இஃக்லாஸ் - சூரத்துல் ஜுமர் - சிந்தனைகள்


 

இஃக்லாஸ்

பகுதி - 1

***

"சூரத்துல் ஜுமர்" -  அல் குர்ஆனின் 39 - வது அத்தியாயம் ஆகும். 


இந்த அத்தியாயம் நபியவர்களின் மக்கத்து நபித்துவ வாழ்வின் மையப் பகுதியில் வைத்து இறக்கியருளப்பட்டது. A middle Makkan surah.


இந்த அத்தியாயத்தின் மையக்கருத்து (central theme) என்பது - "இஃக்லாஸ்" எனப்படும் "மனத்தூய்மை" -  என்று நாம் கருதுவதற்குத் - தக்கக் காரணங்கள் இருக்கின்றன.   


இஃக்லாஸ் எனப்படும் இச்சொல்  - திருக்குர்ஆனின் மிக முக்கியமான கருத்தாக்கம் (Quranic concept) ஆகும்.   இச்சொல் திருமறை திருக்குர்ஆனில் அதன் வெவ்வேறு வடிவங்களில் மொத்தம் 31 தடவை இடம் பெற்றுள்ளன! 


***    

இஃக்லாஸ் என்றால் என்ன? 


ஆங்கில அகராதியில் இச்சொல்லுக்கு என்ன பொருள் தரப்படுகிறது? 


Dictionary meaning of the term - Ikhlas 


The verbal form - khalasa means 


– to be pure; unmixed; un-adulterated 

- to act with sincerity; to be loyal; to be devoted; be faithful  


The noun form - Ikhlas means 


– sincere devotion; loyal attachment ; sincere affection; fidelity 


***

தமிழில் இச்சொல் பின் வருமாறெல்லாம் மொழிபெயர்க்கப்படுகிறது: 


களங்கமற்றது; கலப்பற்றது; தூய்மையானது; அந்தரங்க சுத்தி; மனத்தூய்மை; 


***


இஃக்லாஸ் எனப்படும் இக்கருத்தாக்கத்தை - சூரத்துல் ஜுமர் துணையுடன் சற்றே ஆய்வு செய்வோம். 


சூரத்துல் ஜுமர் அத்தியாயத்தின் இரண்டாவது இறை வசனத்தை எடுத்துக் கொள்வோம். 


(நபியே!) நாம் உமக்கு சத்தியத்தைக் கொண்டு இவ்வேதத்தை இறக்கியருளினோம். ஆகவே, மார்க்கத்துக்கு அந்தரங்க சுத்தியுடையவராக நீர் அல்லாஹ்வை வணங்குவீராக.  (39:2)


அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குவது என்றால் என்ன? 


மார்க்கம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி, 


நமது ஒவ்வொரு செயல்பாட்டையும் நாம் யாருக்காகச் செய்கிறோம்? நாம் யாருடைய திருப்தியை எதிர்பார்த்துச் செய்கிறோம்? அல்லது வேறு எந்த எதிர்பார்ப்பும், உள் நோக்கமும் நமக்கு இருக்கிறதா?   - என்பன போன்ற கேள்விகளுக்கு.... 


"எல்லாம் வல்ல இறைவனின் திருப்தியை நாடி "மட்டுமே" நாம் செய்கிறோம்!" - என்று உங்கள் உள்ளம் உங்களுக்கு சான்று பகர்ந்தால்  அது தான் இஃக்லாஸ் எனப்படும்!  அதாவது 100% மனத்தூய்மை!  


இப்படிப்பட்ட மனத்தூய்மையுடன் நமது மார்க்க செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது எப்படி என்பது குறித்துத் தான் சூரத்துல் ஜுமர் பேசுகிறது.


இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்!


இணை வைத்தல் என்பது இஃக்லாஸுக்கு எதிரானது! 

பகுதி - 2


ஷிர்க் எனப்படும் இறைவனுக்கு இணை வைத்து வணங்கும் "நம்பிக்கை" - மனத்தூய்மை எனும் இஃக்லாஸுக்கு எதிரானது! 


இணை வைத்தல் - நமது இஃக்லாஸைக் கெடுத்து விடும்!


இறைவனுக்கு இணை வைத்து வணங்குவது எந்த அளவுக்குத் தவறானது, எந்த அளவுக்கு அறிவுக்குப் புறம்பானது என்பது குறித்து திருமறையின் இன்ன பிற அத்தியாயங்களிலும் வலியுறுத்திச் சொல்லப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். 


நாம் இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் - சூரத்துல்ஜுமர் அத்தியாயத்தில் - இதே கருத்தை பல இறை வசனங்களைக் கொண்டு மறுதலிக்கிறான் இறைவன். ஏன் என்று நாம் கேட்கலாம் அல்லவா?    


ஏனெனில் அதற்குக் காரணம் இருக்கிறது! இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம் தான் - ஷிர்க்  எனும் இணைவைப்பு - நமது மனத்தூய்மைக்கு எதிரானது என்பதுவும், அது மீளவே முடியாத ஆபத்தில் போய் நம்மைச் சிக்க வைத்து விடும் என்பதுவும் ஆகும்!   


