இறை நியதி அல்லது இறைவனின் வழிமுறை - மீள்

 1 இறை நியதி அல்லது இறைவனின் வழிமுறை


(சுனன் இலாஹிய்யா)

----------------------------


#


மீள்


அனைத்தையும் படைத்துக் காக்கும் எல்லாம் வல்ல இறைவன், தன் படைப்பினங்கள் விஷயத்தில் என்றுமே மாறாத சில பொது விதிகளை விதித்து வைத்திருக்கின்றான்!


மாற்றத்துக்குள்ளாகாத இந்த விதிமுறைகளை - இறை நியதி என்றோ, இறைவனின் வழிமுறை என்றோ, அல்லது பொதுவாக உலகப் பொது விதி (Universal Laws) என்றோ குறிப்பிடலாம். அரபியில் இதனை சுனன் இலாஹிய்யா என்று அறிஞர்கள் அழைக்கிறார்கள். ஆங்கிலத்திலே இதனை இவ்வாறு குறிப்பிடுகிறார் - ஜாஸிர் அவ்தா எனும் மகாஸித் அறிஞர்: CONSISTENT CREATIVE DIVINE WILL. 


***


இறைவனால் விதிக்கப்பட்டு விட்ட நியதிகள் எந்த ஒன்றும் எந்த ஒரு பொழுதும், எந்த ஒரு மாற்றத்துக்கும் ஆளாவதில்லை!  இறை நியதிகள் ஒரு போதும் மாறவே மாறாது என்பதை உணர்த்தும் இறை வசனங்கள் இதோ: 


"திடமாக, உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம் தூதர்களைப் பொறுத்தும் இது வழிமுறையாக இருந்து வந்தது; நம்முடைய (இவ்)வழிமுறையில் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்."  (17:77)


"....அல்லாஹ்வின் அவ்வழியில் யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்; அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்." (35:43)


***


நம்மைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட விஷயம் - அது இறைவனால் விதிக்கப்பட்டு விட்ட விதி என்று வந்து விட்டால் - அந்த விதிக்கொப்ப நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டியது தான் நம்முடைய பணி! அதில் எந்த மாற்றத்தையும் யாராலும் கொண்டு வர இயலாது!  அந்த விதிக்கு முறணான பாதையில் நாம் அடியெடுத்தும் வைத்திடக் கூடாது. 


இது குறித்து அறிஞர் ஜாஸிர் அவ்தா அவர்கள் சொல்வதென்ன?  


1 இறை நியதிகளுக்கொப்பவே நமது அனைத்து செயல்பாடுகளையும் நாம் அமைத்துக் கொண்டிட வேண்டும். அதாவது அந்த விதிகளோடு ஒத்திசைந்தே  நாம் கடமையாற்றிட வேண்டும். We are supposed to be coherent with the Universal Laws!


2 அந்த இறை நியதிகளுக்கெதிராக ஒரு போதும் நாம் செயல்பட்டு விடக் கூடாது. அது நம் வாழ்வின் எந்த அங்கமாக இருந்தாலும் சரியே! We are not supposed to go against these Universal Laws!


3 அவ்வாறு அந்த இறை நியதிகளுடன் மோதல் போக்கினை மேற்கொண்டால், இப்பேரண்டமே நம்மைத் தண்டித்து விடும்   என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். Universe punishes us if we go against the Universal Laws!


ஒரு கால் அந்த இறை நியதிகளோடு நாம் முரண்பட்டு நின்றால் - குழப்பம் தான் மிஞ்சும்! (Fasad / corruption). அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாம் தான் பொறுப்பு. இறைவனை யாரும் குறை சொல்லி விட முடியாது.  



***


இங்கே இரண்டு உதாரணங்களைத் தருவோம்: 



13:11 (part)

-------

#எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.


ஆமாம். நாமே நமது நிலைகளை சீர்தூக்கிப் பார்த்து, நம்மை நாமே திருத்திக் கொள்ள முன்வரவில்லை (islah) என்றால் - அல்லாஹு தஆலா நம்மை ஒரு போதும் சீர்திருத்திடவே மாட்டான் - என்பது சமூக அளவில் நாம் கவனித்திட வேண்டிய மிக முக்கியமானதொரு இறை நியதி ஆகும்!  (The Law of Change - Sunan al Taghayyur)


 ***


48: 29 (part)

--------

#இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோபமூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.


