சுழற்சி எனும் இறை நியதி!



சுழற்சி எனும் இறை நியதி!

(The Law of Cycle - Sunnat al Dawraat -  سنة الدورأت ) 


சுனன் இலாஹிய்யா என்றழைக்கப்படும் மாற்றத்துக்குள்ளாகாத சில உலகப் பொது விதிகளை (Universal Laws) இறைவன் விதித்து வைத்திருக்கிறான் என்பது குறித்து முன்னர் நாம் பார்த்து வந்திருக்கின்றோம்.  


அவற்றுள் மிக முக்கியமானதொரு இறை நியதி தான் சுழற்சி விதி (The Law of Cycle) எனும் இறை நியதி!


இறைவனின் படைப்புகள் எதுவாயினும் - இந்த சுழற்சி நியதிக்கு உட்பட்டதாகவே அவை ஒவ்வொன்றும் படைக்கப்பட்டிருக்கின்றன! அவை சின்னஞ்சிறிய அணுவாயினும், பென்னம்பெரிய கோள்களாயினும் - இறைவனின் சுழற்சி விதிக்குக் கட்டுப்பட்டே இயங்குகின்றன என்றால் அது மிகையில்லை. 


ஒரு சில திருமறை வசனங்களை எடுத்துக் கொள்வோம்: 


1 விண்ணிலே.... 


21:33

-------

இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன. ( குர்ஆன் - 21:33)


மேலும் பார்த்திட: ( குர்ஆன் - 36:38-39)


***


2 மண்ணிலே....


18:45

------

மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன; ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது - மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். ( குர்ஆன் - 18:45)



 ***


3 நீரின் சுழற்சி 

The Law of Water Cycle (Sunnat Daurat al Maa’)


24:43 

-------

நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்.... (  குர்ஆன் - 24:43 - (part))



***


4 மனிதர்கள்!


40:67

-------

அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் - இன்னும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்). ( குர்ஆன் - 40:67)



30:54

-------

அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு)உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பலஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன். ( குர்ஆன் - 30:54)


***


5 காலத்தின் சுழற்சி

(Law of monthly cycle)


9:36

------

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். ( குர்ஆன் - 9:36 - (part)) 


6 அதிகாரத்தின் சுழற்சி

The Law of Alternation of Power 


ஒடுக்கப்பட்டோர் அதிகாரம் பெறுவதும், அதிகாரம் பெற்றோர் பின்னர் அடங்கிப் போவதும் 

இதே இறை நியதிக்குட்பட்டுத்தான்!


30:2-3

---------

ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள். ( குர்ஆன் - 30:2-3)


***


28: 4-6

---------

நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.


ஆயினும் (மிஸ்ரு) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம்.


இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப்பற்றி எ(வ் விஷயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்). ( குர்ஆன் - 28: 4-6)


மனித வரலாற்றில் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்து பின்னர் மறைந்து விடுவதும் - இதே இறை நியதிக்குட்பட்டுத் தான். ஒரு சமூகத்தில் அதிகாரம் பெற்றோர் வரம்பு மீறி அநியாயம் செய்திடும்போது, அவர்களை வீழ்த்தி - அவர்களால் பலவீனப் படுத்தப் பட்டவர்களை மேலே கொண்டு வந்து நீதியை நிலை நிறுத்தச் செய்வதும் இதே இறை நியதியே! 


***


7 பொருளாதார சுழற்சி

The Law of Alternation of Wealth   


59:7

-----

 அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.  (குர்ஆன் - 59:7) 


***


மகாஸித் துறையில் சிறந்து விளங்குகின்ற அறிஞர்களுள் ஒருவராகிய ஷெய்ஃக் ஜாஸிர் அவ்தா அவர்கள் இந்த இறை நியதி குறித்து மேலும் விளக்குகிறார்கள்: 


மனித வாழ்வின் எல்லாத் துறைகளிலுமே - இந்த சுழற்சி விதி செயலாற்றுகிறது என்கிறார் அவர். நாம் உருவாக்குகின்ற நிறுவனங்களுக்கும் இவ்விதி பொருந்தும் என்கிறார் அவர். அவை வணிக நிறுவனங்களாக இருந்தாலும் சரி, கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் சரி. - இந்த விதியைப் புரிந்து செயல்படுவோர் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும், புரியாதோர் தங்களை அறியாமலேயே தோற்றுப் போய் விடுவர் என்பதும் நிச்சயம்.  


இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் - நமது சமூகத்தின் நிலை குறித்த சுழற்சியைப் பொறுத்தவரை - "நாம்" - எந்த இடத்தில் "வீற்றிருக்கின்றோம்" -  என்ற அறிவு நுட்பம் அவசியம்.  அப்போது தான் - சுழற்சி விதியால் கீழே தள்ளப்பட்டிருக்கும் நம் சமூகம்,மேலெழுந்து வருவதற்கான வழிமுறைகளை அறிந்து நாம் செயலாற்றிட முடியும்.  


மேலெழுந்து வருவது எப்படி? 


3:139

-------

நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள். ( குர்ஆன் - 3:139)


***

மக்கள் கருத்துக்கும் (public opinion) சுழற்சி விதி ஒன்று உண்டு! 


மிகச் சூடாக செய்தி ஒன்று மக்களுக்கு வந்து சேரும். பிறகு அது சற்று சூடு பிடிக்கும். பிறகு அது உச்சத்தை அடைந்து மக்கள் கருத்து (public opinion) ஒன்று உருவாகி விடும். மிகச் சரியாக அந்த சூடான சமயத்தைத் திறம்படப் பயன்படுத்தி, மக்கள் கருத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்கு பலரும் முயற்சி செய்வதை நாம் அன்றாடம் பார்க்கின்றோம். இதில் பொய்யைக் கலப்பது, மிகைப்படுத்துவது, வதந்தியாக அவைகளைப் பரப்பி விட்டு விடுவது - என்று எல்லாம் செய்து முடிக்கப்படும். 


பிறகு அந்த செய்தியின் சூடு ஆறிய பின்பு "உண்மை" வெளி வந்தாலும்" ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்பது போல் அந்த செய்தி எந்தக் கவைக்கும் உதவாததாகப் போய் விடுவதை நாம் அனுபவித்தே வருகிறோம். இதில் முஸ்லிம்களாகிய நம்மை விட "பலி கடாக்கள்" வேறு யாரும் இருக்க மாட்டார்கள்!   


***


இறுதியாக நபிமொழி ஒன்று: 


அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  


நபி(ஸல்) அவர்களிடம் 'அள்பா' என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாததாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அது நபி(ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்தியது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்த. இதையறிந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'உலகில் உயர்ந்து விடுகிற பொருள் எதுவாயினும் (ஒருநாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ் எண்: 2872)


***


மேலேறிச் சென்றவர்கள்,கீழே இறங்கித் தான் ஆக வேண்டும். இது இறை நியதி! இதில் எந்தவொரு  மாற்றமுமில்லை!  புரிந்து செயல்படுபவன் புத்திசாலி! அவ்வளவு தான்!


(Inspired by Sheikh Jasser Auda) 


 

Comments