இதனை நாம் புரிந்து கொள்வது ஒன்றும் கடினம் இல்லை! இறைவனுக்காக "மட்டுமே" செலுத்தப்பட வேண்டிய வணக்கத்திலும், கீழ்ப்படிதலிலும் - இறைவனைத் தவிர இன்னொரு "கூட்டாளியைக்" கொண்டு வந்து விடும்போது முழுமையான மனத்தூய்மைக்குப் பங்கம் விளைவித்து விடும் அந்த இணை வைப்பு என்பதை எளிதாகவே நாம் புரிந்து கொண்டு விடலாம்!!   


**


இந்த அத்தியாயத்தின் நிறைய இறைவசனங்கள் இது குறித்துப் பேசினாலும் இரண்டு வசனங்களை மட்டும் இங்கே குறிப்பிடுவோம்: 


அறிந்து கொள்வீராக! "களங்கமற்ற மார்க்கம்" (தீனுல் ஃகாலிஸ்) அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” என்கின்றனர்". (39:3)


அல்லாஹ் எவரையேனும் மகனாக எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், தன்னுடைய படைப்புகளிலிருந்து தான் நாடுபவரைத் தேர்ந்தெடுத்திருப்பான். அவன் இதனை (எவரையேனும் தனக்கு மகனாக ஆக்கிக்கொள்வதை) விட்டுத் தூய்மையானவன்! அவன்தான் அல்லாஹ்! தனித்தவனும், யாவற்றையும் அடக்கி ஆளுபவனும் ஆவான். (39:4)


***


இங்கே நாம் கவனித்திட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்... 


"முஸ்லிம்களாகிய நாம் தான்  - இது போன்ற இணைவைப்புகளில் ஈடுபடுவதில்லையே!" - என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கலாம். 


ஆனால் இணை வைப்பு என்பது இத்தோடு முடிந்து விடுவதில்லை! இணை வைப்பில் வேறு சில வகைகளும் இருக்கின்றன! அவை என்ன என்பது குறித்தும் இந்த அத்தியாயம் பேசுகிறது!


இஃக்லாஸ் எனப்படும் நமது மனத்தூய்மைக்கு "ஆபத்து " விளைவிக்கும், நம்மை உண்மையிலேயே கவலைப்பட வைத்து விடும் அந்த வகை இணை வைப்பு எது? 


இன்ஷா அல்லாஹ் பார்ப்போம். 


ஆணவமும் மனத்தூய்மையும் ஒன்று சேராது!

பகுதி - 3

***


சூரத்துல் ஜுமர் அத்தியாயத்தின் மையக்கருத்து - "இஃக்லாஸ்" எனப்படும் "கலப்பற்ற மனத்தூய்மை" -  என்பதை நாம் முன்னரே குறிப்பிட்டிருந்ததை நினைவில் கொள்வோம். 

   

இப்போது இரண்டு இறை வசனங்களை எடுத்துக் கொள்வோம்: 


மனிதனுக்கு ஏதேனும் ஒரு தீங்கு வந்துவிட்டால், அவன் தன் இறைவனின் பக்கம் திரும்பி அவனை அழைக்கின்றான். பிறகு அவனுடைய இறைவன் அவன் மீது தன் அருட்கொடையை வழங்கினால், முன்பு எந்தத் துன்பத்தை நீக்கும்படி இறைஞ்சிக் கொண்டிருந்தானோ அந்தத் துன்பத்தை அவன் மறந்து விடுகின்றான்; மேலும், அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்குகின்றான்; அவனுடைய வழியைவிட்டுத் தவறச் செய்வதற்காக! (நபியே!) அந்த மனிதனிடம் கூறும்: “நீ உனது நிராகரிப்பின் மூலம் சிறிது நாட்கள் இன்பம் அனுபவித்துக்கொள். திண்ணமாக நீ நரகத்திற்குச் செல்பவன் ஆவாய்.” (39:8)


மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்: “இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!” என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (39:49)


***


இப்போது நம்மை நாமே இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொள்வோம்: 


நம்மைத் துன்பம் வந்து சூழும் போது - இறைவனை இறைஞ்சும் நாம், துன்பங்கள் நீங்கிய பின் நமது மகிழ்ச்சியான தருணங்களில் - இறைவனை மறந்து விடுபவர்களா நாம்? 


இறைவன் நமக்குக் கொடுத்த அருட்கொடைகளில் நமக்கு சோதனையும், துன்பமும் ஏற்படும் சமயங்களில், இறைவனின் பக்கம் திரும்பி விடும் நாம், அந்த சோதனையை இறைவன் நீக்கி விட்ட பின்னர் - அடுத்து அருட்கொடைகள் மேலும் வந்து குவியும்போது,  இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கு பதிலாக - "நமது திறமையினால் தான் இது நமக்குக் கிடைத்தது!" என்ற ஆணவம் நம் தலைக்கு ஏறி விடுகிறதா?     


இது நம்மை நாமே கேள்விக் கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம்! It's time for self-questioning!


இந்த இரண்டு இறை வசனங்களும் முஸ்லிம்களாகிய நம்மை அச்சத்துக்கு உட்படுத்துகின்றனவா இல்லையா?  


