சூரத்துல் ஃபுர்கான் கற்றுத் தரும் நற்பண்புகள்!

 


(Surah al Furqan and Islamic Ethics) 


சூரத்துல் ஃபுர்கான் - இது திருமறை திருக்குர்ஆனின் - 25-வது அத்தியாயம். 


இந்த அத்தியாயத்தின் பேசு பொருளே -  அல்-ஃபுர்கான் தான்!  அல்-ஃபுர்கான் என்பதன் பொருள் - நன்மை தீமைகளைப் பிரித்தறிவிக்கும் உரைகல் (touchstone) - என்பதாகும். திருமறை திருக்குர்ஆனின் மற்றுமொரு பெயர்களில் ஒன்று தான் அல்-ஃபுர்கான்.  



***

சூரத்துல் ஃபுர்கான் நமக்குக் கற்றுத் தரும் நற்பண்புகள் என்னென்ன என்பதை அறிந்திடு முன் - இந்த அத்தியாயம் இறக்கியருளப்பட்ட சூழலை (context) நாம் புரிந்து கொள்வது அவசியம். 


இவ்வத்தியாயம் நபியவர்களின் ஆறாவது நபித்துவ ஆண்டில் இறக்கியருளப்பட்டது. 


ஒரு பக்கம் உளவியல் ரீதியாக அண்ணலார் அவர்களின் தூதுத்துவம் பற்றியும், அண்ணலார் அவர்களின்  தனிப்பட்ட குண நலம் பற்றியும் கூட அவதூறுகளைக் (gossip) குறைஷியர்கள் அள்ளி வீசிக் கொண்டிருந்த நேரம் அது. 


இன்னொரு பக்கம் அவர்களின் கடுமையான சித்திரவதைகளைத் தாங்க இயலாத சூழலில் - அண்ணலார் (ஸல்) நபித்தோழர்களில் ஒரு குழுவினரை - அருகில் உள்ள அபிசீனிய நாட்டுக்கு அனுப்பி வைத்த கால கட்டம் அது. 


***


இந்த அத்தியாயம் - நன்மை - தீமைகளைப் பிரித்துக் காட்டுகின்ற உரைகல்லாகிய திருக்குர்ஆனை இறக்கி வைத்த இறைவன் மிகுந்த பாக்கியம் (தபாரக்) பொருந்தியவன் என்ற முழக்கத்தோடு தொடங்குகிறது!   


அடுத்து  - குறைஷியரின் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தகுந்த பதில்களை மிகத்தெளிவாகவும், ஆணித்தரமாகவும் எடுத்துரைக்கிறது இந்த அத்தியாயம்.  


அடுத்து குறைஷியரின் சமூக அமைப்பின் அடித்தளத்தைக் கேள்விக்குட்படுத்தி - அந்த சமூகம் எப்படிப்பட்ட சமூகம் என்று தோலுரித்துக் காட்டுகிறது. 


அடுத்து - வரலாற்றில் இதற்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்ட இறைத்தூதர்களை எதிர்த்த சமூகங்கள் என்ன விளைவுகளைச் சந்தித்தன என்பதையும் எச்சரித்துக் காட்டிடத் தவறவில்லை இந்த அத்தியாயம். 


இத்தனைக்கும் பின்னர் தான் ரஹ்மானின் நல்லடியார்களுடைய (இபாதுர் ரஹ்மான்) நற்குணங்கள் என்னவாகவெல்லாம் இருந்திட வேண்டும் என்று பட்டியல் ஒன்றையும் முன் வைக்கிறது இந்த அத்தியாயம்.  


***


குறைஷியரின் அன்றைய சமூகம் எப்படிப்பட்ட சமூகம் என்பதையும் சேர்த்து, இறைத்தூதர்களை எதிர்த்து நின்ற சமூகங்கள் எல்லாம் எப்படிப்பட்ட சமூகங்கள் என்பதை - இந்த அத்தியாயம் அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.  இந்த சமூகங்களை வழி நடத்துபவர்களும் அவர்களைக் கண்ணை மூடிப் பின்பற்றுபவர்களும் எப்படிப்பட்டவர்கள்? 


