திருக்குர்ஆனில் நபி ஹூத் (அலை) - ஓர் ஆய்வு



 திருக்குர்ஆனில் நபி ஹூத் (அலை) - ஓர் ஆய்வு

பகுதி - 1 


திருக்குர்ஆன் எடுத்தியம்புகின்ற ஒரு சில இறைத்தூதர்கள் வரலாற்றில் - நபி ஹூத் (அலை) அவர்களின் வரலாறும் ஒன்று. நபி ஹூத் (அலை) அவர்களின் வரலாறு - திருமறையின் ஒரு சில அத்தியாயங்களில் வெவ்வேறு கண்ணோட்டங்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. 


அவை பின் வருமாறு:


சூரா 7 : அல் அஃராப் (வசனங்கள் 65 - 72)


சூரா 11: அல் ஹூத் (வசனங்கள் 50 - 60)


சூரா 26: அஷ் ஷுஅரா (வசனங்கள் 123 - 140)


சூரா 25: அல் ஃபுர்கான் (வசனம் - 38)


சூரா 29: அல் அன்கபூத் (வசனம் - 38)


சூரா 41: அல் ஃபுஸ்ஸிலத் (வசனங்கள் 15-16)


சூரா 46: அல் அஹ்காஃப் (வசனங்கள் 21-26)


சூரா 51 அத் - தாரியாத் (வசனம் - 41)


சூரா 54: அல் கமர் (வசனங்கள் 18 - 21)


சூரா 69: அல் ஹாக்கா (வசனங்கள் 6 - 8)


சூரா 89: அல் ஃபஜ்ர் (வசனங்கள் 6 - 8)


**


ஒரே ஒரு முறை - மேலோட்டமாகவேணும்  - ஆத் சமூகத்தின் வரலாறு குறித்த மேற்கண்ட இறை வசனங்களைப் பார்வையிட்டு வாருங்கள். உள்ளத்தில் எழுகின்ற கேள்விகளையும், சந்தேகங்களையும் குறித்து வைத்துக் கொண்டே வாருங்கள். பதில்களை நீங்களே தேடுங்கள். உடனடி பதில்களை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து திருமறையை ஓதி வாருங்கள். இன்ஷா அல்லாஹ் பதில்களும் கிடைக்கும்; படிப்பினைகளும் கிடைக்கும்.


**


நபி மொழி ஒன்றை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்: 


அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவிக்கிறார்கள்: என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்!' என்று கூறினார்கள். அப்போது நான், '(அதை விடவும் குறைந்த நாள்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது' என்று கூறினேன். 'அப்படியானால், ஏழு நாள்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதே' என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி 5054)


**


இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பயணிக்கலாம்!


எஸ் ஏ மன்சூர் அலி


#குர்ஆன்​_சிந்தனை 


@@@


இப்படிப்பட்ட "புரிதல்" - ஒரு முழுமையான புரிதல் அன்று!

-----------------------------------------------------------------------


(திருக்குர்ஆனில் நபி ஹூத் (அலை) - ஓர் ஆய்வு)


பகுதி - 2 


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் - திருக்குர்ஆன் என்பது - தொடர்ந்து ஓதப்படவேண்டிய ஒன்று  என்பதை ஏன் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள்?   


திருக்குர்ஆனைத் தொடர்ந்து ஓதி வராமல் - அவ்வப்போது மட்டும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓதி வந்தால் / படித்து வந்தால் - திருமறை கூற வருகின்ற எந்த ஒரு செய்தி குறித்தும் தெளிவான ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கிக் கொண்டு விடவே முடியாது! மாறாக - அரைகுறையாகவும் தப்பும் தவறுமாகவே திருமறையைப் புரிந்து கொண்டு விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது!


***


நபி ஹூத் (அலை) அவர்கள் வாழ்வையே எடுத்துக் கொள்வோம். நபி ஹூத் அவர்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கின்ற பல அத்தியாயங்களையும் தொடர்ந்து படித்து வருபவர் - அந்த வரலாற்றை ஓரளவுக்கேனும் "முழுமையாகப்" புரிந்து கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. 


மாற்றமாக - உதாரணத்துக்கு - ஹூத் நபியவர்களின் வரலாற்றை - சூரா அஃராபில் (7:65-72) சொல்லப்பட்டிருக்கின்ற செய்திகளை "மட்டும்" ஒருவர் படிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருடைய புரிதல் எப்படி இருக்கும் தெரியுமா? 


1 ஆது எனும் சமூகத்துக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் - நபி ஹூத் (அலை) அவர்கள்.


2 அந்த மக்கள் அல்லாஹ் அல்லாதவற்றை - கடவுளராக வணங்கிக் கொண்டிருந்தார்கள். 


3 நபி ஹூத் (அலை) அவர்கள் - படைத்த ஏக இறைவனையே வணங்கிட வேண்டும் என்ற அழைப்பினை அவர்கள் முன் சமர்ப்பித்தார்கள். 


4 அம்மக்கள் நபி ஹூத் அவர்களைப் பொய்ப்பித்தார்கள். 


5 ஹூத் நபியவர்கள் - அந்த மக்களுக்கு - இறைவன் வழங்கியிருந்த அருட்கொடைகளை நினைவூட்டிக் காட்டி தொடர்ந்து அழைத்து வருகிறார்கள்.  இறை தண்டனை குறித்து எச்சரிக்கவும் செய்கிறார்கள். 


6 அம்மக்கள் தொடர்ந்து இறைத்தூதை மறுத்து வரவே - ஹூத் நபியவர்களையும் அவர்களைப்  பின்பற்றியவர்களையும் இரட்சித்துக் கொண்டு - அந்த ஆது சமூகத்தை அழித்து விடுகிறான் இறைவன். 


இப்படிப்பட்ட "புரிதலை" ஒரு முழுமையான புரிதல் என்று நாம் சொல்வதற்கில்லை!


