சூரா அல்-அன்ஆம் - சிந்தனைகள்



 FACEBOOK / 25-11-2021

ARTICLE 1 


எது ஸிராத்துல் முஸ்தகீம்? 


#கண்ணோட்டம்_1 


1 எப்பொருளையும் இறைவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; 


2 பெற்றோர்களிடம் மிக அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள்;  


3 வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; 


4 வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; 


5 அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள்; 


6 அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; 


7 அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; 


8 நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; 


9 அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். 


***


இவை திருமறை திருக்குர்ஆனின் ஆறாவது அத்தியாயமாகிய - சூரா அல் அன்ஆம் - இல் இடம் பெற்றிருக்கும் (6:151-152) இரண்டு இறை வசனங்களிலிருந்து தொகுக்கப்பட்ட ஒன்பது அடிப்படை பண்பியல் அற விழுமியங்கள் (Quran's basic ethical codes) ஆகும்! 


இறைவன் வகுத்தளித்த இந்த ஒன்பது அற விழுமியங்களையும் தமக்குள் சுமந்து கொண்டு, 

தமது ஒட்டு மொத்த வாழ்க்கையின் ஒரே இலக்காக - ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் நடை போட வேண்டிய நேரான பாதையே  ஸிராத்துல் முஸ்தகீம்! (6:153)


ஸிராத்துல் முஸ்தகீம் எனும் இறை பாதையின் வரைவிலக்கணமே இது தான்!


இந்த ஒன்பது அற விழுமியங்களையும், தவிர்த்து விட்டுப் பார்த்தால் - அங்கே ஸிராத்துல் முஸ்தகீம் என்று எதுவும் இல்லை!


இப்போது இறை வசனங்களுக்குச் செல்வோம்: 


6:151

------

“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றை நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.


6:152

-------

அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.


6:153

-------

 நிச்சயமாக இதுவே #என்னுடைய #நேரான #வழியாகும் ( صراطي مستقيم  ); ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.

***

அல்லாஹ் மிக அறிந்தவன்!


@@@

Article 2 / Published on 27 Nov, 2021

இந்தப் பாதையில் நாம் எங்கே? 


#கண்ணோட்டம்_2


சூரா அல்-அன்ஆம் - இன் இரண்டு இறை வசனங்கள் (6:151-152) படம்பிடித்துக் காட்டுகின்ற ஒன்பது அற விழுமியங்களையும் இன்னொரு முறை சற்று விரிவாகப் பார்வையிட்டு வருவோம் வாருங்கள்!


***


1 எப்பொருளையும் இறைவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; 


இறைவனிடமிருந்து எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு  அந்த இறைவனுக்கே இணை வைப்பது நியாயமா அநியாயமா? சொல்லுங்கள்? 


இந்த விழுமியம் நம்மிடம் எதிர்பார்ப்பது, நன்றியுணர்ச்சி. Gratitude. இந்த அத்தியாயம் "அல்ஹம்து லில்லாஹ்" என்று துவங்குவதையும் கவனிக்க!


***


2 பெற்றோர்களிடம் மிக அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள்;  


நம்மைப் பெற்றவர்களுக்கு நன்மை செய்ய மறுப்பது  நியாயமா அநியாயமா? சொல்லுங்கள்?


பெற்றோர்களுக்கு அழகிய நன்மைகளைச் செய்வதிலும் - நன்றியுணர்ச்சி பொதிந்துள்ளதையும் கவனத்தில் கொள்ளுங்கள்! 

***

3 வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; 

நம் மூலமாகவே ஓர் உயிர் (நமது குழந்தை தான்!) இந்த உலகுக்கு வந்து சேர்ந்தாலும், அதனை நாமே கொல்வது என்பதும் மிகப்பெரிய அநியாயமே! உரிமை மீறலே!

***

4 வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; 

மானக்கேடானவற்றிலிருந்து நம்மைத் தடுப்பது நம் ஒவ்வொருவரிடமும் இயல்பாகவே காணப்படுகின்ற வெட்க உணர்ச்சி! (modesty)

இதனையே இன்னொரு கண்ணோட்டத்தில் பார்த்தால்  - மானக்கேடான ஒவ்வொரு செயலின் மூலமும் - ஒருவன் தனக்குத் தானேயும் அநியாயம் இழைத்துக் கொள்கிறான். பிறருக்கும் அநியாயம் செய்து விடுகிறான்.   

***

5 அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள்; 

கொலை என்பது ஒரு அநியாயம். ஓர் உரிமை மீறல்! சொல்லவே தேவையில்லை! 


***

6 அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; 


நம்மை விட பலவீனமான அநாதைகளின் விஷயத்தில் - மனித இயல்பு நம்மிடம் எதிர்பார்ப்பது - கருணை உள்ளத்தைத் தான்! (compassion -  mercy)


அவர்களுடைய பொருளாதார உரிமையில் கையை வைப்பதன் மூலம், அவர்களை மேலும் நாம் பலவீனப்படுத்தி விடுவது - அநியாயமா இல்லையா சொல்லுங்கள்? 


***


7 அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; 


வணிகக் கொடுக்கல் வாங்கல்களில் - அளவை நிறுவைகளில் - மற்றவர்களை ஏமாற்றுவதும் அநியாயம் தானே? 


***


8 நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; 


நீதியையும் நியாயத்தையும் பேசுவதில் - அதாவது எனக்கென்று வரும்போது ஒரு நீதி - பிறருக்கென்று நாம் பேசும்போது வேறு "நீதி" - இப்படிப்பட்ட இரட்டை நிலை - எந்த விதத்தில் நியாயம் சொல்லுங்கள்? 


***


9 அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். 


கொடுக்கின்ற வாக்குறுதியை மீறுவது என்பது - அநியாயம் தானே! அதுவும் இறைவன் விஷயத்தில் - அது மிகப்பெரிய அநியாயம் தானே?  


***


படிப்பினை என்ன? 


ஸிராத்துல் முஸ்தகீம் பாதை என்பது அற விழுமியங்களின் பாதை! The Great Path of Morality and Ethics!


அது நீதியின் பாதை! நியாயத்தின் பாதை!  (عدل وال قسط ). Path of justice! Path of human rights!


அது நன்றி உணர்ச்சியின் மீது அமைந்துள்ள பாதை! (شكر) Path of gratitude! 


அது ஓர் அழகிய பாதை! (إحسان). Path of beauty!


அது பாவங்களில் இருந்து இயல்பாகவே நம்மைத் தடுத்து விடுகின்ற வெட்க உணர்ச்சியின் பாதை! (حيا). Path of modesty! 


அது உலகம் தழுவிய - இரக்கம் மற்றும் கருணையின் பாதை! (رحمة). Path of universal compassion and mercy!


அதே நேரத்தில் - இந்த ஒன்பது விழுமிய அம்சங்களிலும் ஆழமாக ஊடுறுவி நிற்பது - நீதியும் நியாயமுமே என்பதையும் நாம் கவனித்திட வேண்டும்! 


இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் - இந்த ஒன்பது விழுமியங்களில் முதலாவதையும் , இறுதியானதையும் - நமக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவைப் பற்றியதாக வைத்து - அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து  ஒரு "பேக்கேஜ்" ஆக - ஒரு "கட்டுச் சாதனமாக" - வடிவமைத்துத் தந்திருக்கின்றான் இறைவன்! இந்த அத்தனையும் சேர்ந்தது தான் ஸிராத்துல் முஸ்தகீம் எனும் நேரான பாதை!


***


இந்தப் பாதையில் நாம் எங்கே? அல்லாஹ்வே மிக அறிந்தவன்!


@@@


Article 3 / Published in Facebook / Nov 28, 2021 

இஸ்லாமிய சமுதாயம் என்றாலே சமூக நீதிச் சமுதாயம் தான்!

கண்ணோட்டம்​_3


திருமறை திருக்குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் - சூரா அல்-அன்ஆம் - இன் இரண்டு இறை வசனங்கள் (6:151-152) படம் பிடித்துக் காட்டுகின்ற அந்த ஒன்பது அற விழுமியங்களும் - இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் தன் தனிப்பட்ட வாழ்வில் கடைபிடித்தே ஆக வேண்டிய அற விழுமங்கள் (personal morality and ethics) தான்! 


ஆனால் அவற்றைத் "தனித்தனி" மனிதர்களுக்கான ஞான உபதேசங்களாக எடுத்துக் கொண்டு விட்டு மற்றபடி அமைதியாக வாளாவிருந்திடுவதற்கு நம் சமூகத்துக்கு அனுமதி இல்லை!


