சமூகவியல் சுன்னா!

 


பொதுவாக சுன்னத் எனும் சொல்லை  – “வழிமுறை” - என்று மொழிபெயர்க்கலாம்.  

ஆங்கிலத்தில் இச்சொல் இவ்வாறு விளக்கப்படுகிறது: 

Sunnah means a set course, or a well-established route, or a trajectory. The plural is “sunan”. In some usages of the word “sunnah” it would either mean “a routine” or “a pattern”.

ஆனால் சுன்னத் எனும் சொல் திருமறையின் மிக முக்கியமான கருத்தாக்கங்களுள் (concepts) ஒன்றாகும்! 

எனவே இச்சொல் திருமறையில் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது (usage) என்பதைப் பார்த்திட வேண்டியது மிக மிக அவசியம்! 


எனவே திருமறையில் சுன்னத் எனும் இச்சொல் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சற்று ஆழ்ந்து கவனிப்போம். 


**

சுன்னத் எனும் திருமறைச் சொல் 13 இடங்களிலும், அதன் பன்மை வடிவமாகிய சுனன் என்ற சொல் இரண்டு தடவையும், ஒரு சொற்றொடராக சுன்னதினா (நமது வழிமுறை) என்பது   ஒரு தடவையும் - சேர்த்து மொத்தம் 16 தடவைகள் திருமறையில் இடம் பெற்றுள்ளன.


இப்போது திருமறை வசனங்களுக்குச் செல்வோம்:


சுன்னத் எனும் சொல் இடம் பெற்றிருக்கும் 13 இடங்கள்: 


8:38 15:13 17:77 18:55 33:38


33:62 (2 தடவைகள்) 35:43 (3 தடவைகள்)


40:85 48:23 (2 தடவைகள்)


சுனன் என்ற சொல் இடம் பெற்றிருக்கும் 2 இடங்கள்: 

3:137 4:26


சுன்னதினா (நமது வழிமுறை) எனும் சொற்றொடர் இடம் பெற்றிருக்கும் ஒரே இறை வசனம்: 

17:77

***

ஒவ்வொரு வசனமாகப் பார்ப்போம்: 


8:38

------

இவ்வசனத்தில்  வருகின்ற - "சுன்னதுல் அவ்வலீன்" - என்பதனை முன் சென்றவர்களுக்கான வழி என்று மொழி பெயர்க்கலாம்.  


நிராகரிப்போருக்கு நீர் கூறும்: இனியேனும் அவர்கள் விலகிக் கொள்வார்களானால், முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேறி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.)


மேலும் (15:13 மற்றும் 18:55) ஆகிய இரண்டு வசனங்களிலும் இதே வடிவத்தை நாம் காண முடியும். 


15:13

-------

அவர்கள் இ(வ் வேதத்)தின் மீது ஈமான் கொள்ள மாட்டார்கள்; அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் இந்நடை முறையும் (இறுதியில் அவர்கள் அழிவும்) நிகழ்ந்தே வந்துள்ளன.


18:55

-------

மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்பிக்கை கொள்வதையும், தங்கள் இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுவதையும் தடை செய்வதெல்லாம், முன் சென்றவர்களுக்கு நேர்ந்தது இவர்களுக்கும் நேர்தல் அல்லது இவர்களுக்கு எதிரிலேயே (நம்முடைய) வேதனை வருதல் ஆகியவை தவிர வேறில்லை.

**

17:77

-------

இவ்வசனத்தில் - "சுன்னத மன் கத் அர்ஸல்னா" - என்று வருகிறது. அதனை நாம் அனுப்பிய நம் தூதர்களைப் பொறுத்தும் இது வழிமுறையாக இருந்து வந்தது - என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 


திடமாக, உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம் தூதர்களைப் பொறுத்தும் இது வழிமுறையாக இருந்து வந்தது; நம்முடைய (இவ்)வழிமுறையில் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.  (17:77)

இதே வசனத்திலேயே - "சுன்னதினா"- என்ற சொல்லும் வருவதை கவனிக்க. இதன் பொருள் எமது வழிமுறை என்று சொல்லலாம். 

**

அடுத்து வரும் ஒன்பது இறை வசனங்களிலும் - "சுன்னதல்லாஹி" என்ற வடிவம் காணப்படுகிறது. இதனை "அல்லாஹ்வின் வழிமுறை" என்று மொழிபெயர்க்கலாம். 


33:38

--------

நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை; இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.


33:62 (2 தடவைகள்)

---------------------

அல்லாஹ் ஏற்படுத்திய வழி - இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுவே தான்; அல்லாஹ்வின் (அவ்)வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.



35:43 (3 தடவைகள்)

-------------------

(அன்றியும்,) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகளைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச் சூழ்ச்சி செய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது; இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனை பெற்ற) வழியைத் தான் இவர்களும் எதிர் பார்க்கின்றனரா? அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்; அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.


