கருணை - ஓர் அடிப்படைப் பண்பு! - REVISED



 கருணை - ஓர் அடிப்படைப் பண்பு!

Compassion - a basic ethics!


#மீள் (சில திருத்தங்களுடன்)


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


ரஹ்மத் / ரஹ்மா என்பது - பரந்து விரிந்ததொரு திருக்குர்ஆனின் கருத்தாக்கமாகும். (Quranic concept).


நமது எல்லாவிதமான செயல்பாடுகளுக்கும் பின்னணியில் இருந்திட வேண்டிய அறக்கோட்பாடு தான் ரஹ்மா.


ரஹ்மா என்றால் கருணை, இரக்கப் பண்பு - என்று பொருள். அதே வேளையில் - ரஹ்மத் என்பதன் மூலச் சொல் - ரஹ்ம் - என்பது தாயின் கருவறையைக் குறிக்கும் சொல்லாகும்!


திருமறை திருக்குர்ஆனிலே - இச்சொல் இதன் கிளைச் சொற்களுடன் சேர்த்து மொத்தம் 339 தடவை திரும்பவும் திரும்பவும் இடம் பெற்றிருக்கும் சொல்லாகும்.


படைத்த இறைவனின் - அழகிய திரு நாமங்களில் - ரஹ்மான் மற்றும் ரஹீம் - ஆகிய இரண்டு பெயர்களும் இதே ரஹ்மத்தை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்! 


திருமறையின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் - இந்த இரண்டு அழகிய திருநாமங்களையும் தன்னகத்தே கொண்ட -  பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் - என்ற சொற்றொடருடன் தான் தொடங்கும் - ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர!


ரஹ்மான் என்பது உச்ச கட்ட கருணையைக் குறிக்கும் இலக்கண வடிவாகும் (The Most Merciful). ரஹீம் என்பது - கருணையை இடை விடாது - தொடர்ந்து வழங்கும் தன்மையைக் குறிக்கும் (Consistently Merciful) இலக்கண வடிவாகும்!


**


இறைவனின் கருணை எப்படிப்பட்டது?


7:156

-------


"என்னுடைய அருளானது (ரஹ்மா) எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது..." (குர்ஆன் 7:156 - வசனத்தின் ஒரு பகுதி )


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்த நாளில் அன்பை நூறு பாகங்களாகப் படைத்தான். அவற்றில் ஒவ்வொரு பாகமும் வானம் பூமிக்கிடையே உள்ள (இடத்)தை அடைத்துக் கொள்ளும் அளவுடையதாகும். அவற்றில் ஒரு பாகத்தையே பூமியில் வைத்தான். அந்த ஒரு பாகத்தினால்தான் தாய் தன் குழந்தைமீது பாசம் கொள்கிறாள். மிருகங்களும் பறவைகளும் ஒன்றன் மீதொன்று அன்பு காட்டுகின்றன. மறுமை நாள் வரும்போது இந்த ஓர் அன்புடன் சேர்த்து அன்பை இறைவன் (நூறாக) முழுமையாக்குவான். இதை சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


**


இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?


21: 107

---------


(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை! (குர்ஆன் 21:107)


**


திருமறை திருக்குர்ஆனை நமக்கு நேர் வழிகாட்டியாக அனுப்பியதற்குக் காரணமே - இறைவனின் அளப்பரிய கருணைப்பண்பே ஆகும்!


55: 1- 2

----------


அவன் ரஹ்மான் - கருணை மிக்கவன்!  அவன் தான் இக் குர்ஆனைக்  கற்றுக் கொடுத்தான். (குர்ஆன் 55: 1- 2)


***


இறைவன் விதிக்கின்ற சட்டங்களுக்குப் பின்னணியில் இருப்பதுவும் இரக்கப் பண்பே ஆகும்!


2:185 (part)

-------

அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; (குர்ஆன் 2:185 - வசனத்தின் ஒரு பகுதி)


**


இதே இரக்கப் பண்பைத் தான் இஸ்லாம் அதனைப் பின்பற்றுவோரிடையே ஒரு அடிப்படை விதியாக விதித்திருக்கிறது!


***


பெற்றோர்களிடம் இரக்கம் காட்டுவது நீங்காக் கடமை!


17:24

-------


இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (குர்ஆன் 17:24)


**


*நாம் பெற்ற குழந்தைகளிடம் காட்டிட வேண்டியதும் இதே இரக்கப் பண்பு தான்!