இந்த இறை வசனத்தில் மாற்றம் என்பது படிப்படியானது (The Law of Gradualism - Sunal al Tadarruj)

என்பதைத் தாவரம் ஒன்றின் படிப்படியான வளர்ச்சியை வைத்து விளக்குகிறான் இறைவன். அதாவது சமூக மாற்றம் என்பது படிப்படியானது என்பதுவும் ஒரு இறை நியதி தான் என்பதை நம் புரிந்து கொள்வதற்காக.


***


மாற்றத்துக்குள்ளாகாத இப்படிப்பட்ட இறை நியதிகளை நாம் புரிந்து கொள்வது, நாம் நமது எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்கு மிகவும் அவசியம் என்றால் அது மிகையாகாது!


@@@


"சமூகம் கெட்டுப் போய் விட்டது?"

----------------------------------------


(இதற்கு முந்தைய பதிவின் தொடர்ர்சியாக வைத்து இதனைப் படியுங்கள்)



நாம் தொடர்படியாக கவனம் செலுத்திட வேண்டிய அடிப்படை சீர்திருத்தப் பணிகள்:


1 குழந்தைகளுக்கான மக்தப் வகுப்புகள்  


2 இளைஞர்களுக்கான பொதுவான தஸ்கியா வகுப்புகள் 


3 பெண்களுக்கான குடும்ப இஸ்லாமிய வகுப்புகள் 



இவற்றில் நம் ஒவ்வொருக்கும் பொறுப்பும் பங்களிப்பும் இருக்கிறது. நீங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே உங்கள் பங்களிப்பைத் தொடங்குங்கள். 


**


இம்மூன்று அடிப்படைப் பணிகளையும் "இயக்கம் சாரா" பணிகளாக அமைத்திட வேண்டிய அவசியம் ஒன்று இருக்கிறது. 


அடுத்து - வகுப்புகள் நடத்தும் வழிமுறைகளில் (teaching methodology) மாற்றங்கள் கொண்டு வருவதும் அத்தியாவசியமானது. இல்லாவிட்டால் இளைஞர்களையும் கவர முடியாது. ஏன்? நம் குழந்தைகளையும் கவர முடியாது!


***

இந்த அடிப்படைப் பணிகளில் தங்களது பங்களிப்பைச் செய்ய இயலாதவர்கள் - குறைந்த பட்சம் - இது குறித்து சமூகத்திடம் தொடர்ந்து கவலையுடன் பேசிக் கொண்டாவது (serious dialogue and discussion) இருங்கள். ஏனெனில் - அல்லாஹ் யாரை வைத்து, எப்போது, எப்படி வேலை வாங்குவான் என்பது நமக்குத் தெரியாது. 


அத்தோடு தயவு செய்து "சமூகம் கெட்டுப் போய் விட்டது" - என்று புலம்பித் திரிவதையும் நிறுத்திடுவோம்! 


@@@


2 சுற்றுப்புறச் சூழலும் சுனன் இலாஹிய்யாவும் 

------------------------------------------------


இதற்கு முந்தைய சுனன் இலாஹிய்யா குறித்த பதிவு ஒன்றின் பின்னூட்டத்தில் அருமைச் சகோதரர் லஃபீஸ் ஷஹீத் அவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:   


Lafees Shaheed: // மார்க்கத்தில் எப்படி மாறக் கூடியது (Mutable), மாறவே மாறாதது (Immutable) என்று உள்ளதோ அது போலவே பிரபஞ்சத்திலும் அதாவது பெளதீக மற்றும் சமூக விதிகளிலும் மாறக் கூடியது, மாற முடியாதது என்று இரண்டு அம்சங்கள் உண்டும்.//


ஆம்! இறை நியதிகள் என்பவை - இறைவனின் படைப்புகள் அனைத்தையும் தழுவி நிற்பவை! அவை - மனிதனின் வாழ்வையும் (social world) உள்ளடக்கி இருக்கும். நாம் வாழுகின்ற இப்பிரபஞ்சத்தையும் (natural world) தழுவியிருக்கும்.  


ஆனால் பொதுவாகவே - முஸ்லிம்களாகிய நாம் நமது சுற்றுப் புறச்சூழல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவ்வளவாக அக்கரை காட்டுவ்தில்லை! 


