கருத்துப் பரிமாற்றத் திறமை! - REVISED

 


முதலில் பேசக் கற்றுக் கொள்வோம்!


கருத்துப் பரிமாற்றத் திறமை!  அதாவது Communication Skill!


இது குறித்து இன்று நிறைய பேசப் படுகின்றது. அதாவது நாம் சொல்ல வருகின்ற ஒரு கருத்தை மற்ற ஒருவருக்கு அல்லது பலருக்குப் புரிய வைக்கும் திறமை என்று இதனை விளக்கலாம்.


இந்தத் திறமை நம் அனைவருக்கும் மிகமிக அவசியம்! 


கணவன், மனைவி, 

பெற்றோர், பிள்ளைகள்,  


ஆசிரியர், மாணவர், 

வணிகர்கள், வியாபாரிகள், 


நிறுவனத் தலைவர்கள், மேலாளர்கள், பணியாளர்கள், 

வேலை கொடுப்பவர்கள், வேலை தேடுபவர்கள் 


உற்பத்தியாளர், விற்பனையாளர், நுகர்வோர்,  

கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்கள் 


சொற்பொழிவாளர்கள், பயிற்சியாளர்கள்

விவாதிப்பவர்கள்,மறுத்துப் பேசுபவர்கள் 

வழக்கறிஞர்கள், நீதிபதிகள்,  


அழைப்புப் பணியாளர்கள், மார்க்க அறிஞர்கள் 


ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், 

அரசியல் தலைவர்கள்,  அரசு ஊழியர்கள்,


ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், 

மக்கள் தொடர்பு அலுவலகர்கள்,  


வலை தளங்களைப் பாவிப்பவர்கள் -  என 


அனைவருக்கும் அவசியமான திறமை தான்

கருத்துப் பரிமாற்றத் திறன்!


***


இல்லற வாழ்வு சிக்கல் எதுவுமின்றித் தொடர்வதற்கும் கலந்துரையாடல் திறன் அவசியம். கருத்து வேறுபாடுகள் எவ்வளவு இருந்தாலும், இல்லற வாழவில் கருத்துப் பரிமாற்றம் மட்டும் தடைபட்டு விடக்கூடாது என்று எச்சரிக்கிறார்கள் ஷெய்க் யாவர் பெய்க் அவர்கள். 


கல்லூரித் தேர்வுகளில் மிக அதிக மதிப்பெண்கள் பெறுகின்ற மாணவர்கள் கூட  கருத்துப் பறிமாற்றத் திறமை இன்மையால் வேலை வாய்ப்பை இழந்து விடுகின்றனர். More than 90% of our fresh graduates are unemployable - என்கிறது ஓர் ஆய்வு!   


அழைப்புப் பணியில் ஈடுபடுவர்களுக்கும் இந்தத் திறமை அவசியம். கருத்துப் பரிமாற்ற சமயங்களின்போது கடைபிடிக்க வேண்டிய "பண்பாடுகள்" குறித்து நிறைய வழிகாட்டுதல்களை வழங்குகிறது திருமறை திருக்குர்ஆன்! 


சமூக வலை தளங்களில் நம் இளவல்கள் பலருடைய எழுத்துக்களைப் படிக்கும்போது - கருத்துப் பரிமாற்றத் திறமையில் நாம் எந்த அளவுக்கு நாம் பின் தங்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்து  கொள்ள முடிகிறது.  ஆமாம்! பேசிட மட்டுமல்ல! நாம் எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது!


எனவே இது குறித்துக் கொஞ்சம் எழுதுவோமே! 


***


என் பேச்சை யாருமே கேட்பதில்லை எனில் 

எனக்குப் பேசவே தெரியவில்லை என்று தான் பொருள்!


@@@



பயிற்சி ஒன்றே திறமை வளர்க்கும் கருவி!


#மீள்


பொதுவாகவே எந்த ஒரு திறமையை நாம் வளர்த்துக் கொள்வதாக இருந்தாலும், அதனைப் பற்றிப் படிப்பதன் (THEORY) மூலமாக மட்டுமே வளர்த்துக் கொண்டு விட முடியாது. களத்தில் இறங்கி தொடர்ந்து பயிற்சியில் (PRACTICE) ஈடுபடுவதன் மூலமே எந்த ஒரு திறமையையும் வளர்த்துக் கொள்ள முடியும். 


