இனிக்கும் இல்லறம் - திருத்தப்பட்ட பதிவுகள்



 மனைவியிடம் மென்மை!


மென்மை ஒரு மிகச் சிறந்த நற்பண்பாகும். அரபியிலே இதனை - رفق - என்பார்கள். 


பொதுவாகவே எல்லா விஷயங்களிலுமே மென்மையை வலியுறுத்துகின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா. 


நிறைய நபிமொழிகளும் இப்பண்பை வலியுறுத்துகின்றன. 


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


“அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


“அல்லாஹ் மென்மையானவன். மென்மையையே நேசிக்கிறான். கடினத் தன்மைக்கும், வேறெந்த பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்)


அதே நேரத்தில் குறிப்பாக இல்லற வாழ்க்கையிலும் மென்மையைக் கடைபிடிக்கும்படி மார்க்கம் நமக்கு போதிக்கிறது:


அன்னை ஆயிஷா (ரளி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆயிஷாவே! மென்மையாக நடந்துகொள். அல்லாஹ் ஒரு குடும்பத்தினருக்கு நன்மையை நாடினால் அவர்களுக்கு மென்மையின்பால் வழிகாட்டுகிறான்.”


மற்றோர் அறிவிப்பில்: “ஒரு குடும்பத்தினருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)


பொதுவாகவே கணவன் மனைவியருக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் அனு தினமும் தோன்றும். சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கெல்லாம் சட்டென்று கோபப்பட்டு சீற்றத்தைக் கொட்டி விடுவார்கள் கணவன்மார்கள். எனவே மனைவியைக் கண்டிக்கும் சமயத்திலும் மென்மையைக் கடைபிடிக்க வேண்டும்.


“பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)


நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவர் மென்மையை இழந்தாரோ அவர் நன்மையை இழந்தார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)


@@@


கணவன் மனைவி உறவில் - மிகைத்திருப்பது 

அறிவா? உணர்வா? ஆன்மிகமா?


கணவன் மனைவி உறவில் - மிகைத்திருப்பது - அறிவா? உணர்வா? ஆன்மிகமா? - என்று கேட்டால் நான் கணவன் மனைவி உறவில் மிகைத்திருப்பது உணர்வுகளே என்று தான் சொல்வேன். 


கணவன் மனைவியரின் உணர்வுகளுக்கு (feelings and emotions) அடுத்த படி தான் அவர்களுக்கிடையேயான அறிவுப் பரிமாற்றமும் (intellect and intelligence) , ஆன்மிகத்தின் தேடல்களும் (worship and spirituality)!


திருமறை வசனம் ஒன்றை எடுத்துக் கொள்வோம்:   


இன்னும், நீங்கள் அவர்களிடம் மன அமைதி பெறுதற்குரிய துணைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே  அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் செய்திகள் இருக்கின்றன. (குர்ஆன் - 30:21)


இவ்வசனத்தில் நாம் கவனித்திட வேண்டிய மிக முக்கியமான சொற்கள் மூன்று:


அவை: சகீனத் - سكينه, மவத்தத் - موده, மற்றும் ரஹ்மத் - رحمة 


சகீனத் - என்றால் மன அமைதியும் ஆறுதலும் 


மவத்தத் - என்றால் அன்பும் காதலும் 


ரஹ்மத் - என்றால் கருணையும் இரக்கமும்


இம்மூன்று சொற்களும் நமது உள்மன உணர்வுகளே!


***


இன்னொரு வசனத்தையும் கவனியுங்கள்: 


மேலும், அவர்கள் இறைஞ்சிய வண்ணம் இருப்பார்கள்: “எங்கள் இறைவனே! எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும், எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாய் திகழச் செய்வாயாக!” (குர்ஆன் - 25:74)


மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். (குர்ஆன் - 25:74)


இங்கே கண் குளிர்ச்சி என்பதும் உணர்வுகள் சம்பந்தப்பட்டது தான்! 