ஏனெனில் - இந்த மனப்பான்மையையும் - "இணை வைப்பு" என்றே எச்சரிக்கிறான் இறைவன். மேலே உள்ள வசனங்களை மீண்டும் கருத்தூன்றிப் படியுங்கள்: 


"அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்குகின்றான்!" (39:8)


எனக்கு அருட்கொடைகள் வந்து சேர்ந்ததற்குக் காரணம் "இறைவனா" அல்லது "எனது திறமையா" - என்ற கேள்விக்கு - எனது திறமையே என்று நீங்கள் எண்ணினால்  - இறைவனை வைக்க வேண்டிய இடத்தில் உங்கள் "திறமையை" வைத்து விடும்போது அதுவும் இணை வைப்பு ஆகி விடுகிறது!


இப்படிப்பட்ட எண்ணத்தினால் - நாம் நமது இஃக்லாஸை இழந்து விடுகிறோம் என்பது தான் உண்மை!


அதோடு மட்டுமல்லாமல் - இது - "இறை நிராகரிப்புக்குச் சமம்"  (குஃப்ர்) என்றும் குறிப்பிட்டு விட்டு  - கொஞ்ச காலம் அனுபவித்து விட்டுப் போ!" - என்று கேலி செய்திடவும் தவறவில்லை இறைவன்!  

இவ்வசனத்தில் வரும் குஃப்ர் என்பதற்கு "நன்றி கெட்டத்தனம்" (ingratitude) என்ற ஒரு பொருளும் உண்டு!


இந்த எச்சரிக்கை முஸ்லிம்களாகிய நமக்குத் தான்!


இஃக்லாஸ் என்பது ஒரு சுமை!

பகுதி - 4


இஃக்லாஸ் எனும் கலப்பற்ற மனத்தூய்மையுடன் மார்க்கத்தைப் பின்பற்றுவதை ஒரு பொறுப்பாகவே ஆக்கி வைத்திருக்கிறான் அல்லாஹு தஆலா! 


எனவே அல்லாஹ்வின் அடியார்கள் யாரும் இதனை "இலேசாக" எடை போட்டு விட வேண்டாம்;  அலட்சியமாக எடுத்துக் கொண்டு விட வேண்டாம் என்று எச்சரிக்கிறது இந்த அத்தியாயம்.  


பின் வரும் வசனத்தைப் படியுங்கள்: 


நீங்கள் நிராகரிப்பீர்களாயின் திண்ணமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன். ஆனால், அவன் தன் அடியார்களிடம் நிராகரிப்பை விரும்புவதில்லை. மேலும், நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், அதனை அவன் உங்களுக்காக விரும்புகின்றான். சுமை சுமப்பவர் எவரும் பிறரின் சுமையைச் சுமக்கமாட்டார். இறுதியில், உங்கள் இறைவனின் பக்கமே நீங்கள் எல்லோரும் திரும்ப வேண்டியுள்ளது. அப்பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை அவன் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். திண்ணமாக, அவன் உள்ளங்களின் நிலைமைகளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(39:7)


இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி வாழ்வதற்குத் தேவையான - கலப்படமற்ற தூய்மையான எண்ணங்களின் அவசியத்தை - அதாவது - இஃக்லாஸை - ஒரு சுமை என்கிறது இவ்வசனம்.  A burden! 


சுமை என்றால் என்ன? அது ஒரு பொறுப்பு! அப்படித் தானே?  அதுவும் சாதாரணப் பொறுப்பு அல்ல! சற்றே "கனமான" பொறுப்பும் கூட! இதில் இன்னொரு விஷயத்தை நாம் கவனிக்கத் தவறி விடக்கூடாது!


அதாவது - எனது இஃக்லாஸுக்கு நானே பொறுப்பு! அதற்கு வேறு யாரும் பொறுப்பு அல்ல! அப்படியெனில் என்ன பொருள்? 


இஃக்லாஸ் என்பது - ஒவ்வொரு இறையடியானின் "தனிப்பட்ட" பொறுப்பு ஆகும்! Individual responsibility! இந்தத் தனிப்பட்ட பொறுப்பை இறைவன் "சுமை" என்று வர்ணிப்பதன் நோக்கம்  என்ன? 

ஒவ்வொரு இறையடியானும் - தனது மனத்தூய்மையை வளர்த்துக் கொள்ள - கடினமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்த்திடத் தான்! To work hard and to make sincere efforts!


இஃக்லாஸ் என்பது என் மீது விதிக்கப்பட்ட கடமையும் கூட! பின் வரும் இரண்டு வசனங்களையும் பாருங்கள்: 


“மார்க்கத்தை (வணக்கத்தை) அவனுக்கே கலப்பற்றதாக, ஆக்கியவனாக அல்லாஹ்வையே நான் வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப் பட்டுள்ளேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (39:11)


அன்றி, அவனுக்கு வழிப்பட்டவர்களில் முதன்மையான வனாக இருக்குமாறும் ஏவப்பட்டுள்ளேன்" (39:12) 


அரபி மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள "உமிர்து" என்ற  சொல் தான்  "ஏவப்பட்டுள்ளேன்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 


அப்படியானால் என்ன பொருள்? இஃக்லாஸ் - என்பது என் மீது விதிக்கப்பட்ட "கடமை" (அம்ர்) என்று புரிகிறதா இல்லையா? 


திருமறை வழிகாட்டிடும் சத்தியப்பாதையில் என் வாழ்வை அமைத்துக் கொள்வது என்பது - ஒவ்வொரு இறையடியானின் தனிப்பட்ட பொறுப்பு தான் என்பதை - பின்வரும் இறை வசனமும் உணர்த்திடத் தவறவில்லை! ஒருவருக்கு இன்னொருவர் பொறுப்பாக ஆக மாட்டார்!