இந்த அத்தியாயத்தை சற்றே ஆழமாக நாம் கவனித்திடும்போது - அந்த ஒன்பது அற விழுமியங்களையும் உள்ளடக்கிய ஒரு சமூக அமைப்பை (social order) உருவாக்கிட வேண்டிய சமூகக் கடமை ஒன்றும் முஸ்லிம்களுக்கு இருக்கின்றது என்பது புலனாகும். 


இதனை நாம் புரிந்து கொண்டு விட்டோமானால் - நாம் முன்னர் குறிப்பிட்டுக் காட்டிய நீதியும் நியாயமும் - "சமூக நீதியையும்-சமூக நியாயத்தையும்" தான் குறிக்கும் என்பதை நாம் மிக எளிதில் புரிந்து கொள்ள முடியும். 


எனவே இந்த அத்தியாயத்தை  - "இஸ்லாமிய சமூகவியல்" - பற்றி அழுத்தமாகப் பேசுகின்ற திருமறை அத்தியாயங்களுள் ஒன்று என்று நாம் அழைக்கலாம்.  


***


6:153

-------

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும் ( صراطي مستقيم); ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் இறை உணர்வு மிக்கவர்களாக விளங்குவதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.


இந்த இறைவசனம் சொல்லும் செய்தி என்ன? 


"உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்" - என்று ஏன் குறிப்பிட்டுச் சொல்கிறான் இறைவன்? 


"நீங்கள் அனைவரும் "ஒன்று சேர்ந்து" - இந்த ஸிராத்துல் முஸ்தகீம் எனும் நேரான பாதையில் செல்கின்ற ஒரு சமூக அமைப்பை உருவாக்க முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்ளுங்கள்!" - என்பது தானே அந்தச் செய்தி!


***


இந்த அத்தியாயம் இறக்கியருளப்பட்ட சூழலைக் கொஞ்சம் கவனித்துப் பார்ப்போம்.  


நபி (ஸல்) அவர்களின் மக்கத்து நபித்துவ வாழ்வின் கடைசிக் கட்டம் அது! நபியவர்களும் அவர்களை நம்பி ஏற்றுக் கொண்டிருந்த சுமார் ஒரு நூறு முஸ்லிம்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குப் புறப்படு முன்னர்  இறக்கியருளப்பட்ட  அத்தியாயம் இது. 


கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் அன்றைய முஸ்லிம்களின் நிலைமையை! சொற்களில் வடிக்கவியலாத துன்பங்களுக்கும், கொடுமைகளுக்கும் அவர்கள் உள்ளாக்கப் பட்டிருந்த சமயம் அது! மக்காவில் தங்கி உயிர் வாழ்வதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லாத கால கட்டத்தை அவர்கள் அடைந்து விட்டிருந்தார்கள்.  இவையெல்லாம் நாம் அறிந்ததே!


ஆனால் - அப்படிப்பட்ட கட்டத்தில் அல்லாஹ் ஒரு அத்தியாயத்தை இறக்கி வைக்கின்றான் எனில் அந்த நபித்தோழர்கள் கருணை மிக்க தம் இறைவனிடமிருந்து என்ன செய்தியை எதிர்பார்த்திருப்பார்கள்? 


ஆறுதலான செய்திகளைத் தானே? 


"கவலைப் படாதீர்கள்! இன்னும் கொஞ்ச நாட்கள் தான்! அது வரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். மதினாவுக்குப் புறப்பட்டுப் போன பின் எல்லாம் சரியாகி விடும்!" - என்பன போன்ற ஆறுதல் வார்த்தைகளைத் தானே அன்றைய அந்த இக்கட்டான சூழ்லில் எதிர்பார்த்திருப்பார்கள்? 


ஆனால் அல்லாஹ் அப்படிப்பட்ட ஆறுதல் வார்த்தைகள் எதனையும் இந்த அத்தியாயத்தில் சொல்லிடவில்லை!


மாறாக அவர்களுக்கு வேறொரு செய்தியை அழுத்தமாகச் சொல்லியிருந்தான் மகத்தான இறைவன்!


இறைவன் கற்றுத் தருகின்ற அற விழுமியங்களை அட்டிப்பிசகாமல் பின்பற்றுகின்ற ஒரு சமூக அமைப்பை நீங்கள் கட்டியெழுப்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்ற செய்தியைத் தான் வஹியாக அனுப்பியிருந்தான் இறைவன்!  


ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குச் சென்ற பின் - அப்படிப்பட்ட ஒரு சமூக அமைப்பை உருவாக்குவதற்காக தங்களின் "முழு வாழ்க்கையையும்" அர்ப்பணித்திட வேண்டியிருக்கும் என்பதை முன் கூட்டியே அவர்களின் உள்ளத்தில் ஆழமாக விதைக்கின்ற அத்தியாயம் தான் - அல்-அன்ஆம் - அத்தியாயம்!


பின் வரும் இறை வசனத்தைச் சற்று கூர்ந்து கவனியுங்கள்: 


6:162

--------


நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.


அதாவது மேலே விவரிக்கப்பட்ட அந்த ஒன்பது அற விழுமியங்களையும் தன்னளவிலும், சமூக அளவிலும் - நிலை நிறுத்தப் பாடுபடுவதே ஒரு முஸ்லிமின் "இலட்சியமாக" (life goal) இருந்திட வேண்டும் என்பதையே இந்த அத்தியாயம் அழுத்தம் திருத்தமாக நமக்குச் சொல்ல வருகிறது என்பது புரிகிறதல்லவா? 


அதாவது என்னுடைய "தொழுகை" (صلاتي) ஒரு சடங்கல்ல! அது எனக்கும் என் இறைவனுக்குமான நிரந்தரமான உறவைக் குறித்திடும் ஒரு குறியீடு! இந்த உறவு என்னிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அந்த ஒன்பது அற விழுமியங்களை நிலை நிறுத்திடும் சமூக அமைப்பு ஒன்றை உருவாக்கிக் காட்டுவதைத் தான்! 


அதாவது  என் "வாழ்வின்" (محياي) இலட்சியமே இது தான். இதனை என் "மரணம்" (مماتي ) வரை நான் தொடர்வேன். என்னுடைய தியாகங்கள் (نسقي) எல்லாமே அதற்காக மட்டும் தான். 


***


நமது சூழலுக்கு வருவோம்! உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற இன்றைய முஸ்லிம் சமூகத்துக்கு பல பாடங்கள் இதில் இருக்கின்றன!


நம் கவனம் எல்லாம் எங்கோ சிதறி கிடக்கின்றன! நாம் அடைந்திட வேண்டிய இலக்கிலிருந்து முற்றிலும் நாம் திசை திருப்பப் பட்டிருக்கின்றோம்! We are completely distracted from our life goal!


அழுத்தமான சிந்தனை மாற்றம் ஒன்றுக்கு (PARADIGM SHIFT) முஸ்லிம் சமூகம் - முகம் கொடுக்க வேண்டிய, அவசியமான கால கட்டம் இது!  


சிந்திப்போமா?   


***

இஸ்லாமியச் சட்டங்களெல்லாம் - இயற்கைச் சட்டங்களே!


#கண்ணோட்டம்_4


பின் வரும் இறை வசனம் நம் ஆய்வுக்குரியது! 


6:38

-----

// பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.// (குர்ஆன் 6:38)


இந்த இறை வசனத்தில் இடம்பெற்றிருக்கும் - "உமம்" - எனும் சொல் - "உம்மத்" எனும் சொல்லின் பன்மையாகும். 


"உம்மத்"எனும் சொல்லுக்கு "இனம்" என்றும் மொழிபெயர்க்கிறார்கள்;  "சமுதாயம்" - என்றும் மொழிபெயர்க்கிறார்கள். 


உமம் - என்பதன் பொருளை சற்று விரிவாகப் பார்ப்போம். 


திருக்குர்ஆன் விரிவுரையாளர் ஷெய்க் காலித் அபூ அல் ஃபள்ல் அவர்கள் "உம்மத்" என்பதற்கு - சற்று மேலதிக விளக்கம் தருகிறார்கள் ஆங்கிலத்தில்:   


Ummah is any collectivity that sets or that follows a pre-ordained order! 


முன்னதாகவே விதிக்கப்பட்ட ஒரு சில "சட்ட திட்டங்களுக்கு" (pre-ordained order) அதன் வழியே செல்கின்ற எந்த ஒரு கூட்டத்தையும் குறிக்கும் சொல் தான் - உம்மத் எனப்படும். 