எந்த அளவுக்குப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுகின்றோமோ அந்த அளவுக்கே நமது திறமையின் அளவும் அமைந்திருக்கும்.


அது சமையல் திறமையாக இருந்தாலும் சரி, 

கார் ஓட்டும் திறமையாக இருந்தாலும் சரி, 

நீச்சல் திறமையாக இருந்தாலும் சரி, 


அது ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறமையாக இருந்தாலும் சரி, 


அடுத்தவருக்குத் தன் கருத்தைப் புரிய வைத்திடும் கருத்துப் பரிமாற்றத் திறமையாக இருந்தாலும் சரி, 


அது மற்றவர்களோடு பழகுவது எப்படி எனும் மனித உறவுத் திறமையாக (Human Relations Skill) இருந்தாலும் சரி, 


எல்லாவற்றுக்கும் “பயிற்சி” என்பது பொருந்தும்.


நம்மில் பல பேர் என்ன செய்கிறோம் என்றால் -ஒரு திறமை குறித்த பாடங்களை ஆர்வமாகக் கற்றுக் கொள்கிறோம். ஆனால் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதில்லை. 


ஏனெனில் – பயிற்சியில் ஈடுபடும் போது பல தடுமாற்றங்கள் நமக்கு ஏற்படுவதுண்டு.


சைக்கிள் கற்றுக் கொள்ளும் போது, கீழே விழுந்து சிராய்த்துக் கொள்வது சகஜம்.


நீச்சல் கற்றுக் கொள்ளும்போது, நிறைய தண்ணீரைக் குடித்து விடுவதும் சர்வ சாதாரணம் தான்.


அதைப் போலவே தான் -


தப்புத் தப்பாக ஆங்கிலத்தில் பேசத் தயங்குபவர்கள், ஒரு போதும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுபவர்களாக ஆகி விட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


எனவே தான் சொல்கிறோம் - பயிற்சி ஒன்றே திறமை வளர்க்கும் கருவி!


SKILL IS BY DRILL! 


@@@@


கெட்ட சொற்களை அப்புறப் படுத்தி விடுவோம்!


பேச்சுக் கலைப் பயிற்சியின்  முதற்கட்டம் - தூய்மைப் படுத்திக் கொள்தல்! பிறகு தான் வளர்ச்சி! (Purification and Development)


நமது அன்றாட உரையாடல்களில் நம்மை அறிந்தோ அறியாமலோ - என்னென்ன கெட்ட சொற்களைப் பயன்படுத்துகிறோம் என்பதைக் கணக்கிலெடுத்துப் பாருங்கள். 


நான் இதனை மிகவும் சீரியஸாகவே சொல்கிறேன். இதனை நீங்கள் அலட்சியம் செய்து விடாதீர்கள். விளையாட்டுக்குக் கூட கெட்ட சொற்கள் உங்கள் நாவிலிருந்து வெளிவரக்கூடாது. 


உங்கள் இல்லம் முழுவதிலும் இதனை செயல்படுத்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.  உங்கள் மனைவியோ / கணவனோ, குழந்தைகளோ - அவர்கள் கெட்ட சொற்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தி வந்தால் அதனைப் பொறுத்துக் கொண்டு விடாதீர்கள். அமர்ந்து பேசுங்கள். ஒரு முடிவுக்கு வாருங்கள். குடும்பத்தினர் பயன் படுத்தும் கெட்ட சொற்களைப் பட்டியலிடுங்கள். இதனை ஒரு பயிற்சியாகவே எடுத்துக் கொண்டு செயல்படுத்திப் பாருங்கள். 


***


என்னோடு பள்ளியில் படித்த மாணவன் ஒருவன். 


மாணவர்களுக்கு மத்தியில் நடக்கும் பேச்சுக்களின் போது - யாராவது ஒருவன் - "அதைக் கேட்க நீ யாரடா?" என்று கேட்டு விட்டால் - அந்த மாணவன் அடிக்கடி பயன்படுத்துவது ​  "நான் ஒரு ஆம்பளை!" என்பது தான்!


ஒரு தடவை என்னவானது எனில் - அந்த மாணவன் இன்னொரு மாணவனின் வகுப்பறைக்கு ஆசிரியர் இல்லாத நேரம் ஒன்றில் சென்றிருக்கிறான். திடீரென்று ஆசிரியர் ஒருவர் உள்ளே நுழைகிறார். "யாரடா நீ? என்று அவர் கேட்க, இவன், நான் ஒரு ஆம்பளை!" என்று சொல்லி விட்டான்.  


