நபி யூசுப் (அலை) அவர்களின் நற்பண்புகள்!



திருமறை திருக்குர் ஆனின் பனிரெண்டாவது அத்தியாயமாகிய சூரா யூசுப் பல விதங்களில் தனித்தன்மை வாய்ந்த ஒரு அத்தியாயம். இந்த சூரா முழுவதும் - நபி யூசுப் அவர்களின் வாழ்க்கை வரலாறு மட்டுமே பல நுட்பங்களுடன் விளக்கப் படுகிறது!


எடுத்த எடுப்பிலேயே - கிளைமாக்ஸைச் சொல்லி விட்டு - நபி  யூசுப் அவர்களின் வரலாற்றை அதன் துவக்கத்திலிருந்து சொல்லத் தொடங்குகிறான் வல்லோன் அல்லாஹ் இந்த அத்தியாயத்தில்!


ஆனால் நாம் நபி யூசுப் (அலை) அவர்கள் வாழ்க்கை வரலாற்றை ஒரு கதை போலப் படித்து விட்டுச் சென்று விடக் கூடாது. 


திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயமும் (surah) ஒவ்வொரு விதத்தில் - "அஃக்லாக்குல் ஹஸனா" - எனும் நற்பண்புகளை (morality and ethics) நம் உள்ளத்துக்குள் ஆழமாக விதைக்கின்ற விதத்திலேயே அமையப் பெற்றிருக்கின்றது - என்பதை முந்தைய பதிவிலேயே சொல்லியிருந்தோம். 


***

 

நபி யூசுப் (அலை) அவர்களுடைய வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நற்பண்புகள் (morals and ethics) நிறைய உண்டு. 


பொதுவாக - இயல்பானதொரு சூழ்நிலையில், பிரச்னை எதுவுமற்ற சூழ் நிலைகளில் - ஒருவர் நற்பண்பு மிக்கவராக விளங்குவது என்பது எளிதானது தான்!    


ஆனால் - அதே மனிதர், ஒரு சில சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது - அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத் தான், அவர் உண்மையிலேயே நற்பண்பு உடையவரா இல்லையா என்பது வெளிச்சத்துக்கு வரும்! அதாவது சோதனைகள் தான் ஒருவருடைய நற்பண்புகள் உரசிப் பார்க்கப்படும் தருணங்கள் ஆகும்!  


இந்த அடிப்படையில், கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபி யூசுப் அவர்களின் வாழ்விலிருந்து நற்பண்புகளைக் கற்றுத் தருகிறான் இறைவன் - சூரா யூசுப் அத்தியாயத்தின் வழியாக!  


தம் சொந்த சகோதரர்களாலேயே கிணற்றுக்குள் தள்ளப்பட்ட காலத்திலிருந்து, அவர்கள் எகிப்தின் சிறையிலிருந்து விடுவிக்கப் படும் காலம் வரை - (எத்தனை ஆண்டுகள்?) அவர்கள் பட்ட துன்பங்களை நாம் அறிவோம். 


திருமறை அத்தியாயம் (சூரா யூசுப்), நபி யூசுப் அவர்களுடைய நற்பண்புகளை எப்படிப் படம் பிடித்துக் காட்டுகிறது என்பதை சற்று சுற்றிப் பார்த்து விட்டு வருவோமா?  


***


அவர் முஹ்ஸினீன்களில் ஒருவர்!


நபி யூசுப் அவர்களின் நற்பண்பு குறித்து - இறைவனே தருகின்ற நற்சான்று என்ன தெரியுமா? 


நபி யூசுப் அவர்களை - அவர் முஹ்ஸினீன்களில் ஒருவராக விளங்கினார் என்று  மூன்று இடங்களில் வைத்து சான்று பகர்கின்றான் இறைவன். 


12:22

-------

அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம். (குர்ஆன் 12:22)


மேலும் பார்க்க - (குர்ஆன் 12:56 / 12:90)


இவ்வசனத்தில் வரும் (muhsineen / முஹ்ஸினீன்) - எனும் சொல்லுக்கு நன்மை செய்வோர் என்ற மொழிபெயர்ப்பு மிகச் சாதாரணமானது. இறை நம்பிக்கையாளர்களின் ஆன்மிகப் படித்தரங்களை நான்காக வகைப்படுத்தி அவைகளைப் பின்  வருமாறு வரிசைப் படுத்தித் தருவார்கள் அபுல் அஃலா மவ்தூதி அவர்கள்: 


முஸ்லிமீன் - முஃமினீன் - முத்தகீன் - முஹ்ஸினீன்!


அதாவது முஹ்ஸினீன் என்பது ஆன்மிக நல்லொழுக்கப் படித்தரங்களில் மிக உயர்ந்த நிலையில் உள்ளதாகும்! இச்சொல்லை மிகச் சரியாக மொழிபெயர்ப்பது என்பதெல்லாம் எளிதான ஒன்றல்ல.  


**

இரண்டு இளைஞர்களின் சாட்சி! 