(நபியே!) நாம் மனிதர்கள் அனைவருக்காகவும் சத்தியத்துடனான இந்த வேதத்தை உம்மீது இறக்கியிருக்கின்றோம். இனி, யாரேனும் நேரிய வழியில் நடந்தால் அது அவருக்கே நன்மை தரும். யாரேனும் வழி தவறினாலும், வழி தவறியதன் தீயவிளைவு அவரையே சாரும். நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர். (39:41)


இஃக்லாஸ் என்பது சற்று ஆழமான விஷயம் தான் என்று தோன்றுகிறதல்லவா? நபித்தோழர்களுக்கும் கூட அப்படித்தான் தோன்றியிருக்கிறது! 


ஆனால் கவலை வேண்டாம்!  


திருமறையின் இதே அத்தியாயத்தின் மூலம் - நமது இஃக்லாஸை வளர்த்துக் கொள்ள இரண்டு முக்கியமான வழிமுறைகளைச் சொல்லித் தருகிறான் இறைவன்! 


அவை என்னென்ன? 


இன்ஷா அல்லாஹ் பார்ப்போம். 


இஃக்லாஸுக்குத் தேவை - இறைவனைப் பற்றிய விழிப்புணர்வே!

பகுதி - 5


***


இஃக்லாஸை - மனத்தூய்மையை - வளர்த்துக் கொள்ள - சூரத்துல் ஜுமர் - அத்தியாயத்தில் இறைவன் இரண்டு வழிமுறைக் கற்றுத் தருகின்றான்.  


ஒன்று - இரவு நேர வணக்கம் - அதாவது தஹஜ்ஜுத் 


இரண்டு: திருமறை அல்-குர்ஆனை எடுத்து ஓதுதல்



முதலில் இரவு நேர வணக்கத்தை எடுத்துக் கொள்வோம். 


 எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக  நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.”  (39:9)


இரவு நேர வணக்கத்துக்கும், இஃக்லாஸுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? 


உங்களைச் சுற்றியுள்ள ஊரே உறக்கத்தில்! முற்றிலும் நிசப்தமான சூழல்! நீங்கள் எழுந்து தொழுகிறீர்கள். அதாவது உங்கள் இறைவனுடன் உரையாடுகிறீர்கள்! இறைவனுடன் நீங்கள் முற்றிலும் தனிப்பட்ட முறையில் "உரையாடுவதற்கு" இதை விடப் பொருத்தமான வேறொன்று கிடையாது! உங்களுக்கும் உங்கள் இறைவனுக்கும் நடக்கின்ற இந்த உரையாடல் - இஃக்லாஸை வளர்த்துக் கொள்வதற்கு - மிக அற்புதமான வழிகளுள் ஒன்று என்றால் அது மிகையில்லை! 


ஏனெனில் நீங்கள் நிற்பது உங்கள் இறைவனுக்கு முன்னால்!  அவனோ உங்கள் "உள்ளத்தில் இருப்பதையெல்லாம் மிக அறிந்தவன். அவனிடத்தில் போய் நீங்கள் நடித்துக் கொண்டிருக்க முடியாது! உங்களின் நேர்மையான மனத்தூய்மையையும் அவன் அறிகிறான். உங்கள் உள்ளத்தின் ஊசலாட்டத்தையும் அவன் அறிகிறான். பின்னர் அவன் முன்  மனத்தூய்மை இல்லாமல் எப்படி அவனுடன் நீங்கள் உரையாடிட முடியும்? 


அவன் உள்ளங்களின் நிலைமைகளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(39:7)


அதே நேரத்தில், இரவு நேரத் தொழுகையாளிகளை நுண்ணறிவு மிக்கவர்கள் (உலுல் அல்பாப்) என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்! ஆமாம்! இஃக்லாஸுக்கு இப்படிப்பட்ட நுண்ணறிவும் அவசியம்! A high level of intellect!


***


அடுத்து - திருமறையை எடுத்து ஓதுதல்!


பின் வரும் இறை வசனத்தை சற்றே பொறுமையாகப் படித்துப் பாருங்கள். பின்னர் சிந்தியுங்கள். 


அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பானதாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன; தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து - விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் (திக்ருல்லாஹ்) இளகுகின்றன - இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை. (39:23)


அதாவது இது சடங்கு ரீதியான குர்ஆன் ஓதுதல் அன்று! முற்றிலும் உணர்வு பூர்வமான குர்ஆன் ஓதுதல் ஆகும். Reading with Feelings!


இது எப்படி சாத்தியமாகும்? 


முதலில் - திருமறையை நாம் ஓதுவது என்பது - இறைவன் நம்முடன் நடத்துகின்ற உரையாடல் என்ற எண்ணம் வேண்டும். அவசர அவசரமாக ஓதி விட்டு திருக்குர்ஆனை மூடி வைத்து விடக்கூடாது!


நீங்கள் ஓதக்கூடிய இறை வசனங்களில் - அல்லாஹ் "தனிப்பட்ட முறையில்" உங்களுக்கு என்ன சொல்ல வருகிறான் என்று சிந்தித்துக் கொண்டே ஓதிட வேண்டும். 