உண்மையிலேயே சொல்லப்போனால் - சுற்றுப்புறச் சூழல் குறித்து கவலைப் படுபவர்களிலும் கவனம் செலுத்துபவர்களிலும் முஸ்லிம்களாகிய நாம் தான் முன்னோடிகளாகத் திகழ்ந்திருக்க வேண்டும்.


ஏனெனில் - சுற்றுப் புறச்சூழலைப் பொருத்தவரை மிகவும் ஆழமான, பரந்து விரிந்த, முழுமையான உலகப்பார்வை ஒன்றை (World View) திருமறை மனித குலத்துக்கு வழங்கியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.     


ஆனால் திருக்குர்ஆன் - சுற்றுப்புறச் சூழல் குறித்து - எப்படிப்பட்ட உலகப் பார்வை ஒன்றை நமக்கு வழங்குகிறது என்பதை அறிந்து கொள்வதில் நாம் தான் போதிய கவனம் செலுத்திடவில்லை. 


***


சுற்றுப் புறச் சூழல் குறித்த திருமறையின் உலகப்பார்வையைப் புரிந்து கொள்ள - திருமறை எடுத்தியம்புகின்ற - இறை நியதிகளைப் புரிந்து கொள்வது அவசியம்.  


திருமறை வசனங்களை ஆதாரமாக வைத்து - மகாஸித் அறிஞர் ஜாஸிர் அவ்தா அவர்கள் - சுட்டிக் காட்டுகின்ற ஒரு சில இறை நியதிகளை, உலகப் பொது விதிகளை இங்கே சுட்டிக் காட்டுவோம்.   


***


1 அனைத்தையும் படைத்தவன் அந்த இறைவன் ஒருவனே!

(Unity of Creation / Sunan al Wahda)


2 படைப்பினங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று பிணைக்கப் பட்டவையே!

(Law of Connectivity  / Sunnat al Ratq or Sunan al Tawaasul)


3 அனைத்துப் படைப்பினங்களும் ஜோடி ஜோடியாகவே படைக்கப்பட்டுள்ளன!

(The Law of Parity  / Sunal al-Tazaawuj)


4 படைப்பினங்கள் ஒவ்வொன்றிலும் பன்மைத்துவம் உண்டு!

(Law of Diversity  / Sunan al - Ikhtilaaf)


5 படைப்பினங்கள் அனைத்தும் சம நிலைப்படுத்தப்பட்டுள்ளன!

(The Law of Balance - Sunan al Mawzoon)


6 சுழற்சி எனும் நியதி!

(The Law of Cycle - Sunan al Dawraat)


7 உணவு மற்றும் வளங்களின் பங்கீட்டு நியதி!

(The Law of Providence - Sunan al-Rizq)


8 மாற்றம் எனும் நியதி!

(The Law of Change - Sunan al Taghayyur)


9 மாற்றம் என்பது படிப்படியானது!

(The Law of Gradualism - Sunal al Tadarruj)


10 சோதனை எனும் நியதி!

(The Law of Trials - Sunan al Ibtilah)


11 எதிர் வினை எனும் நியதி!

(The Law of Repayment / Sunan of Jazaa)

 


***


திருமறை சுட்டிக் காட்டுகின்ற சூழலியல் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு இறை நியதியையும் நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள திருமறை ஆய்வு மிக அவசியம்! அவ்வாறு ஆழமாக ஆய்வு செய்வதன் மூலம் - ஒட்டு மொத்த உலகத்தையும் பாதித்திருக்கின்ற - சுற்றுபுறச் சூழல் சம்பந்தப்பட்ட அனைத்து சிக்கல்களுக்கும் - முழுமையான தீர்வு சொல்லக் கூடியவர்களாக நாம் விளங்கிட முடியும்! 


நம்பிக்கை அளிக்கிறது! உலக அளவில் - பல மார்க்க அறிஞர்கள் இது குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். 


அல்லாஹ் வழிகாட்டுவானாக! 


@@@


3 படைப்பினங்கள் அனைத்துக்கும் மூலம் - ஒரே இறைவனே!