ஆனால் - ஹூத் நபியவர்களைப் பற்றி வருகின்ற திருமறையின் எல்லாப் பகுதிகளையும் "தொடர்ந்து" படித்து வருபவர் - நபியவர்கள் குறித்தும், அந்த மக்கள் குறித்தும்  எப்படிப்பட்ட கண்ணோட்டத்தை தனக்குள் உருவாக்கிக் கொண்டிருப்பார் என்பதை நாம் பின்னர் பார்க்க இருக்கின்றோம்.  


இப்படிப்பட்ட முழுமையற்ற புரிதல்களால் - நமக்கு இறைவன் சொல்ல வருகின்ற பாடங்களையும் படிப்பினைகளையும் தீர்வுகளையும், கற்றுக் கொள்ள வேண்டிய நற்பண்புகளையும் - கற்றுக் கொள்ளத் தவறி விடுவோம் என்பது மட்டும் உண்மை!


இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பயணிக்கலாம்!


எஸ் ஏ மன்சூர் அலி


#குர்ஆன்​_சிந்தனை 


@@@


ஆதுக் கூட்டத்தார் - ஓர் பறவைப் பார்வை!

------------------------------------------------------


(திருக்குர்ஆனில் நபி ஹூத் (அலை) - ஓர் ஆய்வு)


பகுதி - 3 


திருமறை திருக்குர்ஆன் ஆதுக் கூட்டத்தார் பற்றியும் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இறைத்தூதர் ஹூத் நபி (அலை) அவர்கள் பற்றியும் - என்னென்ன செய்திகளை வழங்குகிறது என்பதை ஆழமாக ஆய்வு செய்திடு முன்பு - அவர்களின் வரலாறு பற்றிய - "பறவைப்பார்வை" ஒன்றைப் பார்த்து விட்டு வந்து விடுவோம். 


**


இந்த ஆதுக் கூட்டத்தார் தெற்கு அரேபியா பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் ஆவர். (29:38). அதாவது யமன் நாட்டுக்கு அருகில் உள்ள "ஹள்ரமவுத்" எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள்.  இவர்களின் காலம் அறுதியிட்டுக் கூற இயலாதாம். ஆனால் இவர்கள் நூஹ் (அலை) காலத்துக்குப் பின்னரும் - இப்ராஹிம் (அலை) அவர்கள் காலத்துக்கு முன்னரும் உள்ள காலப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கருதிட வாய்ப்பு இருக்கிறது, (திருமறை விரிவுரை நூல்கள் சிலவற்றிலிருந்து). 


அம்மக்கள் உடல் வலிமை மிக்கவர்கள்! (7:69); அல்லாஹ் அவர்களுக்கு அறிவாற்றலைக் (intelligence) குறைவற வழங்கியிருந்திருக்கிறான். (46:26);  (29:38)


வலிமை மிக்க மக்கள் செல்வங்கள் (progeny) உட்பட - அழகான பல தோட்டங்களையும், நீரூற்றுக்களையும், அபரிமிதமான கால் நடைகளையும் பெற்று வாழ்ந்திருக்கிறார்கள். (26:133 - 134)


"அஹ்காஃப்" என்றழைக்கப்படும் (sand dunes) மணற் குன்றுகளின் மீது (46:21) ஆடம்பரமான மாளிகைகள் கட்டி வாழ்ந்தவர்கள் அவர்கள். (26:129); 


தங்களின் வலிமையைப் பறை சாற்றும் பொருட்டு உயரமான இடங்களில் பெரும்பெரும் தூண்களை  (pillars) நினைவுச் சின்னங்களாகக் கட்டியெழுப்பியவர்கள்! (26:128) 


இவர்களால் கட்டியெழுப்பப்பட்ட நகரம் தான் தூண்களையுடைய "இரம்" எனப்படுவது. (89:7)


அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.(89:8)


ஆதுக்கூட்டத்தில் வலிமை மிக்க தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். (7:66); அந்தத் தலைவர்கள்  அடக்குமுறையாளர்கள் (tyrants/ oppressors); அவர்களை "ஜப்பார்"  என்ற சொல்லைக் கொண்டு வர்ணிக்கிறது திருமறை; அம்மக்கள் அந்தத் தலைவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்ததைக் கண்டிக்கிறது திருமறை (11:59); 


மக்களைக் கடுமையாகத் தண்டித்திருக்கிறார்கள் அந்தத் தலைவர்கள் (26:130)   


தற்பெருமை பிடித்தவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள்! தங்களின் உலகாதாய ஆற்றல்களில் (physical and material strength நம்பிக்கை வைத்தவர்களாக  “எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?” என்று கூவியவர்கள் அவர்கள்! (41:15)  


ஹூத் நபியவர்கள் தாம் - அரேபிய மக்களுக்காக அனுப்பப்பட்ட முதல் இறைத்தூதர் ஆவார். ஆனால் அவர்களுக்கென்று அனுப்பி வைக்கப் பெற்ற அந்த இறைத்தூதருக்கு செவி சாய்த்திடவில்லை ஆது சமூகம்!  


அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்” என்று கூறினார்கள். (7:66)


அவர்கள் தங்கள் மூதாதையர்களைப் பின்பற்றி இறைவனுக்கு இணை வைத்து வணங்கக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். (7:70)


இறைத்தூதர் ஹூத் அவர்களின் அழகிய அழைப்புப்பணியை  (11:52 / 26:125) ஏற்றுக் கொள்ளவில்லை அவர்கள். நபியவர்களின் தொடர்ந்த எச்சரிக்கைக்கு  ஏளனம் ஒன்றையே பதிலாக வழங்கிக் கொண்டிருந்த அம்மக்களை இறுதியில் "வேரோடு" அழித்து விடுகிறான் இறைவன் (54:20). அதாவது அழிந்து போன சமூகங்களுள் ஒன்றாக வைத்துப் பார்க்கப் படுகிறது ஆது சமூகம்! 


உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (89:6)


ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பாற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம்.(7:72)


இறைவன் அவர்களுக்கு வழங்கியிருந்த எல்லா இயற்கை "சக்திகளின்" (powers) மீதும் நம்பிக்கை வைத்துக் கொண்டிருந்த அந்தக் கூட்டத்தாரை -  அதே இயற்கை சக்திகளை வைத்தே  அழிக்கப்பட்டார்கள் என்பது தான் அவர்களின் வரலாறு! இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர். (69:6)


**


இதுவே குறைந்த பட்சம் - ஓரளவுக்கேனும் - ஒரு முழுமையான பார்வை என்று சொல்லிக் கொள்ள இயலும் என்கிறோம். இதுவே கூட ஒரு பறவைப் பார்வை மட்டும் தான். இறைவன் கற்றுத்தர விரும்பும் பாடங்களைப் படித்துக் கொள்ள இன்னும் நாம் ஆழமாக செல்ல வேண்டியுள்ளது! 


**


இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பயணிக்கலாம்!


எஸ் ஏ மன்சூர் அலி


#குர்ஆன்​_சிந்தனை 



@@@


பிரித்துப் பிரித்துச் சொல்லப்பட்டிருப்பது ஏன்?  

----------------------------------------------------------


(திருக்குர்ஆனில் நபி ஹூத் (அலை) - ஓர் ஆய்வு)


பகுதி -  4 


நாம் ஒரு கேள்வியைக் கேட்கலாம். இதற்கு முன்னர் நாம் - "பறவைப் பார்வை" ஒன்றைத் தொகுத்துக் காட்டியது போல - திருமறையில் இடம்பெற்றிருக்கும் எந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தையும் தொகுத்துச் சொல்லியிருக்கலாமே; ஏன் அவ்வாறு செய்யப்படவில்லை? 


மாறாக - வரலாற்றுச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஏன் பல அத்தியாயங்களில் பிரித்து பிரித்துச் சொல்லப்பட வேண்டும்? 


**


இதனை நாம் புரிந்து கொள்ள - திருக்குர்ஆனின் வடிவமைப்பு (structure) குறித்து நாம் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.


இன்று உலகெங்கிலும் நாம் ஓதி வருகின்ற குர்ஆன் என்பது இறைவனால் முழுமையாக பாதுகாக்கப்பட்ட ஒன்று என்பதை நாம் அறிந்தே வைத்திருக்கின்றோம். நம் கரங்களில் தவழ்ந்து வருகின்ற இந்தத் திருக்குர்ஆன் - 114 - அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்திருக்கின்றோம். 


திருமறையின் துவக்கத்தில் உள்ள ஒரு சில அத்தியாயங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இறை வசனங்களைக் கொண்டவை என்பதுவும், திருமறையின் இறுதிப் பகுதியில் உள்ள பல அத்தியாயங்கள் மிகச் சிறியவை என்பதுவும் - இவ்விரண்டு பகுதிகளுக்கும் இடையிலே உள்ள அத்தியாயங்கள் பல - நடுத்தரமான வசன எண்ணிக்கை கொண்ட அத்தியாயங்கள் என்பதுவும் நமக்குத் தெரிந்தது தான்.  


இந்த வடிவமைப்பு என்பது ஹள்ரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வழியே - இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களாலேயே  உறுதி செய்யப்பட்ட ஒன்று என்பதுவும் நமக்குத் தெரியும்!  


இப்போது ஒருவர் கேட்கலாம்:


மிகப்பெரிய அத்தியாயங்களை உடைத்து சிறிய அத்தியாயங்களாக ஏன் பிரித்திருக்கக் கூடாது? 


சிறிய அத்தியாயங்களையெல்லாம் ஒன்றிணைத்து அவைகளை ஒரே அத்தியாயமாக மாற்றியமைத்திட்டால் என்ன?  



அது தான் முடியாது! இன்று நாம் வைத்திருக்கின்ற திருமறை வடிவம் தான் இறைவனாலேயே பாதுகாக்கப்பட்ட வடிவமாகும். 


அப்படியானால் - இந்த வடிவமைப்பு - ஏன்? இந்த வடிவமைப்பின் மூலம் இறைவன் நமக்குச் சொல்ல வருவது என்ன? 


**


திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் - திருமறையின் கட்டுக்கோப்பான இந்த வடிவத்தை (structure) மிக ஆழமாக ஆய்வு செய்து பல நுட்பங்களை கருத்துக்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றார்கள். அவை மிக விரிவானவை. ஆனால் நாம் இங்கே ஒரு சில அம்சங்களை மட்டுமே நம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கின்றோம். 


இரண்டு விஷயங்களை மட்டும் இங்கே பார்ப்போம்:


ஒன்று: ஒவ்வொரு திருமறை அத்தியாயத்திற்கும் - "மையக் கருத்து" (central theme) என்ற ஒன்று உண்டு. 


இரண்டு: திருமறையின் ஒவ்வொரு அத்தியாயமும் - ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட "முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடுகளையும்" (major themes) தனக்குள்ளே பொதித்து வைத்துள்ளது.  


அந்தக் குறிப்பிட்ட மையக் கருத்தைச் சுற்றியே - அதில் இடம்பெற்றிருக்கின்ற இறை வசனங்கள் அனைத்தும் சுழன்று வந்து கொண்டிருக்கும். அந்த மையக்கருத்தை வலியுறுத்துவதற்காகவே - வரலாற்றுச் சம்பவங்கள் ஒன்றோ பலவோ அங்கே எடுத்தாளப் பட்டிருக்கும்!  