***


இன்னொரு வசனம்:


அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (குர்ஆன் - 2:187)  


ஆடையின் மிக முக்கியமான நோக்கமாகிய மானம் காத்தலும் உணர்வு பூர்வமான ஒன்றே!


***


திருமண உறவின் இந்த மிக முக்கியமான அடிப்படையைக் கணவனும் மனைவியும் புரிந்து கொண்டு நடந்தால் மட்டுமே இல்லறம் சிறக்கும்! ஆனால் - இந்த அடிப்படையைப் புரிந்து கொள்வதில் ஆண்கள் தான் மிகவும் பின் தங்கியிருக்கிறார்கள் என்று  உளவியல் ஆய்வாளர் ஒருவர் சொல்கிறார். 


உண்மை தான் அது!


@@@


அசைய விட்டு விடக் கூடாது! அலைய விட்டு விடக் கூடாது!


இன்னும், நீங்கள் அவர்களிடம் மன அமைதி பெறுதற்குரிய துணைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே  அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் செய்திகள் இருக்கின்றன. (குர்ஆன் - 30:21)


***


இவ்வசனத்தில் வருகின்ற - "லி தஸ்குனூ இலைஹா" – لتسكنوا اليها  - என்ற சொற்றொடரில் தான்  சகீனத் - سكينه  - எனும் சொல் இடம் பெற்றுள்ளது. 


இதன் பொருள் என்ன?


அவர்களிடத்தில் நீங்கள் ஆறுதல் பெறுவதற்காக – என்பது ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு.


அவர்களிடத்தில் மன நிம்மதி பெறுவதற்காக என்பது இன்னொரு மொழிபெயர்ப்பு.


அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக என்பது இன்னுமொரு மொழிபெயர்ப்பு.


***


சகீனத் என்ற அரபிச் சொல்லுக்கு நாம் இன்னும் ஆழமாக பொருள் காண வேண்டியிருக்கின்றது.


சுகூன் என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எப்போது? 


நாம் அரபி பாடசாலையில் குர் ஆன் ஓதக் கற்றுக் கொள்ளும்போது – முதலில் அரபி எழுத்துக்களைக் கற்றுத் தருவார்கள் அல்லவா?


அப்போது எந்த ஒரு எழுத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த எழுத்துக்கு மேலேயோ அல்லது கீழேயோ ஜபர் / ஜேர் / பேஷ்/ சுகுன் போன்ற ஏதாவது சிறு குறியீடு ஒன்றை எழுதும் போது – அந்த எழுத்தை எப்படி உச்சரிப்பது என்று சொல்லிக் கொடுப்பார்கள்.


சான்றாக “தே” என்ற எழுத்தின் மேலே ஜபர் எனும் குறியைப் போட்டால் “த” என்றும்; எழுத்தின் கீழே ஜேர் எனும் குறியைப் போட்டால் “தி” என்றும் உச்சரிக்க வேண்டும். ஆனால் அதே “தே” எழுத்துக்கு மேலே சுகூன் எனும் குறியைப் போட்டால் அந்த எழுத்தை அசைத்திடாமல் “த்” என்றே உச்சரித்திட வேண்டும்.


இங்கே நாம் கவனித்திட வேண்டியது என்னவெனில் இந்த ஜபர், ஜேர் அல்லது பேஷ் போன்ற குறியீடுகளுக்கு “ஹரகத்” என்று பெயர். ஹரகத் என்றால் அசைத்தல் என்று பொருள். ஹரகத் எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் தான் சுகூன். அதாவது அசைக்காமல் இருத்தல்!


இப்போது ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்குச் செல்வோம்.


சகன - எனும் சொல்லின் அகராதிப் பொருள்:  


Sakana - سكن -- To be or become still; tranquil; peaceful; to calm down; repose; rest; to be vowel-less; 


Maskan – dwelling; abode; habitation; house; home; residence; domicile; 


Sakeenah – God inspired peace of mind; calm; tranquility; peace


***

இச்சொல் திருமறையில்  - “அசையாமல் நிறுத்தப்படுதல்” என்ற பொருளில் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.


சான்றாக....  


காற்று! 


அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன் - 42:33)


 يسكن ألريحة / yuskinir reeha / He could still the wind / 


***


நிழல்! 


உம்முடைய இறைவன் நிழலை எப்படி நீட்டுகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்ய முடியும். பின்னர் சூரியனை - நாம் தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம். (குர்ஆன் - 25:45)


ساكنا / saakinan / made it stationary 


***


மழை நீர்! 


மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம். (குர்ஆன் - 23:18)


أسكنه في أل أرض /  askannaahu fil arl / settling rain in the earth


***


“அசையாமல் நிறுத்தப்படுதல்” என்ற பொருளை சகீனாவுக்கு நாம் எடுத்துக் கொண்டால் கணவன் மனைவி இருவருமே – திருமணத்துக்குப் பின்னர் எவ்வாறு நடந்து கொண்டால் அமைதியும் ஆறுதலும் கிடைக்கும் என்பதுவும் புரிந்து விடும்.


அதாவது -  திருமணத்துக்குப் பின் கணவனது கண்கள் வேறு எங்கும் அசைந்திடக் கூடாது! தனது கண்களால் மனைவியை மட்டுமே ரசித்திட வேண்டும். கண் பார்வையை வேறெங்கும் அசைய விட்டு விடக் கூடாது. மனைவியும் அப்படித்தான். தமது கண்களால் கணவனின் அழகை மட்டுமே ரசித்திட வேண்டும்.


அது போலவே, நமது கைகள், கால்கள், இதயம், இவை அனைத்துமே – நமது மனைவியை மட்டுமே முன்னிறுத்தி  செயல் பட வேண்டுமே தவிர வேறு எங்கும் அசைய விட்டு விடக் கூடாது. அலைய விட்டு விடக் கூடாது.


*** 


திருமணம் கண்பார்வையைத் தாழ்த்துகிறது எனும் நபிமொழியின் ஆழம் இப்போது புரிகிறதா? 


(Inspired by Sheikh Yawar Baig)


***

கணவன்-மனைவியரே! நெருங்கி வாழுங்கள்!!


#மீள் (சில திருத்தங்களுடன்​) 


திருக்குர்ஆனை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள – அதன் மொழிபெயர்ப்புகள் போதாது என்பது ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். ஒரு எடுத்துக் காட்டு: 


வ ஆஷிரூஹுன்ன பில் மஃரூப் -  و عاشرو هن بال معروف 


– இது சூரத்துன் நிஸாவின் 19 வது வசனத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே. இதற்கு எப்படி மொழிபெயர்க்கப் படுகிறது என்று பார்ப்போமா?


“இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள்" – இது தமிழில் குர்ஆன் வலைதளத்தின் மொழிபெயர்ப்பு. ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பும் இதுவே.


“மேலும் அவர்களுடன் அழகான முறையிலும் நடந்து கொள்ளுங்கள்” – இது சவூதி அரசால் வெளியிடப்பட்டுள்ள சங்கைமிக்க குர்ஆன் மொழிபெயர்ப்பில் இருந்து.


“அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள்.” – இது IFT – யின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பிலிருந்து.


“மேலும் அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத்தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள்” – இது அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பு.


ஆனால் அரபி மூலத்தில் உள்ள இரண்டு சொற்களையும் நாம் சற்று ஆழமாக இங்கே பார்ப்போம்.


ஒன்று: ஆஷிர் ( عاشر)


அஷர  ( أشر ) எனும் இம்மூலச் சொல்லிலிருந்து பிரிகின்ற பல சொற்கள் - திருமறையில் இடம் பெற்றுள்ளன.


முதலில் ஆங்கில அகராதி மொழிபெயர்ப்பை எடுத்துக் கொள்வோம்.