40:85

-------

ஆயினும், நம் (கட்டளையால் உண்டான) வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (இதுவே) அல்லாஹ்வுடைய வழியாகும்; அவனுடைய அடியார்களுக்கு (முன்னரும் இவ்வாறே) நிகழ்ந்திருக்கின்றது. ஆதலால், அந்நேரத்தில் காஃபிர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்.


48:23 (2 தடவைகள்)

--------------------

இவ்வாறு செய்வதே அல்லாஹ்வுடைய ஸுன்னத்து (நடைமுறை) ஆகும், இதற்கு முன்பும் (இவ்வாறு) நடந்திருக்கிறது - ஆகவே அல்லாஹ்வுடைய ஸுன்னத்தில் - (நடைமுறையில்) நீர் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்.


**

அடுத்து வருகின்ற இரண்டு திருமறை வசனங்களிலும் - சுன்னத் என்பதன் பன்மை வடிவமான சுனன் என்ற சொல் இடம்பெற்றுள்ளதை கவனியுங்கள். அதனை "வழிமுறைகள்" என்று மொழி பெயர்க்கப் பட்டிருப்பதையும் கவனிக்க. 


3:137

-------

உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன; ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள்.


4:26

------

அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்


***


இவ்வாறு திருமறையில் இச்சொல் இடம் பெற்றிருக்கும் அனைத்து வசனங்களையும் சேர்த்துப் பார்க்கும்போது - சுன்னத் என்பதற்கு வழிமுறை என்ற மொழிபெயர்ப்பு பொருத்தமாக இருப்பதை நாம் பார்க்க முடியும். 


ஆனாலும், நாம் இன்னும் சற்று ஆழமாக இச்சொல்லை ஆய்வு செய்திட வேண்டியுள்ளது. அதாவது மேற்கண்ட இறை வசனங்களின் பின்னணியை நாம் ஆய்வு செய்திடும்போது, இறைவனின் சுன்னத் என்பது (நன்றாக கவனியுங்கள்!) மனிதர்களின் சமூக வாழ்வில் (social life) -  இறைவன் கடைபிடிக்கின்ற வழிமுறைகளையே சுன்னதல்லாஹ் என்ற சொற்றொடரின் மூலம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறான் இறைவன் என்பது மிகத் தெளிவாகிறது.


ஒரே ஒரு இறை வசனத்தை மீண்டும் இங்கே எடுத்துக் கொள்வோம். 

 

திடமாக, உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம் தூதர்களைப் பொறுத்தும் இது வழிமுறையாக இருந்து வந்தது; நம்முடைய (இவ்)வழிமுறையில் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.  (17:77)


ஆனால் இவ்வசனத்துக்கு முன்னால் உள்ள இறை வசனத்தைப் படியுங்கள்: 


(நபியே!) உம்மை (உம்முடைய) பூமியிலிருந்து அடி பெயரச்செய்து, அதை விட்டும் உம்மை வெளியேற்றிவிட முனைகிறார்கள்; ஆனால் அவர்களோ உமக்குப்பின்னர் சொற்ப நாட்களேயன்றி (அங்கு) தங்கியிருக்க மாட்டார்கள்.(17:76)


அதாவது - இறைத்தூதர் ஒருவரை அந்த சமூக மக்கள் தங்கள் ஊரிலிருந்து வெளியேற்றி விட்டார்கள் என்றால் அதற்குப் பின்னர் அந்தச் சமூகம் அந்த ஊரில் சொற்ப காலமே அன்றி தங்கியிருக்க முடியாது என்பது தான் இறைவனின் சுன்னத் ஆகும் என்றும், "நம்முடைய இவ்வழிமுறையில் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்” என்றும் எச்சரிக்கிறான் இறைவன்! 


**

எனவே இது வரை நாம் பார்த்த வசனங்களிலிருந்து - நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கருத்து என்னவெனில் -  சுன்னத் என்பதன் முதன்மையான பொருள் - ஒருவர் ஒரு சமூகத்தைக் கையாள்கின்ற நடைமுறை என்பதே ஆகும்.  


**

அடுத்து - இப்போது முஹம்மது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டிச் சென்ற வழிமுறையான சுன்னத்தை சற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.  


நபியவர்களின் சுன்னத் என்பதற்கு என்ன விளக்கம் தரப்படுகிறது? 


சுன்னத் என்பது நபியவர்களின் - சொல், செயல், அங்கீகாரம் - என்றே நாம் விளங்கி வைத்திருக்கின்றோம். ஆனால் - நபியவர்களின் சுன்னத் என்பதற்கு  அவர்களின் சொல் - செயல் - அங்கீகாரம் - என்று பொத்தம் பொதுவான ஒரு வரைவிலக்கணத்தை - நாம் கொடுத்திடும்போது -  நபியவர்களின் சமூகம் சார்ந்த நடைமுறைகளை நாம் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறி விடுகிறோம் என்பதே என் கேள்வி!  அண்ணலாரின் சமூகம் சார்ந்த செயல்பாடுகளில், அண்ணலாரின் வழிமுறை - சுன்னத் – என்ன என்பதை நாம் அறிந்து புரிந்து கொண்டு அவைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்திட வேண்டியது அவசியமா இல்லையா?