சிந்தனையுடன் நிறுத்தி நிறுத்தி ஓதிடும்போது - சில இடங்களில் - உங்கள் பொட்டில் அறைந்தாற்போல் - இறைவன் ஒரு செய்தியை உங்கள் உள்ளத்தில் போட்டது போல் நீங்கள் உணர்வீர்கள். அப்படியே ஓதுவதை நிறுத்தி விடுவீர்கள். கண்கள் கண்ணீரைக் கொட்டும். அப்போது அல்லாஹ்வின் நெருக்கத்தை நீங்கள் உணர்வீர்கள். 


விளைவு! கலப்படமற்ற மனத்தூய்மை! இஃக்லாஸ்! 


(39:23) - வசனத்தில் வரும் ஒரு சொல் நம் கவனத்துக்குரியது! 


அது தான் - "திக்ருல்லாஹ்"! 


இதற்கு இறை தியானம் அல்லது இறை சிந்தனை என்று மொழிபெயர்க்கப்படுகிறது! 


ஆனால் - திக்ர் என்ற சொல்லை நாம் சற்று ஆழமாக ஆய்வு செய்தால் - திக்ர் என்பதனை "விழிப்புணர்ச்சி" என்றும் அழைத்திட முடியும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.   


பின் வரும் இறை வசனத்தில் வருகின்ற -  "ல அல்லஹும்  யத்-ஃதக்கரூன்" (la-allahum-yad-dhakkarun)  என்ற சொல்லுக்கு  - "அவர்கள் விழிப்படையவேண்டும் என்பதற்காக" - என்று மொழிபெயர்க்கப் பட்டிருப்பதைக் கவனியுங்கள்.  


நாம் இந்தக் குர்ஆனில் மக்களுக்கு விதவிதமான எடுத்துக்காட்டுகளை கொடுத்திருக்கின்றோம், அவர்கள் விழிப்படையவேண்டும் என்பதற்காக! (39:27)


இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் - இஃக்லாஸ் எனும் மனத்தூய்மையை வளர்த்துக் கொள்வதற்கு அடிப்படைத் தேவை - விழிப்புணர்ச்சியே என்பது தான்.  


இதனையே ஆங்கிலத்தில்  - heedfulness, self awareness, consciousness - என்றெல்லாம் அழைக்கிறார்கள். 


ஆக - ஒரே வரியில் சொல்வதென்றால் - இஃக்லாஸுக்குத் தேவை - இறைவனைப் பற்றிய விழிப்புணர்வே!


அல்லாஹ் மிக அறிந்தவன்!


இஃக்லாஸ் அனைத்தையும் அழகு படுத்தி விடும்!

பகுதி - 6


***

இறையடியான் ஒருவன் இஃக்லாஸ் உடையவனாக விளங்கினால் - அந்த அடியானிடமிருந்து வெளிப்படுவது எது? 


ஒரே சொல்! அது தான் - "அழகு" என்பது!


அதாவது - இஃக்லாஸ் உடையவரிடத்திலிருந்து அழகு வெளிப்படும்! 


அழகிய பேச்சு வெளிப்படும்! 


அழகிய செயல்கள் வெளிப்படும்! 


அழகிய "நட்பு" அவரிடமிருந்து வெளிப்படும்! 


அதாவது அவரது ஒட்டு மொத்த வாழ்க்கையே - அழகிய வாழ்க்கையாக மாறி விடும்!


ஏன் அவ்வாறு சொல்கிறோம்? எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா?


இந்த அத்தியாயத்தில் பல இடங்களில் அல்லாஹ் "இஹ்ஸான்" என்ற சொல்லை திரும்பவும் திரும்பவும் பயன்படுத்தியுள்ளதைக்  கவனியுங்கள்! 


***


(நபியே!) நீர் கூறும்: “ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு (அல்லதீன அஹ்ஸனூ) அழகிய நன்மையே கிடைக்கும். (39:10) 


அவர்கள் சொல்லை - நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள் (அஹ்ஸனஹு). அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர். (39:18)


அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக (அஹ்ஸனல்  ஹதீஸ்) இறக்கியருளினான். (39:23)


அவர்களுக்கு, அவர்கள் விரும்புவது (எல்லாம்) அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கின்றது; இதுவே நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய (முஹ்ஸினீன்) நற்கூலியாகும். (39:34)



அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயவற்றையும் அவர்களை விட்டும் அல்லாஹ் விலக்கி, அவர்களுடைய கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகியதைக் கொண்டு (பி அஹ்ஸனி) அவர்களுக்குக் கொடுப்பான். (39:35)


நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் (அஹ்ஸன) பின்பற்றுங்கள். (39:55)


அல்லது: வேதனையைக் கண்ட சமயத்தில், “(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், அழகிய நன்மை செய்வோரில் (முஹ்ஸினீன்) ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்; (39:58)


***


சூரத்துல் ஜுமரின் மையக் கருத்து -  இஃக்லாஸ் - என்பதை முன்னரே பார்த்தோம். அத்தோடு இந்த அத்தியாயத்தில் அழகு பற்றி ஏன் திரும்பவும் திரும்பவும் இறைவன் நம் கவனத்தைத் திருப்புகிறான் என்பது குறித்தும் சிந்தியுங்கள். 


இஃக்லாஸுக்கும் இஹ்ஸானுக்கும் உள்ள இணைப்பு புரியும்.  