------------------------------------------------------------------


(Unity of Origin / Unity of Creation/ Sunan al Wahda)


இறைவனின் வழிமுறைகளைக் குறித்திடும் "இறை நியதிகளுள்" முதன்மையானது - எல்லாப் படைப்பினங்களையும் படைத்தவன் (al-Khaliq - The Creator) அந்த இறைவன் ஒருவனே என்பது தான்! அவன் தான் அல்லாஹ்! 


சில திருமறை வசனங்களைப் பார்ப்போம்: 


"அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்." (குர்ஆன் 6:102)


"...... (நபியே! நீர்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்”. (குர்ஆன்13:16)


மேலும் பார்க்க திருக்குர்ஆன்:  39:62 / 40:62


இறைவனே படைப்பாளன் எனும் இந்த இறை நியதி நம்மிடம் எதனை எதிர்பார்க்கிறது? 


1 படைப்பாளன் என்ற முறையில் - இறைவனே அனைத்துக்கும் சொந்தக்காரன் (Ownership belongs to God) என்ற எண்ணத்தை  நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைத்து விடுகிறது இந்த இறை நியதி!

அந்த அடிப்படையில் - நம்மிடம் இருக்கும் எதுவுமே நமக்குச் சொந்தமில்லை எனும்போது - பணிவு உணர்ச்சி (humbleness) நமக்குள் மேலோங்கிட வேண்டும். 


2 நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் இறைவன் நமக்களித்த அருட்கொடை! (ni'mah - blessings). அவற்றை நமக்களித்தவன் இறைவனே என்ற சிந்தனை - நமக்குள் நன்றி உணர்ச்சியைத் (shukr) தோற்றுவித்திட வேண்டும். 


3 நாம் பெற்றிருக்கும் ஒவ்வொன்றும் - நமது அறிவால், நமது முயற்சியால் நாம் பெற்றுக் கொண்டவை என்ற சிந்தனை ஒருவனுக்குள் எழும்போது - இறைவனே படைப்பாளன் என்ற இந்த இறை நியதியோடு அவன் மோதுகின்றான்! அதுவே ஆணவத்தின் (arrogance) திறவுகோல். 


4 திருமறை குர்ஆன் கற்றுத்தரும் - ''படைப்பினங்கள் அனைத்துக்கும் மூலம் - ஒரே இறைவனே!" என்ற இந்த இறை நியதி -  நம்மைச் சுற்றியுள்ள "உலகத்தை" நாம் பார்க்கும் பார்வையை அப்படியே புரட்டிப் போட வல்லது! இந்த இறை நியதி - இறைவனின் படைப்புகள் அனைத்தையும் - ஒரே குடும்பமாகப் பார்த்திட வைக்கிறது. 


5 சமூக அளவில் - எல்லா மனிதர்களையும் தங்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகப் பார்த்திடும் அற்புதத்தை இந்த இறை நியதி நிகழ்த்திக் காட்டுகிறது.  "நீ கருப்பன்! நீ தாழ்த்தப் பட்டவன்! - என்று மற்றவர்களை இழிவு படுத்திப் பார்க்கும் எவரும் - இந்த இறை நியதியோடு தான் மோதுகிறார்! ஒருவர் முஸ்லிமாக இருந்து கொண்டு - "நீ ஏழை! நீ அநாதை!" - என்று பிறரை இழிவுடன் நோக்கினாலும் அவரும் இந்த இறை நியதியோடு மோதுபவரே! எனவே இங்கே உரிமைப் பறிப்பு என்பதற்கோ, மனித உரிமை மீறல் என்பதற்கோ இடமில்லை! 


6 சுற்றுப்புறச் சூழலைப் பொறுத்தவரை - இறைவன் வழங்கியிருக்கும் எந்த ஒரு அருட்கொடையையும் - இறைவனின் அனுமதியோடு (இதற்காகத் தான் பிஸ்மில்லாஹ்....) தம் தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ள வைக்கிறது இந்த இறை நியதி. உண்ணலாம். பருகலாம். என் விருப்பத்துக்கு வீண் விரயம் (israf / extravagance) செய்திட எனக்கு அனுமதி இல்லை என்பதைப் புரிந்து கொள்பவர் தான் இந்த இறை நியதியோடு ஒத்துப் போகிறார்! சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் எந்த ஒரு செயல்பாட்டையும் இந்த ஒரே இறை நியதி தடுத்து விடுகிறது என்றால் அது மிகையில்லை. 