அடுத்து என்ன நடந்திருக்கும்? 


**


என்னுடைய நண்பர் ஒருவர். அவர் அடிக்கடி பயன்படுத்தும் சொல் - "யோவ்!" என்பது தான்.


மற்றவர்கள் இதனை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? "என்னடா, இவன் இப்படி அநாகரிகமாகப் பேசுகிறான்" - என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால் ஒருவர் ஒரு படி மேலே போய் விட்டார்! 


என்ன நடந்திருக்கும்?


***


கணவன் மனைவியருக்கிடையேயும் மற்றும் பெற்றோர் குழந்தைகளுக்கிடையேயும் கூட கெட்ட சொற்கள் பரிமாறப்படத்தான் செய்கின்றன!


என்னிடம் ஒரு பட்டியலே இருக்கிறது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.  ஏனெனில் அவை அனைத்தும் அனைவரும் அறிந்தது தான்! 


***

கெட்ட சொற்களுக்கு மாற்றாக நல்ல சொற்களைப் புழக்கத்துக்குக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். 


"டேய், இங்கே வாடா!" என்பது கூட வேண்டாம். "தம்பி, கொஞ்சம் இங்கே வாயேன்!" - என்று அதற்கு ஒரு மாற்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்! 


தவறாக ஒன்றைச் செய்து விட்டு வந்து நின்றால் "அறிவிருக்கா உனக்கு!" - என்பது வேண்டாம். எது தவறு என்பதை மட்டும் சட்டிக் காட்டுங்கள். 


"உன் வாயைப் பொத்து!" என்று கணவன் சொன்னால்,  "முதலில்  உங்க வாயைப் பொத்துங்க!" என்பாள் மனைவி! மாறாக - "இப்ப இந்தப் பேச்சு தேவையாம்மா?"  என்று குளிர்ச்சியாக சொல்லிப் பாருங்கள். 


***


எது எப்படியாயினும் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்: களையெடுக்கப்பட வேண்டியவை கெட்ட சொற்களே! விட்டு விடாதீர்கள்!  

  

இதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வெற்றி பெற்று விட்டால் கூட அதன் விளைவை தலைமுறை தலைமுறையாக அனுபவிக்க முடியும் உங்களால்!   


@@@


உரையாடலில் இஸ்லாமியப் பண்புகள்!


#மீள்


1 புன்முறுவல் ஒரு தர்மம்!


2 கை குலுக்கிக் கொள்ளுங்கள்!


3 மிக அழகாகப் பேசுங்கள்!


4 முகம் பார்த்துப் பேசுங்கள்!


5 செவி தாழ்த்திக் கேளுங்கள் !


6 இடை மறித்துப் பேசாதீர்கள்!


7 சுற்றி வளைக்காமல் தெளிவாகப் பேசுங்கள்!


8 நல்லவரோ அல்லவோ, மென்மையாகவே பேசுங்கள்!


9 விளையாட்டுக்குக் கூட பொய் பேச வேண்டாம்!


10 புறம் பேசுதல் அருவெறுப்பான செயல்!


11 பேசுதல் நன்று. நன்றல்லது பேசாமை மிக நன்று!

மவுனம்!!


12 குரலை உயர்த்திப் பேச வேண்டாம்!


13 அவசரம் அவசரமாகப் பேச வேண்டாம்! நிதானம்!!


14 தீய சொற்களைத் தவிர்ப்பீர்!


15 திட்டினால், பதிலுக்குத் திட்ட வேண்டாம்!


16 வீண் விவாதம் தவிர்த்தல் நலம்!


17 அறிவுரையில் உள் நோக்கம் கூடாது!


18 உணர்ச்சி வசப்பட்டு விட்டால், வாயை மூடிக் கொள்ளவும்!


19 உணர்ச்சி வசப்பட்டு விட்டவரிடம், வாயைத் திறக்க வேண்டாம்!


20 கோபத்துடன் வருபவரை அமர வைக்காமல் பேசிட வேண்டாம்!


@@@



தகவல் பரிமாற்றத் தோல்வி!  