***


இஃக்லாஸின் வெளிப்பாடுகளுள் மிக முக்கியமான ஒன்று தான் எந்த ஒன்றிலும் அழகுணர்ச்சி!

இந்த அழகுணர்ச்சியே இஸ்லாமிய நாகரித்தின் அடிப்படை ஆணிவேர் ஆகும் என்றால் அது மிகையில்லை!


ஆனால் - மனத்தூய்மையில் - இஃக்லாஸில்- குறைபாடு ஏற்படும்போது தான் - நம்மிடையே - அழகற்ற, அருவறுப்பான, இழிவான - சொற்களும் செயல்களும் வெளிப்பட்டு விடுகின்றன! 


இறைவன் காப்பானாக! 


கவுன்ஸலிங் குறிப்பு ஒன்று உங்களுக்காக:


உங்கள் அன்றாட வாழ்க்கையில் அழகுணர்ச்சி குறைகிறதா? உங்கள் பேச்சில், செயலில், உறவுகளில், நட்புகளில், சமூக வாழ்வில், கொடுக்கல் வாங்கலில் - அழகுக் குறைபாட்டைக் காண்கிறீர்களா? 


நீங்கள் இஃக்லாஸில் கவனம் செலுத்துங்கள். எல்லாம் சரியாகி விடும். 


ஏனெனில் - இஃக்லாஸ் எல்லாவற்றையும் அழகு படுத்தி விடும்!   


இஃக்லாஸைக் கடைபிடிப்பது அவ்வளவு கடினமானதா? 

பகுதி - 7


***


நாம் முன்னரே குறிப்பிட்டிருந்தோம். இஃக்லாஸ் என்பது ஒரு சுமை என்று!


நடைமுறையில் பார்த்தால் - மனத்தூய்மையுடன் மார்க்கத்தைப் பின்பற்றுவது என்பது கடினமாகத் தான் தோன்றும். 


இதுவெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது என்று அதனை அலட்சியப்படுத்தி விடுவதற்குக் கூட  வாய்ப்பிருக்கிறது. 


ஆனால் - அல்லாஹ் நம்பிக்கையூட்டுகிறான்!


இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் - அதற்கென நாம் தொடர்படியான முயற்சிகளை (continuous efforts) மேற்கொள்கிறோமா என்பதைத் தான்!


நமது ஒவ்வொரு தொழுகையின் போதும், ஒவ்வொரு தடவை குர்ஆனை ஓதும் போதும், ஒவ்வொரு நற்செயலைச் செய்திடும்போதும் - நம்மை ஒரு தடவை சுய பரிசோதனை செய்து கொண்டிட வேண்டும்.


நமது ஒவ்வொரு செயலின் பின்னணியில், நம்மை அந்த செயலுக்கு ஊக்குவித்தது (motivation) எது என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். இறைவனிடன் உரையாடிட வேண்டும். "யா அல்லாஹ்! எனக்கு மனத்தூய்மையைத் தா!" என்று இறைஞ்சிக் கேட்டிட வேண்டும். 


***


இப்படிப்பட்ட நமது நேர்மையான முயற்சிகளினூடே - இறைவனின் நேரான வழியில் நாம் மனத்தூய்மையுடன் பயணித்துக் கொண்டிருக்கும் போதே - சில தவறுகள், சில சறுகல்கள், ஏற்பட்டு விட வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன!


புகழுக்கு அடிமையாகி விடுதல், பிறர் பாராட்டை எதிர்பார்த்தல், பிறரிடம் நாமே நமது நற்செயல்களைச் சொல்லிக் காட்டிக் கொண்டிருத்தல் (egotism), - இவற்றையெல்லாம் "அடியோடு" தவிர்ப்பது என்பது இயலாத காரியம் போல் தான்  தோன்றும்.  


இப்படிப்பட்ட தடுமாற்றங்கள் நமது வாழ்வில் தொடரும்போது நாம் ஒரு விதத்தில் நம்பிக்கை இழந்து விடுவோம். 


ஆனால் அல்லாஹ் நமக்குச் சொல்லும் ஆறுதல் வார்த்தை என்ன? 


(நபியே!) கூறுவீராக: “தங்கள் ஆன்மாக்களுக்குக் கொடுமை இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக, அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான்.

(39:53)


ஆம்! அல்லாஹ் கருணையாளன்! அவன் மன்னிப்பவன்!


அவன் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் - நேர்மையான தொடர்படியான முயற்சிகளே!


அதோடு மட்டுமல்ல! பின் வரும் இறை வசனத்தைப் பாருங்கள்: 


அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயவற்றையும் அவர்களை விட்டும் அல்லாஹ் விலக்கி, அவர்களுடைய கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகியதைக் கொண்டு அவர்களுக்குக் கொடுப்பான். (39:35)


கவனித்தீர்களா! 


நம் தீய செயல்களை அவன் நீக்கி விடுவது - ஒரு பெருங்கருணை! அதை விட இன்னொன்று - நமக்கு அவன் தரும் நற்கூலி நாம் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகானதாம்! 


சுப்ஹானல்லாஹ்! அவன் கருணைக்கு அளவு தான் ஏது? 


இன்னொரு விஷயத்தையும் நாம் இங்கே சேர்த்துச் சொல்லலாம். 