1 கட்டுப்பாடுகளற்ற உல்லாச வாழ்க்கை. எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டும் என்ற நோக்கில், மித மிஞ்சிய நுகர்வாளர்களாக விளங்குவார்கள்! (25:18)


2 மனோ இச்சை தாம் இவர்களுக்குக் கடவுள்! (25:43)


3 ஆணவத்தில் வரம்பு மீறிச் செயல்படுபவர்களாக அவர்கள் விளங்குவார்கள்.  (25:21)


4 முற்றிலும் இறைவனை மறந்தவர்களாக, இறை சிந்தனையற்றவர்களாக விளங்குவார்கள்! (25:18) 


5 மனோ இச்சையும் ஆணவமும் இவர்களிடம் கைகோர்த்திருப்பதால் -  பொய்யும் (zoor) அநியாயமும் (zulm) தலை விரித்து ஆடும் இச்சமூக அமைப்பில்!  (25:4) (25:8) (25:19) (25:27)


***


இந்தச் சமூக அமைப்பு எப்படி உருவாகிறது? 


இறைவன் ஒரு சமூகத்துக்கு தன் அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்து விடுகிறான். ஆனால் அந்த மக்களோ அவை அனைத்துக்கும் தங்களையே "உரிமையாளர்கள்" என்று எண்ணிக் கொள்கிறார்கள்.  


அதனால் அனைத்தையும் அவர்கள் விருப்பம் போல் அனுபவித்து (consumerism without limits) வாழ்கிறார்கள். அந்த அருட்கொடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இல்லை. அந்த அருட்கொடைகளில் மற்றவர்களின் உரிமை பற்றிக் கவலைப்படவும் இல்லை!  இதுவே முதலாவது ஸ்டெப்!


இரண்டாவது ஸ்டெப் - அருட்கொடைகள் அனைத்தையும் அள்ளி வழங்கிக் கொண்டிருந்த இறைவனை அவர்கள் மறந்து விடுகிறார்கள். Atheism! Skepticism! Agnosticism! 


இதனால் ஏற்படுகின்ற இயல்பான விளைவு என்ன தெரியுமா? யாருக்கும் எந்த ஒரு பயனும் அற்ற சமூகமாக மாறிப் போய் விடுகின்றன அத்தகைய சமூகங்கள். இதனையே இறைவன் " கவ்மன் பூரா- அழிந்து போகும் சமூகம் என்று பெயரிட்டு அழைக்கின்றான். 


பின் வரும் இறை வசனத்தைக் கூர்ந்து நோக்குங்கள்: 


அவர்கள் - “இறைவா! நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே! எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய்; அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள்; மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்” என்று கூறுவர். (25:18)


Muhammad Asad's translation: "Thou didst allow them and their forefathers to enjoy [the pleasures of] life to such an extent that they forgot all remembrance [of Thee]: for they were people devoid of all good.“ (25:18 / part of the verse)


இந்த வசனத்தின் இறுதியில் இடம் பெற்றிருக்கும் மூன்று சொற்களை எடுத்துக் கொள்வோம்: 


மத்தஃதஹும் - நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய். You allowed them and their forefathers to enjoy the pleasures of life.  


நஸுத் திக்ர்  - அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள். They forgot all remembrance of God. 


கவ்மன் பூரா - அழிந்து போகும் கூட்டத்தார். They were people devoid of all good.


இப்படிப்பட்ட சமூகங்கள் இறுதியில் அழிவையே சந்திக்கின்றன! இதற்கான வரலாற்றுச் சான்றுகளைக் குறித்தும்  இதே அத்தியாயம் எச்சரிக்கத் தவறவில்லை! பார்க்க: (25:35-40) 


***


இப்படிப்பட்ட சமூக அமைப்பு தலைமுறை தலைமுறையாகத் தொடர்வதற்கான இரண்டு அடிப்படைக் காரணிகள் என்னென்ன? 


1 ஆணவம் பிடித்தவர்கள் தருகின்ற சமூக அழுத்தம் (25:28)


2 பெரும்பான்மையான மக்களின் மந்தை மனப்பான்மை (25:44)


***


இப்படிப்பட்ட ஒரு சமூக அமைப்பை அதன் அழிவிலிருந்து பாதுகாத்திடத் தான் - இறைத்தூதர்களை அனுப்பி வைத்திருக்கிறான் இறைவன். 