அதனால் தான் - ஒரே இறைத்தூதருடைய வரலாறு கூட - பல அத்தியாயங்களில் - பிரித்து பிரித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் விரிவுரையாளர்கள்!


நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கின்ற நபி ஹூத் (அலை) வாழ்க்கை வரலாறு எவ்வாறு பிரித்து பிரித்து சொல்லப்பட்டிருக்கின்றது என்பதைப் பாருங்கள்: 


ஒரு சில இடங்களை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுவோம். 


திருமறை அத்தியாயம் அல் ஃபஜ்ர் - இதில் ஆது சமூகத்தைப் பற்றி மூன்றே மூன்று வசனங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன!


ஆனால் அத்தியாயம் அஷ் - ஷுஅராவிலே பதினெட்டு வசனங்கள் இடம் பெற்றுள்ளன!


அல் கமர் அத்தியாயத்தில் நான்கு வசனங்கள் மட்டும்! 


சூரா அல்  ஃபுர்கானிலும், சூரா அல் அன்கபூத்திலும் - ஒரே ஒரு இறை வசனம் மட்டும் தான்!


**


இதனை நாம் எவ்வாறு புரிந்து கொள்ளலாம் என்றால் - சான்றுக்கு - சூரத்துல் ஃஜ்ர் எனும் அத்தியாயத்துக்கு என்று மையக் கருத்து ஒன்று உண்டு! (அது என்னவாக இருக்கலாம் என்பதைப் பிறகு பார்க்கலாம்.)

 

அந்த மையக்கருத்தை வலியுறுத்திட மூன்று வரலாற்றுச் சம்பவங்கள் இதிலே எடுத்தாளப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். அவை - 


ஆது சமூகம் குறித்து ஒரு மூன்று வசனங்கள்! 


தமூது சமூகம் பற்றி ஒரே ஒரு வசனம் மட்டும்!


ஃபிர்அவ்னைப் பற்றியும் ஒரே ஒரு வசனம்! 


அதனைத் தொடர்ந்து - இம்மூன்று சமூகங்களையும் அல்லாஹ் என்ன செய்தான் என்பதைப் "பொதுவாக"  விவரிக்கும் ஒரு மூன்று வசனங்கள் மட்டும். இம்மூன்று சமூகங்களைப் பற்றிய இதர செய்திகள் எதுவும் இங்கே இடம் பெற்றிடவில்லை!    


நாம் சிந்திக்க வேண்டாமா? 


அப்படியானால் ஏன் இந்த வடிவமைப்பு? என்ன சொல்ல வருகிறான் இறைவன்? 


அடுத்த பதிவில் - இன்ஷா அல்லாஹ் -  "அல் ஃபஜ்ர்" அத்தியாயத்தின் மையக் கருத்தும் அதில் இடம் பெற்றுள்ள வரலாற்றுச் சம்பவங்களும்...... 


எஸ் ஏ மன்சூர் அலி


#குர்ஆன்​_சிந்தனை 


@@@


"அல் ஃபஜ்ர்" அத்தியாயத்தின் மையக் கருத்தும் 

அதில் இடம் பெற்றுள்ள வரலாற்றுச் சம்பவங்களும்

-------------------------------------


(திருக்குர்ஆனில் நபி ஹூத் (அலை) - ஓர் ஆய்வு)


பகுதி - 5


 "அல் ஃபஜ்ர்" - அத்தியாயத்தின் துவக்கத்திலேயே - திடுதிப்பென்று - ஒரு சில விஷயங்களின் மீது சத்தியமிட்டு விட்டு  - ஆது சமூகம் உட்பட ஒரு மூன்று சமூகங்கள் அழிக்கப்பட்ட செய்தியை முன் வைக்கிறான் இறைவன். ஏன்? 


"எவ்வாறு" -  அந்த சமூகங்கள் மூன்றும் அழிக்கப்பட்டன என்பதைப் பற்றி எதுவும் இந்த அத்தியாயம் பேசிடவில்லை. அவை வேறு வேறு அத்தியாயங்களில் காணக் கிடைக்கின்றன!


இப்போது கேள்வி என்னவென்றால் - இந்த சமூகங்களின் மீது இறைவனுக்கு ஏன் அவ்வளவு கோபம்? 


இந்தக் கேள்விகளோடு நாம் மேலே தொடர்ந்து வாசித்தால் - இந்த அத்தியாயத்தின் மையக் கருத்து இதோ இங்கே தான் இருக்கிறது என்று பளிச்சென்று வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறது பின் வரும் இறை வசனங்கள்:  


அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை. ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.(89: 17-18)


அப்படியானால் இந்த அத்தியாயத்தின் மையக் கருத்தை  இப்படி நாம் வடிவமைத்திடலாம்! 


/// ஏழைகளின் அனாதைகளின் உரிமைகளைப் பறித்தால் - இறை தண்டனையிலிருந்து எவரும் தப்பி விட முடியாது!///


இது எமது உள்ளத்தில் தோன்றிய கருத்து மட்டுமே! இறைவனே மிக அறிந்தவன்!


**

இந்த சமூகங்கள் மூன்றும் முற்றாக அழிக்கப்படுவதற்கு வேறு எந்தக் காரணமும் இங்கே சொல்லப்படவில்லை என்பதை நன்கு கவனியுங்கள்!


அவர்கள் வல்லோன் இறைவனுக்கு இணை வைத்தார்கள் தான்! இறைத்தூதர்களை மறுத்தார்கள் தான்! ஆனால் இவை பற்றி எதுவும் சொல்லாமல் - நேரடியாக அவர்கள் - அந்த சமூக மக்களில் இருந்த பலவீனமானவர்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது பற்றி மட்டுமே இந்த சூரா பேசுவது ஏன்? 


***


இவ்வத்தியாயத்தின் பின் வரும் வசனங்களை நன்றாக உற்று கவனியுங்கள். 