நம்மில் சிலருடைய "கடந்த காலம்" அவ்வளவு சிறந்ததாக இருந்திருக்காது. பாவ காரியங்களில் நாம் வீழ்ந்திருப்போம். அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கும் - இதே வசனம் (39:53) ஆறுதல் அளிக்கக் கூடியதாகவே அமைந்துள்ளது.  


"அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான்!" -  என்பதை சற்று கவனியுங்கள்!


மேலே நாம் சுட்டிக்காட்டிய (39:53) - இறை வசனத்தில்  அல்லாஹு தஆலா - நம்மை - என்னருமை அடியார்களே! என்றே அழைக்கின்றான்! இந்த அத்தியாயத்தில் பல இடங்களிலும் நம்மை "இபாத்! - "அவனுடைய அடியார்கள்" என்றே  அழைப்பதைக் காணலாம். இது இஃக்லாஸுக்கான இறைவனின் அழைப்பு என்பதை மறந்து விட வேண்டாம். 


எனவே மனம் தளரத் தேவையில்லை! நமது முயற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். 

ஏனெனில் - இஃக்லாஸ் என்பது மார்க்கத்தின் உன்னத நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல; மிக எளிய சாதாரண இறையடியார்களுக்கும் சொந்தமானது தான் என்பதை நினைவில் வையுங்கள். 


இஃக்லாஸும் மனித உறவுகளும் 

பகுதி - 8


***


இஃக்லாஸ் என்பது தனிப்பட்ட ஒவ்வொரு அடியானின் மிதும் சுமத்தப்பட்ட பொறுப்பு  என்பது உண்மை தான்! Individual responsibility. 


ஆனால் நம்மைச் சுற்றி நம்முடன் வாழ்பவர்களுடைய இஃக்லாஸ் குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லையா என்றால் - நாம் உண்மையிலேயே கவலைப்பட்டுத் தான் ஆக வேண்டும்! 


மற்றவர்களைப் பற்றிய கவலை எனக்கில்லை என்று எண்ணும் அளவுக்கு - இறைவனின் அடியார்களாகிய நாம் ஒன்றும் அப்படிப்பட்ட சுயநலக்காரர்கள் அல்லவே!


அப்படியானால் இதனை எங்கிருந்து துவங்குவது என்கிறீர்களா? 


நமது வீட்டிலிருந்தே தான்! வேறு எங்கிருந்து துவங்குவது? 


நமது அருமைப் பெற்றோர்கள், நாம் பொறுப்பேற்றுக் கட்டிக் கொண்டு வந்த வாழ்க்கைத் துணை, நாம் பெற்றெடுத்த நமது மழலைச் செல்வங்கள் - இவர்களிடமிருந்து தான் இஃக்லாஸுக்கான முயற்சிகளை நாம் துவங்கிட வேண்டும்.


ஏன் என்கிறீர்களா?  


உங்கள் பெற்றோரை, உங்கள் வாழ்க்கைத் துணையை,  உங்கள் குழந்தைகளை - நீங்கள் "இந்த உலகில்" அளவு கடந்து நேசிக்கிறீர்களா இல்லையா?   


ஆனால் இவர்களில் எவருக்கும் இஃக்லாஸ் என்பது இல்லை என்று வைத்துக் கொள்வோம். நாளை மறுமையில் நிலைமை என்னவாகும் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?  


பின் வரும் வசனம் குறித்து உண்மையிலேயே நாம் கவலைப்பட்டிடத்தான் வேண்டும்!


"கூறுவீராக: “தங்களுக்கும், தங்கள் #குடும்பத்தினருக்கும் கியாம நாளில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள் தாம் நிச்சயமாகப் பெரும் நஷ்டவாளிகள்; அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்க.” (39:15)


இஃக்லாஸ் உடையவர்கள் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு - கூட்டம் கூட்டமாக அவர்கள் சுவனத்தை நோக்கி அழைத்துச் செல்லப்படும் காட்சியை மனக்கண் முன் கொண்டு வந்து சிந்தித்துப் பாருங்கள்.   


எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்!”  (39:73)


அந்த நல்லடியார்களின் கூட்டத்தில் - உங்கள் பெற்றோர், உங்கள் துணை, உங்கள் குழந்தைகள் யாரும்

இல்லை என்றால் அது மிகப்பெரிய நஷ்டமா இல்லையா? 


எனவே குடும்பத்துக்குள் - இஃக்லாஸ் குறித்து சற்றே கவலைப்படுங்கள்; முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பாடம் நடத்துங்கள். குழுவாக அமர்ந்து கலந்துரையாடுங்கள். நீங்களே - இஃக்லாஸுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குங்கள்! இது மிக மிக அவசியம்! (Aattention: Ikhlas in parenting)


அடுத்து - நம் மீது அன்பு செலுத்தி நம்மைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும் உற்றத்தார், சுற்றத்தார், நண்பர்கள் - மீதும் கவனம் செலுத்துங்கள். அவர்கள் உங்களுக்குச் செய்கின்ற உபகாரங்களுக்கெல்லாம் நன்றி செலுத்துவதற்கு இதனை விட மிகச் சிறந்த வழி வேறொன்றும் இல்லை! ஏனெனில் மறுமையில் நாம் அவர்களைத் தொலைத்து விட அனுமதிக்கக் கூடாது அல்லவா?   


***

அடுத்து இன்னொரு மிக முக்கியமான விஷயம்!