**


இந்தப் பின்னணியில் நாம் கேட்க விரும்புவது என்னவெனில்... அண்ணலார் அவர்களின் சமூகம் சார்ந்த வழிமுறைகளை நாம் கற்றுக் கொண்டிருக்கின்றோமா என்பது தான்!


**

அண்ணல் நபியவர்கள் - ஸஃபா மலை மேல் ஏறி  நின்று கொண்டு - "இந்த மலைக்குன்றுக்குப் பின்னால் இருந்து கொண்டு சில குதிரை வீரர்கள் படைதிரட்டி உங்களைத் தாக்குவதற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று நான் சொன்னால் - நீங்கள் என்னை நம்புவீர்களா?" -  என்று கேட்டு விட்டு அம்மக்களுக்கு அழைப்பு கொடுத்தார்களே அதில் நாம் - நபியவர்களின் சுன்னத்தைப் பார்க்க வேண்டுமா இல்லையா?


நபித்தோழர்களில் சிலரை அபிசீனிய நாட்டுக்கு அனுப்பி வைத்தார்களே - அங்கு அந்த நபித்தோழர்கள் பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோமா? அதில் நமக்கு சுன்னத் இல்லையா? 


மதீனாவாசிகளுடன் நபியவர்கள் செய்து கொண்ட அகபா உடன்படிக்கையை நாம் ஆய்வு செய்திருக்கிறோமா? அதில் நமக்கு சுன்னத் இல்லையா? 


அவ்ஸ்களையும் கஸ்ரஜ்களையும் ஒன்று படுத்தினார்கள். முஹாஜிர்களையும் அன்சார்களையும் ஒன்று படுத்தினார்கள். சமூக ஒற்றுமை ஒன்றை சாத்தியப்படுத்திக் காட்டினார்கள். இதில் நமக்கு சுன்னத் இல்லையா?  


மதீனாவில் - யூதர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு - மக்கத்துக் குறைஷியரின் கொடுங்கோன்மையை எதிர்த்து நின்றதும் உண்டு! அதுவே பின்னர் - குறைஷியர்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு - யூதர்களின் வரம்பு மீறிய அடாவடித்தனத்துக்கு முற்றுப் புள்ளி வைத்ததும் உண்டு! இவற்றில் நமக்கு சுன்னத் இல்லையா? 


ஹுதைபிய்யாவுக்குப் பின்னரே கைபர்; கைபருக்குப் பின்னர் ஹுதைபிய்யா அன்று!! இது ஏன் என்று நாம் ஒரு கணம் சிந்தித்தோமா? இதில் நமக்கு சுன்னத்தும் படிப்பினையும் இல்லையா? 


இஸ்லாத்தை வன்மத்துடன் எதிர்த்து நின்றவர்களையெல்லாம் நபித்தோழர்களாக அண்ணலார் அரவணைத்துக் கொண்டார்களே - அதில் நமக்கு சுன்னத் இல்லையா? 


ஒப்பந்தம் செய்து கொள்வது சுன்னத்; ஒப்பந்தத்தைக் கடைசி வரைக் காப்பாற்றுவதும் சுன்னத். ஒப்பந்தத்தை மற்றவர்கள் மீறினால், உறுதியான எதிர் நடவடிக்கை ஒன்றில் இறங்கி விடுவதும் சுன்னத்! உண்டா? அல்லவா? 


சான்றுகள் நிறைய இருக்கின்றன! 


இவைகளையே நாம் சமூகவியல் சுன்னா (sociological sunnah) என்று அழைக்கிறோம்.   


ஆனால் நம்மில் பெரும்பாலோர் நபியவர்களின் சுன்னத் என்பதனை நமது தனிப்பட்ட வாழ்க்கையோடும், சமூகத்தைப் பொருத்தவரையில் மிகச் சொற்பமான அளவுக்கும் சுருக்கிக் கொண்டு விட்டோம்.   


நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் -  அண்ணலாரின் சமூக வழிமுறை குறித்த சுன்னத்துகளின் பக்கம் நம் கவனம் திரும்பிட வேண்டும் என்பது தான். இதன் மூலமாகத் தான் - இந்த 21 - ம் நூற்றாண்டில் நம்மைப் பீடித்திருக்கின்ற எல்லாவிதமான சமூகச்சிக்கல்களையும் மிகச் சிறப்பாக நாம் கையாண்டிட முடியும்! அந்தச் சிக்கல்களிலிருந்து நாம் வெளி வரவும் முடியும்! 

அல்லாஹ் மிக அறிந்தவன்!

By S A Mansoor Ali 

Comments