நமது கருத்தொன்றை இன்னொருவருக்குப் புரிய வைத்திட பின்வரும் வழிமுறைகளை நாம் கடைபிடிக்க வேண்டும்: 


1 எந்த விஷயம் குறித்துப் பேசுகின்றோமோ - அந்த விஷயத்தில் முதலில் நாமே மிகத் தெளிவாக இருக்க வேண்டும். நமக்கே அதில் சந்தேகங்கள் இருந்திடக் கூடாது. 


2 யாருக்கு ஒன்றைப் புரிய வைக்கின்றோமோ - அவருடைய அறிவாற்றல் தகுதியை (intellectual capacity) அறிந்து பேசிட வேண்டும்.  


3 முகத்துக்கு முகம் பார்த்துப் பேசிட வேண்டும்! 


3 எளிமையான மொழிநடையில் அதனை அடுத்தவர்க்குப் புரிய வைத்திட முயற்சிக்க வேண்டும். 


4 அவசர அவசரமாகப் பேசிடாமல் நிதானமான நடையில் கருத்தைப் பரிமாறுவது அவசியம்.  


5 தேவைப்படின் இரண்டு அல்லது மூன்று முறை கூட திரும்பவும் திரும்பவும் சொல்லிப் புரிய வைப்பது நலம். 


6 அவருக்குப் புரிகிறதா என்று அவ்வப்போது கேட்டுக் கொள்ள வேண்டும்  சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் என்று ஊக்குவித்திட வேண்டும்.  


7 அவர் சந்தேகம் எதுவும் கேட்டால் - அவரை முழுமையாகப் பேச விட்டுக் கேட்க  வேண்டும்! - Listening is very important in communication. 


8 தேவைப்படின்,  படம் வரைந்து காட்டிப் புரிய வைக்கலாம்.  (showing visuals)


9 தகவல் சம்பந்தப்பட்ட விஷயங்களை முழுமையாகத் தந்திட வேண்டும். அரைகுறைத் தகவல்கள் தோல்வியில் முடிந்து விடும். Providing complete data.


10 பேச்சை புன்முறுவலோடு துவங்கி புன் முறுவலோடு முடித்துக் கொள்ள வேண்டும்.  


***


இந்தக் கருத்துப் பரிமாற்றத்தைப் பொறுத்தவரை நம்மில் பலர் பல தவறுகளை நமது அன்றாட வாழ்விலேயே செய்து வருகின்றோம்.


”தம்பீ… அதை எடுத்து வா இங்கே?”


எதை எடுத்து வருவான் தம்பி?


ஏங்க… அன்னைக்கி கொடுத்தேனே… அதை எங்கங்க வச்சீங்க? – மனைவி.


அன்னைக்கி என்ன கொடுத்தாங்க கணவனிடம்?


அந்த சீட்டைப் போய் கொடுத்து விட்டு வரச் சொன்னேனே… ஏம்ப்பா இன்னும் கொடுக்கவில்லை? நம்மைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்? அவர்கள் நமக்கு எவ்வளவு உதவிகள் செய்திருக்காங்க? இதக் கூட ஏன்ப்பா செய்ய மாட்டேங்கறே? – தாய் மகனிடம்.


எந்த சீட்டு அது?


இது போன்ற தெளிவற்ற உரையாடல்களை நம்மில் படித்தவர், படிக்காதவர் வேறுபாடு இன்றி எல்லாரும் செய்து வருகின்றோம்.


மாநாடு ஒன்றில் உரையாற்றுவதற்கு பேச்சாளர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். பேச்சாளரும் குறிப்பிட்ட தேதியில் அந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். ஆனால் மாநாடு நடப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அதிர்ச்சி அடைந்தவராக மாநாட்டுக்கு அழைத்த நிர்வாகிகளை சந்திக்கிறார். அப்போது தான் தெரிந்தது - மாநாடு இந்த மாதத்தில் இல்லையாம். அடுத்த மாதம் இதே தேதியில் தானாம்!


இதனைத் தான் தகவல் பரிமாற்றத் தோல்வி என்கிறோம்.  


Communication failure!!

      

இப்போது - மீண்டும் ஒரு முறை அந்தப் பத்துக் குறிப்புகளையும்  படித்துப் பாருங்கள். அவற்றின் அவசியம் புரியும்!



இரு வழிக் கருத்துப் பரிமாற்றம்!


