உயிர் காப்பதே உயர் இலட்சியம்! - REVISED



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


இஸ்லாத்தின் உயர்ந்த இலட்சியங்களுள் ஒன்று - இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்களைப் பாது காத்தல்  - என்பதாகும். 


Preservation of Life is one of the Basic Most Higher Objective of Islam. 


**


உயிர்களைக் காத்தல் நமது உயர் இலக்குகளுள் ஒன்று என்று எதனை வைத்துச் சொல்கிறோம் எனில் - திருமறை திருக்குர்ஆனை வைத்தும், ஆதாரப் பூர்வமான நபிமொழிகளை வைத்தும் தான். அது குறித்து நமது சிந்தனையை செலுத்துவோம் இங்கே.

**


1 கருக்கலைப்பைத் தடை செய்கிறான் இறைவன்!


6:151 (part)

-------

"வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்". (குர்ஆன் 6:151) 



2 பிறந்த பெண் குழந்தைகளைக் கொல்வதைத் தடை செய்து விடுகிறது இஸ்லாமிய ஷரீஅத்! அது குறித்த விசாரணையை நாம் மறுமையில் கொண்டு வருவோம் என்று எச்சரித்து வைக்கிறது திருமறை!


81:8-9

--------

“எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று-

உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது! (குர்ஆன் 81:8-9)


**


3) கொலை செய்வது கொடிய குற்றம் எனப் பறைசாற்றுகிறது திருமறை!


17:33 (part)

-------

அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்! (குர்ஆன் 17:33)

**


4) கொலை செய்வது எதற்குச் சமம்? உயிர் காப்பது எதற்குச் சமம்?


5:32

-----

இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;  மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்…. (குர்ஆன் 5:32) 


**


5) உணவுகளில் கட்டுப்பாடுகள் விதிப்பதன் நோக்கம் உயிர் காத்திடத் தானே!


5:3 (part)

----

(தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்டதும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன... (குர்ஆன் 5:3) 


**


6) ஜகாத்தும் தர்மமும் எதற்காகவாம்? உயிர் காத்திடத்தானே?


9:60

-----

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (குர்ஆன் 9:60) 


இரண்டு நபிமொழிகளை இங்கே தருவோம்:


அண்டை வீட்டார் பசியால் வாடிப்போயிருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர் உண்மையான முஸ்லிம் அல்லர். (நபிமொழி, ஹாகிம் - 7307)


’மனிதர்களே! ஸலாம் கூறுவதை பரப்புங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். உறவினர்களை ஆதரியுங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொழுங்கள். ’ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுஙகள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர் : அப்துல்லா இப்னு ஸலாம்(ரலி) ஆதாரம் : திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்: 849


**


7) தற்கொலை செய்வது தடை செய்யப்பட்ட ஒன்று - இஸ்லாத்திலே!


4:29 (part)

-----

நம்பிக்கை கொண்டவர்களே! .... நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (குர்ஆன் 4:29) 


8) உயிர்கள் காக்கப்பட - நீதி நிலை நிறுத்தப் படுதல் - அவசியம்!  


4:135 

-------

முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (குர்ஆன் 4:135)


**


9) வயதான பெற்றோர்களைக் காப்பது நம் கடமைகளுள் முக்கியமானது!


17:23

-------

 அவனையன்றி நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று  சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (குர்ஆன் 17:23)


10) கருணை மற்றும் இரக்கம், மன்னிக்கும் மனப்பான்மை - போன்ற நற்குணங்களை எடுத்து நடக்கத் தூண்டுவதன் மூலமும்  , கோபம், பொறாமை போன்ற தீய  குணங்களை விட்டும் தவிர்ந்து கொள்வதன் மூலமும் - உயிர் காக்கும் இலட்சியத்தைச் சுமப்பவர்களாக நாம் விளங்கிட வேண்டும் என்ப்தையே இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கிறான்!  


***


மனித இனத்துக்குக் கிடைத்திருக்கின்ற ஒரு அருமையான வாய்ப்பு தான் - இப்பூவுலகில் நமது வாழ்க்கை! இந்த வாய்ப்பை நாம் மட்டும் அனுபவித்து விட்டுச் செல்லும் சுய நலத்துக்கு இஸ்லாத்தில் இடமில்லை!


இன்றைய இருபத்தோறாம் நூற்றாண்டில் - உயிர் காத்தல் - என்பது மிகச் சவாலான ஒரு பணி என்பது மட்டுமல்ல. உயிர் வாழ்தல் / வாழ்க்கையைப் பாதுகாத்தல் என்பது - இப்பூவுலகின் இன்ன பிற துறைகளோடு பின்னிப் பிணைந்து கிடக்கின்ற ஒரு சிக்கலான துறையாக ஆக்கப்பட்டு விட்டது.   இதனை நாம் மட்டுமல்ல. உயிரியல் அறங்காவலர்கள் (Bio Ethicists) அனைவருமே கவலையுடன் அணுகுகின்ற ஒரு விஷயம் தான் இது!


***


அடுத்து நாம் இன்னொன்றையும் புரிந்து கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இங்கே - உயிர் காத்தல் என்பது மனித உயிர்களைக் காப்பது மட்டும் தான் என்று எண்ணிக் கொண்டால் அது மிகவும் தவறானதொரு புரிதல் ஆகும்!


விலங்கினம்! பறவைகள்! இவைகளும் நம்மைப் போலவே சமுதாயக் கூட்டங்கள் தாம்! தாவர இனத்துக்கும் உயிர் உண்டு. உணர்வு உண்டு. தாவர இனத்தைக் காத்திட வேண்டிய பொறுப்பும் நமக்குண்டு!  இவ்வளவு படைப்பினங்களுக்கு மத்தியில் தான் மனித இனமாகிய நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.


பூமியின் படைப்பினங்கள் அனைத்தும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இப்பேரண்டத்தோடு  பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதால் - நமது சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாப்பதும் - உயிர் காத்தல் எனும் உயர் இலக்குடன் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது என்றால் அது மிகையில்லை! 


பின் வரும் இறை வசனம் நமக்கு உணர்த்துவது இது தான்!


21: 107

----------

(நபியே!) நாம் உம்மை "அகிலம் அனைத்திற்கும்" - ரஹ்மத்தாக - ஓர் கருணையாக, ஓர் அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை! (குர்ஆன் 21:107)


நமக்கு மிகுந்த பொறுப்பு இருக்கிறது!


சுற்றுப்புறச்சூழல் குறித்த விழிப்புணர்ச்சி, உலகெங்கினும் பசிப்பிணி அகற்றப் பாடுபடுதல், வாழ்க்கையின் பொருளை உணர வைத்து, தற்கொலைகளைத் தடுக்கும் முயற்சிகள்,    எல்லோர்க்கும் எளிதில் கிடைத்திடும் மருத்துவ உதவி,  முதியோர் அக்கறை, இயற்கை வளங்களை நிதானத்துடனும்,  வரம்பு மீறி விடாமலும் பயன்படுத்துவது குறித்து உலகின் கவனத்தை ஈர்த்தல், சமூகங்களுக்கிடையேயான உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்த கவலை, போர்களைத் தவிர்த்து - உலக அமைதிக்குப் பாடுபடுதல் - என்று நமது பொறுப்பு மிக விரிவானது தான்!


ஆனால் - இப்பொறுப்பினை நாம், நமது அருகிலிருந்தே தான் தொடங்கிட வேண்டும்!

Comments