ஆது கூட்டத்தாருடன் உம் இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? (89:6); (அவர்கள்) உயரமான தூண்களையுடைய இரம் எனும் நகரவாசிகள்;(89:7); 


மேலும், பள்ளத்தாக்கில் பாறைகளைக் குடைந்த ஸமூத் சமுதாயத்தாருடனும்; (89:9)


மேலும், முளைகளையுடைய (பெரும் படைகளைக் கொண்ட) ஃபிர்அவ்னுடனும் (உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?(89:10)


**


ஆதுக் கூட்டத்தாரைப் பற்றி இங்கே சொல்லும்போது - "தூண்களையுடைய" இரம் எனும் நகரவாசிகள் - என்று குறிப்பிட்டிருப்பதைக் கவனியுங்கள்!


தங்களின் பெருமையைப் பறை சாற்றுவதற்காக - அவர்கள் கட்டியெழுப்பிக் கொண்டிருந்த தூண்களைப் பற்றி ஏன் இங்கே குறிப்பிட்டுக் காட்ட வேண்டும்? 


அந்த அளவுக்கு அவர்களிடம் செல்வம் குவிந்திருந்தது என்பதைத் தான் அது சுட்டிக் காட்டுகிறது! சரியா?

 

அதே சமயத்தில் அந்தச் சமூகத்தில் ஏழைகளும் அனாதைகளும் மிகுந்திருந்தார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறது  (17-18) ஆகிய வசனங்கள்!


தங்களின் மிகுதியான செல்வங்களைக் கொண்டு ஏன் அவர்கள் அனாதைகளை அரவணைத்திடவில்லை? அந்த ஏழைகளுக்கு ஏன் அவர்கள் உணவளித்திருந்திருக்கக் கூடாது? 

இதனையெல்லாம் கேட்பதற்குத் தானே நபி ஹூத் அவர்களை அவர்களுக்கு மத்தியில் அனுப்பி வைத்தான் இறைவன்!


அவர்கள் ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் தங்கள் செல்வத்தைச் செலவழிக்காமல் போனதற்குக் காரணம் - 


(1) அவர்கள் தங்கள் செல்வங்களைத் தாமே நேசித்தார்கள்! "மேலும், நீங்கள் மிக்க அளவு கடந்து செல்வத்தை நேசிக்கிறீர்கள்"(89:20).


(2) அந்த ஏழை மக்களுக்கு உணவு அளிப்பது இருக்கட்டும்; அந்த ஏழை மக்களையும் அனாதைகளையும் கண்ணியப்படுத்திடக் கூட அவர்கள் தயாராக இல்லை! (89:17-18)


அப்படியானால் - இந்தச் செல்வங்களையெல்லாம் உங்களுக்கு யார் வந்து கொடுத்தது? -என்று இறைவன் கேட்டிட மாட்டானா என்ன? 


**

இன்னொரு கேள்வி ஒன்றையும் எழுப்புவோம்: 


அந்தத் தூண்களை யாரை வைத்து அவர்கள் கட்டியெழுப்பியிருக்க முடியும்? அந்த செல்வந்தர்கள் "தாமே" அந்த வேலைகளில் இறங்கிக் கட்டி முடித்தார்களா? அவ்வாறு இருந்திட வாய்ப்பிலையே! அந்தச் சமூகத்தில் இருந்த இதே ஏழைகளை வைத்துத் தானே? 


அந்த மக்களைக் கசக்கிப் பிழிந்தார்கள் அவர்கள் என்கிறான் இறைவன் பிரிதொரு இடத்திலே!


மேலும், நீங்கள் எவரையேனும் பிடித்தால் கொடூரமாகப் பிடிக்கிறீர்கள்.(26:130)


அப்படியானால் அங்கே என்ன நடந்தது? 


ஒரு பக்கம் - அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்த எல்லா விதமான வளங்களையும் வசதி வாய்ப்புகளையும் அனுபவித்துக் கொண்டு, பொருள்களை சேர்த்து வைத்துக் கொண்டு - ஆடம்பர மாளிகைகளைக் கட்டிக்கொண்டு, தங்களின் பலத்தைப் பறை சாற்றுகின்ற பெரும் தூண்களை - அடையாளச் சின்னங்களாக எழுப்பிக் கொண்டு தற்பெருமை பிடித்தவர்களாக வாழ்வார்களாம். 


இன்னொரு பக்கம்  ஏழைகளையும் அனாதைகளையும் கசக்கிப் பிழிந்து கொண்டு - அவர்களை அடக்குமுறைகளுக்கு ஆட்படுத்தி, அவர்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டு ஒரு விதமான எஜமானத் தன்மையைத் தமக்குத் தாமே கட்டியெழுப்பிக் கொண்டு "எங்களை விட பலம் மிக்கவர்கள் யார்" - என்று மார்தட்டி வாழ்வார்களாம்? இறைவன் இவர்களை அப்படியே விட்டு விட வேண்டுமாம்!    


இன்னொன்றும் அங்கே நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது! 


கேள்வி ஒன்றைக் கேட்போம்: அந்த சமூகத்தில் அனாதைகள் வந்தது எப்படியாம்? ஒரு குடும்பத் தலைவன் இறந்து போவதால் தானே - மனைவி விதவையாகவும், குழந்தைகள் அனாதைகளாகவும் ஆகி விடுகிறார்கள்? அந்தக் குடும்பத்தலைவர்கள் எப்படி இறந்து போனார்களாம்? அந்த ஆதுக் கூட்டத்தாரின் அடக்குமுறைகளின் விளைவுகளால் தானே? 


இதையும் இறைவன் கவனித்திருப்பான் தானே? 


*


கிட்டத் தட்ட இதே தான் நடந்திருக்க வேண்டும் தமூது கூட்டத்தாரிலும், ஃபிர் அவ்னுடைய சமூகத்திலும். 


