சூரா இப்ராஹிம் - விடுக்கும் அழைப்பு!



1 சூரா இப்ராஹிம் - சில கேள்விகள்!


சூரா இப்ராஹிம் - இது திருமறை திருக்குர்ஆனின் - 14 வது அத்தியாயம். இந்த அத்தியாயம்  - நபியவர்களின் மதீனத்து ஹிஜ்ரத்துக்கு சற்று முன்னர் தான்  இறக்கியருளப் பட்டிருக்கிறது. 


இந்த அத்தியாயத்தின் பேசு பொருள்: மனிதர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி அவர்களை  ஒளியின் பக்கம் கொண்டு வருகின்ற  கூட்டுப் பொறுப்பு பற்றியது! (Collective responsibility / Collective burden) 


#அலிஃப், லாம், றா. இது ஒரு வேதமாகும். இதனை உம்மீது நாம் இறக்கியுள்ளோம்; மக்களை, அவர்களுடைய இறைவனின் உதவி கொண்டு இருள்களிலிருந்து  வெளியேற்றி, ஒளியின் பக்கம் நீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக! (அதாவது) யாவற்றையும் மிகைத்தோனும்  புகழுக்குரியோனுமாகிய இறைவனின் பாதையின் பக்கம்! (14:1) 


***


இந்த அத்தியாயத்தை ஒரு தடவை முழுவதும் படித்து விட்டு வந்தால் நமக்குள் சில கேள்விகள் எழுவது இயல்பு: 


மனிதர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, ஒளியின் பக்கம் நீர் கொண்டு வருவது என்றால் அது என்ன?


இந்த அத்தியாயத்தில் இருள்கள் பன்மையிலும் ஒளி ஒருமையிலும் சொல்லப்பட்டிருப்பது எதனால்?  (14:1 / 14:5)


இந்த அத்தியாயம் நபி மூஸா (அலை) அவர்களின் வரலாற்றிலிருந்து ஒரு பகுதியை எடுத்துச் சொல்கிறது. என்ன படிப்பினைக்காக?  (14:5-8)


இந்த அத்தியாயம் நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாற்றிலிருந்தும் ஒரு பகுதியை எடுத்துச் சொல்கிறது. குறிப்பாக - நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தம் மகனுடன் சேர்ந்து இறையில்லமாம் கஃபாவைக் கட்டி முடித்த பின் அவர்கள் கேட்ட துஆக்கள் - இந்த அத்தியாயத்தில் எடுத்துரைக்கப் படுகிறது. அது ஏன்? (14:35-41)


நபி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் பற்றியும் இந்த அத்தியாயம் சற்று விளக்கிப்பேசுகிறது. இவர்களைப் பற்றிப் பேசுவதன் நோக்கம் என்ன?  (14:9-17)


நல்ல கலிமா-கெட்ட கலிமா - இவற்றுக்கு - நல்ல மரம் - கெட்ட மரம் - உதாரணங்கள் தரப் பட்டிருக்கின்றன இந்த அத்தியாயத்தில். என்ன படிப்பினை?  (14:24-26)


***


திரும்பவும் திரும்பவும் இந்த அத்தியாயத்தை ஓதி வந்தால் - பளிச்சென்று சில பாடங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். 


இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.....


^^^^^^^^


2 ஹள்ரத் நூஹ் (அலை) அவர்கள் காலத்திலிருந்து....


(சூரா இப்ராஹிம் - விடுக்கும் அழைப்பு! - பகுதி - 2) 


இந்த அத்தியாயம் - மனித இனத்தின் வரலாறு முழுவதும் - தொடர்ச்சியாக இறைத்தூதர்களை அனுப்பி வைப்பதன் மூலம் - மனிதர்களை - இருள்களிலிருந்து (ظلمات ) வெளியேற்றி அவர்களை ஒளியின் பக்கம் ( نور ) கொண்டு வருவதற்கென -  இறைவன் செய்திருந்த ஏற்பாட்டை மிக நுட்பமாக எடுத்துரைக்கிறது. 

 

ஹள்ரத் நூஹ் (அலை) அவர்கள் காலத்திலிருந்து அந்த வரலாறு துவங்குகிறது. பின்னர் ஆது சமூகம், சமூதுக் கூட்டத்தார் - ஆகியோருக்கு இறைத்தூதர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். 


அதன் பின்னரும் - மனித சமூகத்துக்கு - தொடர்ச்சியாக இறைத்தூதர்களை அனுப்பி வைக்கிறான் இறைவன். அவர்களை நாம் அறிய மாட்டோம். இந்தச் செய்திகள் அனைத்தையும் ஒரே வசனத்தில் விவரித்து விடுகிறான் இறைவன் இந்த அத்தியாயத்தில்.  


#உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர எவரும் அறியார்; அவர்களிடத்தில் அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்; அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள். (14:9)  


மேலும் பார்க்க (14:9-17)


அடுத்து மனித இனத்தின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனை! அது என்ன? 


இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.....


#சூரா_இப்ராஹிம்


@@@


3 ஒரு மிக முக்கியமான திருப்புமுனை!


(சூரா இப்ராஹிம் - விடுக்கும் அழைப்பு! - பகுதி - 3) 


அடுத்து மனித இனத்தின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனை தான் - நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வருகை! 


இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இந்த அத்தியாயம் விவரிக்கவில்லை. ஆனால் - இரண்டு முக்கிய நிகழ்வுகளின் பக்கம் நம் கவனத்தைத் திருப்புகிறான் இறைவன் இந்த வரலாற்றுச் சம்பவத்தில் இருந்து!



1 இப்ராஹிம் (அலை) அவர்களுக்குப் பின்னர் - மனித இனத்தை இருள்களிலிருந்து வெளியேற்றி, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காகத் தமக்கு - இரண்டு மகன்களை இறைவன் அருட்கொடையாக அளித்தது பற்றி இந்த அத்தியாயம் பேசுகிறது!


#எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும்  எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன். (14:39)


2 ஹள்ரத் இப்ராஹிம் (அலை) அவர்கள் - தம் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை - மக்காவில் குடியமர்த்தியது குறித்துப் பேசுகிறது இவ்வத்தியாயம். பார்க்க வசனங்கள்  (14:35-41)


***


நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் செய்த இந்த மகத்தான ஏற்பாட்டின் விளைவு தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இறுதி நபித்துவம் என்றால் அது மிகையாகாது! 


நபி இப்ராஹிம் அலை அவர்களின் வருகையை நாம் ஏன் திருப்பு முனை என்கிறோம் என்றால் - 


அவர்கள் விட்டுச் சென்றது இரண்டு மகன்கள் - இஸ்மாயில் (அலை) மற்றும் இஸ்ஹாக் (அலை). 


அவர்களுக்குப் பின் உருவான இரண்டு சமூகங்கள் - முஸ்லிம் சமூகம் மற்றும்  பனீ இஸ்ராயீல்! 


அவர்களால் நமக்குக் கிடைத்த இரண்டு இஸ்லாமிய மையங்கள் / இரண்டு கிப்லாக்கள்: கஃபதுல்லாஹ் / பைத்துல் முகத்திஸ்! 


அவர்களுடைய சந்ததியரில் தோன்றிய பல இறைத்தூதர்கள் மற்றும் அவர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட நான்கு இறை வேதங்கள்!


இவை அனைத்துக்குமான மூலகர்த்தா/ மூல ஆளுமை - நபி இப்ராஹிம் (அலை) அவர்களே!    


***


நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் மகனார் நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் வருபவர்கள் தான் - நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்!


இப்போது இவ்வத்தியாயத்தின் முதல் வசனத்தை மீண்டும் படித்துப் பாருங்கள்! (14:1)


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பணி - முழு மனித சமூகத்துக்கானது என்பதை இவ்வசனம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. 


அண்ணல் நபியவர்களை இறுதித் தூதராக அனுப்பி வைத்ததன் மூலம் - ஒட்டு மொத்த மனித இனத்தையும் இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்கான - இறை ஏற்பாட்டை முழுமைப் படுத்தி வைத்து விடுகிறான் வல்லோன் அல்லாஹ்! 


அதாவது நபி நூஹ் (அலை) அவர்கள் காலத்திலிருந்து உலக இறுதிக் காலம் வரையிலான எல்லா சமூக மக்களுக்கும் - ஒரு சங்கிலித் தொடர் போல - இந்த ஏற்பாட்டைச் செய்து தந்திருக்கின்றான் இறைவன்! 


இப்போது  இருள்கள் ஏன் பன்மையிலே ஒளி ஏன் ஒருமையிலே என்ற கேள்வியை எடுத்துக் கொள்வோம். 


ஹள்ரத் நூஹ் (அலை) அவர்கள் காலத்திலிருந்து உலக இறுதிக் காலம் வரையில் மனித இனம் பலவிதமான இருள்களில் வாழ்ந்து வருவார்கள் தான். ஆனால் அந்த அத்தனை இருள்களுக்கும் மாற்றாக - ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரக்கூடிய ஒளி  - மார்க்கம் - சிராத்தல் முஸ்தகீம் - ஒன்றே ஒன்று தான்! 