‘Ashara – to divide into tenths; to be on intimate terms, associate (closely with someone). associate with one another


‘Ishrah – (intimate) association, intimacy, companionship, relations, (social) intercourse. company. conjugal community, community of husband and wife


‘Ishaar – with young, pregnant(animal)


‘Asheer – companion, fellow, associate, friend, comrade


‘Asheerah – clan, kinsfolk, closest relatives, tribe


அகராதியில் காணப்படும் அனைத்து பொருள்களையும் நாம் உற்று நோக்கினால் – ஆஷிர் என்ற சொல்லின் பொருள் – நெருக்கம், நெருங்கியிருப்பவை, நெருங்கிய தோழமை ஆகியவற்றைச் சுற்றியே இருக்கின்றன என்றே புரிகிறது.


இது ஏன் மொழிபெயர்ப்புகளில் பிரதிபலித்திடவில்லை என்பதே எம் கேள்வி.


அடுத்து இச்சொல் இடம் பெறுகின்ற சில திருமறை வசனங்களைப் பார்ப்போம்.


“எவனது தீமை, அவனது நன்மையை விட மிக நெருங்கியிருக்கிறதோ அவனையே அவன் பிரார்த்திக்கிறான் – திடமாக (அவன் தேடும்) பாதுகாவலனும் கெட்டவன்; (அப்பாதுகாவலனை அண்டி நிற்பவனும்) கெட்ட தோழனே. (22: 13)


கெட்ட தோழனைக் குறித்திட அஷீர் (أشير ) என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது.


“இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!” (26: 214)


நெருங்கிய உறவினர்களைக் குறித்திட – அஷீரதக – ( عشيرتك  ) என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.  


மேலும் 58: 22 வசனத்தில் இதே போன்று அஷீரதஹும் ( عشيرتهم  )என்று வருகிறது.


“சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-” (81: 4)


இங்கே கருவுற்றிருக்கும் ஒட்டகங்களைக் குறித்திட – இஷார் ( عشار ) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாயும் சேயும் நெருங்கியிருப்பதால் இச்சொல் பயன்படுத்தப் படுகிறதோ என்று தோன்றுகிறது.


***


அடுத்து இச்சொற்றொடரில் இடம் பெற்றுள்ள இன்னொரு சொல்: மஃரூப் ( معروف ). 


மஃரூப் (ma'roof)  – என்ற இச்சொல்லுக்கு “அறியப்பட்டது” என்பதே சரியான பொருளாகும்.


ஆங்கிலத்தில் இச்சொல் இவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறது: 


known; well-known; universally accepted; generally recognized;  conventional; that which is good; beneficial; fairness; equity. 


இஸ்லாம் கட்டளையிட்டுள்ள எல்லாவிதமான நன்மைகளையும் குறிக்கும் சொல் இது என்கிறது ஜவாஹிருல் குர்ஆன் எனும் திருமறை விரிவுரை நூல். 


***


இவ்வாறு – இந்த இரு சொற்களின் விரிவான பொருள்களை கவனித்துப் பார்க்கும் போது


“அவர்களோடு கனிவோடு நடந்து கொள்ளுங்கள்” என்று பொத்தம் பொதுவாக மொழிபெயர்ப்பதை விடுத்து - 


” எல்லாவிதமான நன்மையான காரியங்களிலும் அவர்களுடன் நெருங்கி வாழுங்கள்." - என்று மொழிபெயர்க்கலாமோ என்று தோன்றுகிறது.


- Behave with them intimately in all the good things (that are allowed in Islam).


- என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்றும் தெரியவில்லை.


ஆனால்  முஹம்மத் அஸத் அவர்கள் மட்டுமே ஆங்கிலத்தில் மிக அழகாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்:


“And consort with your wives in a goodly manner;”


Consort – என்பதற்கு companion என்று ஒரு பொருள் உண்டு.


***

إகணவன் மனைவியருக்கிடையிலான நெருக்கம் என்பது இரண்டு உள்ளங்களின் அல்லது இரண்டு ஆன்மாக்களின் நெருக்கத்தையே குறிக்கிறது என்பதை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். 


இப்படிப்பட்ட உளரீதியான நெருக்கம் - கணவன் மனைவியர் வாழ்வின் அனைத்து நன்மையான விஷயங்களிலும் பிரதிபலித்திட வேண்டும் என்பதே இந்தத் திருமறை வசனத்தின் கருத்தாகும். 