அண்ணல் நபியவர்களைப் பொறுத்தவரை - தம் நபித்துவத்தை ஏற்க மறுத்த அந்த குறைஷியரின் கொடுமைகளுக்கிடையே தான் - இந்த அத்தியாயத்தில் - கருணை மிக்க ரஹ்மானின் நல்லடியார்கள் (இபாதுர் ரஹ்மான்) எப்படிப்பட்டவர்களாக விளங்கிட வேண்டும் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுகிறான் பாக்கியம் அனைத்துக்கும் சொந்தக்கார இறைவன்!


இறைவன் சுட்டிக் காட்டுகின்ற பட்டியல் இதோ: 


விரிவஞ்சி சுருக்கமாக இங்கே பட்டியலிடுவோம். 


1 அர்ரஹ்மானுடைய அடியார்கள் – பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்! (25:63) 


2 மூடர்கள் அவர்களுடன் பேசிட முற்பட்டால் “ஸலாம்”  சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். (25:63)

 

3 அவர்கள் இறைவனுக்கு இணை வைத்திட மாட்டார்கள்! (25:68); இறை வணக்கத்தில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள்! (25:64); நரக வேதனைக்கு அஞ்சி - இறைவனிடம் இறைஞ்சிக் கொண்டிருப்பார்கள். (25:65); இறைவனிடம் பாவ மன்னிப்பைக் கேட்கக்கூடியவர்களாக விளங்குவார்கள்! (25:70) ( a total spiritual orientation)


4 அவர்கள் செலவு செய்வதில் நடு நிலையைக் கடைபிடிப்பார்கள்! (25:67) (no to consumerism)

 

5 எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள்! (25:68)


6 விபசாரமும் செய்ய மாட்டார்கள்! (25:68) 


7 அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை. (25:72) (honest and genuine life) 


8 ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால் கண்ணியமானவர்களாய்க் கடந்து சென்றுவிடுவார்கள். (25:72) (dignified)


9 இறை வசனங்களை செவிமடுத்தால் அவர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொண்டு விட மாட்டார்கள்! (25:73) (approach the Quran with deep reflection) 


10 குடும்பத்தினருக்குக் கண் குளிர்ச்சியாக விளங்குவார்கள்! (25:74) (emotionally available to family)


11 இறையச்சம் உடையவர்களுக்குத் தங்களைத் தலைவர்களாக்கிட இ\றைவனிடம் வேண்டுவார்கள்! (25:74) 


12 அவர்கள் பொறுமை மிக்கவர்களாகவும் விளங்குவார்கள்! (25:75)


**


ஒன்றை நன்கு கவனியுங்கள்! இந்த அத்தியாயம் இறக்கியருளப்பட்ட சமயத்தில் - இப்படிப்பட்ட இறைவனின் நல்லடியார்களாக விளங்கிய நபித்தோழர்களின் எண்ணிக்கை - சுமார் ஒரு நூற்றைம்பது பேருக்குள் மட்டுமே! ஆனால் எண்ணிக்கையில் மிகவும் குறைந்த இத்தகைய நல்லடியார்களை வைத்துத் தான் - ஒரு மிகப்பெரிய இஸ்லாமிய நாகரிகம் ஒன்றை உருவாக்கிக் காட்டினான் இறைவன்!


இன்னொன்றையும் சொல்லி இதனை நிறைவு செய்வோம். மிகவும் வருந்தத் தக்க உண்மை என்னவென்றால் - இன்றைய நவீன கால முஸ்லிம் சமூகம் - "இபாதுர் ரஹ்மானின்" பாதையில் செல்வதற்குப் பதிலாக, "கவ்மன் பூரா" சமூகங்களைக் காப்பியடிக்கக் கூடிய பாதையில் - தலைமுறை தலை முறையாக - சென்று கொண்டிருக்கிறது என்பது தான் அந்தக் கசப்பான உண்மை!


***


படிப்பினை: 


நான் யார்? நான் இபாதுர் ரஹ்மானைச் சேர்ந்தவனா? அல்லது நான் - கவ்மன் பூரா- சமூகக் கட்டமைப்பைச் சேர்ந்தவனா? 


சிந்தனைக்கு: 


திருக்குர்ஆனின் ஒவ்வொரு  அத்தியாயம் குறித்தும், அது இறக்கியருளப் படுகின்ற சூழல், அந்த அத்தியாயத்தின் மையமான பேசு பொருள் - இவைகளை அறிந்து கொள்ள முற்படவில்லை எனில் - எல்லா அத்தியாயங்களும் நமக்கு ஒன்று போல் தான் தோன்றும். 


இறைவனே மிக அறிந்தவன்!

Comments