7 முத்தாய்ப்பாக சொல்ல வேண்டுமெனில் - நமக்கும் - இறைவனின் படைப்புகளுக்கும் இடையே உள்ள உறவு என்பது - "கருணையின் வெளிப்பாடாக" - அமைந்திட வேண்டும் என்பது தான் இந்த இறை நியதி நம்மிடம் எதிர்பார்க்கும் "மாற்றம்"! அவர் யானையையும் மதித்து நடப்பார்; பூனையையும் மதித்து நடப்பார். ஏன்? எறும்பையும் கூடத்தான்! நபி சுலைமான் (அலை) அவர்களே இதற்குச் சான்று! (பார்க்க 27: 18-19). தவிக்கின்ற நாய்க்குத் தண்ணீர் தந்த பெண்மணி சுவர்க்கம் செல்வதும், பூனையைக் கட்டிப் போட்டு விட்டு உணவளிக்க மறுத்த பெண்மணி நரகம் செல்வதும் இதனால் தான்!   


***


இந்த ஒரே ஒரு இறை நியதியை மீறினால் மிஞ்சுவது - நாம் முன்னரே சுட்டிக் காட்டியது போல் - குழப்பம் தான்! (Fasaad - Corruption).  இதனைத் தான் இன்று நம்மைச் சுற்றியுள்ள உலகம் முழுவதிலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்! சமூகங்களுக்கிடையேயான சிக்கல்களுக்கும், நம் சுற்றுப்புறச்சூழல் சீர்கேடுகளைச் சந்தித்துக் கொண்டிருப்பதற்கும் - இந்த இறை நியதியை மீறியது தான் ஒரே காரணம்! 


@@@




4 மனிதனும் மற்ற படைப்பினங்களும் - ஓர் ஒப்பீடு!

-------------------------------------------------------------


மனிதர்களாகிய நமக்கும், நம்மைச் சுற்றியுள்ள இதர படைப்புகளுக்குமான பல ஒற்றுமைகளை - திருமறை திருக்குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது. ஒவ்வொன்றாக அவைகளைப் பார்ப்போம்: 


1 நாம் மட்டும் தான் இறைவனுக்கு ஸஜ்தா (சிரம் பணிதல்) செய்கின்றோமா என்ன? இல்லை! படைப்பினங்கள் அனைத்தும் படைத்த இறைவனுக்கே சிரம் பணிகின்றன! 


#வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - ஜீவராசிகளும், மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து (சிரம் பணிந்து) வணங்குகின்றன. அவர்கள் பெருமையடிப்பதில்லை. (குர்ஆன் 16:49)


ஆனால் மனிதன் மட்டும் தான் பெருமை அடிக்கிறான்!


2 நாம் மட்டும் தான் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹ் செய்கின்றோமா என்ன? படைப்பினங்கள் அனைத்தும் அதே இறைவனைத் துதித்து தஸ்பீஹ் செய்கின்றன!


#ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், (குர்ஆன் 17:44)


மற்றப் படைப்பினங்களுக்கும் ஆன்மிகம் உண்டு!


3 மனிதர்களாகிய நமக்கு மட்டும் தானா இஸ்லாமிய மார்க்கம்? படைப்பினங்கள் அனைத்தின் "மார்க்கம்" இஸ்லாம் தான்! படைப்பினங்கள் அனைத்தும், இறைவனுக்கே அடிபணிகின்றன எனும் அடிப்படையில், அவை   அனைத்தின் "மார்க்கம்" இஸ்லாம் தான்! 


#அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ளவை - விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே அடிபணிகின்றன (அரபியிலே "அஸ்லம"). மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும். (குர்ஆன் 3: 83)


அதாவது - படைத்த இறைவனுக்கு அடிபணிந்து விடுகின்ற மார்க்கம் தான் அனைத்துப் படைப்பினங்களின் மார்க்கமாகும்!


4  சமூக அமைப்பு என்பது மனித இனத்துக்கு மட்டுமே சொந்தமானதன்று! மற்ற படைப்பினங்களும் மனித இனத்தைப் போலவே அதனதன் அளவில் சமூகங்கள் தாம் என்கிறது திருமறை.


#பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற சமுதாயங்களே (communities) வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும். (குர்ஆன் 6:38)



5 உணர்வுகளும் உணர்ச்சிகளும் மனிதர்களுக்கு மட்டும் தானா? மற்ற படைப்பினங்களுக்கும் நம்மைப் போன்றே "உணர்வுகளும்" ''உணர்ச்சிகளும்'' இருக்கின்றன! தாவரங்களை இங்கே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். தாவரங்களுக்கும் சுய உணர்வு (Conscience) உண்டு!  தாவரங்களுக்கும், மகிழ்ச்சி, கவலை எல்லாம் இருக்கின்றன!


#இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, மகிழ்ச்சியான (ஜோடி ஜோடியாகப்) (Happy couple) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது. (குர்ஆன் 22:5)


அது போலவே - தாவரங்களின் கவலையைக் குறித்தும் திருமறை எடுத்துச் சொல்கிறது!


வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சோகத்துடனேயே விளைச்சலை வெளிப்படுத்துகிறது (they come out miserably); நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம்.(குர்ஆன் 7:58)


6 மனிதர்களுக்கு மட்டும்தானா ஒன்றைத் தேர்வு செய்திடும் சுதந்திரம்? மற்றப் படைப்பினங்களுக்கெல்லாம் தேர்வுச் சுதந்திரம்  இல்லையா?


#பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின. (குர்ஆன் 41:11) 


7 பேசுகின்ற ஆற்றல் மற்ற படைப்பிங்களுக்கும் உண்டு! 


#பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்." (குர்ஆன் 27:16)


அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும். (குர்ஆன் 41:21)


எறும்பும் பேசும்! (குர்ஆன் 27: 18)


***


பெற வேண்டிய படிப்பினை: 


நவீன மனிதன் - தன்னை - தான் வாழ்ந்து கொண்டிருக்கும் இப்பேரண்டத்தின் "உரிமையாளனாக" கருதிக் கொண்டிருக்கின்றான்!  The Modern Man considers him to be the Master of the whole universe! 


எனவே தான் - ஒட்டு மொத்த இயற்கை வளங்களையும் தன் மனம் போன போக்கில் வீணடிக்கவும், வளர்ச்சி எனும் பெயரில் அழித்து முடிக்கவும் துணிந்து விடுகிறான்!  


மனிதப் படைப்பு ஒரு சிறந்த படைப்பு என்பது உண்மை தான். ஆனால் மனிதன் இப்பேரண்டத்தின் ஏக போக உரிமையாளன் கிடையாது! 


மனிதன் என்பவன் - இறைவன் படைத்த கோடானு கோடி படைப்பினங்களில் ஒரு படைப்பு - என்பதுவும் உண்மை தானே? யதார்த்தம் தானே? மனிதனுக்கு என்னென்ன "உரிமைகள்" இங்கே இருக்கின்றனவோ, அது போலவே மற்ற படைப்பினங்களுக்கும் அவைகளுக்கே உரித்தான "உரிமைகள்" இங்கே உண்டு! 


இயற்கை வளங்கள் அனைத்தையும் மனிதனுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான் இறைவன். இவை அனைத்தையும் - மனிதன்- "இறை வரம்புக்குள்" நின்று பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு தான். ஒரு காலும் மனிதன் வரம்பு மீறி விடக்கூடாது!


மனிதன் படைக்கப்பட்டதற்கு எப்படி ஒரு நோக்கம் இருக்கிறதோ - அது போலவே - படைப்பினங்கள்  ஒவ்வொன்றின் இருப்புக்கும் அவைகளின் முறையான செயல்பாட்டுக்கும் - ஒவ்வொரு நோக்கம் உண்டு! அந்த நோக்கங்களை அவை மிகச் சரியாக நிறைவேற்றிக் கொண்டு தான் இருக்கின்றன!


தன்னை சீர்திருத்திக் கொள்ள வேண்டியது -  "நாம் தான்" -  என்பதை நவீன மனிதன் உணர்ந்தே ஆக வேண்டும்.  அவ்வாறு உணர்ந்து கொண்டால் - இப்பேரண்டம் சீர்பெறும். இல்லையேல் இப்பேரண்டத்தின் அழிவுக்கு அவனே காரணம் ஆகி விடுவான்! 


@@@

Comments