அநியாயம்!

 

1 அநியாயம்! 

Injustice / ظلم

***

இஸ்லாமிய நீதியியல் கோட்பாடு என்பது - 

நமது முழு வாழ்வையும் தழுவியது. 

தனி மனித நீதியில் தொடங்கி,  

உலகளாவிய மனித உரிமைகள் வரை - 

அனைத்தையும் உள்ளடக்கியது. 


அநீதி இழைப்பதும், 

பிறர் உரிமைகளைப் பறித்து விடுவதும், 

மனித உறவுகளை சீர்குலைத்து விடும்! 


இது குடும்பத்துக்குள்ளும், 

நம்மைச் சுற்றி வாழ்கின்ற 

இன்ன பிற மக்களுக்கிடையிலும், 

அன்பு, பாசம், சகோதரத்துவம் - 

எல்லாவற்றையும் சிதறடித்து விடும்! 


அநியாயம் செய்வோரை 

அல்லாஹ் நேசிக்கமாட்டான்.(குர்ஆன் - 3:57)


@@@


2 அநியாயம் - ஒரு சீரியஸான விஷயம்!


திருமறையில் அடிக்கடி இடம் பெற்றிருக்கும் ஒரு மிக முக்கியமான சொல் தான் -  ظلم - லுள்ம் என்பதாகும். 


அரபி-ஆங்கில அகராதியில் இச்சொல்லுக்கு இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: 


Zalama – to do wrong or evil; to wrong; treat unjustly; ill-treat; oppress; beset; harm; suppress; tyrannize; commit outrage; to act the tyrant; act tyrannically; 


Zulm – wrong; iniquity; injustice; unfairness; oppression; suppression; tyranny; 


தமிழில் சுருக்கமாக இவ்வாறு மொழி பெயர்க்கலாம்: 

அநியாயம் செய்தல்; 

ஒடுக்குதல்; நசுக்குதல்; 

அநீதி இழைத்தல்; 

அநியாயம்;  அநீதி; 

அடக்குமுறை; 

***

திருமறையில் இச்சொல் - அதன் பல்வேறு கிளைச் சொற்களுடன் மொத்தம் 289 தடவை இடம் பெற்றுள்ளன என்பதை வைத்தே - அநியாயம் என்பதை இறைவன் - எவ்வளவு சீரியஸான ஒரு விஷயமாக முன் வைத்து  நம்மை எச்சரிக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.  


@@@@


3 அநியாயம் - தடை செய்யப்பட்ட ஒன்று! 


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள்: 


"எனது அடியார்களே! நான் யாருக்கும் அநியாயம் செய்வதை எனக்கு நானே தடுக்கப்பட்டதாக ஆக்கியுள்ளேன். அது போன்று நீங்களும் யாருக்கும் அநியாயம் செய்வதை தடுக்கப்பட்டதாக ஆக்கியுள்ளேன். ஆகவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாதீர்கள்." 


(அறிவிப்பாளர்: அபூதர் கிபாரி (ரளி); நூல்: முஸ்லிம்) 


***


ஒவ்வொரு நாளும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லும் போதெல்லாம், அவர்கள் தொடர்ந்து கேட்டு வந்த துஆக்களில் - இப்படியும் ஒரு பகுதி உண்டு: 


"யா அல்லாஹ்! ..... நான் எவர் ஒருவருக்கும் அநீதி இழைப்பதை விட்டும், எனக்கு எவராலும் அநீதி  இழைக்கப்படுவதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்..... 

(உம்மு சலமா (ரளி) அவர்கள் இதனை அறிவிக்கிறார்கள்)


@@@@


4 நரகம் உம்மைத் தீண்டியிருக்கும்!


நமக்குக் கீழே பணியாற்றிக் கொண்டிருப்பவரை "அடித்து விடுவது" என்பதை நாம் வேண்டுமானால் ஒரு "சாதாரண" நிகழ்வாக  எடுத்துக் கொண்டு விடலாம். ஆனால் நபியவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்: 


அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: 


நான் ஒரு முறை என் அடிமையை அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னாலிருந்து யாரோ, "அபூ மஸ்ஊதே நினைவிருக்கட்டும்! இவர்மீது உமக்கிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது" என்று கூறுவதை நான் செவியுற்றேன். 


நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் உவப்புக்காக (இவரை நான் விடுதலை செய்துவிட்டேன்) இவர் சுதந்திரமானவர்" என்று கூறினேன். 


அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்துகொள்! நீ இவ்வாறு செய்திருக்காவிட்டால் "நரகம் உம்மை எரித்திருக்கும்" அல்லது "நரகம் உம்மைத் தீண்டியிருக்கும்" என்று கூறினார்கள். 


(முஸ்லிம் - 3414)


@@@


5 நடக்கவே நடக்காது!


மனிதர்களுக்கு செய்வது அநியாயம்!

மன்னிப்பு கேட்பதோ இறைவனிடம்!

இது நடக்கவே நடக்காது!

தப்பிக்கவும் முடியாது!


***

தீர்ப்பு நாளின் போது..... 


அந்த நாளின் வேதனையைக் காணும்போது 

அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், 

அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும்

அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; 

தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; 

ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - 

(ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது. 

(குர்ஆன் - 10:54)


***

சுப்யான் அல் தவ்ரி (ரஹ்) அவர்கள் சொல்வார்களாம். 


"நாளை மறுமையில், நான் அல்லாஹ்வுக்கு மட்டுமே பதில் சொன்னால் போதுமானது என்றாகி  விடுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன்." 


@@@


அதிகாரமும் அநியாயமும்!


ஒருவன் ஏன் பிறருக்கு  அநியாயம் செய்திடத் துணிகின்றான்?  தான் "பலம் மிக்கவன்" என்ற தவறானதொரு மன நிலையில் தான் (with a false sense of power), ஒருவன் அநியாயம் செய்திடத் துணிகின்றான். ஒருவனை அநியாயம் செய்திடத் தூண்டுவதே - அவன் தன்னிடம் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் - "பலமும் அதிகாரமும்" தான்!


அந்த பலம் - உடல் வலிமையாக இருக்கலாம்.  அல்லது பண வலிமையாக இருக்கலாம். அல்லது அதிகார பலமாக இருக்கலாம். சமூகரீதியாக எண்ணிக்கை (majority) பலமாக இருக்கலாம்! தவறாகக் கற்பித்துக் கொண்ட சமூக அந்தஸ்தாகக் கூட (racism) இருக்கலாம். 


இத்தகைய வலிமைகளை வைத்துக் கொண்டு தான் - பலவீனமானவர்களை, வலிமையற்றவர்களை, ஏழை-எளிய மக்களை தங்களின் அநியாயங்களுக்கு உட்படுத்துகிறார்கள் - வலிமை மிக்கவர்கள். 


ஆண்கள் பெண்களுக்கு அநியாயம் இழைப்பது, இதனால் தான்! பணம் படைத்தவர்கள் ஏழைகளுக்கு அநியாயம் இழைப்பது இதனால் தான்! வலிமை மிக்க சமூகங்கள் எளிய சமூகங்களுக்கெதிராக அநியாயங்களைக் கட்டவிழ்த்து  விடுவதும் இதனால் தான். 


அடுத்து, வலிமை மிக்கவர்கள், தங்களின் அநியாயங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதற்கும், தங்களின் அநியாயங்களின்  வீச்சை அதிகரித்துக் கொண்டே செல்வதற்கும் இன்னொரு காரணம் இருக்கிறது. 


அது - தாங்கள் செய்திடும் அநியாயங்களை, உடனடியாகத் தட்டிக் கேட்பார் யாருமில்லை - என்ற மமதையினால் தான் அவர்கள் தங்களின் அநியாயங்களைத் துணிவுடன் தொடர்ந்து செய்கிறார்கள்.  

"அடித்துப் போட்டால், "ஏன்?" என்று கேட்பதற்கு ஆளில்லாத  அநாதைப் பயலே!" - என்ற சொல் வழக்கைக் கவனியுங்கள். நன்றாகப் புரியும்! 


ஆனால் -  (இது மிகப் பெரிய ஆனால்) - பிறருக்கு அநியாயம் ஒன்றை இழைக்கும்போது - ஒன்றை நாம் மறந்து விடுகிறோம். 


அது என்ன? 


நாம் யாருக்கு அநியாயம் ஒன்றைச் செய்து விடுகின்றோமோ, அவர் மீது நமக்கு இருக்கும் ஆற்றலை விட, நம்மைப் படைத்த இறைவன் ஆற்றல் படைத்தவன் என்பது தான் அது!




***


“நாம் ஒருவரை 

சபித்துக் கொண்டிருப்போம்; 

ஆனால் அவர் 

அல்லாஹ்வின் அர்ஷின் நிழலுக்கு

சொந்தக்காரராய் வீற்றிருப்பார்!”

- யாரோ ஓர் இஸ்லாமிய அறிஞர்


@@@

Comments