Two way communication 


***


பெரும்பாலும் சொற்பொழிவு என்பது ஒரு வழிப்பாதை! ஆரம்பித்ததிலிருந்து முடிவு வரை ஒருவரே தொடர்ந்து பேசுவார். மற்றவர்கள் அப்பேச்சு முழுவதையும் - செவி தாழ்த்தி வாய் பொத்திக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதற்குப் பெயர் ஒரு வழி கருத்துப் பரிமாற்றம்.  One way communication.  


ஆனால் கருத்துப் பரிமாற்றத்தில் இன்னொரு வகை இருக்கிறது. அதற்குப் பெயர் இரு வழிக் கருத்துப் பரிமாற்றம்! அதாவது இங்கே தகவல் பரிமாற்றம் இரண்டு புறமும் மாறி மாறி நடந்து கொண்டிருக்கும்.  Two way communication.


***


ஒரு வழிச் சொற்பொழிவுகளைப் பொறுத்தவரை - அதனைக்  கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு  சந்தேகங்கள் தோன்றும். உரை முடிந்து கேள்வி நேரம் என்று அறிவிப்பார்கள். ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்கப்படும். நேரமும் போதாது. "உங்கள் பேச்சு அருமை!" என்று சிலர் சொல்லி விட்டுச் சென்று விடுவார்கள்! அவ்வளவு தான்!


இம்முறையிலுள்ள மிகப்பெரிய குறைபாடு என்னவெனில் - சொற்பொழிவைக் கேட்பவர்களின் கவனம் என்பது (attention span) மிகக்குறைவு. அதாவது பதினைந்து சதவிகிதம் மட்டுமே.


அதாவது ஒருவர் ஒரு மணி நேரம் சொற்பொழிவாற்றுகிறார் என்றால் ஒரு ஒன்பது அல்லது பத்து நிமிடம் மட்டுமே ஒருவரால் கவனத்தைக் குவித்துக் கேட்டிட முடியும்.


***

ஆனால் இரு வழிக் கருத்துப் பரிமாற்றத்தில் - அப்படியிருக்காது. இங்கே கேள்விகள் முன் வைக்கப்படும். சந்தேகங்கள் கேட்கப்படும். ஒரு வழிப் பேச்சு என்பது கலந்துரையாடலாக மாறும். Open discussion.


எல்லோரும் இதிலே பங்கு பெற முடியும். எல்லோருடைய சிந்தனைக்கும் இங்கே இடமுண்டு. இங்கு சோர்வுக்கு வேலையே கிடையாது. Not at all boring! கவனம் இங்கே அதிகம். புரிதல் இங்கே அதிகம். 


இரு வழி கருத்துப் பரிமாற்றம் என்பது ஏனோ தானோ என்று நடத்தப்படுவதல்ல. இதற்கும் பல கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் உண்டு. அவைகளை நாமே உருவாக்கிக் கொள்ளவும் இயலும். 

 

***


கல்வித் துறையில் இது குறித்து பெரும் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் - கல்வித்துறையில் கற்பித்தல் வழிமுறைகளில் (teaching methodologies) - இரு வழிக் கருத்துப் பரிமாற்றம் - மிக முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. 


---


நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு அளித்த இஸ்லாமியப் பயிற்சிகளில் இந்த இரு வழிமுறைகளையும் கையாண்டிருக்கிறார்கள்.


வெள்ளிக் கிழமை ஜும்ஆப் பேருரை, பெரு நாள் உரைகள், ஹஜ்ஜின் போது நிகழ்த்தப்படும் பேருரைகள் - இவையெல்லாம் ஒரு வழி கருத்துப் பரிமாற்றம் வகையைச் சேர்ந்தவை!


ஆனால் இவை தவிர்த்த பற்பல சூழ்நிலைகளிலும் - நபி (ஸல்) அவர்கள் இரு வழிக் கருத்துப் பரிமாற்ற முறையைப் பின்பற்றியிருக்கிறார்கள். 


இரண்டே இரண்டு நபிமொழிகளை இங்கே குறிப்பிட்டுக் காட்டுவோம்.


சஹீஹ் புகாரியில் இடம்பெற்றிருக்கக்கூடிய ஒரு நபிமொழியின் ஒரு பகுதியைக் கவனியுங்கள்:  


அபூ ஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்: இறை தூதர் (ஸல்) கூறினார்கள்: 


‘‘உங்களில் யாரையும் அவரது செயல் காப்பாற்றாது.” 