யார் நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாமலும் சிறியவருக்கு இரக்கம் காட்டாமலும் அறிஞரின் தகுதியை அறிந்து (அதற்குத் தக்கவாறு அவரிடம் நடந்து) கொள்ளாமலும் இருக்கிறார்களோ அவர்கள் எனது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) - நூல்: அஹ்மத் 21693


**


கணவன் மனைவியரிடையே இறைவன் விதித்திருப்பதும் அன்பும் கருணையும் தான்!


30:21

-------

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய  மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன் 30:21)


**


உறவினர்கள்!


கருணையை உள்ளடக்கிய "உலுல் அர்ஹாம்" - என்ற சொல்லைக் கொண்டே திருமறை இரத்த பந்த உறவைக் குறிக்கின்றது!


**


ஆசிரியர்கள்!


ஆசிரியரின் அடிப்படை அறமே - கருணையாக இருந்திட வேண்டும் என்று இலக்கணம் வகுக்கிறது மார்க்கம்!


18:65

-------

அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து இரக்கப் பண்பை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம். (குர்ஆன் 18:65)


நான் ஆசிரியனாக அனுப்பப்பட்டுள்ளேன் என்ற அண்ணலாரின் நபிமொழியும் இதனையே உணர்த்துகிறது!


**


நம்பிக்கையாளர்களிடையே! 


நம்பிக்கையாளர்களின் நல்லுறவுக்கான அடிப்படையும் இரக்க உணர்வு தான்!


"தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்!" (குர்ஆன் 48:29)


**


உலக மக்கள் யாவருக்கும்!


உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது தான் நம்பிக்கையாளர்களின் இரக்கப் பண்பு!


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பூமியில் உள்ளோர் மீது இரக்கம் காட்டுங்கள். வானிலுள்ளவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.'' (முஃஜமுத் தப்ரானி)


அபூ மூஸப் அல் அஷ்அரி (ரளி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்: "நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் "கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்'' என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)


***


ஆட்சியாளர்கள்!


*மக்களை நிர்வகிக்கும் ஆட்சியாளர்களுக்கு அவசியத் தேவை இந்த இரக்கப் பண்பாகும்!


உமர் (ரளி)அவர்கள் ஒரு மனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர்  "குழந்தைகளை நான் முத்தமிடமாட்டேன்' என்று சொல்வதைக் கேட்டார்கள். அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: "உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்ட வில்லையானால் எப்படி நீர் மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்க மாட்டேன்'' என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள்.



'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். (ஸஹிஹ் புகாரி)



திருடுபவர்களின் கரங்களை வெட்டுங்கள் என்றொரு சட்டம் திருமறையிலே உண்டு. ஆனால் ஒரு சமயம்  மதீனா நகர்  கடுமையான பஞ்சத்துக்கு உள்ளான போது - அந்த இறைச் சட்டத்தைச் செயல் படுத்துவதை தற்காலிகமாக் நிறுத்து வைத்தார்கள் இரண்டாம் கலீபா ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள்!


***


*நமது - இரக்கப் பண்பின் வட்டத்துக்குள் - விலங்கினங்களும் பறவைகளும்  உள்ளடக்கமே!


நபி (ஸல்) அவர்கள் ஒர் இடத்தில் தங்கியபோது ஒரு பறவை நபி (ஸல்) அவர்களின் தலையின்மேல் பறந்து கொண்டிருந்தது.  ஒருவர் தனது முட்டையை எடுத்து அநீதமிழைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டது போன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் "உங்களில் இந்தப் பறவையின் முட்டையை எடுத்தவர் யார்?'' என்று கேட்டார்கள்.  அப்போது ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த முட்டையை எடுத்தேன்'' என்றார்.  நபி (ஸல்) அவர்கள் "அதன் மீது கருணைகூர்ந்து அதை திருப்பிக் கொடுத்துவிடு'' என்றார்கள். (முஃஜமுத் தப்ரானி)


**


இன்றைய உலகம் ஏங்கித் தவிக்கின்ற, மக்களிடையே அரிதினும் அரிதாகப் போய் விட்ட  அறப்பண்பு தான் இரக்க உணர்வு! அது இன்றைய உலகின் அவசரத் தேவை!


முஹம்மத் (ஸல்) அவர்களைப் பின்பற்றி வாழ்கின்ற நாம் ரஹ்மா எனும் இரக்கப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை அல்லவா?



குறிப்பு: 


பணிவு, நன்றியுணர்வு, கருணை, நீதி - இந்நான்கும்  - ஓர் இறை நம்பிக்கையாளனின் அடிப்படைப் பண்புகளாகும்! குறித்து வைத்துக் கொள்ளுங்கள்!



Comments