இதே இறை வசனத்துக்கு - பின் வரும் ஆங்கில மொழிபெயர்ப்பை சற்று கவனியுங்கள்: 


// There is no animal on land, nor a bird flying with its wings, but follow a natural law like you. We neglected nothing in the Scripture. Then to their Lord they will be gathered. // (Al Quran - 6:38)


***


தாயைக் குறிக்கும் "உம்மு" எனும் சொல், வழிகாட்டும் தலைமையைக் குறிக்கும் இமாமத் / இமாம் - ஆகிய எல்லா சொற்களும் இதன் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தவையே!


***


இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் - பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற - "சமுதாயங்களே" - என்று ஏன் இறைவன் குறிப்பிடுகின்றான்? அதனையும் இந்த அத்தியாயத்தில் வைத்து ஏன் குறிப்பிட வேண்டும்? இந்த வசனத்துக்கும் அந்த ஒன்பது அற விழுமியங்களைக் கொண்ட நேர்வழியாகிய ஸிராத்துல் முஸ்தகீம் என்பதற்கும் என்ன சம்பந்தம்? - என்பன போன்ற கேள்விகளுக்கு நாம் விளக்கம் பெற வேண்டியுள்ளது. 


***


பூமியில் ஊர்ந்து திரிகின்ற பிராணிகளாகட்டும், வானத்தில் பறந்து திரிகின்ற பறவைகளாகட்டும், அல்லது மனித இனமாகட்டும் - இவை எல்லாவற்றையும் படைத்தவன் இறைவன் தான்! 


மனிதப் படைப்புக்கு பின்னர் வருவோம். முதலில் - இறைவனின் இதர படைப்புக்களைக் குறித்து சற்று கவனம் செலுத்துவோம். 


பிராணிகள் முதல் பறவைகள் வரை - அவை ஒவ்வொன்றும் ஒரு சமுதாயக் கட்டமைக்குள் தான் வாழுமாறு தான் படைக்கப்பட்டுள்ளது.  அந்தக் கட்டமைப்பை ஒரு போது அவை மீறுவதில்லை!


இதனையே இன்னொரு வார்த்தையில் சொல்வதென்றால் - படைப்பினம் ஒவ்வொன்றுமே - அதனதன் - "இயற்கைச் சட்டங்களைப்" (Natural Laws) பின்பற்றியே வாழுமாறு படைக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லலாம். 


அதாவது - அவை ஒவ்வொன்றையும் படைக்கும்போதே - அவற்றின் இயல்புகள் நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன!  (pre-ordained order). அதன் இயல்பு நிலையையே நாம் அவற்றின் "உள்ளுணர்வு" (instinct) - என்று குறிப்பிடுகின்றோம்.  அவற்றின் உள்ளுணர்வின் அடிப்படையிலேயே ஒவ்வொன்றும் அதனதன் சமுதாயக் கூட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றன!  எனவே அவை ஒவ்வொன்றும் தாம் படைக்கப்பட்ட நோக்கத்தை (purpose) நிறைவேற்றுவதில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன! 


அவை ஒவ்வொன்றும் உருவாவதிலிருந்து - அதன் இறுதிக் கட்டம் வரை - அதன் செயல்பாடுகள் அனைத்தையும் தம் கட்டுப்பாட்டுக்குள் அல்லது முகாமைத்துவத்துக்குள் (Divine Organization) தான்  வைத்திருக்கின்றான் இறைவன்! 


பின் வரும் ஒரு இறை வசனம் போதும் - இதனைப் புரிந்து கொள்ள!


6:59

------


// அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.// (குர்ஆன் 6:59)


***


அடுத்து மனித சமுதாயத்தை எடுத்துக் கொள்வோம்.


மனித இனமும் இறைவனால் படைக்கப்பட்ட படைப்பு தான்! படைப்பிலேயே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் - மனித இயல்பு (human nature) என்று ஒன்று உண்டு! மனித சமூகத்தின் செயல்பாடுகளையும் இறைவன் தான் கட்டுப்படுத்தி முகாமை (organized) செய்து வைத்திருக்கின்றான்!


பின் என்ன? மனித சமூகம் தான் படைக்கப்பட்ட நோக்கத்தை நோக்கிச் செல்வதில் அவனுக்கு மட்டும் என்ன சிக்கல்? 


ஏன் அவன் பாவச் செயல்களில் ஈடுபடுகின்றான்? ஏன் அவன் தன் மனித இயல்புக்கு மாற்றமாகச் செயல்படுகின்றான்?


இதற்கு ஒரே காரணம் - மற்றப் படைப்பினங்களுக்குக் கொடுக்கப்படாத - ஒரு சுதந்திரம் - அதாவது ஒன்றைத் தேர்வு செய்திடவோ அல்லது ஒன்றை மறுத்திடவோ - அவனுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரம்!  (freedom of choice).  


அவனை அவனது மனித இயல்பை மீறிச் செயல்பட வைத்து விடுகிறது அவனது சுதந்திர உரிமை! 


***

இந்தக் கட்டத்தில் தான் இறைவன் தன் இறைத்தூதர்கள் மூலமாக வழிகாட்டும் தலைவர்களை - அனுப்பி வைக்கிறான்! ஆனால் மனிதனின் தேர்வு செய்திடும் உரிமை இறைத்தூதர்களையே எதிர்த்து நிற்கக் காரணமாக அமைந்து விடுகிறது!


ஆனால் அந்த இறைத்தூதர்கள் கொண்டு வந்ததென்னவோ - மனித இனத்துக்குப் பொருந்தாத 'சட்ட திட்டங்களை" அல்ல! மாறாக - மனித இனத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன இயல்பான உள்ளுணர்வை மனிதர்களுக்குள் வைத்து இறைவன்  படைத்தானோ - அதே  - இயல்போடு ஒத்துப் போகின்ற "இயற்கைச் சட்டங்களையே" (natural laws for mankind) அந்த இறைத்தூதர்கள் கொண்டு வந்தார்கள்!   


மனித இயல்பிலேயே புதைந்து கிடக்கின்ற - இயல்பான உள்ளுணர்வுகளுள் மிக மிக அடிப்படையானது தான்  உலகின் எல்லா மனிதர்களிடமும் காணப்படுகின்ற - நியாய உணர்வு! 


மனிதர்களின் நியாய உணர்வோடு பொருந்திப் போகின்ற அற விழுமியங்களைத் தான் (ethics and morality) - இறைவன் - இறைவனின் நியதிகளாக (God's Way), இறைச் சட்டங்களாக (Divine Law), ஷரீஅத்தாக - இறைவன் தன் திருத்தூதர்கள் மூலம் மனிதர்களுக்கு இறக்கியருளி இருக்கின்றான்! 


அந்த இயற்கைச் சட்டங்களையே நாம் இறைவனின் சட்டங்கள் (Divine Laws for mankind)  என்று நாம் சொல்கிறோம். காரணம் அவை இறைவன் புறத்திலிருந்து வந்திருப்பதால்! அப்படிப்பட்ட அற விழுமியங்களைக் கொண்ட பாதையைத் தான் இறைவன் "ஸிராத்துல் முஸ்தகீம்" என்று வரையறை செய்திருக்கிறான்!   


இந்த அடிப்படையில் - நாம் முன்னர் குறிப்பிட்டிருந்த அந்த ஒன்பது அற விழுமியங்களைக் கொண்ட ஸிராத்துல் முஸ்தகீம் என்ற பாதை என்பது - முற்றிலும் - இறைச் சட்டங்கள் மட்டுமல்ல! அவை அனைத்தும் இயற்கைச் சட்டங்களே!


***


ஆனால் நீங்கள் கேள்வி ஒன்றைக் கேட்கலாம்!


மனித இயல்பு எனும் உள்ளுணர்வு நமக்குள்ளேயே இருக்கும்போது - மதங்கள் எதற்கு? இறைத் தூதர்கள் எதற்கு? இறை வழிகாட்டுதல் என்பது எதற்கு?  என்று.  


இதனை உதாரணம் ஒன்றின் மூலமாக விளக்க முயல்வோம். 


மழையை எடுத்துக் கொள்வோம்!


மனிதனுக்குத் தண்ணீர் தேவை. அந்தத் தண்ணீரை உள்வாங்கிக் கொள்கின்ற "இயல்பில் தான்" (nature of human body) மனிதர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். (மற்ற எல்லா உயிரினங்களுக்கும் கூட இது பொருந்தும்). 