12:36

-------

அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், “நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான். எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம். (குர்ஆன் 12:36)


இதே முஹ்ஸினீன் என்ற சொல்லைப் பயன்படுத்தியே  - அந்த சிறைக்குள் இருந்த இரண்டு இளைஞர்கள் - நபி யூசுப் அவர்களை அழைக்கிறார்கள்.(இன்னா நராக்க மினல் முஹ்ஸினீன்). 


*** 


உடன் பிறந்த சகோதரர்களே தருகின்ற சான்று! 


12:78

-------

அவர்கள் (யூஸுஃபை நோக்கி), (இந்நாட்டின் அதிபதி) அஜீஸே! நிச்சயமாக இவருக்கு முதிர்ச்சியடைந்துள்ள வயோதிகத் தந்தை இருக்கிறார். எனவே அவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்ளும்; நிச்சயமாக நாங்கள் உம்மைப் பரோபகாரம் செய்வேரில் ஒருவராகவே காண்கிறோம்” என்று கூறினார்கள். (குர்ஆன் 12:78)


இங்கேயும் முஹ்ஸினீன் என்ற சொல்லே பயன்படுத்தப் பட்டுள்ளது! ( இன்னா நராக்க மினல் முஹ்ஸினீன்) 


***


இளமையில் கற்பொழுக்கம்! 


12:33

--------

அவர், “என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அதை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; (குர்ஆன் 12:33)


***


அந்தப் பெண்மணியும் அந்தப் பெண்களும் தரும் சாட்சியம்:  


12:51

--------

(இவ்விவரம் அறிந்த அரசர் அப் பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?” என்று கேட்டார்; (அதற்கு) அப் பெண்கள், “அல்லாஹ் எங்களை காப்பானாக! நாங்கள் அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் அறியவில்லை” என்று கூறினார்கள்; அஜீஸுடைய மனைவி, “இப்பொழுது (எல்லோருக்கும்) உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள். (குர்ஆன் 12:51)


கவனிக்க வேண்டிய குறிப்பு: 


அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் அறியவில்லை!


அவர் உண்மையாளர்களில் உள்ளவர்!


**


“யூஸுஃபே! உண்மையாளரே! (மீண்டும் சிறைவாசிகள்!)


12:46

-------


(சிறையில் யூஸுஃபை கண்ட) அவர், “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எனக்கு அறிவிப்பீராக; மக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களிடம் திரும்பிப் போய்(ச் சொல்ல) வேண்டியிருக்கிறது” (என்று கூறினார்). (குர்ஆன் 12:46)


"யா அய்யுஹஸ் -ஸித்தீக்!"


***


நான் துரோகம் செய்பவன் அல்ல!


12:52

--------

இ(வ் விசாரணையை நான் விரும்பிய)தன் காரணம்; “நிச்சயமாக அவர் (என் எஜமானர்) இல்லாத போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெற விடுவதில்லை என்பதை அறிவிப்பதற்காகவுமேயாகும். (குர்ஆன் 12:52)


***


துரோகம் செய்த தம் சகொதரர்களையே மன்னித்தல்!


12:96

--------


அதற்கவர், “இன்று உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கின்றான்” என்று கூறினார். (குர்ஆன் 12:92)


இதில் நுட்பம் ஒன்று இருக்கிறது. அந்த சகோதரர்கள் தங்கள் தவறை உணர்ந்து ஒப்புக் கொண்ட பின்னரே - அவர்களை அவர் மன்னித்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!


பார்க்க வேண்டிய வசனம்: (குர்ஆன் 12:91)


அதற்கவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உமக்குத் தவறு இழைத்தவர்களாக இருந்தும், நிச்சயமாக அல்லாஹ் எங்களை விட உம்மை மேன்மையுடையவராகத் தெரிவு செய்திருக்கின்றான்” என்று கூறினார்கள். (குர்ஆன்12:91)


***


பொறுமை மற்றும் இறைவனுக்கு நன்றியுணர்ச்சி (Sabr / Shukr)


12:90

-------


(அப்போது அவர்கள்) “நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்” என்று கூறினார். (குர்ஆன் 12:90)


***

இங்கே நாம் கவனிக்க வேண்டிய மிக மிக முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. அது இந்த அத்தியாயம் இறக்கியருளப்பட்ட நேரத்தில் நபித் தோழர்களின் நிலை என்ன என்பது தான் அது!


மக்கத்துக் குறைஷியர்களால் சொல்லொணாத் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டிருந்த நேரத்தில்தான் இந்த அத்தியாயம் இறக்கியருளப்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் தான் நபி யூசுப் அவர்களின் வாழ்க்கையை சுட்டிக்காட்டி - எப்படிப்பட்ட சூழ் நிலையிலும் நற்பண்புகளைக் கட்டிக் காத்திடுமாறு இந்த சூராவில் வைத்து அழைப்பு விடுக்கின்றான் அல்லாஹ்!


சோதனைகளால் நாமும் தான் சூழப்பட்டிருக்கின்றோம்! இங்கே தான் நமக்கும் படிப்பினைகள் இருக்கின்றன!

Comments