வசனங்களைக் கவனியுங்கள். புரியும்!


மேலும், பள்ளத்தாக்கில் பாறைகளைக் குடைந்த ஸமூத் சமுதாயத்தாருடனும்; (89:9)


மேலும், முளைகளையுடைய (பெரும் படைகளைக் கொண்ட) ஃபிர்அவ்னுடனும் (உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?(89:10)


தமூதுக் கூட்டத்தார் - பாறைகளைக் குடைந்து வீடுகள் கட்டிக் கொண்டவர்கள்! ஆதுக் கூட்டத்தாரிடம் கேட்கப்பட்ட அதே கேள்விகளை இவர்களிடத்திலும் கேட்க முடியும்!


ஃபிர்அவ்னைப் பற்றிக் குறிப்பிடும்போது - இராணுவக் கூடாரங்களை எழுப்புவதற்காக அதன்  மேற்கூறைகளை இழுத்துக் கட்டத் தேவைப்படுகின்ற "முளைகளை" இங்கே குறிப்பிடுகிறான் இறைவன். இது எதனைக் குறிக்கிறது என்றால் ஒரு அரசன் எந்த அளவுக்கு இராணுவ வலிமை மிக்கவன் என்பதற்கான அன்றைய அளவுகோல் என்பது அவன் எத்தனை முளைகளையுடைய கூடாரங்களைக் கட்டுகின்றான் என்பதை வைத்துத் தானாம்! 


அதனாலேயே அவனை ஆணிக்கார ஃபிர் அவ்ன் என்று சுட்டிக் காட்டுகின்றான் இறைவன். 


இறைவன் ஒரே ஒரு சொல்லைக் கூட வீணடித்து விடுவதில்லை! சுப்ஹானல்லாஹ்!


**


பிறகென்ன? 


நடக்க வேண்டியதெல்லாம் நடந்தேறி விட்டன என்பதைத் தான் சுற்றி வளைத்தெல்லாம் பேசிடாமல் அத்தியாயத்தின் துவக்கத்திலேயே பதிவு செய்து விடுகிறான் இறைவன்! 


**

எமது ஆய்வினை இந்த இடத்தில் நிறுத்திக் கொள்வோம். 


இவ்வாறு ஏனைய அத்தியாயங்களையும் ஒவ்வொன்றாக நாம் ஆய்வு செய்திட்டால், அது போன்று திருமறையில் வருகின்ற இதர வரலாற்றுச் சம்பவங்களையும் ஆய்வு செய்திட்டால் -  இறைவன் சொல்ல வருகின்ற செய்திகள், பாடங்கள், படிப்பினைகள், தீர்வுகள், எச்சரிக்கைகள், நன்மைக்கு ஊக்குவித்தல், சமூகத்துக்குத் தேவையான படிப்பினைகள், நடைமுறை வழிகாட்டுதல்கள் எல்லாம் நமக்குக் கிடைத்திட வாய்ப்பிருக்கிறதா இல்லையா? 


எல்லாப் புகழும் இறைவனுக்கே!


எஸ் ஏ மன்சூர் அலி


#குர்ஆன்​_சிந்தனை 


@@@


ஒரே ஒரு சொல் தான்! 

ஆனால் எவ்வளவு ஆழமான பொருள்! 

------------------------------------------------


(திருக்குர்ஆனில் நபி ஹூத் (அலை) - ஓர் ஆய்வு)


பகுதி - 6



திருமறையில் ஒரு சொல்:  عتو / عتى ('அ-த-வ்) 


இச்சொல்லின் அகராதிப் பொருள் என்ன? 


ஆங்கிலத்தில்: 


Verbal Form: To be insolent; refractory; recalcitrant; unruly; to be violent; fierce; strong; wild; furious; raging;


Noun form: Presumption; haughtiness; impertinence; arrogance; ferocity;


தமிழில்: 


வினைச் சொல்: மாறு செய்கின்ற 

பெயர்ச் சொல்: மாறு செய்தல்


**

ஆனால் - திருமறையில் இடம் பெற்றிருக்கின்ற அரபிச் சொற்களைப் பொறுத்தவரை - அதன் மிகவும் சரியான மற்றும் ஆழமான பொருளைப் புரிந்து கொள்ள அகராதி ஒன்று மட்டுமே போதாது! அதற்கு இன்னொரு வழியும் உண்டு! அதாவது - ஒரு குறிப்பிட்ட சொல் திருமறையில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது (usage) என்பதையும் சேர்த்து கவனித்திட வேண்டியது தான் அது! 


இரண்டையும் சேர்த்தே பார்ப்போம். 


**


இந்தச் சொல் - அதன் ஒரு சில கிளை வடிவங்களுடன் மொத்தம் பத்து இடங்களில் திருமறையில் இடம்பெற்றுள்ளது.  


அவையாவன: 


65:8 / 7:77 / 7:166 / 25:21/ 51:44 / 67:21 / 25:21 / 19:8 / 19:69 / 69:6


**

திருமறையில் - முதன்மையாக - "இறை கட்டளைகளுக்கு மாறு செய்வதைக்"- குறித்திடவே இச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. 


எடுத்துக்காட்டாக....


"அதத் அன் அம்ரி ரப்பிஹா வ-ருஸுலிஹி  / தம் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் கட்டளைக்கு மாறு செய்தனர்! (65:8)


ஆனால் "மாறு செய்தல்" என்பது இச்சொல்லுக்கான மிகச் சாதாரண மொழிபெயர்ப்பு மட்டுமே! 


ஆங்கில அகராதியில் இச்சொல்லுக்காகக்  கொடுக்கப்பட்டுள்ள  பொருள்களுள் ஒன்று:  


To be insolent!


Insolent - என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் என்ன தெரியுமா? 