ஆனாலும் - அப்படிப்பட்ட நெருக்கத்துக்கு மிகப் பெரிய தடைக்கல் ஒன்று இருக்கிறது. 


அது என்ன? 


@@@


பொருத்தம் இல்லையேல் நெருக்கம் இல்லை!


சற்றும் பொருந்தாத (incompatible)

முற்றிலும் வேறுபட்ட 

இரண்டு ஆளுமைகள் 

திருமண உறவில் 

இணைத்து வைக்கப்பட்டால்

அவர்கள் நெருக்கமாக 

இணைந்து வாழ்வதற்கு

வாய்ப்பே இல்லை!


***


ஆனால் - இதை வைத்து 

யாரும் யாருக்கும் 

"தீர்ப்பு" எழுதிட 

முயற்சிக்க வேண்டாம்!


***


எனினும் - இன்றைய சூழலில் இதுகுறித்த

பரவலானதொரு கலந்துரையாடல்  

மிக அவசியம்!


***

உடல் ரீதியான நெருக்கம்!  


பின் வரும் நபி மொழிகளைக் கவனியுங்கள்:  


நானும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களும் குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் போது ஒரே பாத்திரத்தில் சேர்ந்து குளிப்போம் என அன்னை ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள். (அபூதாவுது, முஸ்லிம், நஸயீ, அஹ்மது)


‘ஒரே பாத்திரத்தில் இருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் உலூச் செய்யும் போது எனது கையும் ரஸுல் (ஸல்) அவர்களின் கையும் போட்டி போட்டுக் கொள்ளும்’ என்று உம்மு சுமைய்யா (ரளி) அறிவிக்கிறார்கள். (அபூதாவுது)


“நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பலன் உங்களுக்கு அளிக்கப்பட்டே தீரும். உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)


அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: யூதர்கள் மாதவிடாய்க்காரியுடன் வீட்டில் சேர்ந்து அமர மாட்டார்கள், பருக மாட்டார்கள். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமும் கூறப்பட்டது. அப்போது, ‘மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அது தொல்லை தரும் தீட்டு ஆகும். எனவே மாதவிடாய் சமயத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்’ என்ற 2:222 வசனம் இறங்கியது. அதை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் போது, ‘உடலுறவைத் தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்’ என்றார்கள். (நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூது)


ஒரு குறிப்பு: 


இவை புதுமணத் தம்பதியருக்கு மட்டும் என்று எண்ணி விட வேண்டாம்! ! 


***

பொருத்தம் பார்ப்பது ஒரு சுன்னத்!


#மீள்


பாத்திமா பின்த் கைஸ் (ரளி) அவர்களை அவர்களது கணவர் விவாகரத்துச் செய்து விட்டார். இத்தா முடிந்ததும் இரண்டு நபித் தோழர்கள் அவரை மணம் முடிக்க விரும்பினார்கள். இந்நிகழ்ச்சியை அவர் பின் வருமாறு விவரிக்கிறார்.


நான் "இத்தா'வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "முஆவியா பின் அபீசுஃப்யான் (ரளி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரளி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்'' என்று சொன்னேன்.


அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியா ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்து கொள்,'' என்று கூறினார்கள்.


நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உசாமாவை மணந்து கொள்'' என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன். 


அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரளி); (நூல்: முஸ்லிம்)


***


பெண் கேட்ட இரண்டு நபித்தோழர்களும் - பாத்திமா பின்த் கைஸ் அவர்களுக்குப் பொருத்தமானவர்கள் அல்ல என்பதனாலும், அவருக்கு உசாமா பின் ஸைத் அவர்களே மிகவும் பொருத்தமானவர் என்பதால் தான் அவரைத் திருமணம் முடித்துக் கொள்ளுமாறு நபியவர்கள் பரிந்துரைத்தார்கள் என்றும் நாம் விளங்கிக் கொண்டால் - பொருத்தம் பார்ப்பதும் சுன்னத் என்றாகிறது அல்லவா?


அல்லாஹ்வே மிக அறிந்தவன்!


Comments