சூரத் அன்-நாஜிஆத் - மையக் கருத்து

 


சூரத் அன்-நாஜிஆத் - மையக் கருத்து


பிஸ்மில்லாஹ் 


இந்த அத்தியாயத்தின் மையக் கருத்தாக - கூட்டுப் பொறுப்புணர்ச்சி - என்பதனைச் சொல்லலாம். 


அத்தியாயம் 79 - ன் முதல் ஐந்து வசனங்களைக் கவனிப்போம்:  

 

பலமாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக! (79: 1)

மேலும், மெதுவாக வெளிக் கொணர்கின்றவர்கள் மீது சத்தியமாக! (79:2)

வேகமாக நீந்திச் செல்பவர்கள் மீதும் சத்தியமாக! (79:3)

மேலும், ஒருவருக்கொருவர் முந்துகின்றவர்கள் மீதும் சத்தியமாக! (79:4)

எல்லா காரியங்களையும் நிர்வகிப்பவர்கள் மீதும் சத்தியமாக! (79:5)


திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் - இறைவன் செய்கின்ற இந்த ஐந்து சத்தியங்கள் எவற்றைக்  குறிக்கின்றன என்பதில் கருத்து வேறுபாடு கொள்கிறார்கள். 


ஒரு கருத்து - இவ்வைந்தும் வானவர்களை - மலக்குமார்களைக் குறிக்கின்றன என்பதாகும். 

இன்னொரு கருத்து இந்த ஐந்தும் - நட்சத்திரங்களைக் குறிக்கும் என்பதாகும்.  


இன்னும் சில விரிவுரையாளர்கள் - இந்த ஐந்து சத்தியங்களும் - பொதுமைப் படுத்தப்பட்டே (generalized) சொல்லப்பட்டுள்ளதால் - மேற்கண்ட இந்த ஐந்து "செயல்பாடுகளையும்" செய்திடுகின்ற எவரையும் அல்லது எதனையும் கூட குறித்திடலாம்   என்கின்றனர். 


அப்படியானால் - இந்த ஐந்து செயல்பாடுகளையும் மனிதர்களின் செயல்பாட்டுடன் (human activities) பொறுத்திப் பார்க்கலாமா என்றால் பார்க்கலாம் தானே? 


இப்போது பாருங்கள்:


அங்கே அண்ணலார் அவர்களும் அவர்களை நம்பிய - ஒரு நூற்றுக்கும் சற்றே மேற்பட்ட நபித்தோழர்களும். நபியவர்களின் மக்கத்து நபித்துவ வாழ்வின் இறுதிக் கட்டம் அது. அண்ணலாரின் துணைவி அன்னை கதீஜா (ரளி) அவர்களின் மரணம்; அன்ணலாரின் சிறிய தந்தை அபூ தாலிப் அவர்களின் மரணம். அதனைத்ட் தொடர்ந்து இனி மக்காவில் உயிர் வாழ்ந்திட வாய்ப்பே இல்லை எனும் அளவுக்குக் குறைஷியரின் தாக்குதல்கள். 


இப்படிப்பட்ட சூழ் நிலையில் அல்லாஹ் அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்பதை சற்று கூர்ந்து கவனியுங்கள்: 


செயல்! செயல்! செயல்! - இவை மட்டும் தான்!


அவர்களின் செயல்களை - "ஏதோ - அவர்களுக்குத் தோன்றியதையெல்லாம் செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடவில்லை இறைவன். ஒரு ஐந்து கட்டங்களாக அச்செயல் திட்டத்தை வகுத்துத் தருகின்றான்  இறைவன். ஆம்!  நபித்துவப்ணி என்பது ஐந்து விதமான செயல் திட்டங்களைக் கொண்டது. 


1 கடினமான முயற்சியுடன் செய்யப்படும் அழைப்புப்பணி


2 ஏற்பவர்களைத் தூய்மைப் படுத்தி - அவர்களை "விடுவித்திடும்" பணி. தஸ்கியா! இது அவர்களுக்கு ஒரு சுதந்திர உணர்வைப் பெற்றுத்தந்திடும்.  முடிச்சை அவிழ்த்தல். சுமைகளை இறக்கி வைத்து விடுதல்!


3 இக்கட்டத்தில் - இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றுவது அவர்களுக்கு மிகச் சுலபமாகி விடும். மிக இலகுவாகவே - அவர்கள் இறைக் கட்டளைகளை அவர்களாகவே தேர்வு செய்து பின்பற்றுவார்கள். பூமியும் இன்ன பிற கோள்களும் விண்ணில் எந்த சிரமமும் இன்றி நீந்திச் செல்வதைப் போல! (தஸ்பீஹ்!)   

4 இனி அவர்கள் அடுத்தக் கட்டத்துக்குத் தயாராகி விடுவார்கள். அது தான் பிறருடன் போட்டிப் போட்டுக் கொண்டு முன்னேறிச் சென்று முதல் அணியில் இடம்பெறுவதாகும். இது இறைவனின் மீது அவர்கள் கொண்ட அளப்பரிய அன்பு / முஹப்பத் / மற்றும் உத் / ஆகியவற்றால் தான் என்றால் அது மிகையில்லை. அது தான் அவர்களுக்கு ஃபஃபிர்ரூ இலல்லாஹ்! இவர்களைத் தான் அல்லாஹ் சாபிகூனஸ் சாபிகூன் என்கிறான்! இது தொழுகையாகட்டும்; போர்க்களம் ஆகட்டும்! இரண்டிலுமே முதல் அணியில் தான் நான்!