அடுத்து இன்னொரு கேள்வி....  


இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.....


@@@


4 இந்த அத்தியாயத்தின் மையக் கருத்து! 


(சூரா இப்ராஹிம் - விடுக்கும் அழைப்பு! - பகுதி - 4) 


இப்போது - ஒரு கேள்வி!  


நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நபித்துவ ஆண்டுகள் மொத்தம் இருபத்து மூன்று தானே? 

அப்படியானால் நபியவர்களுக்குப் பிறகு - மனிதர்களை இருளிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு வரும் பணி யார் மீது சுமத்தப்படுகிறது? 


நபித்தோழர்களுக்கும் அதன் பின்னர் - தலைமுறை தலைமுறையாக வருகின்ற முஸ்லிம் சமூகத்துக்கும் தானே இந்தப் பொறுப்பு? இதுவே இந்த அத்தியாயத்தின் மையக் கருத்தாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது! This exactly could be the central theme of this surah! 


இதே அத்தியாயத்தின் கடைசி வசனத்தை எடுத்துப் படியுங்கள்: 


#இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும். (14:52)


ஆம்! இந்தக் குர்ஆன் எல்லா மனிதர்களுக்குமான ஓர் அறிவிப்பு!  (هَٰذَا بَلَاغٌ لِلنَّاسِ ) 


This is a Message unto all mankind!


இந்த அத்தியாயம் இறக்கியருளப்பட்ட அந்த கால கட்டத்தை சற்று மனக்கண் முன் கொண்டு வாருங்கள். 


நபித்தோழர்களாகிய சஹாபாப் பெரு மக்கள்  - தமக்கு வழங்கப்பட்டிருக்கும் அந்த மகத்தான பொறுப்பு குறித்துத் தான் இந்த அத்தியாயம் பேசுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருந்திருப்பார்களா என்ன? 


ஆம்! நபித்தோழர்கள்  உள்ளங்களில் இந்தப் பொறுப்பை மிக ஆழமாக விதைத்திருக்கிறது இந்த அத்தியாயம்!


இந்தப் பொறுப்பை ஏற்று நடந்தால் என்ன நடக்கும்? 


இந்தப்பொறுப்பைத் தட்டிக் கழித்தால் என்ன நடக்கும்? 


இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.....


***


5 நபி மூஸா (அலை) அவர்களின் வரலாறு எதற்காக? 


(சூரா இப்ராஹிம் - விடுக்கும் அழைப்பு! - பகுதி - 5) 


இதே அத்தியாயம் நபி மூஸா (அலை) அவர்களைக் குறித்து ஏன் பேசுகிறது? (பார்க்க வசனங்கள் 14: 5-8)


பிர்அவ்னின் கொடுங்கோன்மையிலிருந்து தமது சமூகத்தாராகிய பனீ இஸ்ரவேலர்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கப்பட்டதை நினைவூட்டிக் காட்டுகிறான் இறைவன் இரண்டு வசனங்களில். (14:5-6)


#இதற்கு முன்பு மூஸாவையும் நம்முடைய சான்றுகளுடன் அனுப்பி, “உம் சமுதாயத்தினரை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வாரும்; மேலும், அல்லாஹ்வின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களை நினைவூட்டி, அவர்களுக்கு அறிவுரை வழங்கும்!” என்று கட்டளையிட்டிருந்தோம். பொறுமையாளராகவும் நன்றி செலுத்துபவராகவும் திகழும் ஒவ்வொருவருக்கும் இந்தச் சம்பவங்களில் பல சான்றுகள் இருக்கின்றன. (14:5)


#மூஸா தம் சமூகத்தாரிடம்: ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள்; அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது” என்று கூறினார். (14:6)


***

அவர்களைக் கரை சேர்த்த பின் - இறைவன் அந்த மக்களிடம் எதிர்பார்த்தது நன்றி உணர்ச்சியைத் தான்! 


#நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும் - என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்). (14:7)


ஆனால் அந்த மக்களோ நன்றி கெட்டவர்களாக மாறி விட்டார்கள்! நபி மூஸா (அலை) அவர்களோடு அந்த மக்கள் ஒத்துழைக்கவில்லை என்பது தான் வரலாறு! எனவே இறைவனின் தண்டனைக்கு அவர்கள் ஆளானார்கள். அதனால் இறைவனுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை என்பதைத் தான் அடுத்த வசனம் பேசுகிறது!


#மேலும் மூஸா (தம் சமூகத்தாரிடம்) “நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்த போதிலும், (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது;) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றோனும், புகழுடையோனுமாக இருக்கின்றான்” என்றும் கூறினார். (14:8)


***


நபி மூஸா (அலை) அவர்கள் வரலாறு இங்கே ஏன் என்பது புரிகிறதா? 


