திருக்குர்ஆனில் வரலாற்றுச் சம்பவங்கள்



வரலாற்றுச் சம்பவங்களின் நோக்கங்கள்!   

(மகாஸிதுல் கஸஸ்)

எஸ் ஏ மன்சூர் அலி 


திருமறை திருக்குர்ஆனில் - பலவிதமான வரலாற்றுச் சம்பவங்கள் எடுத்துச் சொல்லப்படுகின்றன. எதற்காக? வரலாற்றுச் சம்பவங்களை - கதைகளைப் போல -  விவரித்துச் சொல்லி விடுவது (narrative) மட்டுமே இறைவனின் நோக்கம் அன்று!


திருமறையில் குறிப்பிட்ட ஒரு சில வரலாற்றுச் சம்பவங்களைச் சொல்லிக் காட்டுவதில் - இறைவன் பல நோக்கங்களைப் பொதித்து வைத்துள்ளான். அவைகளை மேலோட்டமாகப் பார்க்கும் போது - அவைகள் "கதைகளாக" மட்டுமே நமக்குத் தெரியும்! அவை சொல்லப்பட்ட நோக்கம் நமக்குப் புரியாது.  


இறைவன் - வரலாறுகளை நமக்குச் சொல்லிக் காட்டுவதில் என்னென்ன நோக்கங்கள் இருக்கின்றன? 


ஒவ்வொரு வரலாற்றுச் சம்பவத்திலும் - நமக்குப் பல அரிய செய்திகளை (aayaat /messages / signs ) வைத்துள்ளான் இறைவன். அல்லது ஒரு கருத்தை (concept / theme) நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைப்பதற்காக - ஒரு வரலாற்றுச் சம்பவத்தை எடுத்தாளலாம் இறைவன். அல்லது ஒரு சில படிப்பினைகளை (insights) நமக்கு உணர்த்திக் காட்டுவது அவனது நோக்கமாக இருக்கலாம்.  


(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது. (குர்ஆன் - 12:111)


மேலோட்டமாக அவைகளைப் படித்து விட்டுச் சென்று விடும்போது  - அவை சொல்ல வருகின்ற செய்திகளை, அல்லது கருத்துகளை, அல்லது படிப்பினைகளை நாம் தவற விட்டு விடுவோம். ஆனால் நம்மில் பெரும்பாலோர் அப்படித்தான் இருக்கிறோம். 


ஒரு சில சம்பவங்கள் - விவாதமாக (argument) முன் வைக்கப்படும்! ஒரு சில சம்பவங்கள் நம் உணர்வுகளைத் (feelings / emotions / empathy) தட்டி எழுப்பும். ஒரு சில சம்பவங்கள் நம்மை எச்சரிப்பதற்காக (warning) சொல்லப் பட்டிருக்கும். இன்னும் சில சம்பவங்கள் - செயலூக்கத்துக்கு (motivation) வழி வகுத்திடும்!  


ஒரே ஒரு வரலாற்றுச் சம்பவத்தை வைத்தே பல பாடங்களைக் கற்றுத் தர விரும்புகிறான் இறைவன். ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பாடங்களும் (unique individual lessons) கிடைக்கலாம். பொதுவாக - ஒவ்வொரு சமூகத்துக்கும் (sociological lessons) பல பாடங்களைக் கற்றுக் கொடுக்க விழைவான் இறைவன்! அது போல - ஒவ்வொரு காலத்துக்கும் (contemporary lessons) அரிய பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருப்பான் இறைவன். அது போலவே "இன்று" நாம் நமது பிரச்னைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை (application of guidance / contextual solutions)  நமக்குக் கற்றுக் கொடுப்பதும் இந்த வரலாற்றுச் சம்பவங்களைச் சொல்லிக் காட்டுவதன் நோக்கங்களுள் ஒன்று.  