நீரின்றி மனிதர்கள் "வளர" முடியாது! எனவே மனிதர்களின் வளர்ச்சிக்காக - இறைவன் - மழையை அனுப்பி வைக்கிறான்! மழையை வேண்டாமென்று யாராவது சொல்வார்களா என்ன? அல்லது மழையின் பலன்களை யாராவது மறுப்பாளர்களா என்ன? 


6:99

------


அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துகளை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன; திராட்சைத் தோட்டங்களையும், ஒன்று போலவும் வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன. // (குர்ஆன் 6:99)


அது போலத்தான் - மிக மிக அழகான மனித இயல்புகளுடன் தான் - மனிதனைப் படைத்து அனுப்பி வைக்கிறான் இறைவன். அதே நேரத்தில் அவனது உடல் வளர்ச்சிக்கு மழையை அனுப்பி வைப்பது போல - அவனது ஆன்மாவின் வளர்ச்சிக்கு - அவன் இயல்பிலேயே பொருத்தி வைக்கப்பட்டுள்ள அற விழுமியங்களைக் கொண்ட நேரான பாதையின் பக்கம் மக்களை அழைப்பதற்காக - இறைவன் தன் தூதர்களையும் வேதங்களையும் அனுப்பி வைக்கிறான்!  


நீர் இல்லாமல்  மனித வாழ்வு எப்படி சாத்தியமில்லையோ, அது போல - மனித இயல்போடு பொருந்திப் போகின்ற இறை வழிகாட்டுதல் இன்றி - மனித சமூகத்தின் வளர்ச்சி சாத்தியமே இல்லை!


***

இறைச் சட்டங்கள் அனைத்தும் இயற்கைச் சட்டங்களே! 


இறைவனை மறுக்கும் பகுத்தறிவாளர்கள் கூட - இஸ்லாத்தின் சமூக நீதியைப் புகழ்ந்து பாராட்டுவதற்குக் காரணம் -  அவர்களது மனித இயல்பில்  பொதிந்து கிடக்கின்ற நியாய உணர்வே! 


அதனால் தான் நபித்துவத்தின் பின்னரும் கூட  - ஹில்ஃபுல் ஃபுளூள் - போன்ற முயற்சிக்கு எப்போதும் தம் ஆதரவு உண்டு என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்!! 


***

அல்லாஹ் மிக அறிந்தவன்!

@@@


Article 5 / published in FB / 04-12-2021


பண்புகளைப் பின்பற்றி நடக்கப் பற்றுறுதி வேண்டும்!

-----------------------------------------------------------------


(Assertiveness in Morality and Ethics)


 #கண்ணோட்டம்_5


சூரத்துல் அன்ஆம் - திருமறை திருக்குர்ஆனின் ஆறாவது அத்தியாயம்! திருமறையில் இடம் பெற்றுள்ள பெரிய அத்தியாயங்களுள் இதுவும் ஒன்று! மொத்த வசனங்கள் - 165


மேலோட்டமாக இந்த அத்தியாயம் முழுவதையும் பார்வையிட்டு வந்தாலே - இந்த அத்தியாயம் மீண்டும் மீண்டும் அழுத்தி அழுத்தி வலியுறுத்தும் கருத்தாக்கம் - தவ்ஹீத் - எனும் இறை ஒருமை என்பது புலப்படும்.  


ஆனால் இறை ஒருமையை ஆழமாக வலியுறுத்துகின்ற பல அத்தியாயங்கள் இருந்திடும்போது - இந்த அத்தியாயத்தில் அதே இறை ஒருமை வலியுறுத்தப்படுவதற்கு  

சிறப்பான ஒரு நோக்கம் அல்லது காரணம் இருந்திட வேண்டும். இது நமது சிந்தனைக்குறியது. 


இந்த அத்தியாயத்தை - சற்றே ஆழமாக சிந்தித்து ஓதினோம் என்றால் - மனித இயல்போடு (human nature) கூடிய, அற விழுமியங்களை (ethics and morality) உள்ளடக்கிய, சமூக நீதியை (social justice) மையமாகக் கொண்ட - இறையாண்மையில் நங்கூரம் பாய்ச்சப்பட்ட (anchored in the Divinity) இயற்கையான சட்டங்களை (Natural Laws)  நமக்குக் கற்றுத்தருகின்ற அத்தியாயம் தான் இது என்பதைத் தெள்ளத்தெளிவாக நாம் புரிந்து கொள்ள முடியும்.  இது தான் ஸிராத்துல் முஸ்தகீம் எனும் நேரான பாதை என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்! 


***


இவ்வத்தியாயத்தின் முதல் வசனத்தை எடுத்துக் கொள்வோம்: 


6:1

----


{{ வானங்களையும், பூமியையும் படைத்து இருள்களையும், ஒளியையும் உருவாக்கியவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அப்படியிருந்தும் சத்தியத்தை ஏற்க மறுத்தோர், மற்றவர்களையும் தம் இறைவனுக்குச் சமமாக்குகின்றார்கள்.(IFT) }} 


அரபி மொழியில்  - (يعد لون ) - என்று முடிகிறது வசனம். இதன் மூலச் சொல் (عدل )   

இங்கே இறைவனுக்குச் "சமமாக்குவது" என்றால் என்ன? 


இதற்கு இரண்டு பொருட்கள் உண்டு: ஒன்று இறைவனுக்குச் சமமாக இன்னொன்றைக் கொண்டு வருதல். To regard other powers as their Sustainer's "equals"! 


இன்னொரு பொருள்: இறைவனுக்கு பதிலாக அல்லது மாற்றாக  இன்னொன்றைக்  கொண்டு வருதல். To ascribe "alternatives" to their Lord!  


அப்படியானால் இந்த வசனத்தின் விளக்கம் என்ன? 


அல்லாஹ் ஒருவனே என் இயல்பை அறிந்தவன்! அவன் ஒருவனே எனக்கு எது தேவை? எது எனது இயல்போடு ஒத்துப் போகும் அல்லது ஒத்துப் போகாது? எதனை நான் உண்ண வேண்டும்? எது என் உடலுக்கும் ஆன்மாவுக்கும் உகந்த உணவு? 


பொது வெளியில் - சமூகத்தில் ஒரு அங்கத்தவனாக நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நான் கடைபிடிக்க வேண்டிய அற விழுமியங்கள் என்னென்ன? - என்பதையெல்லாம் எனக்குக் கற்றுத் தர அவன் ஒருவனாலேயே முடியும்! 


ஆனால் - இது ஒரு மிகப்பெரிய ஆனால்.....


என்னுடைய தனிப்பட்ட வாழ்விலும் சரி, சமூக வெளியிலும் சரி - நான் எப்படி நடந்து கொள்வது? எதனை உண்ணுவது? எதனைத் தவிர்ப்பது? என் குடும்ப வாழ்வு எப்படி? எனது வணிகம் எப்படி? வீட்டுக்கு வெளியே பொது வெளியில் எப்படி எனது மனித உறவுகளை அமைத்துக் கொள்வது - போன்ற மனித வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திற்கும் - நான் இறைவனைத் தவிர்த்து விட்டு - "இன்னொன்றை" நான் கொண்டு வரும்போது - நான் இறைவனுக்கு அந்த ஒன்றைச் சமமாக்கி விடுகிறேன்! - என்று விளக்குகிறது இவ்வசனம்!


***


எனவே அற விழுமியங்களை (natural morality and ethics) உள்ளடக்கிய எனது ஒட்டு மொத்த வாழ்க்கைக்கும் - நான் இறைவனின் வழிகாட்டுதலையே சார்ந்திருக்கக் கடமைப் பட்டவனாக விளங்கிட வேண்டும் என்பது தான் இவ்வசனம் சொல்ல வரும் செய்தி. 


இதில் நாம் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் வல்லோன் அல்லாஹு தஆலா! அவ்வாறு நமக்குக் கட்டளையிட அவனுக்கு எல்லா உரிமைகளும் உண்டு!


***


அடுத்து பின் வரும் இறை வசனங்கள் நம் கவனத்திற்கு: 


6:14

-----

{{ “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக: இன்னும் (அல்லாஹ்வுக்கு) வழிபடுபவர்களில் #முதன்மையானவனாக இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்" என்று கூறுவீராக! இன்னும், நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம்.}}


6:161-163

--------------

{{ நபியே! நீர் கூறும்: “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்ராஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை.


 நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.


“அவனுக்கே யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் #முதன்மையானவன் (என்றும் கூறும்}}.