நம்மைச் சுற்றி வாழுகின்ற மனிதர்களில் சிலர் - தீயவர்களாக விளங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இறைவனின் விஷயத்தில் "வரம்பு மீறி நடந்து கொள்பவர்களாக' இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நீதி நியாயம் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களிடத்தில் இஃக்லாஸும் இல்லை, இஹ்ஸானும் இல்லை என்று வைத்துக் கொள்வோம்.  


அத்தகையவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்வது?. 


இதோ திருமறை வசனம்: 


எவர்கள் ஷைத்தான்களுக்கு அடிபணிவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்கு நற்செய்தி இருக்கிறது. எனவே அந்த அடியார்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி அறிவித்து விடுவீராக! (39:17)


அரபி மூலத்தில் "தாகூத்" என்ற சொல் இடம்பெற்றிருப்பதைக் கவனியுங்கள். தாகூத் என்றால் வரம்பு மீறிய சக்திகள் என்று பொருள். அப்படிப்பட்ட சக்திகள் ஷைத்தான்களாகவும் இருக்கலாம்; மனிதர்களாகவும் இருக்கலாம். 


இதனை நாம் எப்படி விளங்கிக் கொள்ளலாம் என்றால் - இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணியாமல் - மனித "வரம்புகளை" மீறிச் செயல்படுபவர்களும் தாகூத் என்ற வட்டத்துக்குள் வந்து விடுவார்கள் என்பது தான்.  


எனவே இந்த வசனத்தில் அல்லாஹ் நமக்குச் சொல்வது - "அப்படிப்பட்ட வரம்பு மீறிச் செயல் படுகின்ற (தாகூத்) மனிதர்களுக்குக் கீழ்படிவதிலிருந்து விலகி விடுங்கள்!" - என்பது தான். அதன் பிறகே நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பிட முடியும் என்பது தான் இறைவன் நமக்குக் கற்றுத் தருகின்ற பாடம். 


அதாவது - மனத்தூய்மை உடையவனும் வரம்பு மீறியவனும் ஒன்று சேர்ந்திருக்க முடியாது!


அப்படிப்பட்ட வரம்பு மீறிய மனிதர்களிடமிருந்து நாம் விலகி விடவில்லையென்றால் என்னவாகும்? 

நமது இஃக்லாஸ் கெட்டுப்போய் விடும்! அல்லாஹ்வின் திருப்திக்காகச் செயல்படுவதிலிருந்து, வரம்பு மீறி விட்ட மனிதர்களின் திருப்திக்காக செயல்படத் தொடங்கி விடுவோம். அடுத்து நமது செயல்களில் இஹ்ஸான் இல்லாது போய் விடும்!   


இந்த அத்தியாயம் நமக்கு இன்னொரு பாடத்தையும் கற்றுத் தருகிறது. அதாவது நாம் யாருடன் சேர்ந்திட வேண்டும் என்பதையும், யாருடன் சேர்ந்திடக்கூடாது என்பதையும் கற்றுத் தருகிறது இந்த அத்தியாயம்!


இவ்வத்தியாயத்தின் 22-வது வசனத்தைப் படியுங்கள்.


அல்லாஹ் எவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார்; (ஆனால்) அல்லாஹ்வுடைய திக்ரை - நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான் - இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள். (39:22)


*

அதாவது - யாருடைய உள்ளம் மார்க்கத்தின் பக்கமே திரும்பியிருக்கிறதோ அவர்களையே நீங்கள் நெருங்கிச் செல்ல வேண்டும். யாருடைய உள்ளம் "துனியாவின்" பக்கம் திரும்பியிருக்கிறதோ அவர்களிடமிருந்து நீங்கள் விலகியே சென்றிட வேண்டும். இதுவே உங்கள் இஃக்லாஸை நீங்கள் பாதுகாத்துக் கொள்வதற்கான வழி! 


இறைவனே மிக அறிந்தவன்!


இறுதியாக சூரத்துல் ஜுமர் குறித்த நபிமொழி ஒன்றுடன் இதனை நிறைவு செய்வோம். 


அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரத்துல் ஜுமரை ஓதிடாமல், தூங்குவதற்காகத் தமது படுக்கைக்குச் செல்ல மாட்டார்கள். (சுனன் அத் திர்மிதி - 2920) 


***

குறிப்பு: 


ஒன்றைக் கவனித்தீர்களா? இஃக்லாஸ் குறித்த  இந்தப் பதிவுகளில் நாம் பயன்படுத்திய இறை வசனங்கள் அனைத்தும் சூரத்துல் ஜுமர் எனும் ஒரே அத்தியாயத்திலிருந்து எடுக்கப்பட்டவை தான். இப்படிப்பட்ட ஆய்வு முறை - இறைவன் நமக்குக் கற்றுத் தர விரும்புகின்ற கருத்துகளை - சற்று ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும் என்பது தான் நாம் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிற கருத்தாகும்! 


நாம் இது வரை இஃக்லாஸ் குறித்துப் பார்த்தது - ஒரு துவக்கம் தான் என்பதை நண்பர்கள் புரிந்து  கொள்ள வேண்டும். நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் - நீங்கள் மேலும் இஃக்லாஸ் குறித்து ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் - அறிஞர்கள் மூலமாகவும், ஆதார நூல்கள் மூலமாகவும். 

@@@

Comments