Insolent: Extremely rude and showing a lack of respect 


தமிழில் சொல்வதாக இருந்தால் - இச்சொல்லை -"மரியாதை கெட்டத் தனமாக நடந்து கொள்கின்ற  உச்சகட்ட முரட்டுத்தனம்"  - என்று விளக்கலாம்! 


மவ்லானா மவ்தூதி அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் - இச்சொல்லுக்கு இறை கட்டளைகளை ஆணவத்துடன் மீறுதல் - என்று பொருள் கொடுத்திருக்கிறார்கள்.   


இங்கே கொடுக்கப்பட்டுள்ள திருமறை வசனங்களையும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும் சற்று பொறுமையாகப் படித்துக் கொண்டு வாருங்கள். உங்களுக்கு வியப்பான செய்தி ஒன்று காத்திருக்கிறது!!


65: 8

------


وَكَأَيِّنْ مِنْ قَرْيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبْنَاهَا حِسَابًا شَدِيدًا وَعَذَّبْنَاهَا عَذَابًا نُكْرًا


எத்தனையோ ஊர்கள் தம் இறைவனுடையவும் "அவனுடைய தூதர்களுடையவும் கட்டளைக்கு மாறு செய்தனர்"; ஆதலால், நாம் வெகு கடுமையாக அவற்றைக் கணக்குக் கேட்டு, அவர்களைக் கொடிய வேதனையாகவும் வேதனை செய்தோம்.


***


7: 77

------


فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ أَمْرِ رَبِّهِمْ وَقَالُوا يَا صَالِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَا إِنْ كُنْتَ مِنَ الْمُرْسَلِينَ


பிறகு அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து விட்டார்கள்; தம்முடைய "இறைவனின் ஆணையை ஆணவத்துடன் மீறினார்கள்". மேலும், (ஸாலிஹிடம்) அவர்கள் கூறினார்கள்: “உண்மையில் இறைத்தூதர்களில் நீரும் ஒருவர்தாம் என்றால், எந்த வேதனை குறித்து எங்களை நீர் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறீரோ அதனை எங்களிடம் கொண்டு வாரும்!” (IFT)


இது தமூது கூட்டத்தாரைக் குறித்து.... 


**

7: 166

--------


فَلَمَّا عَتَوْا عَنْ مَا نُهُوا عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ


பிறகு அவர்கள் "எந்தச் செயல்களைச் செய்யக்கூடாதெனத் தடுக்கப்பட்டார்களோ அவற்றையே அவர்கள் ஆணவத்துடன் செய்து கொண்டிருந்தபோது" - நீங்கள் குரங்குகளாகி இழிவடைந்து விடுங்கள்! என்று நாம் கூறினோம். (IFT)


இது குரங்குகளாக மாற்றப்பட்ட பனீ இஸ்ரவேலர்களைக் குறித்து.... 


***

51:44

--------


فَعَتَوْا عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ وَهُمْ يَنْظُرُونَ


அவர்கள் தங்கள் அதிபதியின் கட்டளையை "ஆணவத்துடன் மீறினார்கள்". இறுதியில், அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென்று உடைந்துவிழும் வேதனை ஒன்று அவர்களைப் பிடித்துக் கொண்டது.


**


19: 69

--------


ثُمَّ لَنَنْزِعَنَّ مِنْ كُلِّ شِيعَةٍ أَيُّهُمْ أَشَدُّ عَلَى الرَّحْمَٰنِ عِتِيًّا


பிறகு, அவர்களில் எவன் கருணைமிக்க இறைவனுக்கு "மாறு செய்வதில் தீவிரமாக இருந்தானோ" அவனை ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் தனியே பிரித்துவிடுவோம். (IFT)


**


அடுத்து வரும் வசனத்தின் இறுதிப் பகுதியைக் கவனியுங்கள்:   


25: 21

--------


وَقَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا لَوْلَا أُنْزِلَ عَلَيْنَا الْمَلَائِكَةُ أَوْ نَرَىٰ رَبَّنَا ۗ لَقَدِ اسْتَكْبَرُوا فِي أَنْفُسِهِمْ وَعَتَوْا عُتُوًّا كَبِيرًا


எவர்கள் நம் திருமுன் வருவதைக் குறித்து சற்றும் கவலை கொள்ளாமல் இருக்கின்றார்களோ அவர்கள் கூறுகின்றார்கள்: “எங்களிடம் வானவர்கள் ஏன் அனுப்பப்படவில்லை? அல்லது எங்கள் இறைவனை நாங்கள் ஏன் காணுவதில்லை?” இவர்கள் தங்களையே பெரிதாக எண்ணி ஆணவம் கொண்டு திரிகின்றார்கள். மேலும், இவர்கள் தங்கள் "அக்கிரமத்தில் பெரிதும் வரம்பு மீறிச் சென்றுவிட்டார்கள்."


// ஃபீ அன்ஃபுஸிஹிம் அதவ் உதுவ்வன் கபீரா// 


அவர்களுக்குள் இருந்தது - "உச்சகட்டத்திற்கே உச்சகட்டமான ஆணவம்" - என்று கடுமையாகச் சாடுகிறான் இறைவன் இவ்வசனத்தில்... 


**


67: 21

--------

أَمَّنْ هَٰذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ ۚ بَلْ لَجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ


அல்லது கருணைமிக்க இறைவன் தான் வழங்கும் உணவை நிறுத்திக்கொண்டால் பிறகு, உங்களுக்கு உணவு வழங்குவது யார் என்பதைச் சொல்லுங்கள் பார்ப்போம்! உண்மை யாதெனில், இவர்கள் "வரம்பை மீறுவதிலும்", சத்தியத்தைப் புறக்கணிப்பதிலும் மூழ்கிக் கிடக்கின்றார்கள். (IFT)

**

ஆனால் அடுத்து வருகின்ற இறை வசனத்தைப் பாருங்கள்: 


19: 8

-------

قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا وَقَدْ بَلَغْتُ مِنَ الْكِبَرِ عِتِيًّا


அதற்கவர் "என் இறைவனே! எப்படி எனக்குச் சந்ததி ஏற்படும்? என்னுடைய மனைவியோ மலடி. நானோ "முதுமையின் கடைசிப் பாகத்தை அடைந்துவிட்டேன்" என்று கூறினார்.

