் பாதையில்

ஆண்டாண்டு காலமாகச்

சுழன்றோடிக் கொண்டிருப்பதும்

தற்செயலாகத் தானா?


காற்றில் போதுமான அளவுக்கு மட்டும்

பிராண வாயு - தற்செயல் தானா?

நாம் வெளியிடுகின்ற கரியமில வாயுவைத்

தாவரங்கள் எடுத்துக் கொள்கிறதாம்.

தற்செயலா?

அதெல்லாம் இருக்கட்டும்.

நம்மையே - நமது உடலையே கவனிப்போம்

நமது மகத்தான மூளை

தற்செயலாக உருவானது தானா?


நமது கண்கள் நமது இதயம்

நமது இன்ன பிற உறுப்புகள அனைத்தும்

சீராக அமைந்து சிறப்பாக

செயல்படுவதெல்லாம் தற்செயலாகத் தானா?

ஏற்க முடியவில்லையே!


சரி! நமது வாழ்க்கை கூட

தற்செயலாக நமக்குக்

கிடைத்திட்ட ஒரு வாய்ப்பு

என்றே வைத்துக் கொள்வோம்.

அப்படியானால் நான்

எப்படி வாழ்ந்திட வேண்டும்?

எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள் மனிதா!

எதை வேண்டுமானாலும் ஆண்டு

அனுபவித்துக்கொள்! - என்கிறார்கள் சிலர்.

ஆனால் என்னைச் சுற்றியிருப்பவர்களோ

நான் நேர்மையாகத்தான்

வாழ்ந்திட வேண்டும் என்கிறார்களே!

ஏன் நான் நல்லவனாக வாழ்ந்திட வேண்டும்?

நான் கெட்டவனாக வாழ்ந்திட்டால்

எனக்கு என்ன நேர்ந்து விடும்?

எல்லாரது கணக்கையும் முடித்திடுகின்ற

மரணம் என்பது

எல்லார்க்கும் பொதுவானது தானே!

ஆக - எனது வாழ்க்கை

எப்படி வேண்டுமானாலும்

இருந்து விட்டுப் போகட்டுமே!

உனக்கு 'மனசாட்சி' என்ற ஒன்று

இருக்கிறதல்லவா என்கிறார்கள் அவர்கள்!


ஆம்! இருக்கிறது தான்!

நான் ஒரு சில கூடாச் செயல்களைச்

செய்ய முனைந்துடும்போது

'டேய்! இது தவறு! இதனைச் செய்யாதே!'

என்று எனக்குள் ஒரு குரல்

ஒலிக்கத் தான் செய்கிறது!

ஆனால் அதே நேரத்தில்

'எவன் என்னைப் பார்க்கப் போகிறான்?'

'எவன் தான் இதனைச் செய்யவில்லை!'

என்று இன்னொரு குரலும்

எனக்குள் எழுகிறதே!

எதற்கு நான் கட்டுப் படுவது?


இவ்வாறு கேள்விக் கணைகளைத்

தொடர்ச்சியாகத் தொடுப்பது

எங்கோ, ஏதோ ஒரு மூலையில்

அமர்ந்து கொண்டு

வாழ்க்கையில் விரக்தி அடைந்து போய்விட்ட

ஒருவரின் அவலக் குரல் அன்று!


மாறாக - உண்மையை, யதார்த்ததினைக்

கண்டறியத் துடித்திடும்

உயிர்த் துடிப்புள்ள, அறிவுத் தாகம் கொண்ட

ஒவ்வொருவரிடத்திலும்

இந்தக் கேள்விகளும்

இது போன்ற கேள்விகளும்

இருக்கத் தான் செய்கின்றன!


இந்தக் கேள்விகள் எல்லாமே

நியாயமான கேள்விகள் தாம்!

தெளிவான பதில்களை வேண்டி நிற்கும்

அடிப்படையான கேள்விகள் தாம்!


****


மனித வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?


சிறு துளியாகக் கருவறையில்

தனது பயணத்தைக் துவக்கிடும் ஒரு சிசு!


சிறிது சிறிதாக வளர்ந்து பெரிதாகி

இறப்பின் விளிம்பிற்குத் தாய் சென்றிட்ட பின்பே அந்த சிசுவின் பிறப்பு!


அழுகையைத் தவிர அதற்கு வேறென்ன தெரியும்?

பெற்றவர் பாசத்தை அள்ளிப் பொழிந்திட

தத்தித் தவழ்ந்து தடுமாறி எழுந்து நடை பயின்று

மழலை மொழி பேசி மகிழ்வித்து

சிறுவனாகி துள்ளிக் குதித்து ஓடி விளையாடி.....


இது ஏன்? அது எப்படி? – என்று கேள்விகள் கேட்டு

படிக்கத் தொடங்கி நண்பர் குழாம் அமைத்து வளர்ந்து வாலிபனாகி

வாழ்க்கையைப் புரிந்து கொண்டு அல்லது புரியாமலேயே

எப்படியோ பொருள் தேடி மணம் முடித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து

குடும்பம் அமைத்து குழந்தைகள் பெற்று

அவற்றையும் வளர்த்து ஆளாக்கி


கொஞ்சம் சொத்து சேர்த்து வைத்து விட்டு

வயதாகி நோயில் வீழ்ந்து அல்லது இடையிலேயே

திடுமென மரணத்தைச் சந்திக்கின்ற

மனித வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?


விண்ணிலே வலம் வருகின்ற எண்ணிலா விண் மீன்களுக்கிடையில்

எந்தப் பிடிப்பும் இன்றி இந்த பூமித் துண்டு சுற்றிச் சுழன்று கொண்டிருப்பது

இங்கே நாம் கொஞ்ச காலம் தங்கி இருந்து

விளையாடி விட்டுப் போவதற்குத் தானா?


இயற்கைப் பெருவெளியின் அத்தனை இயக்கங்களுக்கும்

அர்த்தம் இவ்வளவு தானா? சொல்லுங்கள்?


‘நாம் உங்களை வீணாகவே படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படவே மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா, என்ன?’ (திருக் குர்ஆன் 23: 115)

@@@


Comments