இளைஞர்களுக்காக...



அப்போது ஹள்ரத் யூசுப் நபியவர்கள் ஓர் இளைஞர். எந்தத் தவறும் செய்யாமலேயே சிறைக்கு அனுப்பப் பட்டவர். 

அவருடன் சிறையில் இன்னும் இருவர். அந்த இரு சிறைக்கைதிகளும் ஆளாளுக்கு கனவொன்றைக்  காணுகிறார்கள்.  

தங்களின் கனவுகளுக்கான விளக்கத்தை - யூசுப் அவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று வந்து விளக்கம் கேட்கிறார்கள். 

#அதற்கு அவர் கூறினார்: “இங்கு உங்களிருவருக்கும் வழங்கப்படும் உணவு உங்களிடம் வருவதற்கு முன்பே இக்கனவின் விளக்கத்தை உங்களுக்கு அறிவித்து விடுவேன். (12:37)

***

இங்கே சற்று நிறுத்தி - கேள்வி ஒன்றைக் கேட்போம். 

சிறையில் இருப்பதோ மூன்று பேர் தானே? அப்படியெனில் மூவருக்கும் தானே உணவு வந்து சேர வேண்டும்? ஏன் யூசுப் அவர்கள் - "உங்கள் இருவருக்குமான உணவு வந்து சேர்வதற்குள்...." - என்று சொல்கிறார்கள்? 

***

சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு அழகிய பாடங்கள் இங்கே இருக்கின்றன என்கிறது ஒரு திருமறை வசனம். 

#முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் இவ்வரலாறுகளில் பகுத்தறிவுடையோருக்கு (உலுல் அல்பாப்) அரிய படிப்பினை உள்ளது. (12:111)

***

எமக்குத் தோன்றுவது என்னவெனில் - நபி யூசுப் (அலை) அவர்கள் சிறையில் இருந்து கொண்டு நோன்பு வைத்திருந்திருக்க வேண்டும் என்பது தான்! 

***

அப்படியானால் மீண்டும் ஒரு கேள்வி:

ஏன் யூசுப் நபியவர்கள் சிறையில் இருந்து கொண்டு நோன்பிருக்க வேண்டும்? நோன்பிருக்க வேண்டிய தேவை அவர்களுக்கு என்ன? 

***

இங்கே தான் இளைஞர்களுக்கு ஒரு படிப்பினை இருக்கி|றது. 

யூசுப் நபியவர்களோ இளைஞர். கட்டிளம் காளை என்று சொல்வோமே. அது போல. 

அந்த அரண்மனைப் பெண்கள் யூசுப் நபியை அடைந்து கொள்வற்கு செய்த முயற்சிகளையெல்லாம் சூரத் யூசுப் அத்தியாயம் படம் பிடித்துக் காட்டுவதை நாம் அறிவோம்.  

தமக்கு ஏற்படுகின்ற பாலியல் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக அவர்கள் நோன்பிருந்து இருக்க வேண்டும் என்றே நமக்குத் தோன்றுகிறது. 

இன்றைய இளைஞர்களுக்கு இன்றைய சூழலில் அவசியமானதொரு பாடம் இது! 

அல்லாஹ்வே மிக அறிந்தவன்!  

#Premarital_Counseling

Comments