***

ஒரு சில வரலாற்றுச் சம்பவங்களை வைத்து - தனது "தன்மைகள்" (ATTRIBUTES / SIFFAT) சிலவற்றை நமக்குப் புரிய வைத்து விடுவான் இறைவன்.  தனது அளப்பரிய ஆற்றலை (POWER / QUDRAT), தனது அறிவின் விசாலத்தை (ILM/ HIKMAT), தனது நுட்பமான செயல்பாடுகளை (SUBTLE / LUTF), தனது கருணையின் உச்சத்தை (MERCY AND COMPASSION), தனது மன்னிக்கும் மனப்பான்மையை (FORGIVING) - இவ்வாறு ஒவ்வொன்றாக அவன் தனது தன்மைகளை நமக்கு உணர்த்திக் காட்டுவதும் வரலாறுகளின் நோக்கங்களுள் ஒன்று தான்!  


இறைவன் எல்லாவற்றையும் அறிந்தவன் ('ALEEM)என்பதை பொதுவாக நாம் அறிந்தே வைத்திருக்கின்றோம்.. ஆனால் - ஒரே ஒரு வரலாற்றுச் சம்பவத்தை வைத்து - அவன் "எந்த" அளவுக்கு, நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க இயலாத அளவுக்கு - உச்சமான (INFINITE) அறிவு விசாலம் மிக்கவன் என்பதை நமக்குப் புரிய வைத்திடுவான் இறைவன்.  இந்தப் புரிதல் - நமது ஆன்மிகத் தேட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்கு வழி வகுத்திடும்!  


**

அடுத்து - ஒரு சில சம்பவங்களில் வருகின்ற ஆளுமைகளை வைத்து - அவருடைய நற்பண்புகளை (AKHLAAQ / CHARACTER) வெளிப்படுத்திக் காட்டுவதும் - வரலாறுகளைச் சொல்வதன் இன்னொரு நோக்கமாகும். அதன் மூலம் அப்படிப்பட்ட நற்குணங்களை நமக்குக் கற்றுக் கொடுப்பதுவும் இறைவனின் நோக்கமாகும்.  நபியவர்கள் - மூஸா (அலை) அவர்களிடமிருந்து பொறுமை எனும் நற்குணத்தையும், யூசுப் (அலை) அவர்களிடமிருந்து மன்னிக்கும் மனப்பான்மையையும் "வெளிப்படுத்திக் காட்டிய" (DEMONSTRATION) சீரத் சம்பவங்களை நாம் அறிந்தே வைத்திருக்கின்றோம் நாம். இன்னும் சொல்லப்போனால் - இது ஒரு மிக முக்கியமான நோக்கங்களுள் ஒன்றாகும். 


**

எந்த ஒரு "கருத்தை" நாம் நமது மனதில் உள் வாங்கி இருத்திக் கொண்டிருந்தாலும் - அதனை நாம் மிக எளிதில் மறந்து விடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு. அந்தக் கருத்தின்படி செயல்பட வேண்டிய நேரத்தில் - அது நம் நினைவுக்கு வரும் வாய்ப்பு சற்றே குறைவு தான்! ஏனெனில் மனிதன் மறதியாளன்! ஆனால் மனிதர்கள் "கதைகளை" அவ்வளவு எளிதில் மறந்து விடுவதில்லை. எனவே சொல்ல வருகின்ற கருத்துகளை - ஒரு சில வரலாற்றுச் சம்பவங்களோடு இணைத்துச் சொல்லி விட்டால் - அந்தக் கருத்து என்றும் பசுமையாகவே நமக்கு விளங்கிடும்!  இது ஒரு சரியான நினைவாற்றல் யுக்தியும் (MEMORY TECHNIQUE) ஆகும்!  குர்ஆன் கதை சொல்லும் நோக்கங்களுள் இதுவும் ஒன்று தான்! ஒரே வரலாற்றுச் சம்பவத்தைத் திரும்பவும் திரும்பவும் சொல்லப்படுவதன் நோக்கங்களுள் ஒன்று - மனிதனின் மறந்து விடும் தன்மையைக் கவனித்தே தான்! 


அல்லாஹ் மிக அறிந்தவன்!

Comments