***


இந்த இரண்டு இடங்களிலும் - அல்லாஹ்வுக்கு வழிபடுபவர்களில்  #முதன்மையானவனாக இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்" என்று சொல்லச் சொல்வதன் பொருள் என்ன? ((அவ்வல மன் அஸ்லம / அன அவ்வலுல் முஸ்லிமீன்) (أول من أسلم ) /  

(أنا أول المسلمين ) 


**


இந்த ஸிராத்துல் முஸ்தகீம் எனும் நேரான பாதையில் - யார் என்னுடன் கைகோர்த்து வந்தாலும் சரி; அல்லது யார் வராவிட்டாலும் சரி! இவ்விஷயத்தில் நான் ஒருவன் மட்டுமே தான் களத்தில் நிற்கின்றேன் என்றாலும் - என்னை அசைத்துப் பார்த்து விட முடியாது என்பது தான் இவ்வசனங்களின் உள்ளடக்கமான கருத்து. 


**


நாம் முன்னரே சுட்டிக்காட்டிய படி, இந்த அத்தியாயம் இறக்கியருளப்பட்ட சமயத்தில் - மக்காவிலும் மதினாவிலும் சேர்த்து சுமார் 200 நபித்தோழர்களைக் கொண்ட அந்த சமூகத்துக்குத் தான் இப்படி ஒரு உறுதியான செய்தியை முன் வைத்தான் இறைவன்!


***

இன்று நமக்கு இதில் அழுத்தமான செய்தி ஒன்று இருக்கிறது: 


இன்றைய நமது அன்றாட வாழ்வியலை எடுத்துக் கொள்வோம். அது நாம் உண்ணும் உணவாகட்டும்; நாம் கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகளாகட்டும், நம் குடும்ப வாழ்க்கையாக இருக்கட்டும்;பொது வாழ்க்கையாக இருக்கட்டும் - நம் வாழ்வின் எந்த அங்கமாக இருந்தாலும் - இறைவனுக்கு மாற்றாக நாம் எதனை எதனையெல்லாம் கொண்டு வந்து "சமமாக்குகிறோம்" என்று சிந்தித்துப் பாருங்கள்.  


இப்போது ஒன்றே ஒன்றை மட்டும் சான்றாக எடுத்துக் கொள்வோம்: 


நாம் நம் வாழ்வின் ஒவ்வொரு தேர்வின்போதும் (our choices)  "நம் ஊர் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்? என் உறவினர்கள் என்ன நினைப்பார்கள்? சமூகம் இதனை அனுமதிக்குமா? அல்லது "பட்டம்" கட்டி விடுமா? என்றெல்லாம் கணக்குப் போட்டுத் தான் ஒவ்வொன்றையும் தேர்வு செய்து விடுகிறோம். உண்மையா? இல்லையா? 


நான் "ஸிராத்துல் முஸ்தகீம்" பாதையில் உள்ளதை எடுத்துச் சொன்னால் நம்மிடம் நம் சமூகமே என்ன சொல்லும் தெரியுமா? 


"எல்லோரையும் போல் வாழ்ந்து விட்டுப் போ!" - என எனக்கு "வழி" காட்டும்! 


இந்த இறை வசனத்தைப் படியுங்கள்: 


6:116

--------


பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.


***

புரிகிறதா? 


பெரும்பான்மையின் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் நமது வாழ்வுக்கு  

அளவுகோலாகக் கொண்டால் -அது தான் - இறைவனுக்கு "சமமாக்குதல்" ஆகும்! அதாவது இறைவனுக்கு வழங்கிட வேண்டிய உரிமையை நாம்  சமூகத்தின் பெரும்பான்மைக்கு  வழங்கி விடுகிறோம்!


இது நன்றி கெட்டத்தனம் அல்லவா? 


ஆனால் இந்த அத்தியாயமோ - அல்ஹம்து லில்லாஹ் என்றே தொடங்குகிறது! 


***

ஐந்து அற விழுமியங்கள்

------------------------------


#கண்ணோட்டம் 6 


1 நன்றியுணர்வு - GRATITUDE: 


உணர்வு பூர்வமாக இறைவனுக்கு 

நன்றி செலுத்துங்கள்!

இறைவன் உங்களை 

நெருங்கி வருவான்! 

உணர்வு பூர்வமாக மனிதர்களுக்கு 

நன்றி செலுத்துங்கள்!

நல்ல மனிதர்கள் உங்களை 

நெருங்கி வருவார்கள்!

நட்பின் ரகசியம் இது தான்!


***


நமது குழந்தைகளுக்கு இறைநம்பிக்கையைச்

சொல்லிக் கொடுக்கும் பொழுது 

நன்றி உணர்ச்சியையும் 

சேர்த்து சொல்லிக்கொடுங்கள்!

ஏனெனில்....

நன்றி உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் நமது நம்பிக்கைக்கு 

எந்த ஒரு பொருளும் இல்லை!!

அல்ஹம்து லில்லாஹ்!

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

***

2 இரக்க உணர்வு - MERCY AND COMPASSION


ரஹ்மா!

-------------

இறைவனின் இரக்கப் பண்பு 

இயற்கை முழுவதையும் தழுவி  நிற்கிறது. 

இரக்கம் இல்லாதவன் -

இயற்கையோடும்

முரண்படுகின்றான்! 

இறைவனோடும் 

முரண்படுகின்றான்!

எனவே உங்கள் குழந்தைகளுக்கு

இரக்கப் பண்பைக் கற்றுக்கொடுங்கள்!

உங்கள் குழந்தைகள் -

இயற்கையின் மீது 

இரக்கம் காட்டுவார்கள்!

மனிதர்கள் மீதும் 

இரக்கம் காட்டுவார்கள்! 

இறைவனும் -

உங்கள் குழந்தைகள் மீது 

இரக்கம் காட்டுவான்!

***

இறைவன் கூறுகிறான்:

என்னுடைய இரக்க உணர்வு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்துள்ளது! குர்ஆன் (7: 156)


***

3 நியாய உணர்வு - JUSTICE AND EQUITY


 நியாயத்தின் பக்கம் 

இல்லையென்றால் 

இறைவனின் பக்கம் 

நீ இல்லை என்றே பொருள்!

***

உங்கள் குழந்தைகளுக்கு

நியாய உணர்வைக் கற்றுக்கொடுங்கள்!

உங்கள் குழந்தைகளை என்றுமே நியாயத்தின் பக்கமே 

நிற்கச் செய்யுங்கள்!

உங்களிடம் நியாயம் இல்லாத போது உங்கள் குழந்தைகள் உங்கள் பக்கம் நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்!

அதுவே மிகச்சிறந்த குழந்தை வளர்ப்பாகும்!

***

4 வெட்க உணர்வு - MODESTY 

இது ஏதோ ஆடை மட்டுமே சம்பந்தப்பட்டது என்று எண்ணிவிட வேண்டாம்!

ஹயா எனும் வெட்க உணர்வு நமது முழுமையான வாழ்க்கையையும் தழுவியது!

எந்த ஒரு பாவத்தையும் செய்வதற்கு நம்மை தடுக்கக்கூடிய ஒரு கேடயமாக விளங்கக் கூடியது தான் வெட்க உணர்ச்சி!

வெட்க உணர்ச்சி உள்ளவன் எந்தப் பாவத்தையும் செய்திடத் துணிந்து விட மாட்டான்! எந்தத் தீமையிலும் வீழ்ந்து விட மாட்டான்!

உங்கள் குழந்தைகளுக்கு வெட்க உணர்ச்சியை ஊட்டி விடுங்கள்! 

அது போதும்!

வெட்க உணர்ச்சி மட்டும் ஊட்டப்பட்டு விட்டால் - 

இதனைச் செய்யாதே, 

அதனைச் செய்யாதே

என்றெல்லாம் கட்டுப்பாடுகளை 

விதித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே உங்களுக்கு இருக்காது!

அந்தப் பொறுப்பை உங்கள் குழந்தைகளின் வெட்க உணர்ச்சியே கவனித்துக் கொள்ளும்!


***


5 பிறர் நலம் நாடும் உணர்வு - EMPATHY AND CARE 


பிறர் நலம் நாடும் உணர்வோடு 

பின்னிப் பிணைந்தது தான் 

அஸ்ஸலாமு அலைக்கும்!

என்னிடம் வருபவர்க்கு 

நான் அமைதியைத் தருவேன்

என்று சொல்ல வருவதுதான்

அஸ்ஸலாமு அலைக்கும்!

