அவன் அதிகாரம்!



இன்று நாம் - நமக்கு நிரந்தரம் என்று 

நினைத்துக் கொண்டிருக்கும் எதுவும் 

நமக்கு நிரந்தரம் கிடையாது!


நிரந்தர முகவரி - (Permanent address) என்பதுவும்

நிரந்தரக் குடியிருப்பு (Permanent residence) என்பதுவும் 

உண்மையில் சொல்லப் போனால் தற்காலிகமானதே! 

 

நிரந்தர வேலை (Permanent job)

நிரந்தர வருமானம் (Permanent income)

நிரந்தர வைப்பு நிதி (Fixed deposit)

என்பதெல்லாம் கூட தற்காலிகமானவைகளே!  


**

அசையா சொத்து? 

நம் சொத்துகளெல்லாம் "அசைந்து" கொண்டிருப்பவை தான்!

எந்த ஒரு பிடிப்பும் இன்றி, 

ஆடி அசைந்து சுற்றிக்கொண்டிருக்கும் 

நமது பூமியே இதற்குச் சான்று! 


**

ஆனால் இங்கே உண்மை அல்லது யதார்த்தம் என்பது என்ன? 


நாம் நம் "கையில்" - நிரந்தரமானவை - 

என்று நினைத்துக் கொண்டிருக்கும் 

எல்லாமே அவன் "கைகளில்" தான்!


எவனுடைய "கையில்" ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். (67:1)


**

நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் உணவு!  

அது தற்காலிகமானதே!


"தான் உணவளிப்பதை அவன் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவளிப்பவர் யார்? அப்படியல்ல, ஆனால், இவர்கள் மாறு செய்வதிலும் (சத்தியத்தை) வெறுப்பதிலும் ஆழ்ந்திருக்கின்றனர். (67:21)


**


தண்ணீர்? அதுவும் நமக்கு தற்காலிகமானது தான்! 


(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? (67:30)


சரி, நமது பாதுகாப்பு? 


விமானத்தில் பறக்கும்போது ஒரு வித அதீத பயம்! 

ஆனால் பறக்கின்ற அந்த விமானத்தைத் தாங்கிப் பிடித்திருப்பவன் யார்? 


இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன். (67:19)


*

பூமியில்? 


விமானத்தில் இருந்து இறங்கியதும் பயம் நீங்கி விடுகிறது! 

ஏன்? விபத்து என்பது விமானத்தில் மட்டும்தானா? 


தரையில், சாலையில், பூமியின் மேற்பரப்பில் -

விபத்துகளைத் தவிர்த்திட முடியுமா என்ன? 

பூகம்பம்? நிலச்சரிவு? கரை புரண்டோடும் வெள்ளம்?

சுனாமி? புயல்? சூறாவளி? 


வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும். (67:16)


அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். (67:17)


**

நமது உடல் உறுப்புகள்? 


நமது கண் பார்வை? நமது கேள்விப்புலன்? 

நமது இதயத்தின் இயக்கம்? எல்லாமே யார் கைகளில்? 


(நபியே!) நீர் கூறுவீராக: “அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.” (67:23)


**

இங்கு எதுவுமே நிரந்தரமில்லை!

அவன் தன் கரங்களை சற்றே பின்னிழுத்துக் கொண்டால் 

நாம் நிரந்தரம் என்று நினைத்தவை அனைத்தும் 

தற்காலிகம் என்பது புரிந்து விடும்!


ஏனெனில், இங்கு எல்லாமே அவன் அதிகாரம் தான்!


**

சரி? அப்படியானால் எது நமக்கு நிரந்தரம்? 


உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (67:2)


ஆம்! அது நமது அழகான நற்செயல்கள் மட்டுமே! 


இறை நம்பிக்கையுடன் நாம் செய்கின்ற நமது நற்செயல்களுக்கான வெகுமதி -   நிரந்தர சுவனம்!


இறைவனை மறுத்து தீச்செயல் செய்பவர்களுக்கான இறுதி முடிவு - நிரந்தர நரகம்!


இவை அனைத்தும் சூரா அல் முல்க் உணர்த்துகின்ற பாடங்கள்! 


எல்லாமே தற்காலிகம் என்ற சிந்தனை நமக்குள் ஒரு விரக்தி மனப்பான்மையை உருவாக்கி விடாதா என்று கேட்கப்படலாம். அது தான் இல்லை! 


இந்த அத்தியாயம் - நபித்துவ மக்கத்து வாழ்வின் இறுதியில் (Late Makkan Surah) இறக்கியருளப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 


அங்கே நபியவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும் 

இஸ்லாமிய வெறுப்பாளர்களால் 

சொல்லொனாத் துன்பங்களுக்கும்

கடுமையான இன்னல்களுக்கும்  

உள்ளாக்கப் பட்டிருந்தார்கள். 

எதிர்காலமே ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக 

அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த காலம் அது!


அந்தக் கால கட்டத்தில் -  

இந்த அத்தியாயத்தின் மூலம்  

நபியவர்களுக்கும்

நபியவர்களை ஏற்றுக் கொண்டு

அவர்களைப் பின்பற்றியவர்களுக்கும்

சொல்லப்பட்ட அழுத்தமான செய்தி தான் 


"இவ்வுலக

வாழ்க்கை

நிரந்தரமன்று!"


**


இந்தச் செய்தி - 

அவர்களை நிராசையடையச் செய்திடவில்லை! 

மாறாக அவர்களை ஊக்கப்படுத்தியது!

தற்காலிக உலக இன்பங்களில் மூழ்குவதிலிருந்து 

அவர்களை விடுவித்து 

அவர்களின் கவனத்தை 

சுவனத்தை நோக்கித் திருப்பி விட்டது!


மக்காவில் நற்செயல்கள் புரிவதற்கு வாய்ப்பில்லையா?

சரி, மதீனாவுக்கு சென்று விடுவோம் என்று 

அவர்களை மிக எளிதில் புறப்பட வைத்தது இந்த சூராவின் செய்தி!


அன்று - மதினாவில் தொடங்கி வைக்கப்பட்ட 

அந்த நற்செயல் நாகரிகம் தான் 

இஸ்லாமிய நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது!


**


இன்றும் - 

இஸ்லாமிய வெறுப்பு சூழ் - கால கட்டத்திலும் 

இன்றைய முஸ்லிம்களை 

நற்செயல்களின் பக்கம் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் 

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்று தான் 


"அழகிய

நற்செயல்கள் மட்டுமே  

நிரந்தமானவை!"


**

அதனால் தான் - 

நற்செயல்களுக்கு  வாய்ப்பு கிடைக்கின்ற

எல்லா இடங்களிலும் அவர்களை நீங்கள் பார்க்க முடிகிறது! 


இஸ்லாமிய வெறுப்பாளர்கள் எம்மிடம் 

தோற்றுப் போவதும் இந்த இடத்தில் தான்!


#சூரத்துல்_முல்க்_சிந்தனைகள் 


எஸ் ஏ மன்சூர் அலி 


Comments