இந்த இறைவசனத்தில் - "இதிய்யா" (عِتِيًّا) என்ற வடிவத்தில் வந்திருக்கும் இச்சொல் -  முதுமையின் கடைசிப் பாகத்தை அடைந்து விடுவதைக் குறிக்கிறது! முற்றிலும் வேறானதொரு பொருள் இது. இப்பொருளையும் இந்தச் சொல் உள்ளடக்கித்தான் இருக்கிறது! இதன் பொருள் என்ன? முதுமையின் கடைசிக்கட்டத்தை அடைந்த பின் "அதற்கு அடுத்த கட்டம் என்று ஏதொன்றும் இல்லை" என்பதாகும்!

இதை வைத்துப் பார்க்கும்போது - இறைத்தூதர்களை நிராகரித்த அந்த மக்கள் - பிறர் விஷயத்தில் - "இதற்கு மேல் வரம்பு மீறிச் செல்ல எதுவும்  இல்லை என்று சொல்லப்படும் அளவுக்கு அவர்கள் ஆணவத்தின் உச்சகட்டத்துக்குச் சென்று அக்கிரமம் புரிந்திருக்கிறார்கள் என்பதை நமக்குப் புரிய வைப்பதற்குத்தான் - இறைவன் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளான் என்பது புரிகிறதல்லவா?  


***

இப்போது தான் க்ளைமாக்ஸ்! அடுத்த இரண்டு வசனங்களையும் படியுங்கள்!


69: 6

------

وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ


இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.


69: 7

-------

سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ


அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.

**

69 : 6 - ஆகிய இவ்வசனம்  - ரீஹின் ஸர்ஸரின் ஆத்தியா / Reehin Sarsarin ‘aatiya! /  என்று முடிவடைகிறது!


ரீஹ் என்றால் காற்று என்று பொருள்!


ஸர்ஸர் - என்றால் - கடுமையான பேரொலியுடன் கூடிய என்று பொருள்! (to let out a piercing cry; scream shrilly; violent; furious)  


ஆத்தியா - என்றால் வரம்பு மீறி செயல்படுதல் என்று பொருள்! 


அதவ் - எனும் சொல்லுக்கு raging -  என்றொரு பொருளையும் தருகிறது ஆங்கில அகராதி என்பதை முன்னரே பார்த்தோம். Raging என்றால் கடுமையான கோபம் என்று பொருள்!


"And as for the 'Ad - they were destroyed by a storm wind furiously raging. (Muhammad Asad)


And the ´Ad - they were destroyed by a furious Wind, exceedingly violent. (Yusuf Ali)


காற்றுக்கே கோபமா? அல்லது அது அல்லாஹ்வுடைய கோபமா? - என்று நாம் வியக்கலாம்!  


அதுவும் - ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும்! இடைவிடாமல்.....தொடர்ச்சியாக!  


படிப்பினை: 


ஆணவத்துடன் வரம்பு மீறி, மரியாதை இன்றி - அக்கிரமத்தின் உச்சக்கட்டத்துக்கு மனிதக் கூட்டம் ஒன்று சென்றால் - அதே உச்சகட்ட அளவுக்குச் சென்று இறைவனால் அவர்களைத் தண்டித்திட  முடியும் - என்பதை நமக்கெல்லாம் உணர்த்திக் காட்டி விடுகிறது இந்த ஒற்றைச் சொல்!


இன்னும் ஒரே ஒரு கேள்வி: 


திருமறையின் 65 - வது அத்தியாயத்தின் பெயர் அத்-தலாக்! இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் தலாக் எனும் விவாகரத்து பற்றிய சட்டங்கள். அந்தச் சட்டங்களைச் சொல்லிக் கொண்டே வந்த இறைவன் - திடீரென்று - பின்வரும் வசனத்தை வைத்துக் காட்டுகின்றான்: 


 

65: 8

------


وَكَأَيِّنْ مِنْ قَرْيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبْنَاهَا حِسَابًا شَدِيدًا وَعَذَّبْنَاهَا عَذَابًا نُكْرًا


எத்தனையோ ஊர்கள் தம் இறைவனுடையவும் "அவனுடைய தூதர்களுடையவும் கட்டளைக்கு மாறு செய்தனர்"; ஆதலால், நாம் வெகு கடுமையாக அவற்றைக் கணக்குக் கேட்டு, அவர்களைக் கொடிய வேதனையாகவும் வேதனை செய்தோம்.


அதே( عَتَتْ ) சொல் தான் இங்கும்! என்ன சொல்ல வருகிறான் இறைவன்? 


மனைவி பலவீனமானவள்! அவள் பெற்றெடுத்த உன்குழந்தையும் பலவீனமானது! தலாக்கின் சமயத்தில் அது இன்னும் பலவீனம்! அந்த சமயத்தில் - அவர்கள் விஷயத்தில் ஒழுங்கு மரியாதையாக இறைக் கட்டளைகளைப் பின் பற்றி  நடந்து கொள்ளுங்கள்! இல்லாவிட்டால்........?


கடுமையான தண்டனைகள் என்பது ஆது, தமூது, ஃபிர் அவ்ன், நம்ரூத் - போன்றவர்களின் கூட்டத்தாருக்கு மட்டுமல்ல! 


..................................!!!!


அல்லாஹ் மிக அறிந்தவன்!  


***

எஸ் ஏ மன்சூர் அலி 


#குர்ஆன்_சிந்தனை


@@@@

Comments