பதற்றத்தோடு வருவோரையும் கவலையோடு வருவோரையும் 

அப்படியே அரவணைத்துக் கொண்டு 

இதோ நான் இருக்கிறேன் 

கவலை வேண்டாம் என்ற செய்தியை உள்ளடக்கிச் சொல்வது தான்

அஸ்ஸலாமு அலைக்கும்!

என்னிடம் வந்து விட்டால் 

நீ பாதுகாப்பாக இருப்பாய்!

என்னிடம் வந்து விட்டால்

உனக்கு மன அமைதி கிடைத்து விடும்!

என்னிடம் வந்து விட்டால் 

உனக்கு சோகம் என்பது இல்லை! - 

என்ற என் அக்கறையை

எத்தி வைப்பது தான் 

அஸ்ஸலாமு அலைக்கும்!

சடங்கு ரீதியாக  ஸலாம் சொல்வதை விடுத்து

உங்கள் குழந்தைகளுக்கு ஸலாம் சொல்வதன் ஆழமான பொருளைப் புரிய வைத்திடுங்கள்!

உங்கள் குழந்தைகளுக்கு பிறர் நலன் நாடும் பண்பையும் கற்றுக்கொடுங்கள்!

பயம், பதற்றம், கோபம், வெறுப்பு, வன்முறை சூழ் உலகினிலே 

மன அமைதியை விதைக்கின்ற

ஒரு புதிய தலைமுறை உருவாகட்டும்!


@@@ 


இதற்கு முந்தைய ஒரு சில பதிவுகளில் - இஸ்லாத்தின் அடிப்படைப் பண்புகளிலிருந்து  ஓர் ஐந்து பண்புகள் குறித்து எழுதியிருந்தோம்.  


அந்த ஐந்து பண்புகளையும் நாம் தேர்வு செய்தது - திருக்குர்ஆனின் ஆறாவது அத்தியாயமான சூரத்துல் அன்ஆம் - எனும் அத்தியாயத்திலிருந்து தான் என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வரவே இப்பதிவு. 


இதோ அதற்கான இறை வசனங்கள்:


1 நன்றியுணர்வு - GRATITUDE: 


வானங்களையும், பூமியையும் படைத்து இருள்களையும், ஒளியையும் உருவாக்கியவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அப்படியிருந்தும் சத்தியத்தை ஏற்க மறுத்தோர், மற்றவர்களையும் தம் இறைவனுக்குச் சமமாக்குகின்றார்கள். (6:1)



2 இரக்க உணர்வு - MERCY AND COMPASSION


இறைவன் - தன் மீது இரக்கத்தை, கருணையைக் - கடமையாக்கிக் கொண்டான்; (6:12)


மேலும் பார்க்க (6:54)


3 நியாய உணர்வு - JUSTICE AND EQUITY


நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; (6:152)



4 வெட்க உணர்வு - MODESTY 


வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; (6:151)


5 பிறர் நலம் நாடும் உணர்வு - EMPATHY AND CARE 


நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், “ஸலாமுன் அலைக்கும்" என்று நீர் கூறும். (6:54)  


***


இந்த அத்தியாயம் - நபியவர்களும் ஒரு நூறுக்கும் குறைவான அந்த நபித்தோழர்களும்  மதினாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் இறக்கியருளப்பட்ட அத்தியாயம் ஆகும். 


இறைவன் இந்த அத்தியாயத்தில் வைத்து சொல்ல வருகின்ற மகத்தான செய்திகளுள் ஒன்று  என்னவெனில் - அன்றைய முஸ்லிம்கள் - மதினாவுக்குச் சென்ற பின் உருவாக்கவிருக்கின்ற அந்த சமூகம் இப்படிப்பட்ட அற விழுமியங்களைக்  கொண்டே கட்டமைக்கப்பட வேண்டும் என்பது தான்!


இதில் நமக்கும் படிப்பினை இருக்கிறது! 


அடிப்படை அற விழுமியங்களைத் - FOUNDATIONAL ETHICS AND MORALITY - தன்னகத்தே கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கத் தொடர் முயற்சிகளைச் செய்து கொண்டிருப்பது ஒவ்வொரு இறை நம்பிக்கையாளனின் கடமை மட்டுமல்ல! அது நமது வாழ்நாள் குறிக்கோளும் கூட! LIFE GOAL. 


***


தனிப்பட்ட முறையில் நம்மிடமிருந்தே  இதனைத் தொடங்கலாம். குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையேனும் சுயசோதனை ஒன்று தேவை. 


அடுத்து நம் குடும்பத்தில் - இந்த ஐந்து அடிப்படைப் பண்புகளையும் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். குழந்தை வளர்ப்பில் இது முக்கியம்.   


அடுத்த கட்டமாக - அந்தந்த ஊர் மக்தப் பாடசாலை தொடங்கி, நமது பிள்ளைகள் படிக்கின்ற பள்ளிக் கூடங்கள் வரை - தீனியாத் பாடத்திட்டத்தில் இவ்வடிப்படைப் பண்புளையும் இணைத்திடுவதற்கு நாம் ஒரு தூண்டுகோலாக  இருந்து முயற்சிகள் மேற்கொள்ளலாம். 


அறிஞர் பெருமக்கள் இந்தப் பண்புகள் குறித்து பாடங்கள் எழுதித் தரலாம். 


எழுத்தாளர்கள் இப்பண்புகளை முன் வைத்து நூல்கள் எழுதலாம்.  


இமாம்களும் பேச்சாளர்களும் இது குறித்து நம் சமூகத்தின் கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருக்கலாம்.  


இவற்றின் மூலம், நாம் அடைய விழைவது - இஸ்லாத்துக்குத் தனக்கே உரியதொரு "சமயப் பார்வை" ஒன்று இருப்பது போலவே, நம் மார்க்கத்துக்குத் தனக்கே உரித்தான "சமூகப் பார்வை" ஒன்றும் இருக்கிறது என்பதையும், அது இறைவன் புறத்திலிருந்து நங்கூரம் பாய்ச்சப்பட்ட - ANCHORED IN THE  DIVINE - உலகளாவிய சமூகப் பார்வை என்பதையும், அந்தப்பார்வை என்பது அசைக்க முடியா அற விழுமியங்களால் FOUNDATIONAL ETHICS  - கட்டமைக்கப்பட்டது என்பதையும் - நாம் அனைவரும்  புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான்!   

***


நமது நம்பிக்கையைக் கொஞ்சம் உரசிப் பார்ப்போமா? 

#கண்ணோட்டம் 7 


திருக்குர்ஆனின் - ஸூரத்துல் அன்ஆம் - அத்தியாயத்திலிருந்து நமது இறை நம்பிக்கை குறித்த ஒரு மூன்று இறை வசனங்களை உங்கள் சிந்தனைக்குத் தருகிறோம். 


6:48

-----

 (நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை; எனவே எவர் நம்பிக்கை கொண்டு, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.


இந்த இறை வசனத்தில் இறை நம்பிக்கையையும் சீர்திருத்தத்தையும் இணைத்துச் சொல்கிறான் இறைவன். அதாவது ஈமானும் இஸ்லாஹும் (إصلاح)  இணைக்கப்பட்டுள்ளது. இறை நம்பிக்கை கொண்ட ஒருவன் நான் ஈமான் கொண்டு விட்டேன் என்று சொன்னால் மட்டும்போதாது; அவன் தன்னைச் சீர்திருத்தியும் கொள்ள வேண்டும் என்பது தான் இதன் பொருள். 


***


6:158 

--------

மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உம் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில், இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லது நம்பிக்கைக் கொண்டிருந்தும் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காமலுமிருந்து விட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வித பலனையும் அவர்களுக்கு அளிக்காது - ஆகவே அவர்களை நோக்கி “(அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பாருங்கள்; நாமும் எதிர்ப் பார்க்கின்றோம்” என்று (நபியே!) நீர் கூறும்.


இந்த இறை வசனத்தில் இறை நம்பிக்கையோடு "ஃகைர்" ( خير) எனும் சொல்லை இணைத்துச் சொல்லியிருக்கிறான் இறைவன். "ஃகைர்" என்றால் நன்மை என்றும்  சொல்லலாம். சிறப்பானது என்றும் சொல்லலாம். அதாவது ஈமான் என்பது நன்மையான சிறப்பான செயல்களோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை இவ்வசனம் வலியுறுத்துகிறது. இல்லாவிட்டால் அந்த இறைநம்பிக்கையில் எந்த ஒரு பலனும் இல்லை ஏன்றும் இவ்வசனம் எச்சரிக்கின்றது. 


