சூரா அல்-முதஃப்பிஃபீன் சிந்தனைகள்

 


சூரா அல்-முதஃப்பிஃபீன் சிந்தனைகள் 


நான் குடும்பத்தில் மூத்த பையன்!  அதனால் எனக்கு சலுகைகள் உண்டு என் குடும்பத்தில்! நான் எடுத்துக் கொண்டது போகத்தான் என் தம்பி தங்கைகளுக்கு!


நான் குடும்பத்துக்கு அதிகமாக உழைப்பவன். அதனால் குடும்பச் சொத்தில் என் பங்கு சற்று அதிகம் தான்! 


என் நட்பு வட்டத்தில் நானே "தலை" சிறந்தவன்! எனவே நான் சிறப்பாக கவனிக்கப்பட வேண்டியவன்! மற்றவர்கள் எல்லாம் எனக்குக் கீழே தான்!


என் சமூகத்தில் நானே செல்வாக்கு மிக்கவன்; எனவே  மற்றவர்களை விட எனக்கென்று ஒரு சிறப்பு அந்தஸ்து உண்டு! அதில் யாரும் தலையிட்டு விடக் கூடாது!


***

இவ்வாறு...  

நான் வலிந்து எடுத்துக் கொள்கின்ற சலுகைகளாலும் வலிந்து உருவாக்கிக் கொள்கின்ற சிறப்பு அந்தஸ்தினாலும் என்னைச் சுற்றியுள்ளவர்களின் கண்ணியமும், உரிமைகளும் பறிக்கப்பட்டால் அதுபற்றி எனக்குக் கவலை இல்லை!


***


இப்படிப்பட்டவன் தான் நான் என்றால் அளவை நிறுவைகளில் மோசடி செய்பவர்களுள் நானும் ஒருவன் தான்!


( المطففين )


ஏனெனில் அளவை நிறுவையில் மோசடி என்பது வியாபாரத்தில் மட்டும் அல்ல! வாழ்க்கையிலும் உண்டு!


83: 1-3

---------

அளவில் மோசடி செய்பவருக்குக் கேடுதான்! அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர். அவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறைத்துக் கொடுக்கின்றார்கள். (குர்ஆன் 83: 1-3)


***


திருக்குர்ஆன் விரிவுரையாளர் முஹம்மத் அஸத் அவர்கள் கூறுகிறார்கள்:  


"இந்த வசனங்கள் வணிகக் கொடுக்கல் வாங்கல்களை மட்டும் குறித்து சொல்லப்பட்டவை அல்ல!" 


"மாறாக சமூக உறவுகளுக்கிடையே நடைபெறுகின்ற அனைத்து விதமான பண்பியல் மற்றும் நடைமுறைகளையும் உள்ளடக்கித் தொட்டுச் செல்வதுடன், சமூக அளவில் தகுந்த செயல்பாட்டையும் வேண்டி நிற்கும் இறை வசனங்கள் இவை."  


"ஏனெனில் மனிதர்கள் பெற்றிருக்கின்ற உடமைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல - மனிதர்களின் கடமைகளும் உரிமைகளும்!"   


***


Muhammad Asad says: 


This passage (verses 1-3) does not, of course, refer only to commercial dealings but touches upon every aspect of social relations, both practical and moral, applying to every individual's rights and obligations no less than to his physical possessions.


***


இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தை மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள்!


***


துருப்பிடித்த இதயம்!


சின்னச் சின்ன 

உரிமை மீறல்கள் குறித்து 

எச்சரிக்கை தேவை!


இல்லையேல்- பின்னர் 

இதுவெல்லாம் ஒரு தப்பா 

என்று அவைகளை 

நியாயப் படுத்தத் 

தொடங்கி விடுவோம்!


விளைவு?


இதயம் துருப்பிடித்து விடும்!

நமக்கு நம் தவறுகளை 

சுட்டிக் காட்டும் இயல்பை 

நம் இதயம் இழந்து விடும்!


குற்ற உணர்ச்சி என்பது  

அற்றுப் போய் விடும் நமக்கு!


எனவே - 

சின்னச் சின்ன 

உரிமை மீறல்கள் குறித்து 

எச்சரிக்கை தேவை!


பார்க்க குர்ஆன் -  (83:14)


***


அவர் தான் அப்ரார்!


எனக்குச் சேரவேண்டியதை விட 

அதிகமாக நான் எடுத்துக் கோண்டு 

பிறருக்குச் சேர வேண்டியதில் 

நான் - குறை வைத்து விடுகிறேன் எனில் - 

எனக்கு சுவர்க்கமா?நரகமா? 

நரகம் என்கிறது திருக்குர்ஆன்!


***


அதே நேரத்தில் - ஒருவர் 

பிறருக்குக் கொடுக்கும்போது 

கணக்கின்றியே கொடுக்கிறார்! 


தனக்கென்று எடுக்கும்போது 

மிகவும் எச்சரிக்கையாக 

நடந்து கொள்கிறார்! 


அவர் யார்?

அவர் தான் அப்ரார்!

சுவனத்துக்குரியவர்!


இதுவே இஸ்லாத்தின் பண்பியல்! Islamic ethics!


***


அப்ரார் ( أبرار ) - நன்மைகளை மிகவும் அழகாக்கிச் செய்து காட்டுபவர்கள்


Abraar  - Those who do good things beautifully.



***


இது கூடப் பாவம் தான்!


ஒருவரை அல்லது ஒரு கூட்டத்தாரை 

அவமானப் படுத்துவதுவதற்காகக்

கண்களை அசைத்து ஏளனமாக

ஒரு பார்வை பார்க்கின்றோமே - 

அது கூடப் பாவம் தான்!

இறைவனின் பார்வையில்! 


அதுவும் சாதாரணப் பாவம் அன்று!

நரகத்துக்கு இட்டுச் செல்லும் 

பாவங்களுள் ஒன்று அது!


இதுவே இஸ்லாம் நிர்ணயிக்கும் 

பண்பியல் பாடத்தின் தரம்! 


Moral Standard!


பார்க்க குர்ஆன் -  (83:30)



பின்பற்றலாம் தானே?


Comments