5 இது தான் இறைக் கட்டளைகளைச் செவ்வனே நிறைவேற்றிட அவர்கள் தயாராகி விட்ட"இஹ்ஸான்" எனும் நிலை!  இறைவனைப்பார்ப்பது போல் தொழுகை! சஜ்தாவில் போய் வீழ்வது போல் தஹஜ்ஜுத்! உயிரைத் தியாகம் செய்திடும் ஷஹாதத் எனும் நிலையும் அது தான்! 


**


எனவே நாம் இப்படிச் சொல்ல முடியும்: 


இந்த அத்தியாயம்  என்னை ஊக்குவிக்க வந்த அத்தியாயம்! 


Motivational and Inspirational!


**


"நாமும் அண்ணலாரும் எப்போது இணைந்திருக்கப் போகிறோம்?" - மார்க்க அறிஞர் ஒருவரின் மகன் - தன் தந்தையிடம் கேட்ட கேள்வி இது!


அவர் கேட்ட கேள்விக்கு இங்கே தான் விடை இருக்கிறது! 


என்ன? புரியவில்லையா? 


ஐந்தாவது வசனத்தையும் ஆறாவது வசனத்தையும் சேர்த்துப்  படித்துப் பாருங்கள். புரியும்!


எல்லா காரியங்களையும் நிர்வகிப்பவர்கள் மீதும் சத்தியமாக! (79:5)

பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்! (79:6)


ஐந்தாவது வசனம் - மனிதர்களின் "இவ்வுலக செயல்பாடுகளின் இறுதிக்கட்டத்தைக்  குறிப்பதாக" வைத்துக் கொண்டால் - ஆறாவது வசனம் - "மறுவுலக செயல்பாடுகளின் முதல் கட்டத்தைக் குறிப்பதாக" எடுத்துக் கொள்ளலாம் தானே? 


ஆம்! மனிதர்கள் அவர்கள் படைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவு செய்திடும் "செயல் திட்டத்தின்" முடிவில் - மறுமையின் காட்சிகள் - தொடக்கம் பெற்று விடுகின்றன!  


***

ஆங்கில மொழ்பெயர்ப்பு இவ்வசனங்களை இன்னும் சற்று கூடுதலாகப்புரிந்து கொள்ள உதவலாம்: 


****


A few insights: 


Unless an individual controls his/her Hawa (desires)

Personal Organization is not possible!


Unless a family regulates its Hawa 

Family Organization is not possible!


Unless the Egoistic Leaders' Hawa is defeated

Social Organization is not possible!


***


கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்கலாமா? 


திருமறை அத்தியாயம் 79 - ஸூரத் அன்-நாஜிஆத்


திருமறை அத்தியாயம் 80 - ஸூரத் - அபஸ 


**


இரண்டு அத்தியாயங்களும் மக்காவிலே இறக்கியருளப்பட்ட அத்தியாயங்கள் தாம்!


அத்தியாயம் 80 - தனி மனிதப் பொறுப்புணர்வு (individual responsibility) பற்றிப் பேசுகிறது!


அத்தியாயம் 79 - கூட்டுப் பொறுப்புணர்ச்சி (collective responsibility) குறித்துப் பேசுகிறது! 


** 


அத்தியாயம் 80 - அண்ணலாரின் மக்கத்து நபித்துவ காலத்தின் துவக்கத்தில் இறக்கியருளப்பட்டது என்பதை நினைவில் கொள்வோம். (Early Makkan Surah). 


அத்தியாயம் 79 - அண்ணலாரின் மக்கத்து நபித்துவ காலத்தின் இறுதியில்  இறக்கியருளப்பட்டது என்பதையும்  நினைவில் கொள்வோம். (Late Makkan Surah)


**


தனி மனிதப் பொறுப்புணர்வு!


மக்கத்து முக்கியப் புள்ளிகளோ - செவி தாழ்த்திடத் தயாரில்லை. கண் தெரியாத அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரளி) எனும் நபித்தோழர் தாமாகவே முன் வந்து இறைச் செய்தியைக் கேட்டிட நபியவர்களின் முன் வந்து நிற்கிறார்.  ஒருவரின் முக்கியத்துவப் பின்னணி (VIP Status) ஒன்றும் முக்கியமில்லை. பொறுப்புணர்ச்சி மட்டுமே முக்கியம் என்பதை இந்த சூரா வலியுறுத்துகிறது.


பின் வரும் வசனங்களை சற்று ஆழமாக அசை போடவும்: 


"அவ்வாறல்ல! ஏனெனில் இத்திருக்குர்ஆன் நினைவூட்டும் நல்லுபதேசமாகும்! ‏எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்." - (80:11-12) 


"அந்த நாளில் மனிதன் - தன் சகோதரனை விட்டும் – தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் - வெருண்டு  ஓடுவான்!  (80:34-36)


@@@

Comments