***


6:82

------


எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையுடன் யாதொரு அநியாயத்தையும் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கே நிச்சயமாக பாதுகாப்பு உண்டு. அவர்கள்தான் நேரான வழியிலும் இருக்கின்றனர்" (என்று கூறினார்.)


இந்த இறை வசனம்  இறைநம்பிக்கையும் அநியாயமும் (ظلم) ஒன்றுக்கு ஒன்று எதிரானது என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.  நாம் அநியாயம் ஒன்றில் கை வைத்தால், அந்த  அநியாயம் நமது ஈமானில் கை வைத்து விடும்! 


***

இந்த அளவுகோல்களின் படி, நாம் ஒவ்வொருவரும் நமது இறைநம்பிக்கையை உரசிப்பார்த்துக் கொள்ள வல்ல இறைவன் அருள் புரிவானாக. ஆமீன்! 


@@@

நமது முகநூல் பதிவர்களின் கனிவான கவனத்திற்கு!


ஓரிடத்தில் பலரும் அமர்ந்து கலந்துரையாடுகின்ற - அமர்வுகளின் போது அங்கே இறை நம்பிக்கையாளர்கள்  எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல் குறித்து கொஞ்சம் கவனம் செலுத்துவோம் - திருக்குர்ஆனின் ஒளியில்....  
திருக்குர்ஆனின் - ஸூரத்துல் அன்ஆம் - அத்தியாயத்திலிருந்து ஒரு சில முக்கியமான இறை வசனங்கள் நமது சிந்தனைக்காக.... 

6:52
------
{{ (நபியே!) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர்.}}
***

நபியவர்களின் மக்கத்து நபித்துவ வாழ்வின் துவக்க காலங்களில் - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஏழை முஸ்லிம்கள் மற்றும் சமூகத்தில் அந்தஸ்து வழங்கப்படாத முஸ்லிம்கள் என அனைவரும் இடம்பெற்றிருப்பார்கள் இந்த அமர்வுகளில். 
குறைஷித் தலைவர்கள் நபியவர்களிடம் வந்து - அந்த ஏழைகளையும் அடிமைகளையும் நீங்கள் அனுப்பி வைத்து விட்டால் - உங்களுடன் அமர்ந்து நாங்கள் பேசிடத் தயார் என்று நிபந்தனை விதித்தனர். அதற்கு மறுமொழியாகத் தான் -  அந்த ஏழை மக்களை விரட்டி விட வேண்டாம் என அறிவுறுத்துகிறான் இறைவன். 

இதே இறை வசனத்துக்கு இன்னொரு விளக்கமும் அளிக்கிறார்கள் திருமறை விரிவுரையாளர்கள்: 

இறை வசனத்தில் வருகின்ற - {{இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ}}  அவர்கள் - அது வரை இஸ்லாத்தை ஏற்காத "அஹ்னாஃப்கள்" ( ஒருமை = ஹனீஃப்) என்று குறிப்பிடுகின்றார்கள் அவர்கள். "அஹ்னாஃப்" என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனில் ஒரே இறைவனை அவர்கள் விரும்பிய படி வணங்கக்கூடியவர்கள் ஆவார்கள். நபியவர்களின் தூதை அது வரை ஏற்றுக் கொள்ளாதவர்கள். 

அப்படிப்பட்டவர்களை அனுப்பி வைத்து விடும்படி ஒரு சில நபித்தோழர்கள் நபியவர்களிடம் வேண்டிக் கொள்ள - அத்தகையவர்களை அனுப்பி விட வேண்டாம் என இறைவன் அறிவுறுத்தியதாகவும் விளக்கம் அளிக்கப்படுகிறது.   
இதில் நமக்குப் படிப்பினை இருக்கிறது! 

நம்மை நாடி வரக்கூடியவர்கள் - ஏழை முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, அல்லது நம்மிடம் வந்து நமது மார்க்கத்தின் கொள்கைகளை, நமது மார்க்கத்தின் பண்பாடுகளை, அற விழுமியங்களை அறிந்து கொள்ளவோ, அல்லது சந்தேகங்கள் எதுவும் இருப்பின் அவற்றில் தெளிவு பெறவோ -  வரும் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி  - அவர்களை நம்முடனேயே அமர வைத்துப் பேசிடத் தயங்கக் கூடாது என்பதே நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம்.   
இதில் முக நூல் பதிவர்களுக்கும் படிப்பினை இருக்கிறது!

ஆனால்.... அடுத்த இரண்டு இறை வசனங்களையும் படியுங்கள்: 

6:68
------
{{ (நபியே!) நம் வசனங்களைப் பற்றி அல்லது நமது சான்றுகளைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.}}

6:69
------
{{(வீண் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்) அவர்களுடைய (செய்கைகளின்) கணக்கில் பயபக்தியுடையவர்களுக்கு யாதொரு பொறுப்பும் இல்லை; எனினும் அவர்கள் பயபக்தியுடையவர்களாகும் பொருட்டு, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது பொறுப்பாகும்.}}
***

6:68 - ம் வசனத்தின் அரபி மூலத்தில் வருகின்ற - யஃகூலூன பி ஆயாத்தில்லாஹ் - என்பதை நாம் சற்று ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

ஆங்கிலத்தில்.... {{ NOW, whenever thou meet such as indulge in [blasphemous] talk about Our messages}} - என்று மொழி பெயர்க்கிறார் முஹம்மத் அஸத் அவர்கள். 
அதாவது - இறைவனின் சான்றுகளை, இறைவனின் வசனங்களை - எந்த ஒரு அறிவின் ஆதாரமின்றி - கேலி செய்வது எனும் நோக்கத்துடன் வீண் விவாதம் புரிபவர்கள் என்று இதனை நாம் விளக்கப்படுத்தலாம்.  

ஏதாவது ஒரு அமர்வின்போது (GATHERING) - இவ்வாறு நமது மார்க்கத்தின் கொள்கைகளை அற விழுமியங்களை, சட்ட திட்டங்களை யாராவது கேலி செய்யத் துவங்கி விட்டால்  - அந்த இடத்தில் இறை நம்பிக்கையாளர்களுக்கு எந்த வேலையும் இல்லை என்று எச்சரிக்கின்றான் இறைவன் - இந்த இறை வசனத்தில் வைத்து! 
அவர்களைப் புறக்கணித்து விடுங்கள் (turn thy back upon them) என்கிறது இறை வசனம். 

இது கருத்து வேறுபாடுகளுக்கு இடமில்லாததொரு - திருக்குர்ஆனின் வழிகாட்டுதல் ஆகும்.  அற விழுமியம் ஆகும்! நாகரிகம் ஆகும். ஒழுக்கப்பண்பாடு ஆகும்!  

ஆனால் - இந்த வழிகாட்டுதலை (GUIDING PRINCIPLE) மீறி நாம் அத்தகைய அமர்வுகளில் தொடர்ந்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது நம்மை அறியாமலேயே நமக்கு ஏற்பட்டு விடுகின்ற மறதி, அந்த மறதியை ஏற்படுத்துபவன் ஷைத்தான் என்கிறான் இறைவன்! விளைவு - அந்த அறிவுக்குப் புறம்பான விவாதங்களின் உள்ளே நாமும் ஈர்க்கப்பட்டு விடுவோம்!  WE WILL BE SUCKED INTO THOSE VAINFUL TALK! 

தீர்வு என்ன? நினைவுக்கு வந்ததும் {{அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.}} - என்கிறான் இறைவன்! சுப்ஹானல்லாஹ்!  

இந்த வழிகாட்டுதலை மீறி நாம் அங்கே அமர்ந்து விட்டால் அதன் பொருள் என்ன? என் இறைவனின் மார்க்கம் அவமதிக்கப்படுவதற்கு நானே இடம் கொடுத்து விடுகிறேன் என்பது தான் அதன் பொருளாகும்! 

அப்படியானால் - எந்த விதமான அறிவு ஆதாரமின்றி நம் மார்க்கத்தின் சான்றுகளைக் கேலி செய்பவர்களை நாம் முற்றிலும் புறக்கணித்து விடுவதா என்றால் அது தான் இல்லை!
{{அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் }} புறக்கணித்து விட்டால் - அது போதும் என்கிறான் இறைவன்!

ஏன் இந்த சலுகை? இதற்கான பதில் அடுத்த வசனத்தில் வருகிறது! 