நபித்தோழர்களைப் பொறுத்தவரை - இந்தப் பொறுப்பில் அவர்கள் "அலட்சியமாக" இருந்து விடக்கூடாது என்பது குறித்து எச்சரிப்பதற்காகத் தான் - நபி மூஸா (அலை) அவர்களைப் பற்றியும் அவர்களது சமூகம் பற்றியும் பேசுகிறது இதே அத்தியாயம். 


அந்த எச்சரிக்கை நமக்கும் தான்! 


இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.....


@@@


6 ஹிஜ்ரத்துக்கு முன்னர் இறக்கியருளப்பட்டது ஏன்? 


(சூரா இப்ராஹிம் - விடுக்கும் அழைப்பு! - பகுதி - 6) 


இந்த அத்தியாயம் - நபியவர்களின் ஹிஜ்ரத்துக்கு சற்று  முன்னர் தான் இறக்கியருளப்பட்டிருந்தது! அது ஏன்? 


ஒரு ஒப்பீடு:


நபி மூஸா (அலை) தம் மக்களோடு ஹிஜ்ரத் செய்து கடலைத் தாண்டி கரை சேர்கிறார்கள்!  நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது தோழர்களோடு ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குச் செல்ல இருக்கிறார்கள். 


கரை சேர்ந்த பின் நன்றி கெட்டவர்களாக மாறி விட்டார்கள் பனீ இஸ்ரவேலர்கள். மதீனாவுக்குச் சென்ற பின் நன்றி உடையவர்களாக நீங்கள் விளங்கிட வேண்டும் என்பது தான் அல்லாஹ் அந்த நபித்தோழர்களுக்கு இந்த அத்தியாயத்தின் மூலம் சொல்ல வருகின்ற மகத்தான பாடம்!


நபித்தோழர்கள் - பனீ இஸ்ரவேலர்களைப் போல நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்ளவில்லை!


ஹிஜ்ரத்துக்குப் பின் நபித்தோழர்கள் செய்திட்ட தியாகங்கள் அனைத்தையும் நாம் அறிந்தே இருக்கின்றோம். அல்லாஹ் அவர்களுக்கு தன் அருட்கொடைகளை அதிகம் அதிகம் கொடுத்தான்! 

அவர்களைக் கொண்டு மிக ஆழமான, உறுதியான, வானளாவிப் பரந்து நிற்கின்ற, காலம் தோறும் கனிகளை வழங்கக் கூடிய நன்மரத்தை  உருவாக்கிக் காட்டினான்!  


அதனால் விளைந்தது தான் இஸ்லாமிய நாகரிகம் எனும் மகத்தான பலம் மிக்க மரம்! பார்க்க (14:24-25)


(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். (14:24) 


அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது; மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்.(14:25)


இந்த அத்தியாயத்தைப் பொறுத்தவரை - இந்த இரண்டு வசனங்களிள் மூலம் தான் - முஸ்லிம் சமுதாயம் என்பது - நற்பண்புகளைக் கொண்ட சமுதாயமாக (Moral and ethical community) விளங்கிட வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்து தருகிறான் இறைவன்!   


அதாவது - இந்தச் சமுதாயம் என்பது காலம் தோறும் கனிகளை வழங்கக் கூடிய சமுதாயம்! பங்களிக்கும் சமுதாயம்! Community of contribution!


காலம் ஒன்று இருந்தது! நாம் நற்பண்பு மிக்க சமுதாயமாக, பங்களிக்கும் சமுதாயமாக - ஒரு ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தோம் என்பது உண்மை தான்!  


ஆனால் - இன்றைய நமது நிலை என்ன? 


நமக்கு நன்றியுணர்ச்சி இருக்கிறதா? நம் பொறுப்பு என்ன என்பதை நாம் உணர்ந்திருக்கின்றோமா? இருளிலிருந்து ஒளியின் பக்கம் சென்று வாழ விருப்பம் இருக்கிறதா நம்மிடம்? பலம் மிக்க நன்மரத்தை உருவாக்கி வளர்த்திடும் இலட்சியம் இருக்கிறதா நம்மிடம்? 


நாமும் பனீஇஸ்ரவேலர்கள் போல் நன்றி கெட்டவர்களாக விளங்கினால் என்ன நடக்கும்? 

மீண்டும் அதே வசனத்துடன் நிறைவு செய்வோம்:


“நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்). (14:7)


அது தானே நடந்து கொண்டிருக்கிறது?

Comments