அப்போது நபித்தோழர்கள் கேட்டார்கள்: “அல்லாஹ்வின் தூதரே உங்களையுமா?” 


அப்போது இறை தூதர் (ஸல்) கூறினார்கள்: “என்னையும்தான். அல்லாஹ் தனது கருணையை எம்மீது சொரிந்தாலன்றி!” 


சஹீஹ் புகாரி -  6463 


***


நபி(ஸல்) அவர்களிடம் மக்களில் சிறந்தவர் யார்? - என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள்

உண்மை பேசும் ஒவ்வொருவரும் மற்றும் தூய உள்ளம் கொண்டவரும் ஆவர் என்று பதில் அளித்தார்கள்.

அப்போது மக்கள் உண்மை பேசுபவரை பற்றி அறிவோம். ஆனால் தூய உள்ளம் கொண்டவர் என்றால் யார்? என்று வினவினார்கள். 


அதற்கு நபி(ஸல்) அவர்கள் தூய உள்ளம் கொண்டவர் யாரெனில் அவரது உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ, இருக்காது என்றார்கள்.


அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

இப்னுமாஜா 4206


**

நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்த இருவழி கருத்துப் பரிமாற்றம் குறித்து - இன்றைய சூழலில் நாம் அதிகமாக சிந்திக்க வேண்டியுள்ளது.


இன்றைய இளைஞர்களிடத்தில், இஸ்லாமியக் கருத்துகளை மிகச் சிறப்பாகக் (effective) கொண்டு போய் சேர்ப்பதற்கு இந்த இருவழிக் கருத்துப் பரிமாற்றம் மிக அவசியம்.


இன்னும் மக்தப் பாடசாலை துவக்கம் - அரபிக் கல்லூரிகள் வரை நமது கல்வித் திட்டத்துக்குள் - இந்த வழிமுறையைக் கொண்டு வருவது குறித்தும் நாம் கவனம் செலுத்திட வேண்டும். 


அது போல - இஸ்லாமியப் பாடங்களை (Islamic lessons) இரு வழி கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில்  நடத்துவது எப்படி என்பது குறித்து கல்வியாளர்கள் சிந்தித்திட வேண்டும்.  அதே அடிப்படையில் விரிவான பாடத் திட்டங்களையும் உருவாக்கிட வேண்டும்.  ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.  


***

இளைஞர்களுக்கு ஒரு பரிந்துரை. 


உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து - பள்ளிவாசலில் அமர்ந்து - இரு வழி கருத்துப் பரிமாற்றப் பயிற்சியை செயல்படுத்திப் பார்க்கலாம். இளைஞிகள் வீடுகளில் அமர்ந்தபடியே இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.  


ஒரு சிலர் ஏதாவது ஒரு தலைப்பில் ஒரு மூன்று நிமிடம் பேசுவதற்குத் தயாரித்துக் கொண்டு வந்து பேசிப்பார்க்கலாம். வாரம் ஒரு முறை இதற்கெனப் பள்ளியில் கூடி கருத்துப் பரிமாற்றத் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். 


ஆனால் நம் இளைஞர்களில் பெரும்பாலோர் செய்கின்ற தவறு என்னவெனில் - ஒரு சிறப்புப் பேச்சாளரை வரவழைத்து பேசச் செய்வதோடு திருப்தி அடைந்து விடுகிறார்கள். இளைஞர்கள் தங்களை வளர்த்துக் கொள்வதிலும் கவனம் செலுத்துதல் மிக அவசியம்! 


திருக்குர்ஆன் விரிவுரை,ஹதீஸ் விரிவுரை, சீரத்துன் நபி, நபித்தோழர்கள் வரலாறு, அஃக்லாக் எனும் நற்பண்புகளுக்கான பாடங்கள் - என்று எல்லாவற்றையுமே இரு வழிக் கருத்துப் பரிமாற்ற முறைக்கு மாற்றப் படுதல் அவசியம்! ஆம்! நாம் மாறித்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் நமக்கும் இளைஞர்களுக்கும் இடையே பாரதூரமான தகவல் பரிமாற்ற இடைவெளி தோன்றி விடும்.  

இதற்குப் பெயர் தான் - Communication gap!


Comments