(6:69)
{{எனினும் அவர்கள் பயபக்தியுடையவர்களாகும் பொருட்டு, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது பொறுப்பாகும்.}}
அதாவது - அவர்கள் கேலி செய்வதை விடுத்து - வேறு ஒரு விஷயம் குறித்து பேச்சு திரும்பினால் - கலந்துரையாடலைத் தொடருங்கள்! அதனால் அவர்களில் சிலராவது இறை உணர்வு மிக்கவர்களாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று வழிகாட்டுகிறான் இறைவன். 
என்ன அற்புதமான வழிகாட்டுதல் இது!!!

இதிலும் முக நூல் பதிவர்களுக்கு நல்லதொரு படிப்பினை இருக்கிறது! இது படிப்பினை - 2. 

படிப்பினை - 3  - ஒன்று இருக்கிறது! அது என்ன? 

நமது மார்க்கத்தைப் பற்றி அறியாதவர்கள் - எந்த அறிவாதாரமும் இன்றிப் பேசுகின்ற அமர்வுகளைத்  தவிர்க்கச் சொல்லும் இறைவன் - முஸ்லிம்களாகிய நமக்குச் சொல்லும் மறைமுகச் செய்தி - அறிவாதாரம் இன்றி  எந்த ஒரு கலந்துரையாலுக்குள்ளும் நீங்கள் இறங்கி விடக்கூடாது என்பது தான் அது!  

இந்த ஒரே ஒரு படிப்பினையை மிகவும் உறுதியுடன் கடைபிடித்தவர்கள் தான் - அன்றைய நபித் தோழர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும். அதனால் தான் - எழுதப்படிக்கத் தெரியாத காட்டரபிகள் - என்று அழைக்கப்பட்ட அவர்கள் - மிகச் சிறந்த அறிஞர்களாகத் தங்களை உயர்த்திக் கொண்டு - நனி சிறந்த இஸ்லாமிய நாகரிகத்தை - அறிவின் அடிப்படையில் எழுப்பப்பட்ட ஒரு கோட்டையாகக் கட்டி எழுப்பிட அவர்களால் முடிந்தது! 
அதனை நாமும் மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டலாம் - இந்தப் படிப்பினைகளை மேற்கொண்டால்!

***

இந்தப் படிப்பினைகளை செயல்படுத்துவதில் நுட்பமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. 
அது.... 

திருக்குர்ஆன் காட்டும் அற விழுமியங்கள் (MORALITY AND ETHICS) ஒவ்வொன்றும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவை. 
ஆனால் அந்த அற விழுமியங்களைச் செயல்களத்துக்குக் கொண்டு வரும்போது (APPLIED ETHICS) - கருத்து வேறுபாடுகள் தோன்றுவது இயல்பு! 

நாம் மேலே எடுத்துக் காட்டிய படிப்பினைகளைச் செயற்களத்துக்குக் கொண்டு வரும்போது கருத்து வேறுபாடுகள் நிச்சயம் தோன்றும்! இந்தப் படிப்பினைகளை உள்ளது உள்ளவாறே செயல்படுத்துவது என்பது - கழைக்கூத்தாடி ஒருவன் கயிற்றில் நடப்பது போலத்தான். எச்சரிக்கை உணர்வுடன் நடந்து  கொள்ள இறையச்சமும், ஆழ்ந்த அறிவு நுட்பமும் அவசியம். 

அப்படிக் கருத்து வேறுபாடுகள் நமக்குள் தோன்றும்போது நாம் இன்னொரு தவறைச் செய்து விடுகிறோம். அது தான் உணர்ச்சி வசப்பட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதில் இறங்கி விடுவது!
முக நூலில் நாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விடுகின்றோம். இவ்வாறு நாம் அளவுக்கு மீறி உணர்ச்சி வசப்பட்டு எழுதிக் கொண்டிருப்பது நமது அறிவைக் குழி தோண்டிப் புதைத்து விடும்!
நமது உறவுகளையும் சீர்குலைத்து விடும்!

***
இறுதியாக - 

நாம் ஒவ்வொருவரும் - அறிவின் அடிப்படையிலும், திருக்குர்ஆன் காட்டித்தரும் அற விழுமியங்களின் அடிப்படையிலும், நமது அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டால் - நம்மைச் சுற்றியுள்ள முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களாக ஆவோம்.  அல்லாஹ் அருள் புரிவானாக!

@@@

அல்குர்ஆன் ஆய்வு வகுப்புகள்!

இறைவன் முஸ்லிம் சமூகத்தின் அடையாளங்களாக நான்கு விஷயங்களைக் குறிப்பிட்டுக் காட்டுகிறான்:

1  இறைவன் - முஸ்லிம் சமூகத்தை  - நம்பிக்கை கொண்ட சமூகம் என்று சொல்கின்றான்! (قوم يؤمنون - Qawmin yu'minoon - Community of faith)

6:99
------
மேலும், வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தவன் அவனே! அதன் வாயிலாக எல்லாவிதமான தாவரங்களையும் வெளியாக்கினோம். பின்னர் அதிலிருந்து பசுமையான பயிர்களை உருவாக்கி, அவற்றிலிருந்து அடர்த்தியான தானியமணிகளை வெளிப்படுத்தினோம். மேலும், பேரீச்ச மரத்தின் பாளையிலிருந்து சுமை தாளாமல் தொங்கிக் கொண்டிருக்கும் பழக்குலைகளையும் வெளிப்படுத்தினோம். ஒன்றோடொன்று ஒப்பானவையாகவும் (அதே நேரத்தில்) தனித்தன்மைகளும் கொண்ட திராட்சை, ஜைத்தூன் (ஒலிவம்), மாதுளை ஆகியவற்றின் தோட்டங்களையும் அமைத்திருக்கின்றோம். இவை பருவகாலத்தில் எவ்வாறு கனிகின்றன என்பதனைச் சற்று ஆழ்ந்து சிந்தியுங்கள்! இறைநம்பிக்கை கொண்ட மக்களுக்குத் திண்ணமாக இவற்றில் பல சான்றுகள் உள்ளன.



2  இன்னொரு இடத்தில் - இறைவன் - முஸ்லிம் சமூகத்தை அறிவுள்ள சமூகம் என்கின்றான்! (قوم يعلمون - Qawmin - ya'lamoon -  Intellectual community)

6:97
-----
அவனே உங்களுக்காக நட்சத்திரங்களைப் படைத்தான்; அவற்றின் மூலம் தரை மற்றும் கடலின் இருள்களில் நீங்கள் வழி தெரிந்து கொள்வதற்காக! திண்ணமாக, அறிவாற்றல் கொண்ட சமுதாயத்தினர்க்கு நாம் சான்றுகளை இவ்வாறு விவரிக்கின்றோம்.  

மேலும் பார்க்க அல்குர்ஆன் (6:105) 

***

3 பிரிதொரு இடத்தில் நம்மை - ஆழமாகப் புரிந்து கொள்ளும் சமூகம் - என்று சொல்லுகின்றான்! (قوم يفقهون - Qawmin yafqahoon - Community of deep understanding) 

6:98
-----
மேலும் அவனே ஓருயிரில் இருந்து உங்களைப் படைத்தான். பிறகு ஒவ்வொருவருக்கும் ஒரு தங்குமிடமும் இருக்கிறது; ஒப்படைக்கப்படும் இடமும் இருக்கிறது. புரிந்து கொள்ளும் சமூகத்தினர்க்கு இத்தகைய சான்றுகளையெல்லாம் நாம் விளக்கிக் கூறிவிட்டோம். 

***

4 இன்னுமொரு இடத்தில் நல்லுரைகளை சிந்தித்து ஏற்கின்ற சமூகம் என்று சொல்கின்றான்! (قوم يذكرون  - Qawmin yaddhakkaroon - People who take the messages to heart)

6:126
--------
ஆயினும், இவ்வழி உம் இறைவனின் நேர்வழியாகும். திண்ணமாக, நல்லுரையினை ஏற்கும் மக்களுக்கு அதன் சான்றுகளை நாம் தெளிவுபடுத்திவிட்டோம்.

***

நம் சமூகத்தின் சீர்திருத்தம் என்பது - "ஈமான் - அறிவாற்றல் - ஆழமான புரிதல் - நல்லுரைகளை ஏற்கும் மனப்பக்குவம் - ஆகிய இந்த நான்கு அம்சங்களையும் உள்ளடக்கிய இலக்கை (goal) நோக்கித் தான் அமைந்திட வேண்டும்!

இதற்கான ஒரே வழி - அல்குர்ஆன் ஆய்வு வகுப்புகளை ஊர் தோறும் - சமூகம் முழுவதும் பரவலாக்குவது தான்! 

***

நீடூர் எஸ் ஏ மன்சூர் அலி



Comments